கடக்கிட்டி முடக்கிட்டி/கடக்கிட்டி முடக்கிட்டியும் பட்டணத்துக் குதிரையும்
பட்டணத்துக் குதிரையும்
அந்தக் குதிரையினால்தான் ஒருகுடும்பமே பத்து ஆண்டுகளுக்குமேல் பிழைத்து வந்தது. ஆனால், இப்போது அது கிழடாகிவிட்டது. இனிமேல் அதை வண்டியில் பூட்டி ஒட்ட முடியாது. அதனால் ஜட்காக்காரன் கொஞ்சங் கூட இரக்கமில்லாமல் அதைத் தன் வீட்டை விட்டு விரட்டி அடித்துவிட்டான்.
பாவம், அந்தக் கிழட்டுக்குதிரை கண்ணிர் விட்டுக்கொண்டே கடந்தது. சாலை ஓரங்களில் முளைத்திருந்த புல்லை மேய்ந்தவாறே மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்தது. அப்படியே அது பட்டணத்தை விட்டு அதன் அருகில் உள்ள காட்டிற்கு வந்து சேர்ந்தது. அங்குதான் அது கடக்கிட்டி முடக்கிட்டியை மாலை வேளையில் சந்தித்தது.
விறகு சுமந்து பட்டணத்திற்குச் சென்று அப்பொழுதுதான் கடக்கிட்டி முடக்கிட்டி திரும்பி வந்திருந்தது. வழக்கம்போல் கழுநீரைக் குடித்தவுடன் அது குடிசையை விட்டு வெளியே புல் மேய வந்தது. வந்த இடத்திலே அது அந்தக் கிழட்டுக்குதிரையைச் சந்தித்தது. தனக்கு ஒரு நல்ல பேச்சுத் துணை கிடைத்தது என்று அதற்கு அளவில்லாத மகிழ்ச்சி உண்டாயிற்று. அதனால் அது கிழட்டுக் குதிரையிடம் மிகுந்த அன்பாக நடந்து கொண்டது. குதிரையும், இப்படி விநோதமாகச் சாயம் பூசிய கழுதையைப் பார்த்ததே இல்லை. அதனால் அதற்கும் கடக்கிட்டி முடக்கிட்டியிடம் அன்பு பிறந்தது.
இரண்டும் உல்லாசமாகப் பேசிக்கொண்டே காட்டில் புகுந்து புல் மேயத் தொடங்கின. கடக்கிட்டி முடக்கிட்டிக்கு ஒரு நல்ல நண்பன் கிடைத்த மகிழ்ச்சியால், அது காட்டிற்குள் அதிக தூரம் போகக் கூடாது என்பதை அடியோடு மறந்து விட்டது.
குதிரையும் பல நாள் நல்ல பச்சைப் புல்லைக் காணாமல் வயிறு வாடிக் கிடந்தது. அதனால் அதுவும் உற்சாகமாகக் காட்டில் புகுந்து மேயலாயிற்று. பசும்புல்லை நிறையத் தின்றதால் அதன் உடம்பில் ஒரு புதிய தெம்பு கூட வந்துவிட்டது.
இப்படிக் கழுதையும் குதிரையும் காட்டில் புகுந்து இருட்டு நேரம் வருவதைக்கூட நினைக்காமல் பேசிக்கொண்டே மேய்ந்தன. அந்தச் சமயத்தில் ஒரு புலி அங்கு வந்தது. அது. முன்னால் கடக்கிட்டி முடக்கிட்டி விரட்டி அடித்த புலி அல்ல. இது வேறு ஒரு புலி. ஆனால், புலிகளுக்கெல்லாம் இயல்பாக இருக்கும் சந்தேகம் அந்தப் புலிக்கும் இருந்தது.
அந்தப் புலி, குதிரையையும் பார்த்ததில்லை; கழுதையையும் பார்த்ததில்லை. பச்சை சிவப்பு வர்ணம் கொண்ட ஒரு விலங்கை அது பார்த்ததே கிடையாது. கிழவன் அன்று காலையில்தான் புதிதாகச் சாயம் பூசி இருந்தான்.
அதனால் புலிக்குப் பெரிய சந்தேகம் வந்துவிட்டது. ‘இந்த விலங்குகள் தன்னை விடப் பலமுள்ளவைகளாக இருந்தால் என்ன செய்வது? பலமுள்ளவையாக இல்லாவிட்டால் இப்படிப் பயமின்றிக் காட்டில் பேசிக்கொண்டே இருக்குமா ? இவற்றின்மேல் பாய்ந்தால் தன் உயிருக்கே ஆபத்து வந்து விடுமோ?’ என்று இவ்வாறு மனத்தைக் குழப்பிக்கொண்டே பதுங்கிப் பதுங்கி வந்தது.
அந்தச் சமயத்தில் கடக்கிட்டி முடக்கிட்டி புலியைப் பார்த்து விட்டது. ‘புதிய நண்பன் கிடைத்த மகிழ்ச்சியால் காட்டிற்குள் அதிகத் தூரம் போகக்கூடாது என்பதை மறந்து விட்டேனே!’ என்று கொஞ்சம் கலக்கமடைந்தது. இருந்தாலும், அந்தப் புலியிடமிருந்து எப்படியாவது தப்ப வேண்டும் என்று ஒரு தந்திரம் செய்தது.
உடனே அது குதிரையின் காதில் மெதுவாகச் சொல்லிற்று: “இந்தப் புலியிடமிருந்து உயிர் தப்ப இதுதான் நல்ல வழி. நீ கீழே படுத்துக்கொள். நான் உன் முதுகிலே ஏறிக் கொள்கிறேன். உடனே நீ எழுந்து புலியை நோக்கி முன்னாலே பாய்ந்து செல். அதற்குப் பிறகு மற்றவற்றையெல்லாம் நான் கவனித்துக் கொள்கிறேன்” என்று குதிரையிடம் தன் தந்திரத்தை எடுத்துக் கூறிற்று.
குதிரைக்கு ஒரே பயம். அதன் கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தன. இருந்தாலும், கழுதையின் பேச்சைக் கேட்காமல் புலியிடமிருந்து உயிர் தப்பமுடியாது என்று எண்ணிக் கீழே படுத்தது. கடக்கிட்டி முடக்கிட்டி அதன் முதுகின் மேல் ஏறிக்கொண்டது.
உடனே குதிரை எழுந்து புலியை நோக்கி வேகமாக முன்னால் பாய்ந்தது. “ஆஹா! நல்ல வேட்டை கிடைத்தது. புலியைத் தின்று பல நாளாயிற்று. இந்தப் புலி இப்போது எனக்குக் கிடைத்தது" என்று கடக்கிட்டி முடக்கிட்டி உரத்த குரலில் கூறிற்று. குதிரையோ முன்னால் பாய்ந்து பாய்ந்து வந்தது. அதனால் புலி பயந்து விட்டது.கழுதையின் பெரிய சத்தத்தையும் கேட்கவே புலி, ‘தப்பினோம், பிழைத்தோம்’ என்று ஓடியே போயிற்று.
இந்தப் புலிக்கு ஒரு குள்ள நரி மந்திரியாக இருந்தது. அது குதிரையையும் கழுதையையும் பல தடவை பார்த்திருக்கிறது. அதனால் அது பயந்தோடி வந்த புலியைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தது. சிரித்துவிட்டு அது, “ஒரு கிழட்டுக் குதிரைக்கும், கழுதைக்கும் பயப்படுகின்ற புலியை நான் பார்த்ததே இல்லை. இப்படி ஒரு கோழையான புலிக்கு மந்திரியாக இருப்பது எனக்கே பெரிய அவமானம்” என்றது.
“எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. சுலபமாக அவற்றைக் கொல்ல முடியும் என்றால் என் மேலே பாய்வது போல அவை வேகமாக வருமா?” என்று கேட்டது புலி.
“புலியாரே, உங்களால் ஒரே அடியில் அவை இரண்டையும் அடித்துக் கொல்ல முடியும். சந்தேகமே வேண்டாம். உடனே புறப்படுங்கள்” என்று குள்ள நரி தைரியம் சொன்னது.
“நீ என்னை அந்த விலங்குகளிடம் சிக்க வைக்கப் பார்க்கிறாய். நான் போக மாட்டேன்” என்று புலி சந்தேகத்தோடு உருமிற்று.
“என்மேல் உங்களுக்குச் சந்தேகமா? வேண்டுமானால் என்னுடைய வாலையும் உங்களுடைய வாலையும் கெட்டியாக முடிந்துகொள்வோம். அப்பொழுது உங்களுக்கு ஆபத்து வந்தால் எனக்கும் வரும் அல்லவா? உங்களுக்கு வஞ்சனை செய்ய மாட்டேன். நான் வேண்டுமானாலும் முன்னாலே செல்லுகிறேன்” என்று குள்ளநரி உறுதி கூறிற்று. குள்ளநரிக்கு நல்ல பசி: அந்த இரண்டு விலங்குகளையும் விட்டு விட மனம் வரவில்லை.
“சரி, அப்படியே வாலை முடிந்துகொள்வோம். நீதான் முன்னால் செல்ல வேண்டும்” என்று புலி தயக்கத்தோடு பதில் அளித்தது.
குள்ளநரி சொன்னவாறே இரண்டும் தங்கள் வாலை நன்றாக முடிந்துகொண்டன. பிறகு குள்ளநரி முன்னால் நடந்தது.
கடக்கிட்டி முடக்கிட்டி இவற்றைக் கண்டதும் மறுபடியும் குதிரையின் மேல் ஒய்யாரமாக ஏறிக்கொண்டு உரத்த குரலில் பேசத் தொடங்கிற்று:
“நரி மாமா, அந்தப் புலியை உன் வாலில் கட்டி இழுத்துக் கொண்டு வர இவ்வளவு நேரமா? எனக்குப் பசி தாங்க முடியவில்லை. இழுத்து வா அந்தப் புலியை” என்று அது அதட்டும் குரலில் கூறிற்று. குதிரையும் முன்னால் பாய்ந்தது.
குள்ளநரி தன்னை வஞ்சகமாக ஏமாற்றி விட்டதாக நினைத்துப்புலி, உடனே காட்டுக்குள் ஓடத் தொடங்கிற்று. பாவம், குள்ளநரியின் வால் கெட்டியாகப் புலியின் வாலோடு முடியப்பட்டிருந்ததால் அது தரையிலும் மரங்களிலும் பாறைகளிலும் அடிபட்டுக் கொண்டே சென்றது. குள்ளநரி எவ்வளவு சொன்னாலும் புலி கேட்பதாக இல்லை. அது தாவித்தாவிச் சென்றது. புலி அந்தக் காட்டை விட்டு வெகு தூரம் ஓடிய பிறகுதான் சற்று இளைப்பாற நின்று பார்த்தது. இதற்குள் தலையிலும் உடம்பிலும் அடிபட்டுக் குள்ளநரி இறந்து போயிற்று.
கிழட்டுக் குதிரையும் கடக்கிட்டி முடக்கிட்டியும் தந்திரத்தால் உயிர் தப்பின. என்றாலும், குதிரைக்குக் காட்டுப்பக்கத்தில் வாழவே பிடிக்கவில்லை.
“எங்கள் பட்டணமே நல்லது. அங்கு புலியெல்லாம் கிடையாது. அங்கே வசிப்பதைப் போல வேறு எங்கும் சுகமாக வசிக்க முடியாது. நான் அங்கேயே போகிறேன்” என்று சொல்லிவிட்டு வந்த வழியிலேயே நடக்கத் தொடங்கிற்று. கடக்கிட்டி முடக்கிட்டி எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அது கேட்க வில்லை. “காட்டில் மின்சார விளக்கே இல்லை. எல்லாம் ஒரே இருட்டு, கார் சத்தத்தைக்கூடக் கேட்க முடியவில்லை. இங்கு என்னால் ஒரு நொடியும் வாழ முடியாது” என்று சொல்லி விட்டுக் குதிரை புறப்பட்டுவிட்டது.