கடக்கிட்டி முடக்கிட்டி/கடக்கிட்டி முடக்கிட்டியும் நான்கு திருடர்களும்

விக்கிமூலம் இலிருந்து
5
கடக்கிட்டி முடக்கிட்டியும்
நான்கு திருடர்களும்

வழக்கம் போல ஒரு நாள் காட்டிலிருந்து வெட்டி வந்த விறகைக் கடக்கிட்டி முடக்கிட்டியின் முதுகில் வைத்துக் கிழவன் பட்டணத்திற்கு ஓட்டிச் சென்றான். அங்கே விறகை நான்கு ரூபாய்க்கு விற்றுவிட்டு, அந்தப் பணத்தைத் தன்னிடமுள்ள ஒரு கிழிந்த பையில் போட்டுத் தலைமாட்டில் வைத்துக்கொண்டு அலுப்புத் தீரச் சத்திரத்திலே படுத்து உறங்கலானான்.

கிழவன் துரக்கத்திலே கொஞ்சம் புரண்டு படுத்தான். தலைமாட்டில் வைத்திருந்த பை நன்றாக வெளியில் தெரிந்தது.

அந்தச் சத்திரத்திலே படுத்துத் தூங்க வருவதுபோலப் பாசாங்கு செய்துகொண்டிருந்த நான்கு திருடர்கள் இதைக் கவனித்தார்கள். உடனே மெதுவாக இந்தப் பையை எடுத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு நழுவி விட்டார்கள்.

கடக்கிட்டி முடக்கிட்டி இதைப் பார்த்துக் கொண்டே இருந்தது. அதற்குக் கோபம் கோபமாக வந்தது. இருந்தாலும் அதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கிழவனை எழுப்பிவிட்டால் திருடர்களைப் பிடிக்கமுடியும் என்று எண்ணி, அது கிழவன் பக்கத்தில் சென்று நின்றுகொண்டு கத்திற்று.

தன் தூக்கத்தை அது கலைத்துவிட்டது என்று நினைத்துக் கிழவன் அதைத் தன் கைத்தடியால் இரண்டு அடி ஓங்கி அடித்து விட்டு மறுபடியும் படுத்துத் தூங்கலானான். பாவம். வலி பொறுக்க முடியாமல் கடக்கிட்டி முடக்கிட்டி முனகிக்கொண்டிருந்தது. அதன் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.

கிழவன் மாலை நான்கு மணி அளவில் தூக்கங் கலைந்து எழுந்தான். அப்பொழுதுதான் அவன் தன் பையை யாரோ திருடிக் கொண்டு போய்விட்டார்கள் என்பதை அறிந்தான். கிழவன் தூங்கும்போது என்றுமே கத்தாத கழுதை அன்று எதற்காகக் கத்திற்று என்பதை அவன் தெரிந்து கொண்டு பெரிதும் விசனப்பட்டான். அதன் முதுகை மெதுவாகத் தடவிக் கொடுத்தான். “தெரியாமல் அடித்து விட்டேன்; வருத்தப்படாதே" என்று அன்போடு கூறினான்.

கடக்கிட்டி முடக்கிட்டி ஆறுதல் அடைந்தது. தனக்கு அடி விழுவதற்குக் காரணமாக இருந்த அந்த நான்கு திருடர்களையும் பழி வாங்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டது.

அடுத்த ஒரு வாரத்திற்குத் திருடர்கள் நான்கு பேரும் சத்திரத்தில் தலை காட்டவில்லை. அதற்குப் பிறகு ஒரு நாள் வந்தார்கள். வழக்கம் போலப் பாசாங்கு செய்ய எண்ணி நான்கு பேரும் படுத்தார்கள். அவர்களில் இரண்டு பேர் நன்றாகத் தூங்கிவிட்டார்கள். குறட்டைச் சத்தம் பலமாகக் கேட்டது.

அந்தச் சமயத்தில் தான் கிழவன் அன்று கொண்டுவந்த விறகை விற்றுவிட்டு ஓய்வு கொள்ளுவதற்காகச் சத்திரத்திற்கு வந்தான். இப்பொழுதெல்லாம் அவன் பணத்தைத் தலை மாட்டில் வைப்பதில்லை. தன் இடுப்பு வேட்டியில் நன்றாக முடிந்து மடியில் செருகிக் கொண்டு படுத்துத் தூங்கலானான்.

கடக்கிட்டி முடக்கிட்டி, கிழவன் போட்ட பசும்புல்லைத் தின்றுகொண்டிருந்தது.

தூங்காமல் இருந்த மற்ற இரண்டு திருடர்களும் தங்களுக்குள் ஏதோ ரகசியம் பேசத் தொடங்கினார்கள்.

“அண்ணே, நம் கூட்டாளிகள் குறட்டை விடுவதைப் பார். கிழவனும் தூங்கிக்கொண்டிருக்கிறான்” என்றான் ஒரு திருடன்.

“ஆமாம், கிழவன் இப்போது சாக்கிரதையாக இருக்கிறான். இடுப்பில் உள்ள பணத்தை எடுக்க முடியாது" என்றான் மற்றவன்.

“அது கிடக்கட்டும், அண்ணே. நான் இன்னொரு பெரிய திட்டம் சொல்லுகிறேன். இந்தத் திட்டம் நம் இரண்டு பேருக்குள்ளே இருக்கட்டும். என்ன, தெரிஞ்சுதா?” என்றான் முதலில் பேசிய திருடன்.

“என்ன அப்படிப் பெரிய திட்டம்?”

“அதுதான், கிழவன் குடிசைக்குள்ளே புகுந்து திருடுவது. நம் இரண்டு பேருக்குள்ளே ரகசியமாக இருக்கட்டும்."

இந்தச் சமயத்திலே கடக்கிட்டி முடக்கிட்டி தூங்குகிற திருடர்களில் ஒருவன் காலை மெதுவாக நக்கிற்று. அவன் மறுபக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டான். எழுந்திருக்கவில்லை. கடக்கிட்டி முடக்கிட்டி தூங்கும் மற்றொருவனுடைய காலிலும் அப்படியே செய்தது. அவன் விழித்துக்கொண்டான். விழித்தவன் அப்படியே படுத்துக்கொண்டு முதலில் கிழவனைப் பார்த்தான். பிறகு, தன் கூட்டாளிகளில் இரண்டு பேர் ரகசியமாகப் பேசுவதைக் கவனித்தான். ‘என்ன அப்படி ரகசியமோ?’ என்று கண்களை மூடிக்கொண்டு படுத்தபடியே உற்றுக் கேட்கலானான்.

"இந்தக் கிழவனுடைய குடிசையில் என்ன இருக்கப்போகிறது? இவனோ விறகு வெட்டிப் பிழைக்கிறவன்" என்று இரண்டாம் திருடன் சந்தேகத்தோடு கேட்டான்.

"அண்ணே, இந்தக் கிழவன் தினமும் குறைந்தது நான்கு ரூபாய்க்கு விறகு விற்கிறான். இவனுக்குச் செலவும் அதிகம் இருக்காது; அரிசி பருப்பு வாங்கத் தினமும் இவனுக்கு இரண்டு ரூபாய்க்கு மேல் செலவில்லை. அதனால், விறகு விற்றுச் சம்பாதித்த பணத்தையெல்லாம் அவன் குடிசையில் எங்காவது வைத்திருப்பான். அதை நாம் இரண்டு பேரும் சுலபமாகத் தட்டிக்கொள்ளலாம்" என்று ஆசை காட்டினான் முதலில் பேசிய திருடன்.

மற்றவனுக்கும் பணம் சுலபமாகக் கிடைக்கும் என்றவுடன் ஆசை வந்துவிட்டது.

"ஆமாம் தம்பி, இந்தக் கிழவனைச் சமாளிக்க நாம் இரண்டு பேருமே போதும். ஒரு தட்டுத் தட்டினால் கிழவன் கீழே விழுந்து விடுவான். நம் கூட்டாளிகளையும் சேர்த்துக் கொண்டால் நமக்குக் கால் பங்குதானே வரும்."

"அதனால்தான் இதை நாம் மட்டும் ரகசியமாகச் செய்ய வேண்டும். அடுத்து வரும் அமாவாசை நல்ல இருட்டாக இருக்கும். நடுச் சாமத்திலே கிழவனுடைய குடிசைக்குள் புகுந்துவிடலாம்."

இவர்கள் பேசியதையெல்லாம் விழித்துக் கொண்டு படுத்திருந்த திருடன் நன்றாகக் கேட்டுக்கொண்டான். அதை அப்படியே நான்காவது திருடனுக்குச் சொல்லிவிட்டான்.

"திருட்டுத் தொழிலிலும் இப்படி நயவஞ்சகமா?" என்று அவர்களுக்குக் கோபம் பொங்கி எழுந்தது. "அவர்கள் இரண்டு பேருக்கும் நல்ல புத்தி வருமாறு செய்ய வேண்டும்" என்று அவர்கள் இருவரும் ஒரு திட்டம் வகுத்துக்கொண்டார்கள்.

அதன்படி அமாவாசை இரவில் நடுச்சாமத்திற்கு முந்தியே அவர்கள் கிழவனுடைய குடிசையில் புகுந்து பதுங்கிக்கொண்டார்கள். கிழவன் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தான். கடக்கிட்டி முடக்கிட்டியும் தூங்கிக்கொண்டிருந்தது.

முன்பே ஏற்பாடு செய்துகொண்டது போல் முதல் இரண்டு கூட்டாளிகளும் நடுச்சாமத்தில் குடிசைக்குள் நுழைந்தார்கள். அந்தச் சமயம் பார்த்து முன்னால் வந்த கூட்டாளிகள் அவர்கள் மேல் பாய்ந்தார்கள். இருட்டாக இருந்ததால் திடீரென்று பாய்ந்தது யாரென்று கண்டு கொள்ள முடியவில்லை.

அவர்கள் நான்கு பேர்களுக்குள்ளும் பெரிய குத்துச்சண்டை நடந்தது. இப்படி நீண்ட நேரம் ஒருவரை ஒருவர் தாக்கியதால் நான்கு பேரும் மயங்கிக் கீழே விழுந்து விட்டார்கள்.

சண்டை நடந்த சத்தம் கேட்டுக் கிழவன் விழித்துக்கொண்டான். ஆனால், இந்தச் சண்டையில் கலந்துகொள்ளாமல் தூங்குவது போலவே படுத்துக் கிடந்தான்.

திருடர்கள் மயக்கம் போட்டு விழுந்ததைக் கண்டதும் கிழவன் எழுந்து வந்து. அவர்களுடைய கைகளையும் கால்களையும் நன்றாகக் கட்டிவிட்டு, போலீஸ் ஸ்டேஷனுக்கு வேகமாக நடந்தான்.

இதற்குள் பொழுது விடிந்துவிட்டது. நான்கு திருடர்களும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து அவமானம் அடைந்தார்கள்.

"அண்ணே. நாங்கள் செய்தது தப்புத்தான். முதலில் இப்போது தப்பி ஓடுவதற்கு வழி தேடுவோம். பக்கத்தில் புரண்டு வந்தால் நான் மெதுவாகக் கட்டை அவிழ்த்து விடுகிறேன். பிறகு எல்லோரும் கிழவன் வருவதற்குள் ஓடிவிடலாம்" என்றான் ஒரு திருடன்.

"அது தான் நல்லது" என்று மற்றவர்களும் நினைத்தார்கள். மெதுவாக ஒருவர் பக்கத்தில் ஒருவராகப் புரண்டு வர முயற்சி செய்தார்கள்.

ஆனால் அவர்கள் முயற்சி பலிக்கவில்லை. கடக்கிட்டி முடக்கிட்டி தன் பின்னங்கால்களால் நகருகின்ற ஒவ்வொரு திருடனுடைய கலையிலும் 'படீர் படீர்' என்று உதைக்கத் தொடங்கிற்று. அதனால் திருடர்கள் மறுபடியும் மயக்கமடைந்து கிடந்தார்கள். எவனாவது ஒரு திருடன் கொஞ்சம் நினைவு வந்து அசைந்தால் உடனே அவன் பக்கத்தில் சென்று கடக்கிட்டி முடக்கிட்டி உதைக்கும். அதனால் அவர்கள் நால்வரும் போலீஸ்காரர்கள் வரும் வரையில் மயங்கியே கிடந்தார்கள்.

நான்கு திருடர்களையும் விலங்கிட்டுப் போலீஸ்காரர்கள் பிடித்துச் சென்றார்கள். கடக்கிட்டி முடக்கிட்டி மகிழ்ச்சியால் உரக்கக் கத்திற்று. கிழவன் அதைக் கட்டி அணைத்துக் கொண்டான்.