என் தமிழ்ப்பணி/நெஞ்சே எழு!

விக்கிமூலம் இலிருந்து

3. நெஞ்சே எழு!

ஒரு தொழிலை தொடங்குவார். அத்தொழிலை முற்றுப் பெற முடித்தல் வேண்டும். தொடங்கிய வினைக்கண் வெற்றி வாய்க்கும் வரை. உழைக்காது, அதை இடையே கைவிட்டு, வேறு ஒன்றில் கருத்தைச் செலுத்துவாராயின், அவர்க்குப் பொருட்கேடும் புகழ்க்கேடும் உண்டாம்.

அதனால் ஒரு வினையைத் தொடங்குமுன் அவ்வினையின் ஆற்றல், அவ்வினையைத் தொடங்கும் தன் ஆற்றல், அவ்வினை வெற்றிபெற முடியாவாறு இடைநின்று தடுக்கும் பகை ஆற்றல் ஆகிய அனைத்தையும் பல முறை அளந்து நோக்கி தன்னால் அதை முடிக்க முடியும் எனத் தெளிவாக உணர்ந்த பின்னரே தொடங்குதல் வேண்டும்.

அவ்வாறில்லாமல் ஆர்வத்தில் ஒன்றைத் தொடங்கிவிட்டு அதில் ஒரு பகுதி இன்னமும் முடிய வேண்டியிருக்கும் பொழுது, இதை முடிக்கும் ஆற்றல் எமக்கு இல்லை என்று கூறி அதை அந்நிலையிலேயே கைவிட்டுப் போவது அறிவுடைமையாகாது அத்தகையார் எடுக்கும் வினை எதுவும் வெற்றி பெறாது. உயர்ந்தோர்.அவரை மதியார் அவ்வினையைத் தொடங்குமுன், அவர்க்கிருந்த புகழும் அதன்பின் இல்லாகிவிடும்; இவையெல்லாம், தொடங்குவதற்கு முன்பாகவே பலமுறை எண்ணிப் பார்க்காததன் விளைவாம்.

இவ்வுண்மையை உணர்ந்த ஓர் இளைஞன், அண்மையில் மணஞ்செய்து கொண்டிருந்தான். அவன் வாழ்க்கைத் துணையாய் வாய்த்திருந்தவள், அழகிற் சிறந்து விளங்கினாள். அவள் பால் அவன் தன் உயிரையே வைத்திருந்தான். மணம் முடிந்து சின்னாட்கள் தான் ஆயிருந்தன.

ஒருநாள், அவன், தன் இல்வாழ்க்கை நிலையினை எண்ணிப் பார்த்தான். வருவார்க்கு வழங்கி வாழும் தன் இல்வாழ்க்கைக்கு வேண்டும் பொருள் தன்பால் இல்லாமையை உணர்ந்தான், அதனால் வற்றாப் பெருநிதியை அது கிடைக்கும் வெளிநாடு சென்றேனும் சேர்த்து வருதல் வேண்டும் எனத் துணிந்தான்.

அவன் நெஞ்சு, அந்நிலையில் ஆழ்ந்து கிடக்கும் அப்போது அவன் மனைவி அவன் முன் வந்து நின்றாள். அவள் உருவ நலனை இளைஞன் ஒருமுறை நோக்கினான் மனைப் புறத்து நொச்சிவேலியில் படர்ந்திருக்கும் முல்லைக் கொடியின்ற மலரும் பருவத்து அரும்புகள் வரிசையாகத் தோன்றுவது போலும் அவள் வெண்பற்களின் வனப்பைக் கண்டான். முல்லை அரும்புகளின் வெண்ணிறம் ஒன்றைக் கண்டு அதை விரும்பி அடைந்து, அதை விடுத்து வர மாட்டாது.அதையே சுற்றிச் சுற்றித் திரியும் வண்டுகள் போல், அவள் பல்லழகு ஒன்றிற்கே தான் தன் உணர்வு இழந்து எப்போதும் அவள் நினைவாகவேயிருந்து வருந்துவதை உணர்ந்தான். தன்னை அடிமை கொள்ள அப்பல்லழகு ஒன்றே போதியதாகவும்; அவள் அழகு அத்துடன் அமையவில்லை. அவள் வயிறும் அழகாயிருந்தது. அவள் இடையும் அழகாயிருந்தது.

பின்னப் பெற்றுப் பின்னால் கிடந்து தொடங்கும் கூந்தலை நாள் முழுதும் நின்று பார்த்துக் கொண்டிருக்கலாம் போல் தோன்றிற்று. தோள் மலைவளர் மூங்கில் போன்றிருந்தது. அதன் பருமையும் மென்மையும் அதற்கு மேலும் நலம் அளித்தன. 

இவை அத்தனைக்கும் மேலாக கள்ளம் அற்ற அவள் உள்ளத்தில் காதல் உணர்வு ஒன்றே இடம் பெற்றிருந்தமையால், அவள் உருவ நலன் மேலும் பன்மடங்கு உயர்ந்து காட்டிற்று.

மனைவியின் இம்மா, நலத்தைக் காண நேர்ந்ததும் அவன் உள்ளுணர்வு சிறிதே நிலை தளர்ந்தது. இத்துணைப் பேரழகுடையாளைப் பிரிந்து பொருளிட்டப் போவது கூடாது. இவளை இங்கே விட்டுச் சென்றால் அங்கே வெற்றி பெறுதல் இயலாது.

இவள் பேரழகு தன் முயற்சியைப் பாழாக்கிவிடும். ஆகவே பொருளீட்டும் நினைப்பு இப்போது வேண்டாம் எனத் தன் நெஞ்சை நோக்கிக் கூறிற்று. உள்ளுணர்வு உரைப்பது உண்மை என்பதை அவன் நெஞ்சம் உணர்ந்திருந்தது. என்றாலும், பொருளின் இன்றியமையாமை எவ்வாறாயினும் சென்று பொருளீட்டி வா எனக் கூறினமையால் அந்நெஞ்சு, அப்பொருளீட்டும் முயற்சியில் நீங்காது நின்றது. அவன் புறப்பட்டு விட்டான்.

இளைஞன் பல காவதங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தான், காட்டு வழிக் கொடுமையால், அவன் உடல் நலன் சிறிதே தளர்ந்தது. உடல் தளர்ச்சி அவன் உணர்வையும் பற்றிக் கொண்டது. உணர்வு உரம் இழந்ததும், காதல் வேட்கை உரம் பெற்று எழுந்தது.நெஞ்சு அதற்கு அடிமையாகி விட்டது. அதனால் அது அவனை மேற்கொண்டு செல்லாவாறு தடை செய்தது. மீண்டும் மனை நோக்கி செல்லுமாறு வற்புறுத்திற்று. இந்நிலையில், அவன் வினை மேற்கொண்டு வழியை முன்னோக்கிக் கடப்பதோ, காதலியை நினைந்து கடந்து வந்த காட்டு வழியே மீள்வதோ செய்ய மாட்டாது செயலிழந்து நின்று விட்டான். காதலுக்கு அடிமைப்பட்டு கடமை முயற்சிக்குக்கேடு சூழும் நெஞ்சின் பால் அவன் உள்ளுணர்வு சினம் கொண்டது. 

ஆனால் அதைக் கடிந்து கொண்டால் மேற்கொண்டு வந்த காரியம் கெட்டு விடும்: நெஞ்சை ஒதுக்கி விட்டுச் சென்றால், வெற்றி கிட்டாது. ஆகவே அந்நெஞ்சு ஏற்குமாறு இனிய சொற்களால் அதற்கு அறிவூட்டி அதையும் உடன்கொண்டு செல்லக் கருதிற்று உள்ளுணர்வு.

ஆசைக்கு அடிமைப்பட்டு, காதலியைக் காணத் துடித்து நிற்கும் நெஞ்சை அணுகி, “நெஞ்சே! காதலி பேரழகு வாய்ந்தவள். அவளைப் பிரிந்து வாழ்வது நம்மால் இயலாது. மேலும் நாம் போய் விட்டால், அவள், நம் பிரிவை எண்ணித் துயர் உறுவதால், அவள் அழகு அவளை விட்டுப் போய்விடும்.

போன அழகு பின்னர் எப்பாடுபடினும் மீண்டு வராது ஆகவே, அவள் அழகு கெட, நாம் துயர்உற பிரிந்து போவது பொருந்தாது என, அன்று, எத்தனையோ முறை எடுத்துச் சொன்னேன். அதை நீ அப்போது கேட்க மறுத்து விட்டாய்.

வினைமாற்றுவதையே விரும்பி நின்றாய். வேறு வழியின்றி நானும் அதற்கு இசைந்தேன். புறப்பட்டு இவ்வளவு தூரம் வந்து விட்டோம், இனி, வீட்டிற்கு வெறுங்கையோடு மீள்வது மதியுடைமையாகாது.

மேலும், நம் பிரிவைப் பெறாது நம்மனைவி வருந்துவா ளெனினும் அவள் நாம் வறிதே மீளக் காணின் மகிழாள்: மாளாத் துயர்கொண்டு மாண்டு விடுவள். வினைக் கருதிப் பிரிந்து வந்த நாம், அவள் கண்டு வியந்து மகிழுமளவு மாநிதி ஈட்டிச் சென்ற வழியே, அவள் மனம் மகிழும். ஆகவே அவள் மகிழ்ச்சியே உன் குறிக்கோளாயின், அவள் மகிழுமாறு மாநிதி ஈட்டும் பணி மேற்கொண்டு மேற் செல்வோம் வருக. 

“நெஞ்சே என் சொல்லை ஏற்று, என் பின் வரின் காதலியை நினைந்து விரைந்து மனைநோக்கி மீளாது, வினையை நினைந்து விரைந்து வழி மேல் செல்வதே சிறப்புடைத்து; அதுவே அவளுக்கும் மகிழ்ச்சி தரும் என்பதை உனக்கு விளங்க எடுத்துரைக்கின்றேன்; அதை விளக்கும் அரிய காட்சிகளையும் காட்டிக் கொண்டே செல்கிறேன்; என்னைப் பின் தொடர்ந்து வருக. நெஞ்சே! நாம் செல்லும் வழியில் மராமரம் மலர்ந்து மணம் நாறி நிற்கும்.

ஆங்கு வீசும் தென்றற்காற்று மலர் பறிக்க வல்லானொருவன், மலரைப் பறிக்கத் தன் கைக் கோலால் கிளைகளை அலைக்கழித்தல்போல், மராமரத்துக் கிளைகளை, அலைக்கழித்து, அம்மலர்களை வழிச் செல்லும் மக்களின் தலை முடியில் சென்று உதிருமாறு செய்யும்.

நெஞ்சே! காற்றின் செயல் கொடுமை வாய்ந்ததாகத் தோன்றினும் அக்காற்று இல்லையேல் அம்மலர்கள் மலர்ந்தும் பயனிழந்து போயிருக்கும். அக்காற்று வீசியதால் அதன் மணம் காற்றில் பரவிப் பயன் பெற்றது. அம்மலரும் மக்கள் முடியில் படிந்து மாண்புற்றது அந்நிகழ்ச்சி, நம் பிரிவு முயற்சி நம் காதலிக்குக் கொடுமை புரிவதாகாது. மாறாக வாழ்வுப் பயனை அவள் அடையுமாறு பண்ணி, பிறரையும் வாழ்விக்கப் பண்ணும் என்ற உண்மையை. உணர்த்தாதோ?

“நெஞ்சே! மராமரக் காட்சியைக் கடந்து சென்றால் காட்டுப் பன்றியை செந்நாய் தாக்கும் காட்சியைக் காண்பை; செந்நாய் வாளாவந்து பன்றியைத் தாக்காது. மலைக்குகையில் குட்டி ஈன்ற தன் காதற்பிணவு பசியால் வருந்துவதைப் பொறாதே, அது கேழவைத் தாக்கும்; அந்நிகழ்ச்சி மனைவி மகிழுமாறு மாநிதி ஈட்டி வருவது கணவன் கடமையாம்: அக்கடனாற்றச் செல்வான், இடைவழியில் நெஞ்சு வருந்தும் கொடுமை புரியினும் கேடின்றாம் என்ற உண்மையை உணர்த்தாதோ?

“நெஞ்சே! பன்றி செந்நாய் போராட்டத்தையொட்டி நிகழும் பிறிதொரு நிகழ்ச்சி மற்றோர் உண்மையை உணர்த்துவதாய் இருக்கும். கேழலோடு தொடர்ந்து வரும் பெண் பன்றி தன் காதலனைச் செந்நாய் தாக்கக் கண்டதும், தன் காதலனுக்குத் துணையாய் நின்று நாயோடு பொரிட நினையாது, அவை போராடும் அவ்விடத்தில் நிற்கவும் அஞ்சி, கண்மண் தெரியாமல் கடுவேகமாக ஓடிவிடும். அவ்வாறு ஒடுங்கால் எதிரே ஈச்சமரம் நிற்பதையும் அறியாது, அதன்மீது மோதிக் கொள்ளும். பன்றியால் மோதுண்ட அவ்வீச்சமரத்துக் காய்கள் கனிந்து உதிர்வதற்கு மாறாகச் செங்காய்களாகவே உதிர்ந்து மண்ணில் வீழ்ந்து பாழாம்.

இக்காட்சியும் நிகழ்ச்சியும் கணவன் கடமை மேற்கொண்டு உழைக்கும்போது, அவன் மனைவி அவனுடன் இருந்து உறுதுணை புரிவதை விடுத்து அவ்வினை கண்டு வெருண்டு அகன்றால், அதனால் அவளும் வாழ்விழப்பள்: தன்னை அடுத்து வாழ்வாரையும் வாழ்விழக்கப் பண்ணுவள் என்ற உண்மையை உணர்த்தாவோ?

“நெஞ்சே! அவ்விடத்தையும் கடந்து சென்றால் காட்டு வழியைக் கடந்து செல்வோரின் நீர் வேட்கையை நீக்கி உதவும் உயர்ந்த உள்ளம் கொண்ட சிலர், ஆங்குக் கிணறு ஒன்று எடுக்கத் தொடங்கி, ஓரளவு எடுத்ததும், அதில் நீர் ஊறாமை கண்டு இதில் நீர் ஊறாது என எண்ணி, அதை அந்நிலையிலேயே விட்டுச் சென்ற ஆழ்ந்த பள்ளம் ஒன்று தோன்றும்.

அவ்வழியாக வரும் யானைக்கூட்டம், அதைக் கண்ணுற்றதும் அது தம் வெண்கோடுகள்பால் விருப்பம் கொண்டு தம்மை வேட்டையாடிப் பிடிக்க எண்ணிய வேடர், வெட்டி, வைத்த பள்ளமாம் எனப்பிறழ உணர்ந்து, அதைத் தூர்த்துப் பாழ் செய்யும், இக்காட்சி நாட்டிற்கு நற்பயன் அளிக்கும் கருத்தோடு தொடங்கும் வினை விரைந்து பயனளிக்காமை கண்டு, இடையே கைவிட்டு விடுதல் கூடாது. வெற்றி காணும் வரை தொழிலாற்றுதல் வேண்டும். இடையே விடின், அது காணும் பிறமக்கள், அவ்வினை தம்மை வாழ்விழக்கத் தொடங்கப் பெற்ற வினையாம் எனப் பிறழ உணர்ந்து அதை அழிக்க முனைவர். அதைப் போலவே நல்லெண்ணம் கொண்டு நான் தொடங்கிய இவ்வினை, நம் காதலிக்குக் கேடு சூழத் தொடங்கியது என்ற பிழைபட்ட உணர்வால் நீ தடை செய்ய, இடையிலேயே நின்று விடுமாயின் நீள் பழியாம் என்பதை உணர்த்துவதாகாதோ? -

“நெஞ்சே! என்னோடு வந்து, அக்காட்சிகளையும் நிகழ்ச்சிகளையும் நேரில் கண்டால், உன் அறிவும் திருந்தும்; ஆகவே, எழுந்து என்னைத் தொடர்ந்து விரைந்து வருக” எனக்கூறி மேலே செல்லத் தொடங்கினான்.

“மனையிள நொச்சி மெளவல் வான்முகைத்
துணைநிரைத் தன்ன மாவீழ் வெண்பல்
அவ்வயிற்று, அகன்ற அல்குல், தைஇத்
தாழ்மென் கூந்தல், தடமென் பனைத்தோள்,

5. மடந்தை மாணலம் பசப்பச் சேய்நாட்டுச்
செல்லல்; என்று யான் சொல்லவும், ஒல்லாய்,
வினை நயந்து அமைந்தனை; ஆயின், மனைநகப்
பல்வேறு வெறுக்கை தருகம்; வல்லே
எழுஇனி வாழி என் நெஞ்சே! புரியிணர்.

10. மெல்ல விழ அஞ்சினை புலம்ப, வல்லோன்
கோடு அறை கொம்பின், வீ உகத்தீண்டி,
மரா அம் அலைத்த மணவாய்த் தென்றல்
சுரம் செல் மள்ளர் சுரீயல் தூற்றும்
என்றூழ் நின்ற புன்தலை வைப்பில்



15. பருந்து இளைப்படூஉம் பாறுதலை ஒமை
இருங்கல் விடரகத்து ஈன்று இளைப்பட்ட
மெல புனிற்று அம்பினவு பசித்தெனப், பைங்கண்
செந்நாய் ஏற்றை, கேழல் தாக்க,
இரியல் பிணவல் தீண்டலின், பரீஇச்

20. செங்காய் உதிர்ந்த பைங்குலை ஈந்தின்
பரல்மண் சுவலமுரண் நிலம் உடைத்த
வல்வாய்க் கணிச்சிக் கூழ் ஆர் கூவலர்
ஊறாது இட்ட உவலைக் கூவல்
வெண்கோடு நயந்த அன்புஇல் கானவர்

25. இகழ்ந்து இயங்கு இயவின் அகழ்ந்த குழிசெத்து
இருங்களிற்று இனதிரை தூர்க்கும்
பெருங்கல் அத்தம் விவங்கிய காடே.”

தினை : பாலை

துறை : பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன், இடைவழியில் மீளக் கருதிய நெஞ்சைக் கழறியது.

புலவர் : காவன் முல்லைப் பூதனார்.

1. மெளவல்-முல்லை; வான்-வெள்ளிய; முகை-
அரும்பு.

2. மாவீழ்-வண்டுகள் விரும்பும்;

3. அவ்-அழகிய, கைஇ-பின்னப்பெற்று

6. ஒல்லாய்-கேட்டு அதன்படி நடவாமல்.

7. ஆயின்-ஆராய்ந்தால்: மனைநக-மனைவி மகிழ்

9. இணர்-பூங்கொத்து

10. சினை-கிளை. புலம்ப-வருந்த; வல்லோன்-மலர்
பறிப்போன்

11. கோடு-கிளையை: அறை-அடிக்கும்: கொம்பின்—
கைக்கோல்போல்: வீஉக—மலர் உதிர: தீட்டி—
தாக்கி

13. மள்ளர்-மக்கள்; கரியல்-கூந்தலில்

14. என்றூழ்-வெப்பம்; புன்தலை-இழிந்த இடங்
களை உடைய; வைப்பீன்-ஊர்களை உடைய

15. இளைப்படும்-ஈன்று கிடக்கும்; பாறுதலை
விரிந்த உச்சி

18. கேழல்-ஆண்பன்றி

19. இரியல்-அஞ்சி ஓடும்; பிணவல்-பெண் பன்றி:
பரீஇ-அறுபட்டு

21. பரல்-விதைகளோடு கூடிய; சுவல-மேட்டு நில
மாகிய; முரண் நிலம்-வலிய நிலம்

22. வல்வாய்-கூரிய வாய்: கணிச்சி-குந்தாலி; கூழ்
ஆர்-கூழ் உணவு உண்ணும்; கூவலர்-கிணறு வெட்டுவார்

23. உவலை— தழை மூடிக் கிடக்கும்

24. நயந்த-விரும்பிய

25. இகழ்ந்து-தீங்கற்று என நினைந்து இகழ்ச்சியாக;
இயவின்-வழியிடையே; செத்து-கருதி