ஓங்குக உலகம்/008-026
8. திரு. வி.க..சில நினைவுகள்
நான் அப்போது வாலாஜாபாத் இந்து மத பாடசாலையில் ஆறாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். என்னை நான் முற்றும் அறியாத காலம் 1925-26 என எண்ணுகிறேன். அப்போது காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. (மாநாட்டின் விளைவுகள் தமிழ் நாட்டில் பல வேறுபாடுகளை உண்டாக்கின எனப் பிறகு அறிந்தேன்). அந்த மாநாட்டில் (1926) கலந்துகொண்ட நால்வரை வாலாஜாபாத் பள்ளிக்கு திரு.வா.தி. மாசிலாமணி எனும் பள்ளியின் நிறுவனர் அழைத்துவந்தார். இளங் குழந்தைகள் பலர் பேசினர். நானும் பேசினேன். சாதி ஒற்றுமையா அல்லது சாதி வேற்றுமையா என்பது பொருள். நான் ஆசிரியர் தந்த குறிப்பின்படி சாதி ஒற்றுமையைப்பற்றி வற்புறுத்திப் பேசினேன். என் பேச்சு முடிந்ததும் தலைமைவகித்த டாக்டர் வரதராசலு நாயுடு அவர்கள் அவருக்கு இட்ட மாலையினை எடுத்து, என் கழுத்தில் இட்டு, ‘நீ வருங்காலத்தில் சிறக்க உயர்வாய்’ என வாழ்த்தினார். பக்கத்தில் இருந்தவர் என்னை முதுகில் தட்டிக் கொடுத்து ‘உனக்கு நல்ல எதிர்காலம்’ இருக்கிறது என ஆசி கூறினார். அவர்தாம் திரு.வி க. எனப் பிறகு ஆசிரியர்கள் சொல்ல அறிந்தேன். வந்த நால்வருள் மற்ற இருவர் எஸ்.சீனிவாச ஐயங்கார், இராஜாஜி ஆகியோர் ஆவார்கள். (திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்பு-பக்கம் 388) எனவே என் பதினோராவது வயதில் முதல்முதல் நான் ‘திரு.வி.க.’ அவர்களைச் சந்தித்தேன். ஆனாலும் அப்போது அவரைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.
பின் நான் செங்கற்பட்டில் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது நாட்டில் விடுதலைக் கிளர்ச்சி எழ, காந்தி அடிகளாரின் தண்டி உப்புச் சத்தியாக்கிரகம் நடைபெற்ற காலத்தில் திரு.வி.க. நவசக்தியின் எழுத்துக்களும், பிற நூல்களும் (சிறப்பாக மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்) என் உள்ளத்தைத் தொட்டன. அதன் பிறகு ஓரிருமுறை சென்னை வந்தபோது அவர்கள் இல்லத்தில் சென்று அவர்களைக் கண்டுவந்தேன்.
1938-ல் எங்கள் ஊர் இறைவனுக்கென அமைத்த மண்டபத்தினை அவர்கள் கையால் திறக்கவேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன். அவர்களும் இசைந்து ஊருக்கு வந்து ஒருநாள் முழுதும் தங்கினார்கள். அப்போதுதான் அவர்களுடன் நெருங்கிப் பழகிப் பேச வாய்ப்பு வந்தது. அவர்கள் கூறிய அறிவுரைகள் பல-விளக்கங்கள் பல. அவ்வாறே காஞ்சிபுரம் குமரன் அச்சகத் திறப்புவிழா, திருவதிகை சைவசித்தாந்த சமாசம் (அவர் தலைவர்) ஆகிய நிகழ்ச்சிகளில் அவரோடு உடன் உறையும் வாய்ப்பினால் அவர் என்னை நன்கு புரிந்து கொண்டார். நான் அவரை நன்கு உணர்ந்து கொண்டேன்.
பின் 1941-ல் என் அன்னையார் மறைந்தபோது அன்னையின் இறுதி நாள் சடங்கினைத் ‘திரு.வி.க.’ அவர்களே வந்து நடத்தி வைத்தார்கள், தம்முடன் திருவாளர்கள் சச்சிதானந்தம் பிள்ளை, தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், ரா.பி. சேதுப்பிள்ளை, கோவை. இராமச்சந்திரன் செட்டியார், சுந்தர ஓதுவர் மூர்த்திகள் புரிசை சு. முருகேச முதலியார் ஆகியோரையும் வரச்சொல்லி, ஒரு பெரிய மகாநாட்டினையே என் சிற்றூரில் நடத்திவைத்தார். ஓரிரு முறை நான் காஞ்சியில் இருந்தபோது என் குடிலுக்கு வந்து தங்கியும் இருக்கிறார்.
பிறகு நான் 1944-ல் சென்னைப் பச்சையப்பனில் பணி ஏற்றபோது, அவரை வணங்கி அவர் நல்வாழ்த்தினைப் பெற்றே பதவி ஏற்றேன். அதுமுதல் அடிக்கடி அவர்கள் வீட்டிற்குச் சென்று வேப்பமரத்தடியில் இருந்து பலப்பல பொருள்களைப் பற்றியெல்லாம் பேசியதுண்டு. அப்போது நான் அரசியலில் இருந்த காரணத்தால் அரசியல் பற்றியும் பேசுவோம். தொழிலாளர் நலன் பற்றியும் பேசுவதுண்டு. நான் நடத்திய ‘தமிழ்க் கலை’யில் தொழிலாளர் பற்றிய கட்டுரைகளும் பாடல்களும் இடம் பெறும். பின் சைவசித்தாந்த சமாசத்தின் துணைச் செயலாளனாகவும் அதன் இதழாகிய சித்தாந்தத்தின் துணை ஆசிரியனாகவும் இருந்த காரணத்தால் ஒவ்வொரு மாதத்திலும் ஏழெட்டு நாட்கள் அச்சகப் பணியின் பொருட்டு (அது சாது அச்சுக் கூடத்தில் அச்சிடப் பெற்றது) அங்கே தங்குவேன். அப்படியே சென்னையில் நான் ‘தமிழ்க் கலை’யினை வெளியிட்ட சில ஆண்டுகளிலும் (சாது அச்சுக் கூடத்தில் அச்சிடப்பெற்றது) அங்கே பல நாள் தங்குவேன். அப்போதெல்லாம் திரு.வி.க. கூறிய அறிவுரைகளும் ஆக்க உரைகளும் அளப்பில.
இவ்வாறு நெருங்கிப் பழகிய அந்த நல்லவர் தொடர்பு, கடைசிவரையில் இருந்தது. நானும் டாக்டர் மு.வ., அவர்களும் அடிக்கடி அங்கே சென்று வருவோம். எதிர் வீட்டிற்கு மாற்றப் பெற்ற போதும் நாங்கள் செல்லத் தவறவில்லை. இறுதியில் சில நாட்கள் பல மணி நேரம் அவர் அருகிலேயே அமர்ந்திருந்தோம். இறுதி ஊர்வலத்திலும் (சுமார் 1/2 மைல் நீளம்)-எல்லாக் கட்சியினரும்-சமயத்தினரும்-எல்லா இனத்தினரும் -யாவரும் கலந்து கொண்ட அந்த ஊர்வலத்தில்-இறுதி யாத்திரையில் கலந்து அவர் உயிரன்றி உடலும் அமைதியுறக் கண்டு வந்தோம். இவ்வளவு நெருங்கிப் பழகிய போதிலும் நான் அவருக்கு வேண்டியவன் என்றோ, நெருங்கியவன் என்றோ, யாரிடமும் நான் காட்டிக் கொள்வதில்லை; சொல்லுவதில்லை. பேசாமல் ஒதுங்கிவிடுவேன்.
இப்புடி 1925 முதல் 1953 வரை அவரிடம் பழகிய பான்மையால் நான் பெற்ற பலன்கள் பல. எனக்கு ஆங்கிலத்தில் நல்ல அழகான சர்ன்றிதழ் ஒன்றினை அவர் கையொப்பமிட்டுத் தந்துள்ளார். அப்படியே ஒரு நூலும் அளித்துள்ளார். அவர் எழுதிய நூல்கள் சில அச்சேறுவதன் முன்பே எங்களுக்கு அவர் படித்துக் காட்டுவார்; அல்லது எங்களைப் படிக்க விடுவார். அவர் பேச்சுகள் சில சமயம் அச்சாகும் போது, அவற்றைப் படிக்கவும் செய்வோம். இவ்வாறு என்னைப் போன்று பல லட்சக்கணக்கான மக்கள் உள்ளங்களில் வாழும் அவருக்கு இன்று தமிழக அரசு நூற்றாண்டு விழா கொண்டாடுவது சாலப் பொருத்தமாகும்.
திரு வி.க அவர்களை நினைக்கும்போது, அவர் தம் தமையனார் உலகநாத முதலியாரும் அண்ணியாருமே என்முன் நிற்கின்றனர், ஆம்! அவர்கள் திரு.வி.க.வினைக் ‘கண்ணை இமை இரண்டும் காப்பது போல்’ கட்டிக் காத்திராவிட்டால் இன்று இந்த நூற்றாண்டு விழாவினை நாம் கொண்டாட மாட்டோம். ‘சின்னவர்’ அல்லது ‘சின்ன ஐயா’வைப் பெரியவரும் அவர்தம் துணைவியாரும் ஒருவித கவலையும் சேராவகையில் போற்றிக் காத்தனர். வந்தவர்களோடெல்லாம் வேப்பமரத்தடியில் திரு.வி.க. பேசிக்கொண்டும், வழி காட்டிக் கொண்டும், அறிவுரை கூறிக் கொண்டும் இருக்க, பெரியவர் பின் அறையில் இருந்து கொண்டு நவசக்தி, அவர்தம் நூல்கள் முதலியவற்றின் ‘புரூப்’களைத் திருத்திக் கொண்டிருப்பார். அண்ணியார் முதல் மாடி மேலே இருந்து அந்தச் சிறிதான (2அடி அளவே இருக்கும்) படியில் அடிக்கடி வந்து அவர்களைக் கண்டு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வர். தேவையானபோது கீழே இருந்த சாது அச்சுக்கூட ‘போர்மேன்’ நாராயண சாமியைக் கூப்பிட்டு அண்ணியார் அவர்களுக்கு வேண்டியதைக் கொடுத்து உதவுவார்கள். இப்படி ‘சின்னவர்’ பாதுகாக்கப்பட்டதாலேயே அவர் எந்தக் கவலையுமின்றி எல்லாருக்கும் உபதேசம் செய்யும் பெரியவரானார்; இராயப்பேட்டை முனிவர் ஆனார். ஒரு நிகழ்ச்சியினைச் சுட்டிக் காட்டலாம் என எண்ணுகிறேன். மாலை நான்கு மணி அளவில் அண்ணியார் சிறிய படியில் பாதி இறங்கி வந்து ‘நாராயணசாமி, சின்னய்யா இன்று வெளியே போக வேண்டுமல்லவா?’ என்பார்கள். நாராயணசாமியும் ‘ஆமாம் அம்மா! பெரிய ஐயா ஏற்பாடு செய்துவிட்டார்கள்’ என்பார். அண்ணியரர் திரும்பிமேலே சென்று விடுவார்கள். என்ன ஏற்பாடு? யாருக்கும் புரியாது தான்.
திரு.வி.க. அவர்கள் அடிக்கடி கூட்டங்களில் தலைமை வகிக்கவோ பேசவோ மாலை வேளைகளில் வெளியே செல்வார். அழைக்க மற்றவர்கள் வந்தாலும் வேண்டாமென்று சொல்லுவதோடு அவர்களிடம் போக்குவரத்துக்குக் கூடக் காசு வாங்க மாட்டார்கள். பேச்சுக்கு இவ்வளவு என்று கேட்பதும் ஒரே ஊரில் மூன்று நான்கு நிகழ்ச்சிகள் இருப்பினும் மூன்று நான்கு இடத்தும் போக்குவரவுச் செலவு பெறுவதும் போன்ற ‘நாகரிகம்’ அவர் அறியாதது. எனவே எதற்கும் காசு பெறமாட்டார். ஆனால் சில சமயங்களில் பஸ் செலவுக்கு எனக் காசு எடுத்துக் கொள்ளாமலேயே ‘பஸ் ஸ்டாண்டு’ வரையில் வந்து நினைத்துக் கொண்டு பிறகு வீடு சென்று காசுடன் புறப்படுவார். ‘பஸ் ஸ்டாண்டு’ அவர் வீட்டுக்குப் பக்கத்திலேயே இருந்தது. சில சமயம் ‘பஸ்’ ஏறிய பிறகு பையைத் துழாவிக் காசு கொண்டுவராததை உணர்வார். எனினும் அவரைப் பலரும் அறிந்துள்ளமையின் ‘பஸ்’சில் யாராவது அவர் போகுமிடத்துக்கு ‘டிக்கெட்’ எடுத்துத் தருவார்கள். இந்தச் சிக்கலைத் தவிர்ப்பதற்கு அண்ணனாரும் அண்ணியாரும் ஒரு ஏற்பாடு செய்து வந்தனர். அவர் புறப்படுமுன் அவர் போட்டுக் கொண்டு போக இருக்கும் ‘சொக்கா’யினை எடுத்து மாட்டி, அதில் இரண்டு ரூபாய்க்குச் சில்லறையைப் போட்டு வைப்பார்கள். அந்தக் காலத்தில் சென்னையில் எங்கே சென்று வந்தாலும் ஒரு ரூபாய்க்குமேல் செலவு ஆகாது. இதை அண்ணா பல வேலைகளுக்கு இடையில் செய்ய மறந்தாலும் அண்ணியார் மறப்பதில்லை. இதைத்தான் முன்னே ‘ஏற்பாடு’ என்று சொன்னேன். இது ஒரு எடுத்துக்காட்டு. இப்படி எல்லா வகையிலும் திரு.வி.க.வைக் கண்ணென அண்ணலாரும் அண்ணியும் போற்றிய காரணத்தால்தான் நாம் இன்று நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடும் அளவுக்கு அவர் புகழ் பெற்றார். அவருடைய பேரப்பிள்ளைகள் என்று இப்போது நாம் அழைக்கும் அனைவரும் உலகநாத முதலியார் பேரப்பிள்ளைகளேயாவர் (இருபெண்கள் வழியே). திரு.வி.க.வின் பிள்ளைகள் யாரும் வாழவில்லை.
இனி திரு.வி.க.வை நினைக்கும்போது பெரியார் அவர்தம் உருவும் என்முன் நிழலிடுகின்றது. பெரியாரைத் தந்தை என்றால் திரு.வி.க.வைத் தாய் என்போம். அந்தத் தாய்க்கும் தந்தைக்கும் எத்தனையோ வகையில் பிணக்குகளும் மாறுபாடுகளும் இருந்தபோதிலும் இருவருக்கும் குறிக்கோள் ஒன்றாக இருந்தமையின் அவர்கள் கடைசிவரை இணைந்தே இருந்தார்கள். அவர்கள் குறிக்கோள்தான் என்ன? ஆம். ‘அவர்தம் மக்கள் அனைவரும் வாழவேண்டும்’ என்பதே. இருவருக்கும் சொந்தக் குழந்தைகள் கிடையா. ஆயினும் தமிழ் நாட்டு மக்கள் அனைவரையும் தங்கள் குழந்தைகளாகவே பாவித்து, அவர்கள் வாழ்க்கை உயரவே இருவரும் அயராது பாடுபட்டு உழைத்தனர். பாடுபட்ட வழிகள் வேறாக இருந்தாலும் குறிக்கோள் ஒன்றே!
இன்று நாட்டில் உள்ள திராவிட இயக்கத்துக்கு வித்திட்டவர் தந்தை பெரியார் என்றால் அதற்குப் பெயரிட்டவர் தாய் ‘திரு.வி.க.’ தாய் இட்ட பெயரை இன்று ஊர் இட்டு அழைக்கின்றது. அவ்வளவே! எப்படி? பெரியார் முதலில் தமிழர் இயக்கம் தொடங்கி, ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்றமுழக்கத்தை நாடு எங்கும் எழுப்பினார். அதைப் பலபேர் ஏற்றாலும் சிலர் அவருக்கு விரோதமாக ‘நீ தமிழன் அல்லன், நீ ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று முழங்கி எங்களை ஏமாற்றாதே’ எனப் பேசக் கிளம்பினர். எனவே தந்தை பெரியார் சென்று அன்னை திரு வி.க.வுடன் ஆலோசித்தார். திரு.வி.க. அவர்களே ‘திராடநாடு திராவிடருக்கே’ என்ற முழக்கம் செய்யச் சொன்னார். ஆம்! அந்த வேப்பமரத்தடியிலேதான் இந்த முடிவு எடுக்கப் பெற்றது. பெரியார் வந்து சென்ற அன்று, அவர் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் நானும் டாக்டர் மு.வ. அவர்களும் திரு.வி.க. வினைப் பார்க்கச் சென்றோம். அவர்களே இந்த முடிவினை எங்களுக்குச் சொன்னார்கள். இவ்வாறு பலவகையில் 1926ம் ஆண்டின் காஞ்சிபுர மாநாட்டிற்கு முன்பும் அதற்குப் பின்பும் தந்தையும் தாயும் பலவகையில் ஒன்றித் தமிழ் நாடும் தமிழ் மொழியும் தமிழர் நலமும் வாழப் பாடுபட்டனர். முன் தந்தையின் நூற்றாண்டு விழா நடந்து முடிவுற்றது. இன்று தாயின் நூற்றாண்டு விழா தொடங்குகின்றது.
திரு.வி.க. தமக்கென ஒன்றும் சேர்த்து வைத்துக் கொள்ளாதவர். தன்னுடையது என்று எதையும் கூறிக் கொள்ளாதவர். கடைசிக் காலத்திலும் பலர் வலியவந்து உதவி செய்ய நினைத்த போதும் வேண்டாம் என விலக்கியவர். டாக்டர்.மு.வ. அவர்கள் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பாடநூல் குழு உறுப்பினராகவும், ரா.பி.சேதுப் பிள்ளை அவர்கள் தலைவராகவும் இருந்த காலத்தில் திரு.வி.க.விடம் நாங்கள் நேரில் சென்று, ‘தங்கள் நூல் ஒன்றினைப் பல்கலைக் கழகப் பட்டப்படிப்புக்குப் பாடமாக வைக்க விரும்புகிறோம்’ என்று பலமுறை வற்புறுத்தி வேண்டினோம். ஆயினும் அவர்கள் இருக்கும் வரையில் அதற்கு இசைவினைத் தரவில்லை. அவ்வாறு பாடமாக வைப்பின் வரும் ஒரு சில ஆயிரங்கள் அவர்தம் கடைசிநாளில் பயன்படுமே என்று நாங்கள் செய்த முயற்சி பலன் தரவே இல்லை. ஆயினும் அவர் மறைந்த பிறகு நான் பாடநூற் குழுவின் தலைவராக இருந்தபோது அவருடைய ‘முருகன் அல்லது அழகு’ என்ற நூலைப் பாடமாக வைத்து மன நிறைவு கொள்ளவேண்டி இருந்தது.
‘தனக்கென வாழாப் பிறர்க்குரியவராக’ வாழ்ந்த திரு.வி.க.வினைப் பலரும் பல கோணங்களில் கண்டு, பழகி, பேசி, எழுதி வருகிறார்கள். அதை எண்ண எனக்குத் திருக்கோவையாரின் பாயிரப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது. ஒரே நூலாகிய திருக்கோவை யாருக்கு ஒவ்வொருவரும் தத்தம் கொள்கைக்கும் கருத்துக்கும் ஏற்ப உரை கண்டு ஒவ்வொரு நிலையிலும் தத்தம் கொள்கையினைத் தாங்கும் ஒரு நூல் அது என மதிப்பிட்டனர் என்கிறது பாயிரம். இதோ அந்தப் பாடல்
‘ஆரணங் காண் என்பர் அந்தணர் யோகியர் ஆகமத்தின்
காரணங் காண் என்பர் காமுகர் காமநன் நூலதென்பர்
ஏரணங் காண் என்பர் எண்ணர் எழுத்தென்பர் இன் புலவோர்
சீரணங் காய சிற்றம்பலக் கோவையைச் செப்பிடினே’
என்ற பாடல், மணிவாசகர் தம் திருக்கோவையாரைப் பல கோணங்களில் நம்மைக் காண வைக்கிறது. திரு.வி.கவும் திருக்கோவையார் போன்றவரே. அரசியலில் அனைத்துக் கட்சியாரும் தம்மைச் சேர்ந்தவர் என்றனர். தொழிலாளி தம் துயர் தீர்க்க வந்த தீரர் என்றனர். சைவர்கள் அவரைச் சைவர் என்றனர். பிற சமயத்தவர் தத்தம் மதச் சார்பு உடையவர் என்றனர். பெண்கள் தம் பெருமை பாட வந்தவர் என்றனர். ஏழைகள் தங்களை வாழ வைத்த தெய்வம் என்றனர். அரசர் போன்ற பெருஞ் செல்வர்களும் அவரை நாடி வந்து வணங்கி வாழ்த்தினைப் பெற்றுச் சென்றனர். அறிஞர் புலவர் என்றனர். கவிஞர் நல்ல கவி என்றனர். குழந்தைகள் எங்களுக்குப்புரியும் தமிழில் பேசும் புண்ணியன் என்றனர். சமரச ஞானிகள் எங்கள் தலைவர் என்றனர், இல்லறத்தார் நல்லறம் காட்டும் தன்லவர் என்றனர். பெண்கள் எங்கள் அரண் - காப்பு என்றனர். துறவோர் எங்கள் ராயப்பேட்டை முனிவர் என்றனர். இப்படி எல்லாரும் ஒரே முகமாகப்போற்றப் பெற்ற ஒரு மனிதரை இதுவரை நாம் கண்டதில்லை. இனியும் காண்போமா என்பதும் தெரியவில்லை.
இன்னும் எத்தனையோ நினைவுகள் என் முன் வருகின்றன. இராஜாஜி, சீனிவாச ஐயங்கார் போன்ற தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள், திலகர், காந்தி போன்ற வடநாட்டு அரசியல் தலைவர்கள், ஞானியார், கதிர்வேற் பிள்ளை போன்ற சமயத் தலைவர்கள், அறிவறிந்த தமிழ்ப் புலவர்கள். சைவ, வைணவ, கிறிஸ்தவ, இஸ்லாமிய, பௌத்த, சமணத் தலைவர்கள், வாடியா போன்ற தொழிலாளர், அன்னிபெசன்ட், அசலாம்பிகையார் போன்ற பெண் தலைவர்கள் நாள்தோறும் அவரை நாடியும் தேடியும் வந்தும், கண்டும், கேட்டும், உணர்ந்தும், உணர்த்தியும், வாழ்ந்து காட்டியும் அவருடன் நின்ற நிகழ்ச்சிகள் பல. குள்ளச் சாமியார் என்ற (சண்முகானந்தா) துறவியார் கடைசிக்காலத்தில் அவருடன் கூடவே இருந்தனர். அவர்களுடன் பழகிய நிகழ்ச்சிகள்-பேசிய பேச்சுக்கள்-செயல்கள் பலவற்றை அவரே தம் வாழ்க்கைக் குறிப்பில் காட்டியுள்ளார், காட்டாதன பல.
இவ்வாறு எல்லாரும் எல்லா வகையிலும் போற்றப் பெற்ற வகையில் வாழ்ந்த இராயப்பேட்டை முனிவர் திரு. வி. கலியாண சுந்தரனாருக்கு நாம் நிலைத்த நினைவாலயம் எடுக்கக் கடமைப்பட்டுள்ளோம். என்னால் கூடியவரை அவர் பெயர் நிலைக்க ஒரு சில செயல்களை மேற்கொண்டேன். நான் செயலாளனாக இருந்து தொடங்கிய (டாக்டர். மு.வ. டாக்டர் சுந்தரவதனம் போன்றோர் தம் உதவியுடன்) பள்ளியினைத் திரு.வி.க பெயரால் அமைக்க முடிந்தது. அப்படியே எங்கள் பேட்டையில் அமைந்த ஒரு பெரிய பூங்காவினை, ஒரு சிலர் எதிர்ப்புக்களுக்கு இடையில், ‘திரு.வி.க.’ பூங்கா என அமைக்க முடிந்தது. இப்பூங்கா சென்னை நகராண்மைக் கழக எல்லையில் உள்ளவற்றுள்ளே பெரிய பூங்கா எனச் சொல்லுகின்றனர். அப்படியே எங்கள் எல்லையில் அண்ணாநகர் கிழக்குக் கோடியில் அமைந்த குடியிருப்புக்கு ‘திரு.வி க.’ குடி என்ற பெயர் அமைக்க முடிந்தது. இன்னும் எவ்வளவோ செய்ய ஆசை. ஆனால் தனி மனிதனாகிய என்னால் செய்ய இயலுமோ!
நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடும் தமிழக அரசினைத் தாழ்ந்து வேண்டிக் கொள்வேன். அவர்தம் நூல்கள் பல கிடைக்கவில்லை; அவற்றைத் தமிழர் தம் பொதுச் சொத்தாக்கி (வேண்டுமானால் உரியவர்களுக்கு உரிய தொகை தந்து) வெளியிட ஏற்பாடு செய்ய வேண்டும். அவர் வாழ்ந்த வீட்டினை வாங்கி, நூலகம் அமைத்து, பொதுப் பொருளாகக் காக்க வேண்டும். திரு.வி.க.நகர் அமைத்து, திரு.வி.க. பாலம் அமைத்து, ‘திரு.வி.க.’ பரிசு அமைத்து அவரைப் பாராட்டிய அரசுக்கு இவை பெரிதன்று. இன்னும் எவ்வளவோ பேசவேண்டும் என்ற ஆசை என்னைத் தூண்டுகிறது. எனினும் இப்போது இந்த அளவே போதும் என அமைகிறேன்.
வாழ்க ‘திரு.வி.க.’வின் திருப்புகழ்! வளர்க அவர் காட்டிய தொண்டுநெறி.திரு.வி.க. நூற்றாண்டு விழா (பேச்சு)