உள்ளடக்கத்துக்குச் செல்

எனது நாடக வாழ்க்கை/போரும் புரட்சியும்

விக்கிமூலம் இலிருந்து
போரும் புரட்சியும்

கண்ணாக் கெட்டாத் தொலைவிலிருந்த யுத்தமேகம் நமது மண்ணை நெருங்கியது. ஜப்பானின் தாக்குதலும், விலைவாசி ஏற்றறமும் மதுரை நகர மக்களிடையே பெருங் குழப்பத்தை உண்டாக்கின. “கொழும்பில் குண்டு! கொச்சியில் ஜப்பான் படை! சென்னை காலி செய்யப்பட்டது! பாம்பன் பாலம்போயிற்று! கரை யோரம் எரிகிறது.” இவைகள்தாம் காலையில் கண் விழித்ததும் பரதேசித் தபாலில் வரும் பயங்கரச் செய்திகள்! அரிசிவிலை பவுன் விலையாக உயர்ந்தது. அன்றாடக் கூலிகளின் அடிவயிற்றில் தீப் பிடித்தது. வயிற்றுப்பிரச்னை வந்துவிட்டால் அதன் விளைவு என்ன வாகும்? பசி வந்தால் பத்தும் என்ன; எல்லாம் பறந்து போவது இயல்புதானே!

கொள்ளையும் கல்லெறியும்

கொள்ளை! கொள்ளை!! அரிசிக்கடை, மளிகைக்கடை,ஜவுளி கடை எங்கும் கொள்ளே !!! நள்ளிரவிலல்ல; பட்டப் பகலில், வெட்ட வெளியில், உணவு உடை இரு பகுதியிலும் பெருங் கொள்ளை. சந்தடிச் சாக்கில், சொந்த விருப்பு வெறுப்பில் வந்த தைச் சுருட்ட வந்தவர் சிலர். புரட்சியைப்பற்றி அறிந்திருக் கிறோம் புத்தகங்களில். அதன் அமைப்பில்-உருவத்தில் ஒரு பகுதியை அன்று கண்முன்னே கண்டோம் மதுரையில், ‘பல்பு’கள் உடையாத சினிமாக் கொட்டகைகளே இல்லை. அலங்கார விளக்குகள் அலங்கோலமாயின. தெருவெல்லாம் கண்ணாடிச் சிதறல்கள்!

எங்கள் நாடகக்கொட்டகையை ஒட்டிய விறகுக் கடையில் புரட்சி வீரர்கள் புகுந்தனார். ஒரு கட்டை விடாமல் காலி செய் யப்பட்டது. அடுத்த பாய்ச்சல் நாடகக் கொட்டகை பல்பு களின் மேல் என்றுதான் எதிர்பார்த்தோம். அவர்களை யாரும் தடுப்பாரில்லை. ஆனால், ஆவேசத்தினிடையே அன்பு தாண்டவ மாடியது. திடீரென்று ஒரு குரல். டே, டி. கே. பிரதர்ஸ் கொட்டகைடா, கல்லெறியாதீங்க” என்றது. தெய்வமே குரல் எழுப்பியதாக நினைத்தோம்.

திருமணமான நான், மனைவியுடன் தனிக்குடித்தனம் நடத் திய சமயமல்லவா? இந்தப் புரட்சியைக் கண்டு அவள் நடுங்கினாள். சேலத்தில் இதையெல்லாம் பார்த்ததில்லை. அவளுக்கு நான் ஆறுதல் கூறினேன். அன்று மாலை நான்கு மணி. வீட்டுக்கு அருகிலேயே கலகம்! எதிரே ஒரு மளிகைக் கடையில் கொள்ளை ! நானும் என் துணைவியுடன் மாடியில் நின்று வேடிக்கை பார்த்தேன். கொள்ளையில் குதுகலித்த வீரர்கள் கல்லாலும், கம்பாலும் வீதியிலிருந்த வீட்டின் கதவுகளை விசாரித்துக் கொண்டே சென்றார்கள். எங்கள் வீட்டுக் கதவிலும் ஒர் அடி! என் பக்கத்தில் ஒரு கல்! ‘ஐயோ!’ என்று அலறினாள் மனைவி. உடனே ஒரு சத்தம், “டே, அயோக்கியப் பயல்களா, டி. கே. ஷண்முகம் வீடுடா, நிக்கிறாரு தெரியலே?” அவ்வளவு தான், வீரர்கள் கண்கள் மேலே பார்த்தன. போகிற போக்கில் சில கைகள் தலைக்கு மேலே உயர்ந்து வணக்கமும் செய்தன. ரகசியப் போலிசார் பார்த்தார்களோ, என்னவோ. யாருக்குத் தெரியும்? காக்கி உடை தரித்த போலீஸ்காரர்களைத் தான் அன்று காணவே இல்லை: கலக வீரர்களின் இந்த அன்பு வணக்கம் எங்களையும் புரட்சிக் கூட்டுறவில் சம்பந்தப்படுத்தி விடலாமல்லவா? கம்யூனிஸ்டுகளுக்கு நாங்கள் உதவி புரிவதாக ஏற்கனவே போலீ சாருக்கு மொட்டைக் கடிதங்கள் போயுள்ளன. தலைமறைவாக. இருக்கும் சிலர் என்னை அடிக்கடி வந்து சந்திப்பதாகப் புரளியிருந்தது. இரண்டு நாட்கள் ஊரெங்கும் இந்த அமளி நடந்தது. இந்த நிலையில் இருட்டடிப்பு உத்தரவும் வந்தது. சென்னையில் எதிரி விமானம் பறந்தததாகச் சொன்னார்கள். நாங்கள் மதுரையிலிருந்து கும்பகோணத்திற்குப் பறந்தோம்.