கடக்கிட்டி முடக்கிட்டி/கடக்கிட்டி முடக்கிட்டியும் காட்டுவிலங்குகளும்

விக்கிமூலம் இலிருந்து
6
கடக்கிட்டி முடக்கிட்டியும்
காட்டுவிலங்குகளும்

முயல் எப்பொழுதுமே பயந்த இயல்புடையது. அதன் பெரிய காதுகளின் உதவியைக் கொண்டு சின்னச் சத்தத்தையும் கண்டு பிடித்துவிடும். அப்படிச் சத்தம் கேட்டால் உடனே தாவி ஒடிப் புதருக்குள் பதுங்கிக் கொள்ளும்.

இந்தக் கோழை முயல்களையெல்லாம் தோற்கடிக்கச் செய்யும்படியாக அவ்வளவு பெரிய கோழை முயற்குட்டி ஒன்று இருந்தது. சிறிய ஒலியைக் கேட்டாலும் 'விறுக்கு விறுக்கு' என்று நடுங்கும்; தாவித்தாவி ஓடிவிடும்.

ஒரு நாள் இந்த முயற்குட்டி காட்டிலே மற்ற முயல்களோடு சேர்ந்து ஓரிடத்தில் புல் மேய்ந்துகொண்டிருந்தது. அப்பொழுது வானத்திலே கருமையான மேகங்கள் எங்கும் பரவின. மின்னல் 'பளீர் பளீர்' என்று மின்னத் தொடங்கியது. திடீரென்று ஒரு பெரிய இடி முழக்கம் பூமியே அதிரும்படி கேட்டது.

அதைக் கேட்டதும் முயற்குட்டி "ஐயோ, பூமி கீழே விழுகிறது; கீழே விழுகிறது" என்று சத்தமிட்டுக்கொண்டு தாவித்தாவி ஓடத் தொடங்கிற்று. அது போடுகின்ற சத்தத்தைக் கேட்டு மற்ற முயல்களும் நடுங்கலாயின. "பூமி கீழே விழுகிறது" என்று அவைகளும் கத்திக்கொண்டு முயற்குட்டியின் பின்னால் தாவித் தாவி ஓடின.

ஓரிடத்தில் மான்கள் கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்தன. முயல்களின் கூக்குரலைக் கேட்டு அவைகளும், "பூமி பாதாளத்தில் விழுகிறது" என்று கத்திக்கொண்டு முயல்களின் பின்னாலேயே ஓடத் தொடங்கின.

கரடிகள் மற்றோரிடத்திலே ஏதோ தமக்குள் பேசிக்கொண்டிருந்தன. அவைகளும் பயந்து "பூமி விழுகிறது; பூமி விழுகிறது" என்று கூவிக்கொண்டே மான்களைத் தொடர்ந்து ஓட்டம் பிடித்தன.

சிறுத்தைகளும் புலிகளும் நன்றாக இருட்டான பிறகு இரைதேடச் செல்லுவதற்காக அவற்றின் குகைகளில் பதுங்கி இருந்தன.

அவைகளும் முயல், மான், கரடி ஆகியவை போடும் பெரிய இரைச்சலைக் கேட்டன. 'ஆபத்து ஏதாவது இல்லாவிட்டால் இத்தனை விலங்குகளும் ஓடுமா' என்று சிறுத்தைகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. புலிகளுக்கும் அவ்வாறே சந்தேகம் உண்டாயிற்று. அதனால் அவைகளும் கூட்டத்திலே சேர்ந்து கொண்டு பாய்ந்து பாய்ந்து ஓடத் தொடங்கின.

இப்படி இந்த விலங்குகளெல்லாம் அஞ்சி நடுங்கிக் காட்டைச் சுற்றிச் சுற்றிப் பல தடவை ஓடிக்கொண்டிருந்தன. கடக்கிட்டி முடக்கிட்டி அப்பொழுதுதான் பட்டணத்திலிருந்து திரும்பி வந்திருந்தது. பசும்புல் மேய்வதற்காக வெளியே வந்தபோது. அது இந்த விலங்குகளின் ஓட்டத்தைக் கவனித்தது.

விலங்குகளின் முன் அணியில் ஓடிவந்த முயல்களைப் பார்த்துக் கடக்கிட்டி முடக்கிட்டி, "முயல்களே. ஏன் இப்படி ஓடுகிறீர்கள்? பயப்படாமல் கொஞ்சம் நின்று பதில் சொல்லுங்கள்" என்று நிதானமாகக் கேட்டது.

"ஐயோ, பூமி கீழே விழுகிறது. நாங்கள் ஓட்டம் பிடிக்கிறோம்" என்று கூறிவிட்டுக் கொஞ்ச நேரமும் நிற்காமல் முயல்கள் ஓடத் தொடங்கின. அவற்றைத் தொடர்ந்து மற்ற விலங்குகளும் “பூமி விழுகிறது. பூமி விழுகிறது" என்று கூவிக்கொண்டே ஓடின.

மறுபடியும் அந்த விலங்குகள் ஒரு சுற்று வருவதற்குள் கடக்கிட்டி முடக்கிட்டி நிதானமாக எண்ணமிட்டது. அவை பயப்படுவதன் காரணத்தையும் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தது.

அதற்குள் முயல்கள் திரும்பவும் வந்துவிட்டன. "முயல்களே, நீங்கள் இப்படி ஓடினால் காட்டைச் சுற்றிச் சுற்றித்தானே வரமுடியும்? புதிதாக எங்காவது தப்பி ஓட முடியுமா? நான் சொல்லுவதை நிதானமாகக் கேளுங்கள்" என்று உரத்த சத்தத்தில் கத்திற்று.

அதைக் கேட்டுக்கொண்டே முயல்களும் மற்ற விலங்குகளும் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தன. இப்படி அவை மேலும் நான்கு முறைசுற்றி வந்துவிட்டன. ஒவ்வொரு தடவையும் கடக்கிட்டி முடக்கிட்டி, “நில்லுங்கள், நான் சொல்வதைக் கேளுங்கள்" என்று முழங்கிக் கொண்டே இருந்தது.

ஐந்தாவது தடவையாக முயல்கள் ஓடி வரும்போதுதான், கடக்கிட்டி முடக்கிட்டி ஒரே இடத்தில் யாதொரு தீங்குமில்லாமல் நிற்பதை அவை உணரத் தொடங்கின. அதனால் முயல்கள் தைரியமடைந்து, கொஞ்ச நேரம் நின்று. அதன் பேச்சைக் காதுகொடுத்துக் கேட்க நினைத்தன. அவைகளுக்கு ஓடி ஓடிக் களைப்பும் அதிகமாகிவிட்டது.

"எங்கே ஓடுகிறீர்கள்?" என்று கடக்கிட்டி முடக்கிட்ட முயல்களைப் பார்த்துக் கேட்டது.

"பூமி கீழே விழுகிறது! நாங்கள் தப்பிப் பிழைக்க ஓடுகிறோம்” என்று முயல்கள் பதில் அளித்தன.

"ஆமாம், தப்பிப் பிழைக்கவேண்டுமானால் இந்தக் காட்டைவிட்டுவேறு எங்காவது ஓட வேண்டும். இந்தக் காட்டைச் சுற்றிச் சுற்றித்தானே நீங்கள் ஓடுகிறீர்கள்? அப்படிச் செய்தால் தப்பிப் பிழைக்க முடியுமா?"

இதற்குள் மற்ற விலங்குகளும் அங்கே வந்து கூடிவிட்டன. அவைகளும் கடக்கிட்டி முடக்கிட்டியின் பேச்சைக் கவனமாகக் கேட்கத் தொடங்கின.

"ஐந்து முறை நீங்கள் சுற்றிச்சுற்றி ஓடியதை நான் இந்த இடத்திலேயே நின்று கொண்டு பார்த்தேன். நான் உங்களைப் போல ஓடவில்லை. எனக்கு ஒன்றும் தீங்கு வரவில்லையே! எதற்காக இப்படிப் பயப்பட்டு ஓடத் தொடங்கினீர்கள்?" என்று கடக்கிட்டி முடக்கிட்டி மறுபடியும் கேட்டது.

“அதென்னவோ, பூமி கீழே விழுகிறதாகக் கரடிகள் சொல்லித்தான் நாங்கள் ஓடத் தொடங்கினோம்” என்று சிறுத்தைகளும் புலிகளும் பதில் தெரிவித்தன.

"எங்களுக்குத் தெரியாது. மான்கள் சொல்லித்தான் நாங்கள் ஓடுகிறோம்" என்றன கரடிகள்.

"எங்களுக்கும் தெரியாது. முயல்கள் சொல்லித்தான் நாங்கள் ஓடுகிறோம்" என்றன மான்கள்.

"எங்களுக்கும் தெரியாது. அதோ அந்தச் சின்ன முயற்குட்டிதான் முதலில் அப்படிக் கத்திற்று" என்று மற்ற முயல்கள் கூறின.

குட்டிமுயல், "நான் ஒரு பெரிய சத்தத்தைக் கேட்டேன், அதனால் பயந்து பூமி விழுவதாக நினைத்தேன்" என்றது.

அந்தச் சமயத்தில் மறுபடியும் ஒரு பலத்த இடிமுழக்கம் கேட்டது.

"ஐயோ, பூமி விழுகிறது" என்று அலறிற்று குட்டிமுயல்.

"பார்த்தீர்களா! இந்த இடியோசையை நாம் எல்லோரும் பல முறை கேட்டிருக்கிறோம். இதனால் பூமி எங்கும் விழுந்துவிடாது. இந்தக் குட்டிமுயல் பிறந்தது முதல் இடியோசையைக் கேட்டதில்லை போலிருக்கிறது. அதனால்தான் பயந்திருக்கிறது. பூமி எங்கேயும் விழுந்து விடாது. யாருமே அஞ்ச வேண்டா" என்று கடக்கிட்டி முடக்கிட்டி கம்பீரமாகச் சொல்லிற்று.

உடனே காட்டுவிலங்குகளின் பயம் நீங்கியது. அதனால் அவை கடக்கிட்டி முடக்கிட்டியிடம் அளவில்லாத அன்பு கொண்டன. "நீங்கள் தான் எங்களைக் காப்பாற்றினீர்கள். இல்லாவிட்டால் நாங்கள் ஓடி ஓடியே உயிரை விட்டிருப்போம். இப்பொழுதே எங்களுக்குப் பாதி உயிர் போய்விட்டது. நல்ல வேளையாக நீங்கள் உண்மையை எடுத்துச் சொன்னீர்கள்" என்று கூறி, அவைகள் கடக்கிட்டி முடக்கிட்டியிடம் நிறைந்த அன்பும் மரியாதையும் காட்டின.

அத்துடன், "நீங்கள் காட்டிற்குள்ளே எங்கு வேண்டுமானாலும் வந்து பசும்புல் மேயலாம். நீங்கள் அப்படி வருவதை நாங்கள் ஒரு பெருமையாக எண்ணுவோம்" என்று எல்லா விலங்குகளும் ஒரே மூச்சில் முழங்கின.

கடக்கிட்டி முடக்கிட்டி அன்று முதல் காட்டிற்குள் புகுந்து. அச்சமில்லாமல் பசும்புல் மேய்ந்து, நன்றாகக் கொழுத்து வளர்ந்தது. அப்படி மேயும் போது இடையிடையே காட்டுவிலங்குகளில் சில அதனுடன் பேச்சுக் கொடுக்க ஆவலுடன் வரும். அவற்றோடு பேசிக் கொண்டே கடக்கிட்டி முடக்கிட்டி மேயும்.

நன்றாகக் கொழுத்து வளர்ந்துவிட்டதால் கடக்கிட்டி முடக்கிட்டிக்கு இப்பொழுதெல்லாம் விறகு சுமப்பது கூட எளிதாக முடிந்தது.