கடக்கிட்டி முடக்கிட்டி/கடக்கிட்டி முடக்கிட்டியும் சர்க்கசும்
ஒரு நாள் விறகை விற்றுவிட்டுக் கிழவன் வழக்கம்போல் சத்திரத்திற்கு வந்து படுத்துத் தூங்கலானான்.
கடக்கிட்டி முடக்கிட்டி பச்சைப் புல்லைத் தின்றுவிட்டுக் கொஞ்சம் படுத்திருந்தது. ஆனால், அதிக நேரம் அப்படிப் படுத்திருப்பது அன்று ஏனோ அதற்குப் பிடிக்கவில்லை. அது எழுந்து கின்று சுற்றுமுற்றும் பார்த்தது.
கிழவன் துரங்கி எழுவதற்கு முன்னால் என்ன செய்யலாம் என்று அது யோசனை செய்தது. பட்டணம் பார்க்கும் ஆசையெல்லாம் இப்பொழுது அதற்கு இல்லை.
அந்தச் சமயத்திலே பக்கத்திலே பாண்டு வாத்தியம் திடீரென்று முழங்க ஆரம்பித்தது. புதிதாக ஒரு பெரிய டேரா போட்டிருப்பதையும் அது பார்த்து ஆச்சரியமடைந்தது. டேரா உயரமாக இருந்ததால் சத்திரத்திலிருந்தே நன்றாகத் தெரிந்தது. அங்கு என்னதான் நடக்கிறது என்பதை எட்டிப் பார்த்து விட்டு வந்து விடலாம் என்று கடக்கிட்டி முடக்கிட்டி புறப்பட்டது.
டேராவுக்கு முன்னால் பாண்டு வாத்தியக்காரர்கள் உற்சாகமாகக் கடலலைகளின் சத்தம் தோற்றுப்போகும்படி தங்கள் வாத்தியங்களை வாசித்துக்கொண்டிருந்தார்கள். ஒரு பக்கத்தில் எத்தனையோ குதிரைகள், யானைகள், குரங்குகள், நாய்கள் எல்லாம் தயாராக நின்றுகொண்டிருந்தன. சிங்கம், புலி முதலிய விலங்குகளும் கூண்டில் தனித்தனியாக அடைக்கப்பட்டிருந்தன.
அது ஒரு பெரிய சர்க்கஸ் கம்பெனி என்று கடக்கிட்டி முடக்கிட்டி தெரிந்து கொண்டது. அன்று ஞாயிற்றுக்கிழமை ஆகையால் மூன்று மணிக்கே முதல் காட்சியைத் தொடங்கினார்கள். சிறுவர்களும் சிறுமிகளும் ஆவலோடு வந்து கூடிக்கொண்டிருந்தார்கள்.
அத்தனை விலங்குகளும் என்னதான் செய்யப்போகின்றன என்று பார்த்துவிடவேண்டும் என்று கடக்கிட்டி முடக்கிட்டிக்கு ஆசை உண்டாயிற்று. அதனால் அது மெதுவாகக் குதிரைகளுக்கும் யானைகளுக்கும் மத்தியில், யார் கண்ணிலும் படாமல் போய்ச் சேர்ந்துகொண்டது. டேராவுக்குள் நுழைய இனிமேல் தடை எதுவும் இராது என்று எண்ணி, அது நிம்மதியாகப் பெருமூச்சு விட்டது.
ஆனால், சர்க்கஸ் மிருகங்களெல்லாம் கடக்கிட்டி முடக்கிட்டியைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தன.
“உன்னால் எங்களைப் போல வட்ட வடிவமான அரங்கில் ஓடவும் வித்தைகள் செய்யவும் தெரியுமா? கழுதையே, உனக்கு இங்கு என்ன வேலை?" என்று குதிரைகள் அலட்சியமாகக் கனைத்தன.
"கழுதைப்பயலே. என்னைப் போல மரப்பந்தின் மேல் நான்கு கால்களையும் வைத்து அதை உருட்ட முடியுமா?" என்று கேட்பது போல் யானை உரத்த குரலில் சத்தம் செய்தது.
ஏய் கழுதையே. நாய் வண்டியில் சவாரி போகத் தெரியுமா? ஒன்றும் உதவாத கழுதைக்கு இங்கு என்ன வேலை?" என்று குரங்கு 'உர் உர்' என்று சீறிற்று.
இப்படியே எல்லா விலங்குகளும் கடக்கிட்டி முடக்கிட்டியைக் கேலி செய்தன. ஆனால், அது பொறுமையாக இருந்து, தந்திரமாக டேராவுக்குள் நுழைந்துவிட்டது குதிரைகளுக்கு மத்தியில் அது மறைந்து நின்றதால் அதைக் கண்டுகொள்ளவில்லை.
மற்ற விலங்குகளின் கேலிச் சிரிப்பு நிற்கவே இல்லை. "இந்தக் கழுதைக்கு நம்மைப் போல என்ன வித்தை தெரியும்?" என்று இதைக் கொஞ்சங்கூட மதிக்காமல் கேலி செய்துகொண்டே இருந்தன.
கடக்கிட்டி முடக்கிட்டி, அவற்றின் கர்வத்தை அடக்க வேண்டும் என்று சமயம் பார்த்துக்கொண்டிருந்தது.
ரிங்மாஸ்டர் வந்து, குதிரைகளையும் மற்ற விலங்குகளையும் அவற்றிற்குத் தெரிந்த வித்தைகளைக் காட்டுமாறு செய்தான். இடை இடையே சர்க்கஸ் கோமாளி வந்து, வேடிக்கை காட்டி எல்லோரையும் சிரிப்பில் மூழ்கடித்துக் கொண்டிருந்தான். அவன் முகத்தைப் பார்த்தாலே சிரிப்பு வரும்படியாக இருந்தது.
குதிரைச்சவாரி, நாய்வண்டியில் குரங்குச் சவாரி எல்லாவற்றையும் பார்த்த மக்கள் கை தட்டி ஆரவாரம் செய்தார்கள். ஒரு யானை நாற்காலியில் உட்கார்ந்து, துதிக்கையைத் தூக்கி எல்லோருக்கும் வணக்கம் சொல்லிற்று. மற்றொரு யானை, பெரிய மரப்பந்து ஒன்றன் மேல் நின்று, அதை உருட்டிற்று. பார்த்தவர்கள் எல்லாம் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.
சிங்கம், புலி முதலியவை பாதுகாப்பான இரும்புக்கம்பிகளுக்கு உள்ளிருந்து வித்தை காட்டின. அவற்றின் கர்ஜனை கூடாரத்தையே தூக்கி அடிக்கும்படியாக இருந்தது. ஒருவன் சிங்கத்தின் வாய்க்குள் தன் தலையை விட்டுக் காட்டினான். மக்கள் மேலும் மேலும் கைதட்டித் தங்கள் பாராட்டைத் தெரிவித்துக்கொண்டிருந்தார்கள்.
இது முடிந்ததும் கடக்கிட்டி முடக்கிட்டி திடீரென்று வட்டத்திற்குள் புகுந்தது. அந்த மிருகங்களுக்குத் தெரியாத ஒரு வித்தையைத் தான் செய்து காட்டவேண்டும் என்று அது துடித்துக்கொண்டிருந்தது. கடக்கிட்டி முடக்கிட்டி நடக்கும்போதே பின் கால்கள் ஒன்றோடொன்று இடித்துக்கொண்டே, 'கடக்கிட்டி முடக்கிட்டி, கடக்கிட்டி முடக்கிட்டி' என்று சத்தம் உண்டாகுமல்லவா? அது ஓடும் போது அந்தச் சத்தம் இன்னும் நன்றாகக் கேட்கும். அதையே தனது புதிய வித்தைக்கு அது பயன் படுத்திக்கொண்டது.
வட்டத்திற்குள் வந்ததும் அது சுற்றிச் சுற்றி ஓடத் தொடங்கியது. அதன் உடம்பில் இருந்த வர்ணப்பூச்சே ஒரு வேடிக்கையாக அமைந்து விட்டது. மேலும், கடக்கிட்டி முடக் கிட்டி என்று பின்னங்கால்களில் சத்தம் எழுவதும் யாரும் இதுவரை கண்டிராத புதிய வித்தையாகத் தோன்றிற்று. இது மிக நல்ல வித்தை என்று மக்கள் தங்கள் ஆசனங்களை விட்டு எழுந்து நின்று, கைதட்டித் தங்கள் பாராட்டை வெளிப்படுத்தினார்கள்.சர்க்கஸ் கோமாளி அதன் கழுத்தில் ஒரு முறுக்கு மாலையைப் போட்டு, அதைத் தட்டிக் கொடுத்தான். ஒரே கைதட்டல்; சிரிப்பு.
சர்க்கஸ் மிருகங்கள் எல்லாம் அதைப் பார்த்துப் பொறாமை கொண்டன. தாமும் அப்படிச் செய்து காட்ட வேண்டும் என்று வட்டத்திற்குள் நுழைந்தன.
யானை தன் பின் கால்களை ஒன்றோடொன்று இடிக்கும்படி செய்து பார்த்து முடியாமல் தட்டுத்தடுமாறித் 'தொப்'பென்று தரையில் விழுந்தது. அதைக் கண்டு எல்லோரும் நகைத்தார்கள்.
குதிரை, நாய், குரங்கு - ஒவ்வொன்றும் அந்த வித்தையைச் செய்து பார்த்து மண்ணைக் கவ்வின.
இவற்றையெல்லாம் பார்த்து மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தார்கள். சர்க்கஸ் மிருகங்களுக்கெல்லாம் அவமானமாய்ப் போய் விட்டது. அந்தக் கழுதையைக் கேவலமாக நினைத்ததை எண்ணி அவை வெட்கமடைந்தன; தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டன.
கடக்கிட்டி முடக்கிட்டி கம்பீரமாகத் தலையை நிமிர்த்தி நடந்து, சத்திரத்திற்கே வந்துவிட்டது. யாரும் அதைத் தடை செய்யவில்லை. வழியில் அது தன் கழுத்தில் கோமாளி போட்ட மாலையிலிருந்து முறுக்குகளைத் தின்றுகொண்டே நடந்தது.கிழவன் தூங்கி எழுவதற்கும், அது வருவதற்கும் சரியாக இருந்தது.
பழைய சோற்றைத் தின்றுவிட்டுக் கிழவனோடு கடக்கிட்டி முடக்கிட்டி ஓய்யாரமாகக் குடிசையை நோக்கி நடக்கலாயிற்று. அதற்கு ஒரே ஆனந்தம். அதனால் அது அடிக்கடி கத்திற்று. அன்று ஏன் அதற்கு அவ்வளவு கொண்டாட்டம் என்று கிழவனுக்கு விளங்கவே இல்லை.