ஓங்குக உலகம்/017-026

விக்கிமூலம் இலிருந்து

17. முடிவுகட்டி விடாதீர்கள்!

மாணிக்கவாசகர் தம்மை மறந்த அடியவர். நன்றும் தீதும் ஆண்டவன் தந்தவை என உணர்பவர். அவர் பாடிய பாடல்கள் உலக உயிர்களை உய்விக்கும் திறனுடையவை. சிற்றின்பத்தில் வாழும் நல்லுயிர்களை அவ்வுயிர் வாழ்விலே வாழ வைத்து, அவ் வாழ்வுக்கு இடையிலேயே பேரின்பமாகிய வீட்டையும் காட்டிய வித்தகர் மணிவாசகர். அவர் பாடிய திருவாசகத்தில் இவ்வுண்மையை நன்கு கண்டு உணரலாம். ஆயினும் இவ்வுண்மையை நன்கு வெளிப்படையாக உலகுக்கு உணர்த்தவே அவர் திருக்கோவையாரைப் பாடினார்.

சிற்றின்பமாகிய உலக வாழ்வையும் பேரின்பமாகிய வீட்டு வாழ்வையும் பின்னிப் பிணைத்துச் செல்லும் நூல் திருக்கோவையார். இக் கோவையுள் இரண்டையும் இணைத்து அவர் பாடிய ஒரு பாடல் சிந்தைக் கினிய பாடலாகும்.

உணர்ந்தார்க் குணர்வறியோன்
தில்லைச் சிற்றம்பலத் தொருத்தன்
குணந்தான் வெளிப்பட்ட கொவ்வைச்
செவ்வாய் இக்கொடியிடைதோள்
புணர்ந்தாற் புணருந்தொறும்
பெரும்போகம் பின்னும் புதிதாய்
மணந்தாழ் புரிகுழலாள்
அல்குல் போல வளர்கின்றதே

என்ற பாட்டில் மணிவாசகர் இருவேறு வீட்டின்பங்களையும் இயைத்து, அவை பெறப் பெற-உற்று உணர உணர-துய்க்கத் துய்க்க எல்லையற்று வளர்ந்துகொண்டே இருப்பவை என்ற உண்மையை உணர்த்திச் சென்றார். இரு வேறு எல்லைகளின் இறுதியில் உள்ள இன்பங்களையும் அவற்றின் வளரும் தன்மையையும் காட்டி, இதனால் இவற்றிற்கு இடைப்பட்ட பிற அனைத்தும், இந்த நிலையில் கணக்கிடக் கூடியவையே என்ற உண்மையையும் அடியவருக்கு உய்த்துணர வைத்தார். எனவே உலகில் நம் கண்கொண்டு மண்ணும் விண்ணும் மட்டுமின்றி, காணாத அளவிலா எல்லையுடைய அண்டகோளமும் இவ் விளக்கத்துக்குள் அடங்க வேண்டியதே யாம்.

மணிவாசகரைப் போன்றே வள்ளுவர் உலக வீட்டின்ப வளர்ச்சியையும் வளத்தையும் பெருக்கத்தையும் காட்ட விழைந்தார். அவர் வெளிப்படையாகவே காணக் காண-அறிய அறிய-அளக்க அளக்க-அது எல்லையற்றுப் பெருகிக் கொண்டிருப்பது என்று உணர்த்திச் சென்றார்.

‘அறிதோ றறியாமை கண்டற்றால் காமம்
செறி தோறும் சேயிழை மாட்டு’

(குறள்)

என்பது அவர் வாக்கு. உற்ற இல்லற வாழ்வில் தலைவியோடு பெறும் இன்பம் தரணி வாழ் உயிர்கள் அனைத்துக்கும் பொது-அனைவரும் அறிந்தது. இந்த அறிந்த உண்மையைக்கொண்டு இருவரும் அறிய இயலாத பல உண்மைகளை உலகுக்கு உணர்த்த நினைத்தனர். எனினும் இலக்கண அமைப்பில் உவமானம் உபமேயமாகவும், உபமேயம் உவமானமாகவும் வருகின்ற மரபை ஒட்டியும் தாம் எடுத்துக்கொண்ட ‘காதற் சிறப்பு’ என்ற பொருள்பற்றியும் இருவரும் இவ் வகையில் தத்தம் பாடல்களைப் பாடியுள்ளனர். நாம் இங்கே இந்த ஆய்வினை விட்டு அறிதோ றறியாமை காணும் உண்மையினைச் சற்றே எண்ணிப் பார்ப்போம்.

கிராமத்தில் ஆரம்பப் பள்ளியில் பயிலும் சிறுவனுக்குத் தான் அங்குள்ள உயர் வகுப்பாகிய ஐந்தாம் வகுப்பில் பயிலும்போது, தானே உயர்ந்தவன் என்ற உணர்வும், பிற வகுப்புக்களில் பயில்பவரைக்காட்டிலும் தனக்கே அதிகம் தெரியும் என்ற தருக்கும் உண்டாகும். அவனே பின் அண்மையிலுள்ள நகர உயர்நிலைப் பள்ளி நடத்திய தேர்வில் முதலாம் படிவத்துக்கும் தகுதியற்று, அதே ஐந்தாம் வகுப்பில் சேர்க்கப்பட்டபோது மேலே உள்ள ஆறு வகுப்புக்களையும் எண்ணி அறியாமையை உணர்வான். அப்படியே பள்ளியிறுதி வகுப்பில் வரும் போது, தானே எல்லாவற்றையும் அறிந்தவனாகத் தருக்கும் மாணவன் கல்லூரியில் கால் வைக்கும்போது கருத்தழிவான். கல்லூரிக் கல்வியில் முதலிடம் பெற்றுத் தேறினும் வாழ்வெனும் பள்ளியில் கால் வைக்கும்போது அவனது அறியாமையை எண்ணி அவன் வாடுவான். இதுவே முறையான வாழ்வமைப்பு. இம்முறை எல்லாவற்றிற்கும் பொருந்தும். சிறப்பாக இன்றைய அறிவியல் ஆய்வாளர்களுக்கு இவ்வுண்மை முற்றும் பொருந்துவதாகும். அறிய அறிய-உணர உணர்-தாம் அதிகம் உணர்ந்தவர் என்றோ-முற்றும் உணர்ந்தவர் என்றோ தம்மை அதிகமாக மதிப்பிட்டு எண்ணுவது நல்ல ஆய்வாளர்கட்கு ஏற்ற ஒரு செயலன்று. அண்ட கோளங்களையும் பேரண்டப் பெருவெளியையும் தாம் அளந்து விட்டதாகவும் எண்ணும்வகையில் அண்மையில் சில விஞ்ஞானிகள் தம் கருத்தை வெளியிட்டதாகச் சில தாள்களில் படிக்கும்போது நான் உண்மையிலேயே வருந்தினேன். பாவம்! இவர்கள் அறியாதவர்கள்-ஆம்! வள்ளுவர் கூற்றின்படி, வாசகர் கூற்றின்படி, இவர்கள் அறியாதவர்கள்தாமே. மிகப்பெரிய தொலைநாடியால் மிக உயர்ந்ததாகத் தாம் எண்ணும் ஓரிடத்திலிருந்து கண்டவையே முடிந்த பொருள் என்றும் எனவே அண்ட கோளம் இத்தனை ஆண்டுகளுக்கு முன் முதலாக அமைந்தது என்றும் யாராவது கணக்கிடுவார்களாயின் அவர்கள் தவறிழைத்தவர்களே ஆவார்கள். சற்று நின்று நிலைத்து ஆய்ந்து-அறிந்து-எண்ணிப் பார்ப்பின் இவ்வுண்மை விளங்காமற் போகாது.

இன்று விண்வெளிப் பயணம் மிக எளிதாக அமைந்து விட்டது. மண்ணில் நின்று மிகப்பெரிய தொலைநாடிகளின் துணையால் காணமுடியாத பல அண்டகோள உண்மைகளை விண்வெளியில் நின்று கண்டறியலாம் எனவும், இந்த முறையில் முயன்றால் பேரண்ட கோளத்தின் எல்லையையும் வயதையும் அளவிடலா மென்றும் சிலர் தவறாகக் கணக்கிடுகிறார்கள். அவர்கள் ‘அறிதோ றறியாமை கண்டற்றால்’ என்ற வள்ளுவர் வாக்கை மறந்தவராதலால் அந்த விண்வெளியிலோ அதற்கப்பாலோ நின்று ஆராய்ந்தால் இப்பேரண்டத்தின் எல்லை மண்ணிலிருந்து காண்பதைக்காட்டிலும் மிகமிக விரிந்து அளவிட முடியாததாக அமையும் என்பதையும் அவர்கள் அண்மையில் உணரப்போகிறார்கள். மனிதனுடைய இன்றைய பேரண்ட ஆராய்ச்சியும் காணாது நெடுந்தொலைவு வரைவற்று விரியும் அண்ட முகட்டின் எல்லையும் உவமை வாயிலாய் கூறவேண்டுமாயின் முடியாது. எனினும் ஓரளவு எண்ணிப் பார்க்கலாம். இன்றைய ஆராய்ச்சியில் காணும் அண்டவெளியோடு சிறு விரல்களுக்கு இடையில் உள்ள சிற்றிடத்தை ஒருமைப்படுத்திக் காணில் எத்துணை வேற்றுமை உண்டோ அத்தனைவேற்றுமை-—பருமை—இன்று ஆய்வுவழி கண்ட அண்டப் பகுதிக்கும் காணாத பெரும்பகுதிக்கும் உண்டு என்று கூறலாம். இது நான் கூறும் உவமை. இதனினும் நுண்ணிய உவமையைப் பெரியவர் கூறியுள்ளனர். அதையும் பின் காணலாம். இவ்வுண்மைகளையெல்லாம் எவ்வாறோ எண்ணி-அல்லது உணர்ந்து-ஓரளவு நம் தமிழ்நாட்டுப் பழம்பெரு நல்லவர்கள் உணர்த்திவிட்டுச் சென்றுள்ளார்கள்.

வானத்தில் எத்தனையோ ஒளிப்பொருள்கள் உருண்டுகொண்டே இருக்கின்றன. அவற்றின் வளர்ச்சி பற்றியும் தோற்றம், நிலைபேறு, மாற்றம் முதலியன பற்றியும் ஆராய்ந்துகொண்டே உள்ளனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சைவ சித்தாந்திகளால் உணர்த்தப்பெற்ற ‘பொருள்கள் அழிவன அல்ல, நிலைமாறும் தன்மையன’ என்ற உண்மையை இன்று விஞ்ஞானிகள் உணர்ந்து உணர்த்துகின்றனர். இவ்வாறு நிலைமாறும் பொருள்களை வானவீதியில் வலம் வந்து கணக்கிடும்போது பலப்பல புது உண்மைகள் புலனாகலாம். எனினும் இன்று அல்லது நாளைப் பொழுதில் ஏன்-என்றுமே இவற்றின் எல்லையை யாராலும் கணக்கிட முடியாது. அல்லது இவற்றின் தோற்ற மாறுபாடுகள் ஏன் இவ்வாறு நிகழ்கின்றன எனக் காட்டமுடியாது. அவற்றை ஒருவேளை சமய உணர்வு காட்ட முயன்று பயன் பெறலாம். இந்த உண்மையைத்தான் சிறந்த விஞ்ஞான மேதையாகிய ‘ஐயின்ஸ்டைன்’ இந்த அண்ட கோள விந்தைகளை ஆராயும்போது ‘இவை எப்படி உண்டாகின்றன என்று என்னால் கூறமுடியும்; ஆனால் ஏன் உண்டாகின்றன என்ற கேள்விக்கு விடை காண முடியாது’ என்று கூறியதாக அறிஞர் விளக்குவர். ஆம், இந்த வினாவுக்குச் சமயமே விடை காண வல்லது.

தமிழர்கள் வானாராய்ச்சி வல்லவர்கள். அவ் வான்வழிச் சென்றளந்தறிந்தோர் ‘போல’ அறுதியிட்டுக் கூறியவர்களும் நாட்டில் இருந்தனர் என்ற உண்மையை,

‘செஞ்ஞாயிற்றுச் செலவும்
அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்பு சூழ்ந்த மண்டிலமும்
வளி திரிதரு திசையும்
வறிது நிலைய காயமும், என்றுஇவை
சென்றளந் தறிந்தோர் போல என்றும்
இனைத் தென்போரும் உளரே’

(புறம் - 30)

என்றும்

‘இருமுந்நீர்க் குட்டமும்
வியல் ஞாலத் தகலமும்
வளிவழங்கு திசையும்
வறிதுநிலைஇய காயமும் என்றாங்கு
அவை அளந் தறியினும்’

(புறம் - 20)

என்றும்

புறநானூற்று அடிகள் நமக்கு விளக்குகின்றன. இவற்றில் ‘போல்’, ‘அறியினும்’ என்ற சொற்களால் அவை அறிய முடியாதனவே என்பதையும் எடுத்துக் காட்டத் தவறவில்லை. அவர்தம் ஆய்வு வழியிலே அத் தமிழர் கண்ட உண்மைகள் பலப்பல. இன்றைய ஆய்வாளர்கள் விண்ணில் பலப்பல சூரியர்கள் உண்டு என்கிறார்கள். அன்று அவர்கள் பன்னிரு சூரியர்களை (துவாதச ஆதித்தர்) எண்ணிக் கணக்கிட்டார்கள். மீன்களுக்கும் (Stars) கோள்களுக்கும் (Planets) உள்ள வேறுபாட்டினை நன்கு உணர்ந்து தமிழர்கள் அவற்றிற்குப் பெயரிட்டுள்ளார்கள். இயல்பாகவே ஒளிபெற்று, தம் ஒளியினை மின்னி மின்னி வெளிவிடுபவற்றை ‘மீன்’ என்றும், தமக்கென இயல்பான ஒளியில்லாதனவாய், தாம் உலவும் மண்டலத்திலுள்ள சூரியன் போன்ற பேரொளிப் பிழம்புகளிலிருந்து ஒளி ‘கொள்’வனவாக உள்ள கிரகங்களைக் ‘கோள்’ என்றும் அழைத்த பெருமை தமிழர்களுக்கு உண்டு. ஆம். அவ்வவற்றின் பெயர்களிலிருந்தே அவ்வவற்றின் தன்மைகளை உணரவைக்கும் முறையைத் தான் தொல்காப்பியர் ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்று எடுத்துக் காட்டியுள்ளார். இப்படியே வானவெளியில் தொங்கும்-ஞான்று நிற்கும்-ஒன்றையும் பற்றாது தனியாக நிற்கும்-உலகை ‘ஞாலம்’ என்று அழைத்தார்கள். இவ்வாறு பல உண்மைகளை விளக்கலாம். விரிவஞ்சி மேலே செல்லுகிறேன்.

இன்றைய விஞ்ஞானிகள் தம் அழிவுப் பாதையை விட்டு விலகி, ஆக்கப் பாதைக்கே தம்மை முற்றிலும் உரியவர்களாக்கிக் கொண்டு உழைப்பார்களாயின் இன்றும் நம் வாழ்நாட்களிலேயே எத்தனையோ அரிய உண்மைகளை உணர்த்துவார்கள் என்பதில் ஐயமில்லை. என்றாலும் இவர்களோ-இவர்தம் வழிவழியாக வரும் பெரும் ஆராய்ச்சியாளர்களோ எதையும் அறுதியிட்டுக் கூற முடியாது என்பதும் அசைக்கமுடியாத உண்மை. அழிவுப்பணி இன்றி ஆக்கப் பணியில் தலை நின்றால் இன்னும் இரண்டு மூன்று நூற்றாண்டுகள் கழித்து, ஆய்வு விஞ்ஞானிகள் இருபதாம் நூற்றாண்டின் இடைக்கால ஆய்வுகளையெல்லாம் எண்ணி நகையாடும் வகையில் அவர்கள் ஆய்வின் வளர்ச்சி எல்லையற்றுப்



*‘ஞாலுதல்’ என்றால் பற்றுக்கோடற்றுத் தொங்குதல் என்பது பொருள். பெருகும் என்பதும் உண்மை. அன்று, இன்றைக்கு நாம் புதிது புதிதாகக் கண்டதாக எண்ணும் பல, மிகச் சாதாரணமாக எளிமை உடையனவாக அமையும். அன்றும் அதற்கடுத்த ஆயிரமாயிர ஆண்டுகளிலும் விஞ்ஞானிகள் தம் ஒவ்வொரு ஆய்வின் முடிவிலேயேயும், ‘அறிதோறறியாமை கண்டற்றால்’ என்ற வள்ளுவர் வாக்கையும் ‘பின்னும் புதிதாய்’ என்ற மணிவாசகர் வாக்கையும் நினைவூட்டிக் கொண்டே இருப்பார்கள். எனவே பேரண்டம் பற்றிய ஆய்வையோ அதன் ஊற்றான பஞ்சபூத நிலைக்களனையோ அவற்றின் முடிவிலாற்றலுடைமையையோ யாரும் முற்றக் கண்டுவிட்டோம் என்று என்றும் கூறமுடியாது. எனவே எதையும் கண்டு விட்டதாக முடிவுகட்டி விடாதீர்கள் என்று இன்றைய விஞ்ஞானிகளை நான் தலை தாழ்ந்து கேட்டுக்கொள்ளுகிறேன்.

இவ்வாறு கூறுவதால் இந்த அறிவியல் ஆய்வுகளெல்லாம் வேண்டாமென்று நான் கூறுவதாக யாரும் நினைக்க வேண்டாம். இந்த ஆய்வுகள் நன்கு வளர வேண்டும். ஆயிரமாயிரமாக எல்லையற்று வளர வேண்டும்-ஆனால் அவை அனைத்தும் ஆக்க நெறிக்கே பயன்பட வேண்டும். அவ்வாறு ஆய்வு பெருகிப் பெருகி வளர வளரத்தான் வள்ளுவரும் வாசகரும் சொன்ன மொழிகள் உண்மை என்பதை மேலும் மேலும் உலகம் உணர்ந்துகொள்ளும். உலக உயிர்களும் இவற்றின் ஆக்கத்தாலும் உணர்வாலும் புற அழகும் அக அழகும் பெற்று, வாழ்வில் பெறக் கடவதாகிய எல்லாச் செல்வங்களும் பெற்று இம்மை மறுமை இரண்டிடத்தும் பெறக் கடவதாகிய செம்மை வாழ்வைப் பெற்று வாழமுடியும். எனவே ஆய்வு பெருகவேண்டும். அதன் வழி ஆக்கமும் அருளுணர்வும் அனைத்து நலங்களும் பெருகவேண்டும் என்பதே என் ஆசை; விழைவு.

இவ்வாறு அறுதியிட முடியாததை எப்படித்தான் காட்டுவது என்ற வினா எழுதல் இயல்பு. இன்றைய விஞ்ஞானிகள் எத்தனையோ வகையில் எண்ணிட்டும் சுட்டியும் காட்டியும் உணர முடியாத பலவற்றை உணர்த்த முயல்கின்றனர் . அவர்தம் முயற்சி வெல்வதாக என வாழ்த்துகின்றேன். இவ்வாறு சுட்டிக் காட்டும் நிலையிலும் பேரண்டப் பெருநிலையை ஓரளவாவது உணர்ந்துகொள்ள முடிகின்றது என்றாலும் நன்கு புரிந்துகொள்ள முடியாது. அதைப் புரிய வைத்தவர்களும் நம் நாட்டில் வாழ்ந்துள்ளார்கள். அவர்கள் ‘கண்டு விட்டோம்’ என்று முடிவுகட்டவில்லை. காண முடியாத ஒன்றாயினும் கண்ட ஓர் உவமை கொண்டு ஓரளவு காட்ட இயலும் என்றே நினைத்தார்கள். அவ்வாறு காட்ட நினைத்தவர் பலர். அவருள் இக் கட்டுரையின் தொடக்கத்துக்கு அடியெடுத்துத் தந்த மணிவாசகரையே இங்கே துணைக்கு அழைத்து அமைகின்றேன்.

மாணிக்கவாசகர் ‘திருவண்டப் பகுதி’ என்ற ஓர் அகவல் பாடியுள்ளார் என்பதை நாமறிவோம். அதில் அவர் அண்டகோளம் பற்றியும் பேரண்ட நிலைபற்றியும் பலவாக விளக்கியுள்ளார். அவர் விளக்கிய எல்லையில் நின்று, இன்றைய விஞ்ஞானிகள் இன்னும் பல காலம் முயன்றால்தான் பல உண்மைகளைப் பெற முடியும். பேரண்ட கோளத்தையும் அவற்றின் செறிவையும் அவற்றில் உள்ள பல அண்ட கோளங்களையும் அவற்றையெல்லாம் ஆக்கும் ஆண்டவனையும் எண்ணுகின்ற மாணிக்கவாசகருக்கு ஒரு சிறந்த உவமை நினைவுக்கு வருகின்றது. வீட்டு வாழ்வையே வெளி வாழ்வுக்கும் விண்வெளி அமைப்பிற்கும் பேரின்ப வீட்டிற்கும் உவமையாகவும் உற்றதாகவும் காட்டி விளக்கும் அடியவர் இப் பேரண்டத்தையும் அதிலுள்ள அண்டகோள முட்டைகளையும் வீட்டில் காணும் ஒரு சிறு நிலை காட்டியே விளக்குகின்றார். வீட்டில் நாம் காணும் எத்தனையோ நிகழ்ச்சிகள்-செயல்கள்-அமைப்புகள் ஆகியவை பற்றிச் சிந்திப்பதில்லை. நல்லவர் சிந்தியாமல் இருப்பதில்லை. அவ்வாறு சிந்தித்த மணிவாசகர் உள்ளத்தில் ஊற்றெடுத்த ஓர் உண்மையினையே ஈண்டு நான் குறிக்க நினைக்கிறேன்.

வீட்டுக் கூரையில் சிறு புழை இருப்பின் அதன் வழி சூரிய ஒளி புகுவதை அனைவரும் அறிவோம். அச் சிறிய புழை சதுரமாகவோ-நீண்ட சதுரமாகவோ வேறு வகையிலோ இருப்பினும், அதன் வழிவரும் ஒளி தரையில் விழும்போது வட்டமாகவே விழுவதைக் காண்கிறோம். இங்கே சூரிய மண்டலத்தைப் பேரண்டமாகக் கொண்டால்-அதன் எல்லைக்குட்பட்ட பல கதிர்களில் ஒரு துகள் வீட்டுப் புழைவழியாக நுழைந்து கடைசியில் வட்ட வடிவம் பெறுவது போன்று, பேரண்டத்தினின்றும் அண்ட கோளப் பெரு உருண்டைகளிலிருந்தும் பல்வேறு வடிவங்களிலிருந்து உருவாகும் பொருள்கள் இறுதியில் உருண்டை வடிவம் பெறுகின்றன என்பதை உணர்தல் வேண்டும். இனி இந்த உவமையை மறந்து மற்றொன்றைக் காண்போம்.

வீட்டில் நுழையும் அந்தச் சிறு கதிர் ஒளியின் நடுவே உற்றுப் பார்ப்பவர் சிலர். அவ்வாறு பார்க்கும்போது எத்தனையோ எண்ணற்ற தூசுகள் நம் கண்ணுக்குத் தெரியும். ஆய்வு ‘நாடி’ வைத்துப் பார்ப்பின் இன்னும் பல கோடி துகள்கள் புலப்படும். இவற்றையும் அப் பெருஞ் சூரியன் அளவையும், தூரத்தையும் பிற வேறுபாடுகளையும் எண்ணிப்பார்க்க வேண்டும். இந்த அண்டகோளங்கள் இக் கண்ணில் காண முடியாத சிறு துகள்களிலும் மிகச் சிறியவை. ஆனால் பேரண்டமும் அதற்கப்பால் உள்ள பேராற்றலும் அவ்வாற்றலை இயக்கும் இறைநிலையும் சூரியனைக்காட்டிலும் இன்று காணும் அண்ட முகட்டைக் காட்டிலும் பெரியன. இந்த நிலை நினைக்கக்கூட முடியாத ஒன்று. இன்றைய ஆய்வாளர்கள் இந்த உவமையை எண்ணுவார்களாயின் ‘முடிவு கட்டி விட்டோம்’ என்று கூற முடியுமா? ஆம்! அண்டகோளங்களும் பேரண்டமும் அத்துணை விரிவுடையன. இவை பற்றி மணிவாசகர் கூறிய அடிகள் இவைதாம்.

‘அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருங் தன்மை வளப்பருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன்
இல் நுழை கதிரின் துன் அனுப்புரையச்
சிறிய வாகப் பெரியோன்’

இவ் வடிகளால் பேரண்ட நிலையும் அண்ட கோளங்களின் அமைப்பும் ஓரளவே நமக்குப் புலனாகின்றன. இவைபற்றி ஆய்வு தேவை. இந்த ஆய்வின் முடிவே அருளுணர்வை வளர்ப்பதாகும். எனவே எட்டாத முடிவை ஆய்ந்து என்ன பயன் என்று யாரும் வாளா இருத்தல் கூடாது. வேண்டும் இன்பம் பெற்றுவிட்டால் மகிழ்ச்சி முற்றுப் பெற்றுவிடும். அந்த இன்பம் எங்கே எங்கே என்று ஆய்வதிலேதான் பெருமகிழ்ச்சி வளர்ந்துகொண்டே இருக்கும். எனவே உயிர்கள் இன்புற, உலகம் செழிக்க, மண்ணிலிருந்து விண்ணுக்குத் தாவி வேறு வாழ்வின் தேவைகளைப் பெற, நல்லாற்றில் வாழ்வாங்கு வாழ ஆக்கப் பணிக்கு உதவும் அண்டகோள ஆய்வுகள் தேவை-தேவையே. எனவே அறிவியல் அறிஞர்களை ஆய்ந்து கொண்டே இருங்கள் என்று கேட்டுக் கொள்ளுகிறேன். ஆனால் ஆய்ந்துவிட்டோம் எல்லை கண்டுவிட்டோம் என்று தவறாக மட்டும் ‘முடிவுகட்டி விடாதீர்கள்’ என்ற வேண்டுகோளோடு அமைகின்றேன்.
கலைக்கதிர்-1974

"https://ta.wikisource.org/w/index.php?title=ஓங்குக_உலகம்/017-026&oldid=1135836" இலிருந்து மீள்விக்கப்பட்டது