உள்ளடக்கத்துக்குச் செல்

ஓங்குக உலகம்/007-026

விக்கிமூலம் இலிருந்து

7. நல்ல உள்ளம்

லக நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் அடிப்படைக் காரணம் மனித உள்ளமே. உள்ள நெகிழ்வும் உணர்வும் பிற உயிர்களுக்கு இருப்பதாக அறிஞர்தம் ஆய்வுகள் ஓரளவு விளக்கினாலும் அவற்றைச் செயலாற்றும் திறனும் நெறியும் அப் பிறவுயிர்களுக்குக் கிடையா. எனவே மனித உள்ளமும் அதன்வழி அரும்பும் உணர்வுமே உலகநெறியை ஒருவழிப்படுத்துகின்றன என அறியலாம்.

உலகில் எத்தனையோ கோடி மக்கள் வாழ்கின்றார்களே. அவர்தம் உள்ளம் அத்தனையும் எப்படி உலகை ஒருவழிப்படுத்த இயலும் என்ற ஐயம் எழலாம். ஆயினும் மக்கள் அனைவரும் அந்த உள்ள உணர்வைச் செயல்படுத்த நினையா நிலையும் நினைப்பினும் செயலாற்ற முடியாச் சூழலும் எங்கோ ஒருசில மக்களின் உணர்வுவழி உலகம் செல்லக் காரணமாகின்றன. அந்த ஒருசில உள்ளங்கள் நல்ல உள்ளங்களாக அமைந்துவிடின் நாடும் உலகமும் நன்மை பெற்றுச் சிறக்கும்! அல்லாவிடின் என்னாகும்? எடுத்தியம்ப வேண்டா!

இந்த உலகினை நல்வழியினில் ஆற்றுப்படுத்தும் நல்ல உள்ளங்களை அன்றுதொட்டுத் தமிழறிஞர் எண்ணிப் பார்த்துப் பார்த்து ஏட்டிலும் வடித்துச் சென்றுள்ளனர். உள்ளம் தூய்மையாக இருந்து அதன் வழியே செயலாற்றுவதே எல்லா அறங்களுக்கும் மேம்பட்டதாகும் என்ற உண்மையை வள்ளுவர்,

‘மனத்துக்கண் மாசில னாதல் அனைத்தறன்’

என்று வரையறுத்துள்ளார். அப்படியே நல்ல செயல்கள் ஆற்றுவதற்கான அடிப்படையாய உள்ளம் மக்களுக்கு அமையவேண்டும் என்ற உண்மையினையும் அவ்வுள்ளம் நிலை கெட்டு அல்லாதனவற்றை நினைக்கும் அவல நிலையினையும் வள்ளுவர் பலவிடங்களில் சுட்டிக் காட்டத் தவறவில்லை. ‘உள்ளுவ் தெல்லாம் உயர்வுள்ளல்’, ‘உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறர் பொருளைக் கள்ளத்தால் கள்வே மெனல்’ என்பன அவர் வாக்குகளன்றோ,

இந்த நல்ல உள்ளத்தை நாட்டில் எப்படித் தேடிக் கண்டுபிடிப்பது? இந்த வினாவுக்கு விடையாக அன்று முதல் இன்றுவரை எண்ணற்ற வகையில் விடை காட்டி வருகின்றனர். உலகமே அந்த நல்லுள்ளத்தாலும் அதன் வழி அரும்பும் சான்றான்மையாலுமே வாழ்கின்றது என்ற உண்மையை வள்ளுவர் பல பாக்களில் காட்டுகின்றார். இந்த நல்லுளத்தாரை எண்ணித்தான்,

“எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே”

என்று பண்டைப் புலவர் பாரினை வாழ்த்துகின்றார்.

இந்த நல்லுளத்தில் அரும்பும் உணர்வு உலகை வாழ்விக்கின்றது. அவ்வுணர்வில் இன்னார் இனியார் என்ற வேறுபாடு இல்லை-உற்றார் அற்றார் என்ற மாறுபாடு இல்லை; மாற்றோரும் இல்லை; கேளிரும் இல்லை. அவ்வுள்ளத்துக்கு ஓரறிவுடைய உயிரும் ஆறறிவுடைய உயிரும் ஒன்றே. உளத்தன்மையில் வேறுபடினும் உயிர்த்தன்மையில் புல் முதல் மனிதன் வரையில் அனைவரும் ஒன்றே என்ற உண்மையைப் பண்டைய புலவர் பாராட்டியுள்ளனர். இன்றைய அறிவியலறிஞர் உணர்ந்து காட்டுகின்றனர். நாத்தழும்பிருப்பப் பாடாதாயினும் முல்லைக்குத் தேர் ஈந்தது பாரியின் நல்ல உள்ளம். மயிலுக்குப் போர்வை ஈந்தது பேகன் உள்ளம். ‘எல்லார்க்கும் கொடுமதி’ என்று அறிவுறுத்தியது புலவர் உள்ளம். ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடியது’ வள்ளலார் உள்ளம்.

இந்த நல்ல உள்ளங்கள்தாம் நாட்டில் விழாக்களைத் தோற்றுவிக்கக் காரணமாயின. ‘நாம் வாழ்வது இருக்கட்டும்; நாடு வாழ்கிறதா?’ என்ற அவ்வுள்ளங்கள் எழுப்பிய வினாவுக்கு விடைகளே இந்த விழாக்கள்.

“பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி”

வள்ளுவ முதுமகன் இந்திரவிழாவினை உலகுக்கு அறிமுகப்படுத்துகிறான் என்று இருபெருங் காப்பியங்களும் நமக்கு உணர்த்துகின்றன. ஆம்! எல்லா நாட்களிலும் மக்கள் அவலம் நீங்கி நலமெலாம் பெற்று வாழ வேண்டியவர்களே! ஆயினும் எத்தனையோ எதிர்பாராத சூழல்களாலும் பிறவற்றாலும் அந்நிலை முற்ற இல்லையாயினும் விழாக்காலங்களிலாயினும் அந்த நிலை அரும்ப வேண்டும் எனக் கருதிய அந்த நல்ல உள்ளங்கள் அப்படி நினைக்கின்றன. ஆம்! நாட்டில் பசியும் பிணியும் பகையும் இல்லாத நாளே விழா நாள்! அப்படியே மழை பொழிந்து அதன்வழி வளங்கொழிக்கக் கண்டு மகிழும் நாளே விழாநாள்! தமிழர்தம் விழாநாள்கள் பலவற்றுள்ளும் சிறந்த இப் பொங்கல் நாள் இந்த அடிப்படையில் அமைந்ததேயாகும்.

இத்தகைய நல்ல உலகைக் காண விரும்பும் நல்ல உள்ளங்கள் தம் மாசினை முதலில் போக்கிக்கொள்ள வேண்டும். புறத் தூசினையும் அகத் தூசினையும் ‘தீயினில் தூசாகச்’ செய்து இருவிடத்தும் தூய்மை காணும் நாளே போகி நாள். இன்னலுக்கும் இடருக்கும் ‘போக’ எனப் போகியிட்டபின், அடுத்த நல்ல நாளில் உள்ளங்கள் மகிழ்ச்சியினில் பொங்குகின்றன. அந்தப் பொங்கிய நல்லுளத்தில் பரந்த உலகம் இன்பில் திளைக்கவேண்டும் என்ற உணர்வு அரும்ப, உலகைச் சுற்றி நோக்கிடுகின்ற விழாவாகப் பொங்கல் அமைகின்றது. மனிதன் மட்டும் இன்பில் திளைத்து இனிமையில் பொங்கினால் போதாது, ‘எல்லா உயிரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே நல்லது’ என்ற உணர்விலே மாட்டுப் பொங்கல் அமைகின்றது. அடுத்து, அதையும் தாண்டி, அனைவரும் அனைத்தும் இன்பில் திளைக்கின்றனரா-திளைக்கின்றனவா என்ற நிலை காணும் பொங்கலாக அமைகின்றது. இவ்வாறு மாசு நீங்கிய உள்ளம் காணும் நானிலத்தை வாழ வைக்கும் நல்விழாவாக இந்தப் பொங்கல் விழா அமைகின்றது.

வற்றா வளம் வாய்ந்த பொன்னார் தமிழகத்தில் இந்த ஆண்டில் இயற்கைச் சூழலால் வசியின்றி வளம் சுருங்கினாலும் நல்ல உள்ளங்கள் அதைக் கண்டு நைந்தாலும்-வருங்காலம் வளமாகும் நிலையில் நாம் உள்ளோம் என்பதை மறக்கலாகாது. அடுத்துவரும் பொங்கல் விழா ‘வசியும் வளனும்’ சிறக்கும் விழாவாக அமையவேண்டும் என்று நல்ல உள்ளங்கள் வாழ்த்துகின்றன. எனவே இடுக்கண் வருங்கால் இனிய முகத்துடன் சிரித்து, வருங்காலத்தில் வையம் வற்றா வளம் பெற வேண்டும் என வாழ்த்தும் நல்ல உள்ளங்கள் நமக்கு வழி காட்டிகளாக அமைய நாம் முன்னேற வேண்டும். முன்னேறுவோம் என்பது உறுதி.

அகத்தும் புறத்தும் மாசகன்ற நல்ல உளத்தொடு நாம் அனைவரும் இந்தப் பொங்கல் நன்னாளில் நாடு ‘வசியும் வளனும் சுரந்து’ ஓங்கவேண்டும் என வாழ்த்துவதுடன் அந்த நல்ல வாழ்வுக்கு அயராது உழைக்கும் ஆக்கப் பணியை மேற்கொள்ள உறுதிபூணுவோமாக! உள்ள உரமும் உடல் உழைப்பும் ஒருங்கே அமையின் நாடு நாடாகும்-நாமும் தலை நிமிர்வோம்! இந்த நல்ல உணர்வோடு-நல்ல உள்ளங்கள் உறவாடும் நிலையில் இப் பொங்கல் விழாவைக் கொண்டாடி புத்துலகப் பொன்வாழ்வை நோக்கி நடப்போமாக! வாழ்க நல்ல உள்ளம்! வளர்க வசியும் வளனும்!

1975 - பொங்கல் மலர்

"https://ta.wikisource.org/w/index.php?title=ஓங்குக_உலகம்/007-026&oldid=1135787" இலிருந்து மீள்விக்கப்பட்டது