உள்ளடக்கத்துக்குச் செல்

ஒப்பியன் மொழிநூல்/வினைச்சொல்

விக்கிமூலம் இலிருந்து

வினைச்சொல்

வினை என்னுஞ் சொல் விளை என்பதன் திரிபாகத் தெரிகின்றது. முதற் பெருந்தொழில் உழவு. வினைஞர் = மருத நிலத்தார், உழவர், விளைஞர்— வினைஞர், விசைக்களம் = போர்க்களம். போர்க்களம் என்னும் பெயர் ஏர்க்களம், பொருகளம் என்னும் இரண்டிற்கும் பொது. விளை — வினை. ஓ. நோ. வளை — வனை.

வினைச்சொல், முற்று எச்சம் என இருவகைப்படும். எச்சம், பெயரெச்சம் வினையெச்சம் என இருவகைப்படும். இவை பெயராகிய எச்சத்தையுடையது வினையாகிய எச்சத் தையுடையது என்னும் பொருளன.

முதன் முதல் வினைச்சொற்கள் இறந்தகாலமும் எதிர் காலமுமாகிய இரண்டுகாலமே காட்டின. இறந்தகால வினை முற்றுகள் இப்போதுள்ள எச்சவடிவாகவேயிருந்தன. செய்யும் என்னும் முற்றே இருதிணை ஐம்பால் மூவிடங்கட்கும் மலையாளத்திற்போல் எதிர்கால வினை முற்றாக வழங்கிற்று.

நிகழ்காலவுணர்ச்சி தமிழர்க்குத் தோன்றிய போது, கில் என்னும் ஆற்றற்பொருள் வினையின் இறந்தகால முற்றுவடிவமே நிகழ்கால வினை முற்றாகக் கொள்ளப்பட்டது. அதன் மூன்று நிலைகளாவன :—

(1) கின்றான் = ஆற்றினான். ஒ, நோ. நின்றான், சென்றான்.

(3) செய்யகின்றான் = செய்ய ஆற்றினான், அவனுக்குச் செய்ய முடிந்தது.

ஒ. தோ; செய்ய பாட்டினான், (வழக்கற்றது) செய்ய மாட்டுவான் (எ. கா.)

(3) செய்யகின்றான் - செய்கின்றான் - செய்கிறான் (இடைக் குறை) = he does.

இங்ஙனம், கின்றான் எளனும் இறந்தகால முற்று, தனிவினை துணைவினை நிகழ்கால வினைமுற்று என மூன்று நிலைகளை அடைந்துள்ளது. மூன்றாம் நிலையின் பின், இன்று கிறு என்பதை நிகழ்கால இடைநிலைகளாகப் பிரித்துக் கூறப்பட்டன. ஆநின்று என்றோர் இடை நிலையில்லை. செய்து நின்றான் என்று பொருள்படும் செய்யா நின்றான் என்னும் தொடர் மொழியையே, ஒரு சொல்லாகக் கொண்டு, ஆதின்று என்பதோர் இடைநிலையெனக் கூறினர் பவணந்தியார்.

பண்டையிறந்தகால எதிர்கால வினைமுற்று வடிவங்கள்
இ. கா.  எ. கா.
அவன் செய்து  அவன் செய்யும்
அவள் ,,  அவள் ,,
அவர் ,,  அவர் ,,
அது ,,  அது ,,
அவை ,,  அவை ,,
நான் ,,  நான் ,,
நாம் ,,  நாம் ,,
நீ ,,  நீ ,,
நீர் ,,  நீர் ,,

உம் என்பது எதிர்காலமுணர்த்தும் உகரவடிச் சுட்டுச் சொல்: ஒ. நோ,“ உம்மை எரிவாய் நிரயம்.”

தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே, செய்யும் என்னும் முற்று தன்மை முன்னிலைகளிலும் படர்க்கைப் பலர்பாவிலும் வழக்கற்றுவிட்டது. மலையாளத்தில் இன்றும் வழங்குகின்றது.

இறந்தகால வினையெச்சங்களாக இப்போது கூறப்படு பவை, செய்து, செய்பு. செய்யா, செய்யூ. செய்தென என்பவை. இவற்றுள், ஈற்றது தவிர ஏனையெல்லாம் தொழிற்பெயராகவே தோன்றுகின்றன. அவற்றை முறையே விழ்து, முடிபு, உணா, உறூ (உறூஉ) என்பவற்றோடு ஒப்பு நோக்குக. செய்து+என = செய்தென = செய்தானென்னும் படி,

உநூறு, மருஉ முதலிய வடிவங்களை நோக்கின், பண்டு சில வினைப்பகுதிகள் ஈற்றுயிர்க்குறில் நீண்டும் தொழிற் பெயரானது போல் தெரிகின்றது. இதுவும் அசையழுத்தம்.

சென்று, கண்டு, ஓடி, போய் என்னும் வடிவங்களை, குன்று. வண்டு, வெகுனி, பாய் என்னும் தொழிற்பெயர்களுடன் ஒப்பு நோக்குக. பின்னவற்றுள் வெகுளியொழிந்தவை தொழிலாகு பெயர்கள், இ—ய். கா : போகி—போய், தாலி—தாய்.

பிற்காலத்தில் ஐம்பாற் கட்டுப்பெயர்களான பாலீறுகள் இறந்த கால வினைகளுடன் சேர்க்கப்பட்டன.

கா: செய்து + ஆன் = செய்தான் = செய்கையையுடையவன். சினந்தான் =சினந்த செயலோன்.

இறந்தகால வினைகள் பாலீறு பெற்றுச் சிறிது காலஞ் சென்ற பின், எதிர்கால வினைமுற்றுக்களும் பாலீறு பெற்றன.

கா : செய்யுமான்—செய்ம்மான்—செய்வான்.
செய்யுமாள்—செய்ம்மாள்—செய்வாள்.
செய்யுமார்—செய்ம்மார்— செய்வார்.
செய்யுமது — செய்ம்மது — செய்வது.
செய்யும—செய்ம்ம செய்வ.
செய்யுமன—செய்ம்மன—செய்வன.

உண்ணுமான்—உண்மான்—உண்பான். நடக்குமான்— நடப்பான், இனி, செய்வு நடப்பு என உவ்வீறும் புவ்வீறும் பெற்ற தொழிற்பெயர்களே பாலீறு பெற்று எதிர்கால வினைமுற்றாகும் என்று கொள்ளவும் இடமுண்டு. செய்பு+ ஆன் = செய்வான், தடப்பு+ஆன் = நடப்பான்.

“ஆ ஓ வாகும் பெயருமா ருளவே” (தொ . 679)
என்றபடி, செய்யுமார் என்பது செய்யுளில் வினையா வணையும் பெயராகும்போது, செய்யுமோர் என்றாகும். வினையாலணையும் பெயர் வினைமுற்றும் பெயரெச்சத்தோடு கூடிய சுட்டுப்பெயருமாக இருவகை வடிவிலிருக்கும்.

கா : இ. கா. நி. கா. எ. கா.
(1) செய்தான் செய்கிறான் செய்வான்
(2) செய்த(அ)வன் செய்கின்ற (அ)வன் செய்யுமவன் —
செய்யுபவன்—செய்பவன்.
நடந்த(அ)வன் நடக்கின்ற (அ)வன் நடக்குமவன்—
நடக்குபவன்— நடப்பவன்.

அகத்தியர் காலத்திற்கு முன்பே, வினைமுற்றுக்கள் பாலீறு பெற்றுவிட்டன, அஃறிணைப்படர்க்கை யிருபாற்கு மட்டும் செய்யும் என்னும் முற்றே இன்றும் உலக வழக்கில் வழங்குகின்றது : ஆண்பாற்கும் பெண்பாற்கும் செய்யுளில் வழங்கும். செய்யும, செய்ம்ம என்பவை செய்யுப செய்ப என்றும் திரியும். இவற்றுள் முன்னவை பலவின்பாலுக்கும், பின்னவை பலர்பாலுக்கும் வரையறுக்கப்பட்டன. ம—ப. போலி. இனி, செய்பு+அ = செய்ப என்றுமாம்.

வினைமுற்றுக்கள் எச்சப் பொருளில் வழங்குவ துண்டு.

கா : செய்வான் வந்தான்.
படிப்பான் ,,
செய்ம்மார் வந்தார்.

இவை முற்றெச்ச மெனப்படும். இவையே பிற்காலத்தில் வான் பான் மார் ஈற்று வினையெச்சங்களாகக் கூறப்பட்டன.

“மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை
காலக் கிளவியொடு முடியும் என்ப” (தொல். 691)

என்று தொல்காப்பியர் கூறுதல் காண்க. வான் பான் ஈற்று முற்றெச்சங்கள் பிற்காலத்தில் இருதிணை ஐம்பால் மூவிடங்கட்கும் வழங்கப்பட்டன.

செய்பாக்கு என்பதை, செய்பு+ ஆக்கு (செயலை ஆக்க) என்று பிரிக்கலாம். ஆக்க— ஆக்கு (திரிபு).

எச்சவினை

பெயரெச்சம் :

பெயரெச்சமெல்லாம் அன் சாரியை பெறாத அகர வீற்றுப் பலவின்பாற் படர்க்கை வினைமுற்றுக்களே.

கா : வினைமுற்று பெயரெச்சம்
அவை செய்த செய்த பையன்
,, செய்கின்ற செய்கின்ற ,,
,, செய்யும் செய்யும் ,,
,, உள்ள உள்ள ,,
,, நல்ல நல்ல ,,

படர்க்கைப் பலவின் பால் வினைமுற்று பிற பாலிடங்கட்கும் வழங்கக்கூடியதை, அல்ல என்னும் படர்க்கைப் பலவின் பால் எதிர்மறைச்குறிப்பு வினைமுற்று, இப்போது இரு திணை ஐம்பால் மூவிடங்கட்கும் வழங்குதல் நோக்கி யுணர்க.

வினைமுற்றே பெயரெச்சமாவதை 6 ஆம் வேற்றுமை யாலுமுணர்க, கிழமை வேற்றுமை பெயரெச்ச வடிவின தென்று மாக்ஸ் முல்லரும் கூறுகிறார்.

வினையெச்சம் :

இறந்தகால வினையெச்சங்கள் முன்னர்க் கூறப்பட்டன. தழீஇ என்பதன் பண்டை வடிவம் தழீ என்றிருந்ததாகத் தெரிகின்றது. தழி என்பது நீண்டு தழீ என்றாகி யிருக்கலாம். ழீ என்பது சொல்லீறாகாதென்று கொண்டு, பிற்காலத்தார் இகரஞ் சேர்த்திருக்கலாம். குரி—குரிஇ (குருவி)=தறியது. தழுவு குருவு (குறுகு) என்னும் பிற்றை வடிவங்கள், தழுவி குருலி என வினையெச்சம் (அல்லது தொழிற்பெயர்) அல்லது தொழிலிபெயர் ஆகும். 'இ' என்னும் ஈறு இம்முப் பொருளிலும் வரும்.

குழு மரு உறு என்பவை குழூ மரூ உறூ என்று தொழிற் பெயராயின. குழுஉ மரூஉ உறூஉ என்பன பிற்கால வடிவங்கள், ஆடூஉ மகடூஉ என்னும் வடிவங்கள் இன்னிசை பற்றி முன்னவற்றைப் பின்பற்றியவை. ஆன் — ஆடு — ஆடூஉ. மகள் — மகடு—மகடூஉ, ஆடு +அவன் = ஆடவன்.

நிகழ்கால வினையெச்சம் என்று ‘செய்து கொண்டு’ (doing) என்னும் வாய்பாட்டைக் கூறினால் கூறலாம். ‘செய்ய‘ என்பது உண்மையில் திகழ்கால வினையெச்சமன்று. அது எதிர்கால வினை யெச்சமாகவே கூறற்குரியது.

செய்யியர் செய்யிய செய்ய என்பவை வியங்கோள் வினையைக் கூறுமிடத்துக் கூறப்படும்.

செய்யின் = செய் (தொழிற்பெயர்) + இன் (5-ஆம் வே, உ, ஏதுப்பொருள்).

செய்தால் = செய்து (தொழிற்பெயர்)+ஆல் (3 ஆம் வே. உ.)

செயற்கு = செயல் + கு (4-ஆம் வே. உ.)

செய்ம் மன = செய்யும் (எ; கா. வி. மு.)+என = செய்ய மென — செய்ம்மென — செய்ம்மன = செய்யும் என்னும்படி.

பின், முன், கால், கடை, வழி, இடத்து, போது முதலிய வினையெச்சவீறுகள் காலப்பெயர்களும் இடப்பெயர்களுமாகும். இவை பெயரெச்சத்தோடு சேர்த்து அதற்கு வினையெச்சத் தன்மையுண்டாக்கும் சொல்லீறுகளாகும்.

அடுக்கிற்று வினைமுற்றுக்கள் :

சில வினைமுற்றுக்கனில் ஈறுகள் அடுக்கிவரும்.

கா : செய்தான் செய்தன் +அன் = செய்தனள், + அன் = செய்தனன்,+அர் = செய்தனர்,+அ = செய்தன.

என்னுமான் — என்மான் — பன்மன் + ஆர் = என்மனார் (எ. கா. வி. மு.)

ஓ. நோ. மகனார், சாத்தனார்.

செய்தனன் என்பதில், ஈற்றயல் 'அன்' ஆண்பாலீறே. அது குறுகிய வடிவாயிருத்தலின் மேலோர் 'அன்' சேர்க்கப்பட்டது. 'ஆன்' ஈறாயின் தனித்தே நிற்கும். ஒரே யீறும் அடுக்கிவரும் என்பதை, மரத்தது என்னும் சொல்லாலறியவாம்.

மரம்+ அத்து (அது)+அது = மரத்தது. ஈற்றயல் 'அன்' பொருள் மறைந்த பின் பிறபாலிடங்கட்கும் சென்றது. செய்தன் என்பது திணை பால் தோன்றாத பண்டைக்காலத்த தெனினுமாம்.

தன்மை வினை

இறந்த காலம் :

ஒருமை—கண்டு, வந்து, சென்று.

இவை முற்கூறப்பட்ட செய்து என்னும் வாய்பாட்டுப் பண்டை இறந்தகால வினைமுற்றுக்கள்.

பன்மை — கண்டும், வத்தும், சென்றும். இவை, யாம் நீம் தாம் என்பவற்றைப்போல் பன்மையுணர்த்தும் மகர மெய்யீற்றவை.

எதிர்காலம்:

ஒருமை—செய்கு, போது:

இது இயல்பான வினைவடிவம். முதன்முதல் எல்லாச் சொற்களும் உயிரிலேயே இற்றன. இப்போது மெய்யீற்றனவா யிருப்பவையெல்லாம் முதலாவது உயிரீற்றனவாகவே யிருந்தன. எல்லாச் சொற்களின் ஈற்றிலும் உகரம் அல்லது இகரம் ஒலிப்பெளிமைக்குச் சேர்த்துக்கொள்ளப்பட்டது. இவற்றுள் உகரத்தை Eaunciative 'u' என்பர் கால்டுவெல் ஐயர். இவ்வுகரம் குற்றியலுகரம். இது சில வினையீற்றில் வகரமெய் சேர்ந்து 'வு' என வழங்கும். 'வு' 'கு' ஆகும் இஃது ஓரியன்மை (uniformity) தோக்கிப் பிறசொற்களின் ஈற்றிலும் கொள்ளப்பட்டது, வ—க, போலி.

கா : காடகன்ணு , நில்லு' கையி, பாயி: ஏவு, மருவு; ஆகு, போகு.

நட, கொடு என்பவற்றின் நிகழ்கால வினையெச்சங்கள் நடவ கொட என்றிராமல், நடக்க கொடுக்க என்றிருப்பதையும், சில விடங்களில் கொடுப்பான் என்பது கொடுக்குவான் என்று வழங்குவதையும் நோக்குக. அமைத்து தொலைத்து என்பவை கழக நூல்களில் அடைச்சி தொலைச்சி என வழங்கு இன்னை, இவற்றின் பகுதிகள் அடைச்சு தொலைச்சு என்பனவாகும், போது என்பது போகு என்பதன் திரிபு.


தமிழ் பண்படுத்தப்பட்டபோது, சொற்களின் வேரைச் சேராத எழுத்துக்களெல்லாம் விலக்கப்பட்டன. அங்ஙனம் விலக்கியபோது, வல்லின மெய்யின் பின்வருபவை மட்டும் விலக்கப்படவில்லை ஒலித்தற் கருமையாகாமைப் பொருட்டு.

இயல்பான வினைவடிவமே முதலாவது தன்மை யொருமைக்கு எதிர்காலத்தில் வழங்கியிருக்கின்றது.

“மடுக்கோ கடலில் விடு திமி லன்றி மறிதிரை மீன்
படுக்கோ பணிலம் பலகுளிக் கோபரன் றில்லை முன்றிற்
கொடுக்கோ வளைமற்று நும்மையர்க் காயகுற் றேவல் செய்கோ
தொடுக்கோ பணியீ ரணியீர் பலர் நுஞ் சுரிகுழற்கே“[1]

என்னுஞ் செய்யுளிலுள்ள செய்கு என்னும் வாய்பாட்டு வினைகளையும், செய்தேன் என்னும் எதிர்கால வினைமுற்று வடிவத்தையும் நோக்குக.

செய்கு என்பது, வினைகள் பாலீறு பெறாததும் நிகழ் காலவினை தோன்றாததுமான பண்டைக் காலத்தில் தோன்றியது.

பன்மை—செய்கும், போதும்.

செல்லுது என்பது, பகுதி நீண்டு, செல்+து = சேறு என்று ஒருமையிலும், சேறும் என்று பன்மையிலும் ஆகும். இங்ஙனமே கொள்ளுது என்பதும் ஒருமையில் கோடு (கொள் +து) என்றும், பன்மையில் கோடும் என்றும் ஆகும், துவ்வீறு போது என்னும் வினையினின்றும் தோன்றியது. இவற்றையறியாமல், குடுதுறு என்பவும், கும் டும் தும் றும் என்பவும் தன்மைவினைமுற்றீறுகள் எனக் கூறினர் இலக்கணிகள். இங்ஙனமே, படக்கையொன்றன்பாற் குறிப்பு வினைமுற்றீறுகளையும் து று டு என்றனர் இம்மூன்றுள், (அது என்பதன் முதற்குறையான) 'து' ஒன்றே உண்மையான ஈறாகும்.

கா : உடையது—உடைத்து.
கண்+அது = கண்ணது: கண்+து =கட்டு,
தாள்+அது = தாளது; தாள் +து = தாட்டு.
அன்+அது = அன்னது; அன்+து = அற்று:
பால்+அது = பாலது; பால்+து = பாற்று.

பிற தன்மை வினையீறுகள் தன்மைப் பெயர்களும் அவற்றின் திரிபுமாகும்.

ஒருமை : ஏன்—என், (நான்)—(ஆன்)— அன் — அல் :

பன்மை : ஏம்—எம். (நாம்)—ஆம்—அம். (கண்டும் செய்தும் முதலியவற்றிலுள்ள) உம்—ஓம்.

முன்னிலை வினை

முன்னிலைவினை, ஏவல்வினை செயல்வினை என இரு வகைப்படும். செயல்வினை ஒருமை ஈறுகள் முன்னர்க் கூறப்பட்டன.

ஏவல்வினை, ஒருமை பன்மையென இருவகைப்படும், அவற்றுள், ஒருமை பின்வருமாறு எழுவகையாயிருக்கும்:

(1) பகுதி: கா : செய், போது.
(2) முன்னிலைப் பெயரீறுடையது. கா : (செய்நீ)—
     (செய்தீ)— செய்தி,
(3) வேண்டுகோளெதிர் மறைமுற்று. கா : செய்யாய்
    (செய்).
(4) எதிர்கால வினைமுற்று. கா : செய்வாய்.
(5) நிகழ்கால வினையெச்சம். கா : செய்ய.
(6) தொழிற்பெயர். கா : செயல்,
(7) துணைவினைபெற்றது. கா: செய்ய + விடு = செய்யட்டு.


பன்மையேவல் பின் வருமாறு அறுவகைப்படும்.

(1) முன்னிலைப்பெயரீறு பெற்றது.
(நீர்)—(தீர்)—திர். கா : செய்திர்.
நூம்—நும் — உம். கா : செய்யும்.
உம்+கள் = உங்கள். கா : செய்யுங்கள்.
உம்+(ஈம்)—(இம்) — இன். கா : செய்யுமின், செய்மின்.
(2) வேண்டுகோளெதிர்மறைமுற்று. கா :
(3) எதிர்கால வினைமுற்று, கா : செய்வீர்.
(4) நிகழ்கால வினையெச்சம், கா : செய்ய.
(5) தொழிற்பெயர். கா : செயல்.
(6) துணைவினை பெற்றது. கா : செய்யட்டும் (செய்யவிடும்).

செயல்வினைப் பன்மையீறுகள் ஈர்இர் ஆகும். நீர்-ஈர்-இர்.

கா : செய்நீர், செய்தனிர்; செய்கின்றீர், செய்கிறீர் : செய்வீர், செய்விர்.

'கள்' ஈறு முன்னிலை படர்க்கைப் பன்மையில் ஈற்றுமே வீறாய் வரும். ஒருமையீறு, பன்மையீறு, பன்மையீற்று மேலீறு என்னும் மூன்றும் முறையே, இழிந்தோன் ஒப்போன் உயர்ந்தோன் என்னும் மூவர்க்கும் உலகவழக்கிற் கொள்ளப்பட்டன. இவ்வியல்பு மலேய மொழிகளிலும் உள்ளது.

படர்க்கை வினை முற்கூறப்பட்டது.

வியங்கோள் வினை

வியம் = ஏவல், வியங்கொள்-வியங்கோள் (முன்னிலை திரித்த தொழிற் பெயர்). உயரச்சுட்டு செல்லுதற் பொருளில் வரும் என்று முன்னமே கூறப்பட்டது. ஓய் = செலுத்து. ஒய்+அம் = ஓயம். ஒய்—உய்+அம் உயம். உய் செலுத்து. ஒ. நோ, ஒ—ஒடு ஏ—ஏவு=ஏகு. ஏவு பிறவினைப் பொருளிலும் ஏகு தன்வினைப் பொருளிலும் வழங்குகின்றன. ஆனால், இவற்றுள் ஒவ்வொன்றுக்கும் அவ்இருபொருளும் உள. உயம்—வியம். ஏவல்குறித்த வியம் என்னும் சொல், மதிப்பான ஏவலுக்குப் பெயராயிற்று. “தேர்வியங்கொண்ட பத்து”[2] என்னுஞ் சொற்றொடரில், வியங்கொள் என்னுஞ் சொல் செலுத்தற்பொருளில் வந்திருத்தல் காண்க.

ஏவலும் வியங்கோளும் சொன்முறையில் ஒன்றே. தொழிற்பெயரே ஏவலாகவும் வியங்கோளாகவும் பயன்படுத்தப்பட்டது. “செயல்” “எனல்” [3] என்று திருவள்ளுவரும் “நிலையல்” “கொளலே”[4] என்று தொல்காப்பியரும் கூறுதல் காண்க. நில் (தொழிற்பெயர்)+ஈயல்= நிலீயல் = நின்றருள், ஈயல்ஈதல், நிலீயல்—நிலீயர் — நிலிய - நிலிய, ஈயல் + ஈயர் — ஈய—இய—அ—க. ஈயர் — இயர், செய்யிய—செய்ய. செய்கு +அ=செய்க, போகு+அ = போக. நட+அ= நடக்க. போக நடக்க முதலிய சொற்களின் ஈற்றில் அகரம் ககர மெய்யோடு சேர்ந்து நிற்பதால், 'க' ஒரு வியங்கோளீறாகக் கூறப்பட்டது. வியங்கோள் பாலீறும் எண்ணீறும் பெறாமையால் இருதிணை யைம் பால் மூவிடங்கட்கும் பொதுவாம்.

செய்ய என்னும் வினையே, ஏவல், வியங்கோள், நிகழ்கால வினையெச்சம், தொழிற்பெயர் என்னும் நால்வகையில் வழங்கும். இவ்வியல்பு ஆங்கிலம் இந்தி முதலிய பிறமொழிகளிலும் உள்ளது.

செய்யியர் — செய்யிய —செய்ய (செய) என்பவை தொல் காப்பியத்தில் எதிர்கால வினையெச்சங்களாகக் கூறப்பட்டன. இவற்றுள், 'செய்ய' என்னும் வடிவுமே நிகழ்கால வினை யெச்சமாகவும் கூறப்படும். எதிர்கால வினையும் நிகழ்கால வினையென வழங்கினதை, 'மலை நிற்கும்', 'ஞாயிறியங்கும்' என, எதிர்கால வினைமுற்றுக்களையே முக்காலத்திற்கும் பொதுவான பொருளைக் குறிக்கும் நிகழ்கால வினைகளாக, உரையாசிரியர்கள் வழிவழி கூறினதினாலும், இன்றும் நீர் குளிரும் தீச்சுடும் என எதிர்கால வினைமுற்றுக்களே அப் பொருட்கேற்பதினாலும், அறிந்து கொள்ளலாம்.

எதிர்மறை வினை

ஏவல் :

ஒருமை—செய் + எல் = செய்யல்—செய்யேல். அல் என்பது எதிர்மறைக் குறிப்பு வினை.

செய்யாய்+த் =(செய்யாய் தீ)—(செய்யாதீ)—செய்யாதி (செய்யா தீ)— செய்யாதே—செய்யாதை.

பன்மை — செய்யல் + மின் = செய்யன் மின்.
செய்யாதீ + ஈர் = செய்யாதீர். +கள்.
+ இர் = செய்யாதிர். +கள்.
செய்யாதே + உம் = செய்யாதேயும். +கள்.

வியங்கோள் : செய்+அல்+க = செய்யற்க.

செயல் வினை : இஃது இருவகை.

(1) துணைவினை பெற்றது:

கா: செய்தானல்லன்
செய்தானில்லை
செய்ததிலன்
செய்ததில்லை
செய்திலன்
செய்யவில்லை (முக்காலத்திற்கும் பொது )

படர்க்கை
ஆண் பால்
இறந்தகால
வினைமுற்று

இங்கனமே பிற பாலிடங்கட்கும் ஒட்டுக. இல்லை யென்னும் சொல் இருதிணையைம்பால் மூவிடங்கட்கும் பொது.

(2) இடைதொக்கது. கா: செய்யேன், செய்யாய், செய்யான்.

இது எதிர்கால வினை : வழக்கத்தைக் குறிக்கும்போது முக்காலத்தையும் தழுவும் : இதில் இறுதியிலுள்ள உயிர் குறிலாயின் நீளும். செய்யாய் செய்யீர் என்னும் முன்னிலை வினைகள், முறையே, ஒருமை பன்மை ஏவலாகவும் வரும். காலங்காட்டும் இடை நிலையின்மை எதிர் மறை குறிக்கும் என்பர் கால்டுவெல் ஐயர்.[5]

வினையெச்சம்

செய்யாது (எதிர்மறைத் தொழிற்பெயர்).

செய்யாமை (எதிர்மறைத் தொழிற்பெயர்). செய்யாமை — செய்யாமே. செய்யாமை—செய்யாமல்.

துவ்வீற்றுப்படர்க்கை ஒன்றன்பாற் பெயர் வினை யெச்சமாகக் கூடியதை, பெரிது வந்தான், நன்று சொன்னான் என்னுந் தொடர்களா லுணர்க. முற்றெச்சம் = பனை பாலணையும் பெயர் +ஆய், ஆன.

செய்யாது என்னும் வாய்பாட்டில் வரும் அல்லாது இல்லாது என்னும் குறிப்புவினைகள், அல்லது (அல் + அது), அன்று (அல்+தி), இல்லது (இல்+அது) இன்று (இல் +5) எனக் குறுகும்.

அன்று போனான் = அல்லாது போனான்: இன்று போனான் இல்லாது போனான்.

இதையறியாது.

“அன்றி யின்றியென் வினையெஞ் சிகரம்
தொடர் பினு ளுகர மாய்வரி னியல்பே”[6]

என்றார் பவணத்தியார். செய்யாது என்பது செய்யா என ஈறு கெட்டும் வரும்.

பெயரெச்சம் :

செய்யாது (எதிர்மறை வினையெச்சம்) + அ (பலவின் பாலீறு) = செய்யாத (படர்க்கைப் பலவின் பால் எதிர்மறைக் குறிப்பு வினைமுற்று).

படர்க்கைப் பலவின்பால் வினைமுற்றே பெயரெச்சமாகுமென்று முன்னர்க் காட்டப்பட்டதை நினைக்க.

செய்யாத என்பது செய்யா என ஈறுகெட்டும் வரும்.

தொழிற்பெயர் :

செய்யாத (பெயரெச்சம்)+மை (தொழிற்பெயரீறு) = செய்யாதமை.

செய்யா (ஈறுகெட்டது)+ மை = செய்யாமை.

செய்யாத + அது = செய்யாதது.

வினையாலணையும் பெயர் :

செய்யாத + அவன் = செய்யாதவன்—செய்யாதான்.

குறிப்பு வினை

முற்று :

குறிப்பு வினைமுற்று மூவகையது.

(1) பாலீறில்லாத பெயர். கா: அது மரம் ; அவன் யார்?

(2) பாலீறுள்ள பெயர். கா : கண்ணன், நல்லது, நல்ல.

(3) குறைவினை (Defective Verb) கா : உண்டு , இல்லை ; உண்டு இல்லை என்பனவும் பாலீறு பெற்றவையே : இப்போது பாற்பொருவிழந்து வழங்குகின்றன.

உன்+அது = உள்ளது. உள்+து அ=உண்டு . இல்+ அது = இல்லது. இல்+து = இன்றும் உள்+அ= உள்ள — உள. இல் + அ = இல்ல—இல—இலை. இல்ல — இல்லை, ஓ. நோ. அம்ம—அம்மை.

செந்தமிழில் ஐகாரவீறாயுள்ள பல சொற்கள், உலக வழக்கிலும் ஏனைத் திராவிட மொழிகளிலும் அகரவீறாகவே வழங்குகின்றன. முன்னது இயல்பான வடிவும் பின்னது பண்படுத்திய வடிவுமாகும்.

பெயரெச்சம் :

பெயரெச்சம் பின்வருமாறு பலவகைகளில் உண்டாகும்;

(1) வினைப்பகுதி. கா : பெரு, சிறு.

(3) பலவின் பால் வினைமுற்று. கா : நல்ல, சின்ன, பெரிய, பெயரிய.

இய என்னும் ஈற்றில், இகரம் இறத்தகாலவினையெச்ச வீறும் அகரம் பலவின்பால் வினைமுற்றுமாகும்,

கா : இ. கா. வி, எ. ப, பா, வி, மு. பெயரெச்சம்,
ஓடி ஓடிய ஓடிய

இறந்தகால வினையெச்சமே முதலாவது முற்றாயிருந்ததென்றும், பின்பு பாலீறு சேர்க்கப்பட்டுத் தற்கால முற்றான தென்றும் முன்னமே கூறப்பட்டதை நினைக்க.

கா : செய்து+அ = செய்த(வி. மு.) — செய்த (பெ. எ.).

ஓடிய—ஓடின. போதிய—போகின — போயின, போகபோய்+அ = போய—போன, உறங்கிய — உறங்கின, ஆயஆன, ய| ன, போலி, ஓ. நோ. யான்— நான், யமன் (வ.) — நமன்.

செய்தன (செய்தன்+அ) என்னும் வடிவம், ஆண்பால் வினை முற்றின் மேல் பலவின்பாலீறு சேர்ந்த அடுக்கீற்று வினையாகும்.

ஆகவே, உண்வையில் இடைநிலையென்னும் சாரியை யென்றும் பகுபதத்தில் ஒருறுப்புமில்லையென்க.


(3) ஈறுகெட்டபெயர். கா : வட்ட, மர.

(4) ஈற்றுவலி யிரட்டித்த சொல். கா : சிற்று, நாட்டு.

(5) முதல் வேற்றுமைப் பெயர். கா :குட்டி, மூங்கில், பொலம்.

(6) 6ஆம் வேற்றுமைப் பெயர். கா : மரத்து, பதின், பதிற்று.

கிழக்கத்திய, பிறம்பத்திய என்பவை 6 ஆம் வேற்றுமை யடியாய்ப் பிறந்த பலவின்பால் குறிப்பு வினைமுற்று.

(7) ஐயீற்றுப்பெயர், கா : பண்டை , அன்றை, கீழை.

ஆய—ஐ— ஐ. பண்டாய—பண்டைய — பண்டை,

“பண்டாய நான் மறை” என்னும் திருவாசகத் தொடரை நோக்குக.

(8) பெயரெச்ச வீற்றுப் பெயர். கா : வட்டமான அறிவுள்ள.

(9) பலவின்பாலீறு பெற்ற பெயர். கா : பார்ப்பார, வண்ணார.

குறிப்பு :- பெரு நாரை மூங்கிற்குழாய் என்னுந் தொடர்கள் இயல்பாய்த் தோன்றியவை; இடையில் ஒன்றும் தொக்கவையல்ல. அவற்றைப் பெருமையாகிய நாரை, மூங்கிலாகிய குழாய் என்று விரித்துக் கூறியது பிற்காலத்தது. தயிர் குடம் என்னும் இருபொருட் சேர்க்கையைக் கண்டதும், தயிர்க்குடம் என்பரேயன்றித் தயிரையுடைய குடம் என்னார். தயிர் அடையானதினால் முற்கூறப்பட்டது. குடம் அடையாயின் குடத்தயிர் என்று முற்கூறப்படும். அடை வேறு படுப்பது. வேற்றுமையேயில்லாத ஒரு காலமுமிருந்தது. அக்கால வழக்கையே பிற்காலத்தில் வேற்றுமைத்தொகை யென்றனர். இங்கனமே பிற தொகைகளும். இன்றும், பேச்சு வழக்கிலும் குழந்தை பேச்சிலும், ஏன் புஸ்தகம் நானுகை என்று வழங்குதல் காண்க.

வினையெச்சம் :

(1) தொழிற்பெயர், கா: இன்றி (இல்+தி), இல்லாமை.

(2) முதல் வேற்றுமைப்பெயர், கா : வெளி, புறம்.

(3) திரிவேற்றுமைப்பெயர். பிறகால், வெளியில்:

(4) வினையெச்சவீற்றுப் பெயர். கா: நன்றாய், நன்றாக.

(5) முற்றெச்சம். கா : வேலினன் {வந்தான்).

செயப்பாட்டு வினை

(1) நிகழ்காலவினையெச்சம்+படு (to suffer). கா : செய்யப்படு

செயப்படுவது செயப்பாடு. செயப்பாட்டைக் கூறும் வினை செயப்பாட்டுவினை.

(2) முதனிலைத்தொழிற்பெயர் +உண் (to experience, lit to eat). கா : கொல்லுண்.

(3) ஈறுபெற்ற தொழிற்பெயர்+உண். கா: கொலையுண்.

(4),, +ஆ (to become), போ முதலியன; கா : கொலையானான், விலைபோகும்:

தமிழ்ச் செயப்பாட்டு வினை முறை ஆங்கில முறையினின்றும் வேறுபட்டிருப்பது கொண்டு, தமிழில் உண்மையான செயப்பாட்டு வினையில்லையென் நயிர்த்தார் கால்டுவெல் ஐயர், ஆங்கிலச் செயப்பாட்டு வினைப்பெயரே தமிழ்ச் சொல்தான்.

E. passive, adj. Fr-L. passivus from patior, to suffer (root PAT[7] pat=படு, passion = பாடு, (1—3, போலி (Permutation).

பிறவினை —Causal Verb

பிறவினை என்பது இருமடி அல்லது பன்மடி, ஏவல்:

“செய்யென் வினைவழி விப்பி தனிவரின்
செய்வியென் னேவ லிணையினீ ரேவல்” (138)

என்று தன்னூலாருங் கூறுதல் காண்க. தொழிற்பெயர் ஏவல் வினையாக வருமென்பது முன்னர்க் கூறப்பட்டது. துணைவினை பெற்றவையொழிந்த, ஏனைய பிற வினை வடிவுகளெல்லாம் தொழிற்பெயர்களே.

கா : வாழ்+து = வாழ்த்து . து —சு. பாய்+சு — பாய்ச்சு.

துவ்வீறே புணர்ச்சியில் டுறு வாகும்.

கா காண்+து + காட்டு, உருள்+து = உருட்டு, தின்+ து = தீற்று, நால்+து = நாற்று.

செய்யப்பண், வரச்செய் முதலியன துணைவினை பெற்றவை.

குறைவினை-Defective Verb

எல்லாத் திணைபாலிடங்கட்கும் புடைபெயராத வினை குறைவினையாகும்.

கா : வேண்டும், கூடும், போதும்.

வேண்டு = விரும்பு. எனக்கு அது வேண்டும்= யான் அதை விரும்புவேன். விருப்பம் இங்குத் தேவையைக் குறிக்கும் : நீ அதைச் செய்யவேண்டும் = நீ அதைச் செய்ய யான் விரும்புவேன்.

உனக்கு என்ன வேண்டும் = நீ என்ன விரும்புவாய்.

‘செய்யும்’ என்னும் வாய்பாட்டு எதிர்கால வினைமுற்றாகிய ‘வேண்டும்‘ என்பது, இன்று பொருள்மறைந்து வழங்குகின்றது. இது தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே தொடங்கினதாகும்.

வழுவமைதி வினை -Anamolous Verb

கா : அல்லேன்—வழாநிலை (நான்) அல்ல — வழுவமைதி.

ஒட்டுவினை

மற்றச் சொற்களோடு சேர்ந்தே வழங்கும் வினை ஓட்டு வினை :

கா : (ஆகும்) ஆம்-செய்யலாம், செய்தானாம்.

ஆக்கும்-(ஆகும்) செய்வானாக்கும், புலவனாக்கும்.

துணைவினை — Auxiliary

கா : (செய்ய) முடியும், நீராடு, புரந்தா, அலம்வா.

துணைவினைகள் பலவகைப் பெயர்களோடும் வினை முற்று எச்சங்களோடும் சேர்ந்துவரும். அவற்றுள் சினைப் பெயரோடு சேர்ந்து வருபவை மிகப்பல.

கா : கைபார், கைக்கொள், கையாடு, கையாள், கைதேர், கைவா, கையறு, கைப்பற்று முதலியன.

துணை வினைகளுள் முடி, கூடு, மாட்டு முதலியவை, உடன்பாட்டில் ஆற்றல் (Potential) பொருளும் எதிர்மறையில் விலக்கு (Prohibition) மறுப்பு (Dealal)ப் பொருள்களும் உணர்த்தும், விடு இடு என்பவை துணிவு விரைவு வியப்பு முடிவு முதலிய பொருள்களுணர்த்தும் ; இடு அருள் முதலியவை வேண்டுகோள் வாஞ்சை அருளல் ஆகிய பொருள்களுணர்த்தும் கொள் என்பது தற்பொருட்டு (Reflexive) ப் பொருளும் மாற்றிக்கோடல் (Reciprocal) பொருளுமுணர்த்தும் ஆர் (ஆர), தீர் (தீர) முதலியவை முன்னொட் டாய்ச் சேரின் மிகுதி (Intensive) ப் பொருளுணர்த்தும்.

இரட்டைக்கிளவி வினை -Fedquentative Verb

கா : துறுதுறு, குளு குளு, சலசல.

பெயரடிவினை -Denominative Verb

கா : எள் — எள்ளு , புரம்—புர.

புரத்தல் காத்தல். புரம் - கோட்டை , நகர்.

ஆகு பொருள் வினை :

ஒரு வினை தன் பொருளொடு தொடர்புள்ள இன்னொரு பொருளில் வழங்கின், அதை ஆகுபொருள் வினையெனலாம்.

கா : (காசு) செல்லும், (இவ்வளவு) போதும், (உள்ளம்) குளிரும்.


  1. திருக்கோவை, 63.
  2. ஐங்குறுநூறு, பக்.139.
  3. குறள், 38, 196.
  4. தொல். 15, 405,
  5. c.c. G. p. 361.
  6. நன்னூல்,178
  7. Cassell's Latin Dictionary, p. 396. connected with Gr. pascho),