ஓங்குக உலகம்/016-026

விக்கிமூலம் இலிருந்து


3. ஆய்வு நெறி


16. ஊர்ப் பெயர்களின் உருமாற்றம்


மிழ் மரபு தொன்மை வாய்ந்தது. தமிழர்தம் அத்தொன்மை மரபு, வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் விளங்கக் காணலாம். நல்ல பண்பாட்டையும் பிற நல்லியல்புகளையும் அதில் காண முடிகின்றது. தமிழகத்தில் நிலப் பிரிவுகளும்கூட இத்தமிழ் மரபின் பண்பினைக் காட்டிக்கொண்டு நிற்கின்றன. ஆயினும் காலவெள்ளத்திடையில் பல்வேறு வகைப்பட்ட பண்பாடு, நாகரிகம், கலை, வாழ்க்கைமுறை, அரசியல் முதலியன தமிழ் நாட்டில் கடந்த மூவாயிரமாண்டுகளாக வந்து கலந்து நிலைபெற்ற காரணத்தால் இன்று எத்தனையோ மாறுபாடுகளைக் காண்கின்றோம். அவற்றுள் ஊர்ப்பெயர்களின் உருமாற்றமும் ஒன்றாகும்.

தமிழர் தாம் வாழிடங்களைத் தம் பண்போடு ஒட்டியே போற்றினார்கள். மிகப் பழங்காலத்தில் அவ்வவ்விடங்களின் இயற்கை நிலையை ஒட்டியே காரணக் குறியீடுகளின் அடிப்படையிலேயே தத்தம் ஊர்ப்பெயர்களை அமைத்துக்கொண்டனர் தமிழர். பிற்காலத்தார் தம் பெருமையோ-தம் பாராட்டுக்குரியோரின் பெருமையோ விளங்க, அவரவர் பெயர்களாலே எத்தனையோ ஊர்களையும் தெருக்களையும் உருமாற்றி வழங்குவதறிகிறோம். பின் வந்தவர் எத்துணை மாற்றத்தைச் செய்யினும் ஒரு சில அடிப்படைப் பெயர்கள் நிலைகெடாது-தம் பண்டை மரபு கெடாவகையில் இன்றும் வாழ்கின்றன. தற்பெருமையாலும் பிற போற்றுதலாலும் வழங்கப்பெற்ற பெயர்களுள் பெரும்பாலானவற்றைக் காலத்தேவன் அழித்தும் சிதைத்தும் கெடுத்தும் பழைய பண்புகொள் பெயர்களையே வாழ வைக்கின்றான். ஒருசில பெயர்கள் மக்கள் பேச்சுவழக்கின் மருவால் மாற்றம் பெறுகின்றன. சில, சமய அடிப்படையிலும் நிலைகுலைகின்றன. சில, வெளிநாட்டவர்தம் ஆதிக்க வாடையின் காரணமாக மாற்றப்பெறுகின்றன. சில வேற்று மொழியாளர் தம் விருப்பத்தினால் வேறாக எண்ணுமாறு மொழிபெயர்க்கப் பெறுகின்றன. ஊர்ப்பெயர்கள் மட்டுமின்றி, மக்கள் பெயர்கள், அவர்தம் வாழ்வொடு கலந்த பிற பொருள்களின் பெயர்கள் அனைத்துமே மாற்றப்பெறுகின்றன. இந்த நிலை வளர்ந்துகொண்டே போகுமானால் தமிழ் மரபின் தன்மை. நிலை கெடுவதோடு அம்மரபின் அடிப்படையே இல்லை என்ற ஒரு நிலை உண்டாயினும் உண்டாகலாம். எனவே அத்தகைய அவல நிலைக்குச் செல்லுமுன் இம்மாற்றங்களை எண்ணி, மரபு கெடாத நல்ல நிலையை மறுபடி நிலைநாட்ட அனைவரும் முற்பட வேண்டும்.

ஊர்ப்பெயர்கள் பல வகைகளில் மாறுபடுகின்றன என்று கண்டோம். அவற்றுள் பெரும்பான்மையாக உள்ள ஒரு சிலவற்றை இங்கே எண்ணி அமைவோம்.

தமிழ் மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தியவர்கள் ஆதலினாலே, தாம் வாழ்ந்த ஊர்களுக்கு அவ்வியற்கையின் அடிப்படையிலேயே பெயரிட்டார்கள். பசிய வாழைகள் சூழ்ந்த சோழநாட்டு ஊர் ஒன்றற்குப் ‘பைஞ்ஞீலி’ என்றே பெயரிட்டார்கள். ஆயினும் அது கால வெள்ளத்தில் உருமாறி ‘பங்கிலி’ அல்லது ‘பங்கிளி’ என இன்று வழங்குகின்றது. அப்படியே அழகார் பசுமையான சோலை சூழ்ந்த பாண்டிய நாட்டு ஊர் ஒன்றற்குப் ‘பைம்பொழில்’ என்றே பெயரிட்டார்கள். அதுவும் சிதைந்து ‘பம்புளி’ என வழங்குகின்றது. தஞ்சை நாட்டில் சிறந்த ஆடையாகிய கூறை நெய்தளிக்கும் கூறை நாடு இன்று, ‘கொரநாடு’ என அழைக்கப் பெறுகின்றது. தருமபுரி மாவட்டத்தில் அதிகமான் அரசோச்சிய ஊர் ஒன்று உண்டு. அது இதுவரை ‘அதமன் கோட்டை’ என வழங்கப்பெற்று, இன்றைய ஆட்சியாளர் கண்ணில் பட்டுத் தற்போது ‘அதிகமான் கோட்டை’யாக மாறியுள்ளது. அவ்வூரை அடுத்த ‘லக்கிரிப்பேட்டை’ என்ற ஊர் அவ்வாறு அழைக்கப்பெற நேர்ந்த காரணத்தை ஆராய்ந்தபொழுதுதான் அதன் உண்மை விளங்கிற்று. அது ஒளவை வாழ்ந்து இலக்கியம் ஆய்ந்த இடம் என்றும் அதன் இயல்பான பெயர் ‘இலக்கியப் பட்டி’ என்றும் அறியும்போது மகிழ்ச்சி பிறக்கிறது. அதற்குப் பக்கத்திலே, ஒளவை சென்ற ‘ஒளவை வழி’ என்ற ஊரும் இருக்கிறது. ‘மரூஉ’ என்பது இலக்கண மாய், மரபில் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்று எனினும் அதனால், அடிப்படை நிலை கெடலாகாது. இவ்வாறு மருவி வழங்கும் பெயர்கள் காலத்தால் உருமாறிச் சிதைந்து விடாதபடி இயல்பான காரணத்தோடு அமைந்த பெயர்களைக் கட்டிக் காத்தல் தமிழர் கடன். இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ பெயர்கள் நாட்டில் உருமாறியுள்ளன.

பெருமன்னர்கள் தம் ஆற்றலும் வீரமும் கருதிச் சில ஊர்களுக்குப் பெயரிட்டு உள்ளார்கள். அவையும் சிதைந்தும் மாறியும் நிலைகெட்டும் உள்ளன. பல்லவப் பெருமன்னன் ‘மாமல்லன்’தன் பெயர் கொண்டு அமைந்த மாமல்லபுரம் இன்று ‘மகாபலிபுர’மாகி, மாபலிச் சக்கரவர்த்தியோடு தொடர்புபடுத்தப்பெற்று அதற்கெனக் கதைகளையும் ஆக்கிக்கொண்டது. அங்கமைந்த ஏழு கோயில்களைக் கண்ட மேலைநாட்டார் அதை ஏழு கோயில் என்றே அழைத்தனர் (Seven Pagodas). அவ்வாறே தென்னார்க்காடு மாவட்டத்தில் உள்ள ‘வீரநாராயணன் ஏரி’, ‘வீராணத்தேரி’ என மருவி வந்துள்ளது.

இவ்வாறு தம் புகழ் நாட்ட அமைத்த ஊர்ப் பெயர்கள் உருமாறிய நிலை ஒருபுறம் இருக்க, இயல்பாக அமைந்த சில தமிழ்நாட்டு ஊர்ப்பெயர்களைச் சில அரசர்கள், தங்கள் புகழ் நாட்டும் நிலைக்களன்களாகக் கொண்டு, தங்கள் வெற்றியைக் குறிக்கும் ஊர்களாக எண்ணி, அவற்றை மாற்றி அமைத்தனர். எனினும் அறிவுடைய தமிழ்ச் சமூகம் தற்பெருமையால் அமைந்த அப்பெயர்களைத் தள்ளி, அவ்வூர்களின் இயற்பெயர்களையே வாழ வைத்துள்ளது. அவற்றுள் ஒன்று-சிறந்த ‘பழநி’ என்னும் ‘பொதிநி’யாகும். ஆவியர் குடிமகன் ஆண்டதால், அக்குடிப் பெருமையை நிலைநாட்ட, அம்மரபின் வழி வந்தவர், அப்பெருந்தெய்வப் பேரூருக்குத் தம் மரபின் வழியில் ‘ஆவிநன்குடி’ என்றே பெயரிட்டனர்; அவ்வாறே புலவர் பெருமான் நக்கீரரையும் பாடவைத்தனர். எனினும் தமிழர் இன்று அதைப் ‘பழநி’ என்று அதன் பழம் பெயராலேயே அழைக்கின்றனர். அப்படியே இடைக்காலத்தில் வாழ்ந்த சோழ, பாண்டிய மன்னர்கள் தம் விருதுப் பெயர்களால் பல ஊர்களின் இயற்பெயர்களைச் சிதைத்துப் புகழ் கொண்டனர். ஆயினும் பின்வந்த தமிழ் மக்கள் தற்புகழ்ச்சிப் பெயர்களைத் தள்ளி, பண்டைத் தமிழ்ப் பெயர்களையே கொண்டனர். ஒரு சில சான்று காணலாம்.

‘உலக மாதேவீச்சுரம்’ என்று அரசியின் பெயரால் மாற்றப்பெற்ற செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள ஊர் இன்னும் ‘மணிமங்கலம்’ என்ற பழைய பெயராலேயே உள்ளது. ‘இராசராசச் சதுர்வேதி மங்கலம்’ என்று புகழ் பாராட்ட அமைந்த ஊர், அதன் இயற்பெயரால் ‘உக்கல்’ என்றே இன்றும் உள்ளது. ‘கம்ப மாதேவீச்சுரம்’ என்று சுட்டப்பட்ட ஊர், ‘சிற்றீஞ்சம் பாக்கம்’ என்ற பெயராலேயே இன்றும் உள்ளது. தம்மை மறந்து அடியவர் புகழ் பாடிய சேக்கிழாரைப் போற்றிய அநபாயனும் புகழுக்கு அடிமையானான் போலும். அநபாய நல்லூர் என ஓரூரை அழைத்தான் (அதைச் சேக்கிழாருக்கு மானியமாகவும் அளித்திருக்கலாம்.) எனினும் தமிழ் மக்கள் அவ்வூரை ‘அரும்பாக்கம்’ என்ற இயற்பெயராலேயே இன்னும் அழைக்கின்றனர். தஞ்சை நாட்டுப் ‘பழையாறை’ என்னும் ஊரை, மாற்றார் முடிகொண்ட பெருமையை விளக்குமுகத்தான் ‘முடி கொண்ட சோழபுரம்’ என ஆக்கிய ‘தற்பெருமையை’ அழித்து அதை இன்றும் ‘பழையாறை’ என்றே தமிழர் பாராட்டுகின்றனர். வீரநாராயணபுரம் என்ற தற்பெருமைப் பெயர் மாறி ‘காட்டுமன்னார் கோயில்’ என்ற இயற்பெயரே வாழ்கின்றது. இவ்வாறு இன்னும் எத்துணையோ பெயர்கள். தமிழர் காலப் போக்கில்-அவர்தம் பண்பாட்டை நழுவ விடாமல் காப்பாற்றும் திறம் பெற்றவர்கள் என்பதையும் தற்பெருமையையும் பிற வீர, செல்வ வளங்களால் காணும் சிறப்புக்களையும் அவர்கள் மதியார் என்பதையும் இப்பெயர்கள் காட்டுகின்றன.

இன்னும் சில ஊர்கள் தமிழ்நாட்டில் புதிய பெயர்களைப் பெற்றுள்ளன. அவ்வாறு அவை பெறுதற்கு அமைந்த காரணங்களை ஆராய்த்து காணல் அறிஞர் கடனாகின்றது. திருவூறல் ‘தக்கோல’மாகவும், திருவிற்கோலம் ‘கூவ’மாகவும், திருநணா ‘பவானி’யாகவும், திருவலிதாயம் ‘பாடி’யாகவும், திருக்கடிகை ‘சோளிங்கபுர’மாகவும், புள்ளமங்கை ‘பசுபதி கோயி’லாகவும், துருத்தி ‘குத்தால’மாகவும் மாறியுள்ளன. இவற்றுள் ஒரு சிலவற்றின் காரணம் வெளிப்படையே. எனினும் இவ்வாறு நாட்டில் எண்ணற்ற ஊர்கள் உண்மையின், இவை பற்றிய தனி ஆய்வு தேவை.

இடைக்காலத்தில் சமய மாறுபாட்டால் சில ஊர்ப் பெயர்கள் உருமாறின. காஞ்சியை அடுத்த பல ஊர்களில் அக்காலத்தில் சீவரத்தார் ஆகிய சமணர்கள் வாழ்ந்திருந்தனர். அவர்கள் சிறக்க வாழ்ந்த ஊர்கள் சில. அவை சீவரம், எனவும் ‘பழைய சீவரம்’ எனவும் வழங்கப்பெற்றன. பின்வந்த சைவர்கள் தம் ஊராக்கிக் கொள்ளக் கருதி, சீவரத்தைச் ‘சிவபுர’மாக்கினார். எனினும் பின்வந்த மகமதிய மன்னன் தன் மனைவியின் பெயரால் அதை ‘வாலாஜாபாத்’ என வழங்கினன். ஆனால் அவ்வூரைச் சுற்றியுள்ள மக்கள் இன்றும் அதைச் ‘சீவரம்’ எனவே அழைப்பது எண்ணற்குரியது. இவ்வாறே திருச்சி மாவட்டத்தில் திருத்தவத்துறைக்கு, ‘லால்குடி’ என்னும் புதுப்பெயரை மகமதியர்கள், தம் ‘செம்பதுமை’ எனப் பொருள்கொண்ட பாரசீக மொழிப் பெயரை இட்டு அழைத்தனர். இவ்வாறு மாறிய ஊர்கள் இன்னும் சில. உசேன் ஊர், சாயர்புரம் போன்று பிற்காலத்தில் கால்கொண்ட சமயங்களின் தலைவர்கள் அமைத்த ஊர்களும் உள்ளன.

இடைக்காலத்தில் தமிழகத்தில் வடமொழியாளர் ஆதிக்கம் மிக்கிருந்த நிலையினை அனைவரும் அறிவோம். அவர்கள் தமிழகத்தின் ஊர்ப்பெயர்களை மட்டுமின்றி, சமயநெறி, வாழ்க்கைமுறை, தமிழர்தம் பெயர்கள் முதலிய அனைத்தையும் மாற்றி அமைக்க வழிகோலினர். மொழியில் வடமொழியைப் புகுத்தி ‘மணிப்பிரவாளம்’ என்றே புது வகை மொழியை வளர்க்க நினைத்தனர். எனினும் அறிவுடைத் தமிழினம் அம்மொழியை ஒதுக்கித் தள்ளிய்து. ஆயினும் எப்படியோ பல ஊர்களின் பெயர்களை அவர்கள் எளிதில் தம் வடமொழிப் பெயர்களாக அமைத்துக் கொண்டனர். அவ்வாறு அமைத்துக் கொள்வதில் அவர்கள் எத்தனையோ தவறுகளைச் செய்துள்ளனர். பல புரியாத தமிழ்ச் சொற்களுக்குத் தங்கள் மனம் போன போக்கில் மொழி பெயர்ப்பினைச் செய்து கொண்டனர். மயிலாடு துறைக்கு ‘மாயூரம்’ எப்படி மொழி பெயர்ப்பாகும்? ‘குடமூக்கு’க்கு எப்படிக் கும்பகோணமாகும்? இவ்வாறு எத்தனை எத்தனையோ. ஒரு சில பொருந்திய மொழி பெயர்ப்புக்களாக உள்ளன. மறைக்காடு ‘வேதாரணிய’மாயிற்று; .ெவண்காடு ‘சுவேதவன’மாயிற்று. மதுரை கடம்பவனமாயிற்று. பழமலை பழைய மலையாகிப் பிறகு முதுகுன்றமாகிப் பின் ‘விருத்தாசல’மாயிற்று. மேலைநாட்டார் தம் ஒலி முறைப்படி சில தமிழ்ப் பெயர்களை உருமாற்றினர். தரங்கம்பாடி ‘டிரங்கோபார்’ ஆயிற்று, தஞ்சை ‘டேஞ்சூர்’ ஆயிற்று. ஐயாறு ‘திருவாடி’ ஆயிற்று. அவையும் தம்பழம் பெயர் கெடாமல் வாழ்வது மகிழ்ச்சிக்குரியதே. இவ்வாறு பலவற்றை அவர்கள் மாற்றியமைத்தார்களாயினும் எங்கோ ஒரு சிலவற்றைத் தவிர்த்துப் பெரும்பாலான தம் பழம் பெயர்களாலேயே அழைக்கப் பெறுகின்றன. எனினும் மாறிய மற்றவையும் திருந்திய தமிழ்ப் பெயர்களாக ஆக்கும் பொறுப்பு தமிழ் மக்களுடையதாகும்.

தமிழ் நாட்டில் தற்போது மற்றொரு வகையான மாற்றம் ஊர்ப்பெயர்களில் காண்கிறோம். பிற மாநிலங்களிலிருந்து வந்து இங்கு வாணிபத்தைத் தொடங்குபவர்கள் தத்தம் பெயரால் ஊர்களை அமைத்துக் கொள்ளுகின்றனர். ‘டால்மியா புரம்’, ‘அசோக் நகர்’ போன்றவை ஒரு சில. இன்னும் இன்று நாட்டில் வாழ்ந்த-வாழ்கின்ற-தலைவர்கள் பெயர்களால் எத்தனையோ ஊர்களும் தெருக்களும் அமைக்கப் பெறுகின்றன. பல பழைய ஊர்களும் தெருக்களும் இவ்வாறு அவ்வக் காலத்தில் வாழும் தத்தம் தலைவர்களுக்காகப் பெயர்மாற்றம் பெறுகின்றன. சென்னையில் இருக்கும் ‘சைனா பஜார்’ எனும் சீனக் கடைத்தெருவைச் ‘சுபாஷ் சந்திரபோஸ்’ பெயரால் மாற்றினார்கள். இம்மாற்றம் செய்து ஆண்டுகள் பலவாயினும் மக்கள் அதைப் பழைய பெயராலேயே அழைப்பதைக் காண்கிறோம்; சில ஆங்கிலப் பெயர்கள் வழக்கில் மாற்றம் பெற்றுச் சிதைந்துள்ளமைக்கு ‘ஹாமில்டன் பாலம்’ ஒரு சான்று. இவ்வாறு தனிமனிதர்களின் நினைவாக ஆக்கப் பெறும் எந்தப் .ெபயரும் எத்தனை நாள் நிலைத்து வாழும் என்ற உண்மையைக் கணக்கிடும் திறன் காலத் தேவனுக்கே உண்டு. நான் முதலிலே கூறியபடி, தமிழ்மக்கள் இயற்கையோடியைந்த வாழ்வு நடத்துபவராகையால், அந்த இயற்கை நியதிக்கும் வாழ்வுக்கும் மாறுபட்ட வகையில் அமையும் எதுவும் காலப்போக்கில் அவர்களால் நீக்கப்பெறும் என்பது உறுதி.மொழி வழியில் அந்த நிலையினை நாட்டு நிகழ்ச்சி இன்று நமக்குக் காட்டுகின்றது. ஊர்ப்பெயர்களை வாழ வைப்பதிலும் அந்த உணர்வு உள்ளமையை, முன்னர் சுட்டிக் காட்டினேன். இவ்வூர்ப்பெயர்களுள் பலப்பல இன்னும் திருத்தம் பெற வேண்டியுள்ளன. எதிர்காலத்தில் அவை திருத்தம் பெறலாம் என்ற நம்பிக்கை உண்டு.

ஊர்ப்பெயர்கள் மட்டுமன்றி, மக்கட்பெயர், உணவு - வகைகளின் பெயர்கள், ஊர்திகளின் பெயர்கள் இன்னும் வாழ்வின் தேவைப் பொருள்களின் பெயர்கள் இவற்றிலெல்லாம் உருமாற்றங்கள் உள்ளன. தமிழ் நாட்டில் இன்று உலக நாகரிகங்களின் எல்லாச் சாயல்களும் உள்ளன. எல்லா மொழிகளின் வாடைகளும் உள்ளன. எல்லாச் சமயங்களின் தெளிவுகளும் உள்ளன. எனவே பல மாற்றங்கள் இருப்பதைக் காண்கின்றோம். இத்தகைய மாற்றங்கள் ஒரு வகையில் வரவேற்கத்தக்கனவேயாயினும், முதல் நிலையின் மரபு கெடாத வகையில், வந்தவை இணைந்து இந்த நாட்டுப் பண்பாட்டுடன் பிற இயல்புகளும் சிறந்தோங்கும் வகையில் அமையவேண்டும்-நாம் அமைத்துக்கொள்ள வேண்டும்.

“வடசொற்கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே”

எனத் தொல்காப்பியர் மொழி அமைப்புக்குச் சொன்ன இலக்கண மரபு, வாழ்வில் எல்லா அடிப்படை நிலைகளுக்கும் பொருந்தும். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, என்ற பண்பாட்டில் தலைநின்ற தமிழன் யாரையும் எதையும் வெறுப்பவனல்லன். ஆனால் மற்றவை அவன் மேல் வீழ்ந்து அவன் அடிப்படை வாழ்வினையே சாடும்போது விழித்து நிமிர்ந்து நின்று உண்மையை வாழ வைப்பான். அப்பண்பாட்டின் ஒரு துளியே பல மாற்றங்களுக்கு இடையில் நல்ல ஊர்கள் தத்தம் பழந்தமிழ்ப் பெயர்களோடு வாழ வழி செய்கின்றது. இவ்வாறே எல்லாத் துறையும் காக்கும் கடமையில் தமிழினம் செயலாற்ற வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=ஓங்குக_உலகம்/016-026&oldid=1135830" இலிருந்து மீள்விக்கப்பட்டது