என் தமிழ்ப்பணி/உள்ளுறை உவமம்
உவமை இரண்டு வகைப்படும்: அறியாத ஒரு பொருளை விளக்க அறிந்த ஒரு பொருளை எடுத்துக்காட்டி இதுபோல் இருக்கும் அது எனக் கூறுவது ஒன்று. இது உலக வழக்கு, செய்யுள் வழக்கு இரண்டிலும் வரும். இது ஏனை உவமம் என்றும் அழைக்கப்படும். எவ்வித அடையும் இல்லாமல் வறிதே உவமம் என்றும் அழைக்கப்படும். மற்றொன்று செய்யுளில் மட்டுமே வருவது; அதுவே உள்ளுறை உவமம்; உவமப்போலி என்றும் அழைக்கப் பெறும்,
ஆடவர்க்குரிய் இலக்கணம் அனைத்தையும் குறைவறப் பெற்ற ஒர் ஆண்மகனும். பெண்டிர்க்குரிய இலக்கணம் அனைத்தையும் குறைவறப்பெற்ற ஒரு பெண் மகளும் காதலால் ஒன்றுபட்டுக் கருத்து ஒருமித்த உயர்ந்த இல்வாழ்க்கை நடாத்தும் நிலையில் ஒருவரோடு ஒருவர் சொல்லாடும்போது பலரும் அறிய வெளிப்படையாகக் கூறத்தகாத சில எண்ணங்களை நாகரீகமாக மறைத்துக் கூற, புலவர்கள் கையாளும் முறையே உள்ளுறை உவமம். அகத்திணைப் பொருள்களுள் தெய்வம் நீக்கிய ஏனைய கருப்பொருள்களின் இயல்புகளையும் செயல்களையும் எடுத்துக் கூறுமுகத்தான், அகத்திணைத் தலைவர்களாகிய தலைவன் தலைவியர்களின் இயல்புகளையும் செயல்களை யும் உய்த்துணர வைப்பதே உள்ளுறை. இதில் கருப்பொருளின் நிகழ்ச்சி உவமை: அகத்திணைத் தலைவர்களின் நிகழ்ச்சி பொருள் என்றாலும் ஈண்டு உவமை மட்டுமே வெளிப்படையாகக் கூறப்படும்; பொருள் வெளிப்படையாகக் கூறப்படாது. பாட்டில் வரும் கருப்பொருள் நிகழ்ச்சிகளைப் படித்த அளவிலேயே அது பாடிய புலவன், அப்பாட்டில் கூற விரும்பிய அகத்திணைத் தலைவர்களின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் எளிதே உய்த்துணர்தற்கு வேண்டிய சொற்களையெல்லாம் பெய்து பாடுதல் வேண்டும்.
“உள்ளுறுத்து இதனோடு ஒத்துப் பொருள் முடிகென
உள்ளுறுத்து உரைப்பதே உள்ளுறை உவமம்”
என்பது தொல்காப்பியம்.
காதல் மனைவியோடு இல்லறம் மேற்கொண்ட ஒருவன் நாள் சில கழிந்த பின்னர், பரத்தையர் உறவு மேற்கொண்டு மனைவியை மறந்துவிட்டான். கணவனின் இப் பொருந்தா ஒழுக்கத்தை எண்ணி எண்ணி புலம்பினாள் மனைவி. அதனால் அவள் உடல் நலமும் கெட்டது. அவள் உள்ளத் துயரை அவள் தோள் மெலிவு புறத்தார்க்குப் பறைசாற்றியது. அது கண்ட அவள் தோழி “கணவன் தவறே செய்யினும் அதைத் தாங்கிக் கொள்வதே கற்புடைய மகளிர் கடனாகவும், நீ, இவ்வாறு கவலை கொண்டு பிறர் பழிக்க இடம் கொடுப்பது முறையாகாது” என்று அறிவுரை கூறினாள்.
அது கேட்ட அப்பெண் “தோழி! கணவன் எவ்வளவு தான் கொடுமை செய்யினும் அவன் நல்லவன் என்றே நான் எண்ணுகின்றேன். ஆனால் என் தோள்கள். மெலிந்து காட்டி அவன், நல்லன் அல்லன் என்று கூறி விடுகின்றன. என் செய்வேன்” என்று கூறினாள். அவ்வாறு கூறும் நிலையிலும் காதல் கொண்டு கைப்பற்றிய மனைவியையும். காசு ஒன்றே குறியாகும் பாத்தையையும். ஒன்றாகவே மதிக்கும் கணவன் கொடுஞ்செயலைக் கண்டிக் காமல் இருக்க முடியவில்லை. கண்டிக்கவே விரும்பினள். விரும்பினாளேனும் கணவனைப் பிறர்முன் வெளிப்படையாகக் கண்டிப்பது முறையாகாது என்பதையும் உணர்ந்தாள். அதனால் அவனைக் கூறுங்கால் ஆற்றங்கரையிலும் கழனிகளின் வரப்புகளிலும் வளர்ந்து நிற்கும் பயனேதுமில்லா நாணல், வயலில் அரும்பாடுபட்டு விளைவிக்க வளர்ந்து நிற்கும் பயன்மிகு கரும்புபோல் பூத்துக் காட்சி அளிக்கும் நாடுடையவன் நம் தலைவன் என்று கூறுமுகத்தான். பயன்மிகு கரும்பும் பயனிலா நாணலும் ஒருசேரப் பூத்திருப்பது போலவே அவன் காதல் மனைவியாம் என்னையுல் காசு மகளாம் பரத்தையையும் ஒன்றாகவே மதிக்கின்றான்; என்னே! அவன் கொடுமை எனக் கூறாமல் கூறினாள். இவ்வாறு கருப்பொருளின் நிலை கூறிக். கருத்தை உய்த்துணர வைப்பதே உள்ளுறை.
“கரைசேர் வேழம் கரும்பிற் பூக்கும்
துறைகேழ் ஊரன் கொடுமை நாணி
நல்லன் என்னும் யாமே
அல்லன் என்னும் எம்தடமென் தோளே”
-ஐங்குறுநூறு
யார் யார் உள்ளுறை கூறுவதற்கு உரியவர்; யார் யார் என்னென்ன பொருள்களை உள்ளுறையாக மேற்கொள்ளலாம் என்பதற்கான இலக்கணங்களையும் தொல்காப்பியர் கூறியுள்ளார். தலைவி தான் வாழும் நிலத்தில் உள்ள எல்லாப் பொருள்களையும் அறிந்தவளல்லளாதலின், அவள் கூறும் உள்ளுறை அவளறிந்த பொருளாகவே இருத்தல் வேண்டும். தோழி அவள் வாழும் நிலத்தில் உள்ள எல்லாப் பொருள்களையும் அறிந்தவளே ஆயினும், பிற நிலத்திற்குச் சென்று வந்தவள் அல்லளாதலின் அவள் கூறும் உள்ளுறை அந்நிலத்துப் பொருள்களாகவே இருத்தல் வேண்டும். தலைவனும் நற்றாயும் செவிலியும், பாங்கனும் எல்லா நிலங்களுக்கும் சென்று வந்தவர் ஆகவே அவர்கள் எப்பொருள் பற்றியும் உள்ளுறை கூற உரிமையடையவராவர்.
“கிழவி சொல்லின் அவளறி கிளவி”
“தோழிக்காயின் நிலம் பெயர்ந்து உரையாது”
“ஏனோர்க்கெல்லாம் இடம் வரைவின்றே”
என்பன தொல்காப்பிய விதிகள்.