உள்ளடக்கத்துக்குச் செல்

ஓங்குக உலகம்/009-026

விக்கிமூலம் இலிருந்து

9. திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்பு


திரு.வி.க. நல்ல தமிழ்ப் பரம்பரையின் வழி வந்தவர். அவர் பாட்டனார் காலத்தில்-இராம வேங்கடாசல முதலியார்-திருவாரூரில் வழிவழியாக வாழ்ந்த அவர் மரபு (சோழிய வேளாளர்) சென்னைக்குக் குடியேறிற்று. (இராயப்பேட்டை-புதுப்பேட்டைப் பகுதி). திரு.வி.க. கடைசிவரையில் அந்தப் பகுதியிலேயே இருந்தார்.

தந்தையார்-விருத்தாசல முதலியார்-தாய்-சின்னம்மா-பெரியப்பா-நமசிவாய முதலியார். சென்னையில் அரிசி வாணிபம் செய்த விருத்தாசல முதலியார் செம்பரம்பாக்கம் ஏரி ஒப்பந்த வேலைக்காக வெளியே சென்றார். பின் துள்ளல் என்னும் கிராமத்தில் தங்கிவிட்டார். திரு.வி.க.வும் அவர் அண்ணார் உலகநாத முதலியாரும் அங்கே பிறந்தவர்கள். ‘திரு’ திருவாரூரைக் குறிக்கும். ‘வி’ தகப்பனார் பெயரைக் குறிக்கும்.

12-9-1881ல் உலகநாத முதலியாரும் 26-8-1883ல் திரு.வி.க.வும் பிறந்தனர். முதலில் இவர்கள் பெரியசாமி, சின்னசாமி எனவே அழைக்கப்பெற்றனர். திரு.வி.க. பெற்றோருக்கு ஆறாவது பிள்ளை. வீடு துள்ளல்-ஓலை வேய்ந்த சிறுவீடு. அங்கேயே வளர்ந்தார். அப்போதே இயற்கையோடு பழகினார். தந்தையே முதல் ஆசிரியர்-தாழ்வாரமே பள்ளிக்கூடம் (தந்தையாரின் கடையின் தாழ்வாரம்) தெருப்பள்ளிக்கூட மரபில் அரிச்சுவடி, ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் முதலியன இருவராலும் ஒப்புவிக்கப் பெறும். பிறகு சென்னை இராயப்பேட்டை (புதுப்பேட்டையில்) 1890ல் குடியேறினர். முதலில் தெருக்கோடியில் இருந்த ‘ஆரியன் பிரைமரி’ பள்ளியில் படித்தார். ஒவ்வொரு வகுப்பிலும் முதன் மாணவராகப் பரிசு பெற்றார். 1898ல் வெஸ்லி கலாசாலையில் சேர்ந்தார். 5வது பாரத்தில் யாழ்ப்ப்ாணம் நா. கதிரைவேற் பிள்ளை அவர்களிடம் தமிழ் பயின்றார். அவருடன் கலந்து, அவருக்காக வழக்குமன்றம் சென்றும் அவரோடு பிறவகையிலும் காலம் கழித்தமையால் பள்ளி இறுதித் தேர்வு எழுத முடியவில்லை. தந்தையார் மறைந்தார். பள்ளிப் படிப்பு முடிந்தது. ‘கமர்ஷியல் பள்ளியில் “புக்கீப்பிங்” பயின்றார்.

‘இராயப்பேட்டை பாலசுப்பிரமணிய பக்த ஜன சபை’ அப்போது உண்டாக்கப்பட்டது. கதிரைவேற் பிள்ளையின் பேச்சுக்களைக் கேட்டுக் கேட்டுத் தாமும் தமிழ்ப் புலமை பெற்றார். பல தமிழ் அறிஞரோடு கலந்து உறவாடினார். தமிழுடன் சித்தாந்த சாத்திரமும் பயின்றார். 1912ல் உள்ள அவரது புகைப்படம் அவரை ஒரு பெரும் சமயாசாரியராகக் காட்டும். வடமொழியும் ஓரளவு கற்றார். “ஷேக்ஸ்பியர் கிளப்புடன்” தொடர்பு கொண்டு ஆங்கிலமும் நன்கு தெரியப் பெற்றார். ஓவியமும், இசையும் ஓரளவு அறிந்தார். அப்போதே பெரியபுராணத்துக்குக் குறிப்புரை கண்டார். இயற்கையோடு இயற்கை முறையில் பழகத் தொடங்கினார். 1906ல் முதல் முதல் கதிரைவேற் பிள்ளையின் சரித்திரம் எழுதினார்-பின் பல நூல்கள் உரையிலும் பாட்டிலும், 1917ல் பத்திரிகை உலகில் புகுந்தார்.

பின்னி கம்பெனி முதலிய இடங்களில் சிலசில காலம் வேலை பார்த்தார். 1908ல் அவை முடிவுற்றன. ‘உமாபதி குருப்பிரகாசம் பிரஸ்’ என்ற அச்சுக்கூடம் அவர் தமையனார் அமைத்தார். அதில் வர்தம் பெரியபுராணக் குறிப்பு சஞ்சிகையாக வெளி வந்தது. பின் 1910ல் ஆயிரம்விளக்கு வெஸ்லி பள்ளியின் மூன்றாம் வகுப்பு ஆசிரியராக அமர்ந்தார். மாணவருக்குத் தமிழ்ப் பயிற்றும் பணி கொண்டார். கணக்கும் கற்பித்தார். பின் 1916ல் வெஸ்லி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியரானார். அப்போதே அரசியல் நாட்டம் பெற்றார். 1917 இறுதியில் கல்லூரியை விடுத்து ‘தேசபக்தன்’ ஆசிரியரானார். பின் ‘நவசக்தி’ எழுந்தது.

1906-07லேயே திரு.வி.க. அரசியல் தொடர்பு கொண்டார். ஜஸ்டிஸ் கட்சி தோன்றியது. அது சமயத்தைப் பழித்த காரணத்தால் அதற்கு எதிராகத் திரு.வி.க. பேசினார்-எழுதினார். பெசன்ட் அம்மையார், சர். பி. தியாகராய செட்டியார், நாயர் முதலியோருடன் தொடர்பு கொண்டார். 1917ல் முதல் முதல் வெளிப்படையாக மாநாட்டில் மேடை ஏறிப் பேசினார். பிறகு பல மாநாடுகளில் தலைமை தாங்கியும் சொற்பொழிவாற்றியும் வந்தார். அவர் பேச்சுத் திறமை பலரைக் கவர்ந்தது. தமிழின் எளியநடை அனைவருக்கும் புரிந்தது. பத்திரிகை வழி ‘நல்ல தமிழ்’ வளர அழகிய தேவையான கட்டுரைகள் எழுதினார். தேச பக்தனும், நவசக்தியும் இன்றைய பல எழுத்தாளர்களுக்கு வழி காட்டிகளாம். அக்கால அரசியல் பற்றிய பல கட்டுரைகள் அவற்றில் வந்தன. அவரும் பலவற்றில் பங்கு கொண்டார். அக்கால அரசாங்கத்தைத் தீவிரமாக எதிர்த்தார்; அதனால் பல தொல்லைக்கு உள்ளானார். தேச பக்தனை விடுத்து 22-10-20ல் நவசக்தி தொடங்கினார்; காங்கிரஸ் சார்புடையது; அதனாலும் அரசாங்கத் தொல்லைக்கு ஆளாகியது. அதில் வளர்ச்சியும் சரிவும் இடையிடை காணப்பட்டன. காங்கிரஸ் பற்றியும் பிற நாட்டு நிகழ்ச்சிகள் பற்றியும் எளிய தமிழில் படிப்பவர் உள்ளத்தில் பதியும்படி எழுதுவார். அத்துடன் கூட்டங்களில் கலந்துகொள்வார் சமய மாநாடுகளிலும் தலைமை வகித்தும் பேசியும் தொண்டு செய்வார். காஞ்சியில் 31வது தமிழர் மாநாடு திரு.வி.க. தலைமையில் 1925-26ல் நடைபெற்றது. அது தமிழக அரசியலில் மாற்றம் கண்டது. பெரியார் காங்கிரசை விட்டுப் பிரிந்தார் (வகுப்புவாத அடிப்படை அமைப்பில்). குடியரசுக்கும் நவசக்திக்கும் மாறுபாடு இருந்தது-எழுத்தில்.

திரு.வி.க. ‘சாது’ என அழைக்கப் பெற்றார். எனவே அவர் அச்சகமும் ‘சாது அச்சுக் கூட’மாயிற்று. சன்மார்க்க அரசியல் வேண்டும் என்று வலியுறுத்தி எழுதிவந்தார்.

தொழிலாளருடன் தொடர்பு பெரியது. 1908லிருந்ேேத திரு.வி.க.வுக்கும் இதில் தொடர்பு உண்டு. வாடியா, செல்வபதி செட்டியார் போன்றோர் தொடர்பு அதிகம். வாடியாவின் ஆங்கிலப் பேச்சுக்களைத் தமிழில் மொழி பெயர்ப்பார். செல்லுமிடமெங்கும் தொழிற் சங்கம் அமைக்க முயன்று, வெற்றியும் கண்டார். பல எதிர்ப்புக்கள், கதவடைப்புகளைச் சமாளித்தார். 1920ல் சென்னையில் நடந்த முதல் மாநாட்டின் வரவேற்புத் தலைவராக இருந்தார். பல மாறுபாட்டுச் சங்கங்களும் எதிர்ப்புகளும் கொடுமைகளும் ஏற்று முறியடிக்கப் பெற்றன. (பக்கிங்ஹாம் மில், கர்னாடிக் மில் முதலியன) பல போராட்டங்களைத் தலைமையேற்று நடத்தியுள்ளார். அரசாங்கத்தை எதிர்த்துப் போராடினார். மிக அதிகமாக உழைத்த காரணத்தாலேயே திண்ணிய அவர் உடல்நலம் குறையலாயிற்று. தொடர்ந்து தமிழில் எழுதுவதையும் நவசக்திப் பணியையும் தொழிலாளர் பணிகளுக்கிடையே நடத்திவந்தார்.

இவர் வாழ்க்கைத் துணைவியாகச் சில காலம் வாழ்ந்தவர் ‘கமலாம்பிகை’ அம்மையார். 13.9.1912 திருமணத்தில் சைவர், கிறித்தவர் அனைவரும் அவரவர் சமய முறைப்படி வாழ்த்தினர். 18.9.1918ல் ம்னைவி மறைந்தார்.

திரு.வி.க. ஆழ்ந்த சமயப் பற்றுடையவர்-சைவர். சைவசித்தாந்த மகாசமாசத் தலைவராக இருந்தார். சைவர் மாநாடுகள் பலவற்றுள்-இந்தியா இலங்கை-தலைமையேற்றும் சொற்பொழிவாற்றியும் சிறந்தார். எனினும் பிற சமயக் காழ்ப்பு இல்லை. சோமசுந்தர நாயகர், கதிரைவேற் பிள்ளை போன்றோர் தொடர்பால் சைவப் பற்றும் தமிழ்ப் பற்றும் வளர்ந்தன. இளமையில் ஆங்கிலத்தில் இவருக்கு மோகம் இருந்தபோதிலும் பின் தமிழ்ப் பித்தரானார். ‘இராயப்பேட்டை இளைஞர் கல்விக் கழகம்’ என்ற ஆங்கிலம் வளர்த்த சபை 1903-ல் ‘பாலசுப்பிரமணிய பக்த ஜன சபையாக’ மாறிற்று. வடிவேல் செட்டியார் போன்றோருடன் பழகி வேதாந்த நூல்களையும் கற்றார். பல விழாக்களில் பங்கு கொண்டார். திருவல்லிக்கேணி சிவனடியார் திருக்கூட்டத்தின் முதல் தலைவராக இருந்தார். அப்படியே பல சைவ, தமிழ்ச் சபைகளின் தலைவராக இருந்தார். சமாசத்தில் ஒரு பாதிரியைப்போல உழைத்தார். தீட்சைகளில் பற்று இல்லை. தீட்சை பெற்றும் பின் அனுஷ்ட்டானங்களைக் கைவிட்டார். கோவில்களுக்குச் சென்று வழிபடுவார், அப்படியே வைணவ சமயத்திலும் ஈடுபாடு கொண்டு பல சபைகளில் பங்கு கொண்டார். மேலும் ஜைனம், பௌத்தம், கிறித்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களுடன் தொடர்பு கொண்டார். இவை எல்லாவற்றிலும் இயக்கும் இறைவன் ஒருவனே எனும் சமரச உணர்வை யாண்டும் போதித்தார். ஆயினும் மதமாற்றத்தை இவர் விரும்பவில்லை. சில கிறித்தவர் சைவத்தைப் பழித்தால் விடமாட்டார். தம் கொள்கையினை விளக்கி வெற்றி காண்பார். எல்லாச் சமயங்களிலும் உள்ள நலக்கேடுகளை எடுத்துக் காட்டுவார். சமரசம் ஒன்றே உலகை வாழவைக்கும் என்பதை உணர்ந்து உணர்த்தினார். நவசக்தியிலும் எழுதினார். சமயவெறி கூடாது என வற்புறுத்தினார். இச்சமரசம் பற்றி இவர் எழுதிய பல பாடல்கள் ‘பொதுமை வேட்டல்’ என்ற இவர் பாடல் தொகுப்பில் உள்ளன.

பெண்களிடம் உயர்ந்த மதிப்பு வைத்திருந்தார். ‘பெண்ணின் பெருமை’ இவர் நூல்களுள் சிறந்தது. பெண்களைத் தாயாக-தெய்வமாக மதித்துப் பேசினார்; எழுதினார். இவர் இல்வாழ்வு சில காலமே இருந்தது என்றாலும் இல்லறத்தை உயர்வாகப் போற்றினார். அவ் வாழ்வில் பெண்கள் கொள்ளவேண்டிய கொள்கைகளையும் வாழ்க்கை முறைகளையும் உணர்த்தினார். தம் தமையனாரின் இரு பெண்களையும் கண் எனக் காத்தார். தமையனாரின் ஒரே மகன்-பாலசுப்பிரமணியன் இளமையில் மறைந்தார். இவருக்குப் பிள்ளைப்பேறு இல்லை. சில பள்ளிகளின் பொறுப்பாளராக இருந்து நடத்தினார். தெருவில், பிறவிடங்களில் குடும்பப் பெண்கள் அவர்தம் கணவர்களால் துன்புறுத்தப் பெறும்போது, தாமே வலியச் சென்று அவர்களை நல்வழிப்படுத்தினார்.

தமிழ் மொழி வளர்ச்சியில் அவர் பங்கு பெரிது. இதழ்கள் நடத்தியமை, பேசியமை தவிர்த்து அவர் எழுதிய நூல்கள் பலப்பல-கவிதைகள் பலப்பல-சீர்திருத்தக் கட்டுரைகள் பலப்பல. சாதி, சமய வேறுபாடுகளைக் கண்டித்து எழுதியவை-தொழிலாளர் நலம் பற்றியவை-அரசியல் போராட்டங்கள் - பற்றியவை காந்தியடிகள் பற்றியவை யாவும் நூல்களாக வந்தன. அவை இன்று பெற முடியவில்லை. அப்படியே கைம்மை மணம், கலப்பு மணம் போன்ற சமுதாயச் சீர்திருத்தங்கள் பற்றியும் பேசியும் எழுதியும் வந்ததோடு, தாமே பலவற்றை முன்னின்று நடத்திவைத்தார். சில சமயம் அவரைத் தமிழக அரசாங்கம் ‘வீட்டுச் சிறை’ வைத்தது. அப்போதும் மனம் கலங்காது அப்பரைப் போன்று தொண்டே துணையாக வாழ்ந்தார்.

‘நீங்கள் ஏடுகளைப் பயில்வதோடு நில்லாது. ஓய்ந்த நேரங்களில் இயற்கை நிலையங்களில் புகுந்து, இயற்கைக் கழகத்தில் நின்று, இயற்கைக் கல்வி பயில்வீர்களானால், இயற்கையோடியைந்த வாழ்வு நடத்த வல்லராவீர்கள். காடு செறிந்த ஒரு மலை மீதிவர்ந்து, ஒரு மரத்தடியில் நின்று, மண்ணையும் விண்ணையும் நோக்குங்கள்; ஆண்டவன் இயற்கை ஓவியத்தைக் கண்டு மகிழுங்கள். மண் வழங்கும் பரந்த பசுமையிலும், வெண்மையிலும், நீலத்திலும், விண் வழங்கும் நீலத்திலும் தோய்ந்து திளையுங்கள். காலையில் இளஞாயிறு, கடலிலும் வானிலும் செக்கர் உமிழ்ந்து எழுங் காட்சியை நெஞ்சில் எழுதுங்கள். அருவி முழவும், குயில் குரலும், வண்டிசையும், மயிலாலும், மலர் மணமும், தேனினிமையும், தென்றல் வீசலும் புலன்களுக்கு விருந்தாக இயற்கை அன்னையைப் பாருங்கள். ஆங்கே சூழ்ந்துள்ள செடி, கொடி, மரங்களையும், பறவைகளையும், விலங்குகளையும் உற்று நோக்கி, “சில செடிகள் பூமியிற் பரந்தும், சில செடிகள் எழுந்து நின்றும், சில கொடிகள் நீண்டு நீண்டு மடிந்தும், சில கொடிகள் சுருண்டு சுருண்டு படர்ந்தும், சில மரங்களுக்கு நீள் கிளையும், சில மரங்களுக்கு வீழும், கிளிக்கு வளைந்த மூக்கும், யானைக்குத் துதிக்கையும், மானிற்குக் கொம்பும் அமைந்திருப்பதற்கு என்ன காரணம் என எண்ணுங்கள். அந்தியில் ஞாயிறு அமரும் கோலத்தையும், பறவைகள் பறந்து செல்வதையும் கால்நடைகளின் மணி ஓசையையும் காணுங்கள்; கேளுங்கள், நீலவானில் வெண்திங்கள் தோன்றித் தண்ணிலவு பொழிவதை நோக்குங்கள். அந்நிலவு பசுமைக் கானிலும் பைங்கூழிலும் வெண்மணலினும், நீலக்கடலினும் படிந்து வழங்கும் அழகுக் காட்சியில் மூழ்குங்கள். மூழ்கி இன்புற்று, மலையினின்று இழிந்து வென்றி அடல்விடைபோல் நடந்து வீடு செல்லுங்கள். இவ்வாறு இயற்கைக் கழகத்தில் பயின்று பயின்று, சங்கப்புலவர், இளங்கோ, திருத்தக்க தேவர், திருஞானசம்பந்தர், ஆண்டாள், சேக்கிழார், கம்பர், பரஞ்சோதி முதலியோர் இயற்கைக் கோலத்தை எவ்வாறு எழுத்தோவியத்தில் இறக்கியிருக்கிறார் என்று ஆராயுங்கள். பழைய கோயில்களிலும் மன்றங்களிலும் நுழைந்து, இயற்கைத் திருக்கோலத்தைச் சிற்பர் எவ்வாறு ஓவியங்களில் வடித்திருக்கிறார் என்பதையும் உணர ஓவியங்களை ஊன்றி நோக்குங்கள். நந்தமிழ்க் காவியங்களும் ஓவியங்களும் இயற்கை அமிழ்தாய் உயிரையும் உடலையும் ஓம்புவதை உணர்வீர்கள். என்பது அவர் அறிவுரை.

மொத்தத்தில் தமிழ்த் தொண்டனாக-தொழிலாளர் தொண்டனாக-நாட்டுத் தொண்டனாக - உலகத் தொண்டனாக-ஏழை எளியவர் தொண்டனாக-எல்லாருக்கும் நல்லவனாக-உர உளத்தில் வல்லவனாக-திரு.வி.க. அவர்கள் வாழ்ந்தார்கள் என்பது உண்மை. அவர் வாழ்ந்த வீட்டின்பின் இருந்த வேப்பமரம் வாய் இருந்தால் அனைத்தையும் சொல்லும். பெரியார், வரத ராஜுலு நாயுடு, ராஜாஜி தொடங்கிப் பல அரசியல் தலைவர்கள், அனைத்திந்திய தொழிலாளர் தலைவர்கள், தமிழகத் தொழிலாளர் தலைவர்கள், தமிழகத் தொழிலாளர் தொண்டர்கள், சமூக ஊழியர்கள், பெண்கள் சங்கத்தலைவியர், தமிழ்ப் பேராசிரியர்கள், தமிழ் அன்பர்கள், புலவர்கள், பல சமயத்தையும் சார்ந்த சான்றோர்கள், துறவிகள், இல்லறத்தார், அரசாங்க உயர் அலுவலர்கள், அமைச்சர்கள், நாட்டு வாழ்வில் நலம் காண விரும்பியவர், வீட்டுப் பிணக்கில் வேறுபாடு நீங்க விரும்பியவர் அனைவரும் அடிக்கடி வந்து அந்த அரச மரத்தின் கீழே அன்றாடம் திரு.வி.க.வுடன் கலந்து பேசி, தத்தம் செயலுக்கும் கருத்துக்கும் ஏற்ற ஆக்க அறிவுரைகளைப் பெற்றுச் சென்றுள்ளனர். ஆம்! அவரைக் காணாதவர் எந்தத் துறையிலும் இலர் எனலாம்.

அவருடைய இறுதிக் காலத்தில் மிகத் தாழ்ந்து, இருந்த வீட்டில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட போது, எதிர் வீட்டில் ஒண்டி இருந்தார். பலர் தங்களுடன் வந்து இருக்கக் கேட்டும் இசையவில்லை. பொன்னும் பொருளும் கொடுக்க முன்வந்தும் பெறவில்லை.

அவர் இறுதி யாத்திரையில் கலந்து கொள்ளாத மக்களிலர். எல்லாக் கட்சிகளின் கொடிகளும் அரைக் கம்பத்தில் பறந்தன. யாத்திரையில் அவரவர் கொடிகளைத் தாங்கி எல்லாக் கட்சிகளும் கலந்துகொண்டன. பல தலைவர்கள், பேராசிரியர்கள், தொழிலாளர்கள், தொண்டர்கள், இலட்சக்கணக்கில் கலந்து இறுதி வணக்கம் செலுத்தினர். அந்த யாத்திரை ஊர்வலம் வீடு தொடங்கி சுடலை வரையில் ஒரே தொடராக சுமார் 1½ கல் நீளம் இருந்தது என்பது அவருக்கு மக்களிடம் இருந்த செல்வாக்கினையும் அவர்கள் அவரிடம் காட்டிய மரியாதையினையும் விளக்கும்.

அவர் பெயரால் பல தனியார் நிறுவனங்களும் அரசாங்கப் பாலங்கள், குடியிருப்புக்கள் போன்றவையும் இருப்பினும், நிலைத்து என்றும்-எல்லா வேறுபாடுகளும் அற்ற அத்தலைவர் திரு.வி.க. பெயர் இருக்கும் வகையில் தமிழக அரசாங்கம் ஆவன செய்யக் கடமைப்பட்டுள்ளது. தமிழ் மக்களும் அதற்குரிய தங்கள் பங்கை ஆற்றி அளிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

(24-8-1982)

"https://ta.wikisource.org/w/index.php?title=ஓங்குக_உலகம்/009-026&oldid=1135795" இலிருந்து மீள்விக்கப்பட்டது