கடல்வீரன் கொலம்பஸ்/ஆவல் பிறந்தது
ஆவல் பிறந்தது
ஆசியா மைனர் நாட்டில் ஓர் ஆற்றங்கரையில் ஒரு பெரியவர் வாழ்ந்து வந்தார். அந்த ஆற்றங்கரையில் அவர் வாழ்ந்த இடத்தின் பக்கத்தில் இருந்த துறை மிகவும் ஆழமானது. எளிதாகக் கடக்க இயலாத ஆபத்தான இடம் அது. அந்தப் பெரியவர் நல்ல உயரமும் வலுவும் பொருந்திய உடலைப் பெற்றிருந்தார். பிறருக்குழைப்பதே பேரின்பம் என்ற எண்ணமுடையவர் அவர். எனவே, அந்தத் துறை வழியாக ஆற்றைக் கடக்க முயலுவோருக்கு எப்போதும் அவர் உதவியாக இருந்தார். வலுவான உடலும் நலமான எண்ணமும் படைத்த அந்தப் பெரியவருக்கு, வாழ்விலே ஒரு குறிக்கோள் இருந்தது. இறைவனைக் கண்ணாரக் காண வேண்டும் என்பதுதான் அந்த இலட்சியம். அந்த இலட்சியம் நிறைவேறுவதற்கு வழி என்ன என்பது அவருக்குப் புரியவேயில்லை. அதற்காக என்ன செய்ய வேண்டும் என்றும் அவருக்குத் தெரியவே யில்லை.
ஒரு நாள் அவர் தம் அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு குழந்தையின் குரல் அவர் பெயரைக் கூவியழைத்தது. “கிரிஸ்டாபர்! கிரிஸ்டாபர்!” என்று அந்தக் குழந்தை யழைத்த குரல் அவர் தூக்கத்தைக் கலைத்தது. “கிரிஸ்டாபர், என்னை அக்கரையில் கொண்டு போய் விடு” என்று அந்தக் குழந்தை கூவியது. உடனே பெரியவர் தம் கைத்தடியுடன் வெளியில் வந்தார். அந்தக் குழந்தையைத் தன் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு ஆற்றைக் கடக்கலானர். அவர் ஆற்றைக் கடந்து நடக்க நடக்கத் தோளில் இருந்த குழந்தையின் எடை அதிகரித்துக் கொண்டேயிருந்தது. பளுவைத் தாங்க முடியாமல் அவர் கால் இடறியது. தட்டுத் தடுமாறிக்கொண்டு, எப்படியோ பத்திரமாக அவர் அந்தக் குழந்தையை அக் கரைக்குக் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டார். அந்தக் குழந்தையைக் கீழே இறக்கிவிட்டு, “அப்பா, சிறுவனே! என்னைப் பெரிய ஆபத்தில் சிக்க வைக்க இருந்தாய்! உன்னைத் தூக்கியதற்கு இந்த உலகத்தையே தூக்கிச் சுமந்திருக்கலாம் போலிருக்கிறது எவ்வளவு பளு” என்று கூறினார் பெரியவர்.
“இதில் என்ன ஆச்சரியம் இந்த உலகம் முழுவதையும் இதைப் படைத்தவனையும் சேர்த்துத் தானே நீ சுமந்தாய்! பிறருக்கு நன்மை செய்வதன் மூலம் நீ எனக்குத் தொண்டு புரிந்தாய்! உன் கைத்தடியை அந்தக் குடிலின் வாயிலில் ஊன்றி வை. அது நாளைக்கே பூத்துக் காய்ப்பதைக் காணலாம். போற்றித் தொழும் அருட் காவலனும் இறைவனும் நானே என்பதற்கு அதுவே தக்க சான்றாய் அமையும்” என்று கூறி அந்தக் குழந்தை மறைந்து விட்டது.
கிரிஸ்டாபர், குழந்தை வடிவில் வந்த இறைவனின் கட்டளையை நிறைவேற்றினர்; மறுநாட்காலை உண்மையிலேயே அவருடைய கைத்தடி ஓர் அழகான பேரீச்சை மரமாக மாறிவிட்டது என்பது பழங்கதை.
அன்று முதல், கடல் வழியாகவோ, நில வழியாகவோ, வான் வழியாகவோ பயணம் மேற்கொள்வோர் கிரிஸ் டாபரை வழித்துணே முனிவராகக் கொண்டு வழிபட்டபின், புறப்படுவது வழக்கமாகி விட்டது.
இறைவனகிய கிறிஸ்துவை அக்கரைக்குக் கொண்டு சென்ற கிறிஸ்டாபர் முனிவரைப் போலவே, கிறிஸ்துவ மதத்தைக் கடல் கடந்த காடுகளில் பரவச் செய்ததன் மூலம் கிறிஸ்துவை அக்கரை கொண்டு சேர்த்த கொலம் பசுக்கு, அவனுடைய பெற்றோர்கள் கிரிஸ்டாபர் என்றே பெயர் வைத்தார்கள்.
கொலம்போ அல்லது கொலம்பஸ் என்பது அவனுடைய குடும்பப் பெயர். கிறிஸ்டாபர் என்பதுதான் பெற்றோர்கள் அவனுக்கு இட்ட பெயர். அவர்கள் என்ன காரணத்தினல் அந்த முனிவரின் பெயரை அவனுக்கு இட்டார்களோ தெரியவில்லை. அவனே, தன் பெயருக்கேற்ப, கிறிஸ்துவை அறியாத மக்களிடையே அவரைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்காகவே தான் பிறந்திருப்பதாக நினைத்துக்கொண்டான் என்பதுமட்டும் உறுதி!
கிரிஸ்டாபர் கொலம்பஸ் 1451 ஆம் ஆண்டில் ஜினேவா நகரில் பிறந்தான். அவனுடைய தந்தை டொமினிக்கோ கொலம்போ ஒரு நெசவாளி, கம்பளி நெசவு செய்பவர். அவனுடைய தாய் சூசானாவும் நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவள்தான். கிரிஸ்டாபர் கூடப் பிறந்தவர்களில் இளமையிலேயே இறந்தவர்கள் போக மீதியிருந்தவர்கள் மூவர். ஒருத்தி தங்கை. அவள் ஒரு பாலடைக்கட்டி விற்பவனைத் திருமணம் செய்துகொண்டு போய்விட்டாள். மிகுந்த இருவரும் தம்பிகள். ஒருவன் பெயர் பார்த்தலோமியோ மற்றொருவன் பெயர் ஜியா கோமா. இவனே ஸ்பானியர்கள் டீகோ என்று அழைத்தார்கள்.
ஜினோவாக்காரர்களுக்குப் பொதுவாகவே குடும்பப் பற்று அதிகம். இதற்குக் கிரீஸ்டாபர் கொலம்பஸ் விதி விலக்கல்ல. அவன் தன் தம்பிமார்களை நம்பிய அளவு, அயலார்களை நம்பவில்லை. தன் கூடப் பிறந்தவர்களிடம் மட்டுமல்லாமல் தன் சிற்றப்பன் மகனிடமும் அவன் நல்ல நம்பிக்கை வைத்திருந்தான்.
கிறிஸ்டாபர் பள்ளிக்குச் சென்ற நாட்கள் மிகக் குறைவு. அவன் ஜினோவா மொழிமட்டும் பேசத் தெரிந்து வைத்திருந்தான். நெடுநாட்கள் வரை எழுதப் படிக்கத் தெரியாமலே யிருந்தான். தற்செயலாக அவன் போர்ச்சுககலுக்குப் போய்ச் சேர்ந்த பிறகு தான் எழுதப் படிக்கத் தெரிந்து கொண்டான்.
ஜினோவா நகரிலே மீன் பிடிக்கும் தொழில் மிகப் பரந்தது. வேறு எந்த வேலையும் செய்யாதவர்கள் செய்யக் கூடிய மிக எளிமையான தொழில் மீன் பிடிப்பது தான். மீன் பிடிப்பதற்காகப் பெரிய தோணிகளும் பாய்மரக் கப்பல்களும் இருந்தன; துறைமுகங்களில் அவ்வப்போது இப்படிப்பட்ட கப்பல்களைக் கட்டிக்கொள்வதும் உண்டு.
கிரீஸ்டாபர் கொலம்பசுக்குத் தன் தந்தையின் நெசவுக் கூடம் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஆகவே, தன் பத்தாவது வயதிலேயே மீன் பிடிக்கும் கப்பல்களில் வேலைக்குச் சேர்ந்துகொண்டான். மீன் பிடிக்கச் செல்லும் கப்பல்களிலும், அயல் நாடுகளுக்குக் கருவாடு ஏற்றிச் செல்லும் கப்பல்களிலும், மத்திய தரைக் கடலில் அவன் பலமுறை நெடுந்தொலை பயணங்கள் சென்றிருக்கிறான். கப்பலில் செல்லாத நாட்களில் அவன் தன் தந்தைக்கு, உதவியாக இருந்திருக்கிறான்.
கிரிஸ்டாபர் தன் பத்தொன்பதாம் வயதில் அஞ்சோ அரசர் இரண்டாம் ரேனி ஓட்டிச் சென்ற சண்டைக் கப்பலில் வேலைக்குச் சேர்ந்துகொண்டான். ஒருமுறை ஜினோவா வணிகர்களுடன் அவர்களுடைய கப்பலில் சீயோஸ் தீவுக்கு ஒரு பயணம் சென்று வந்திருக்கிறான்.
1476-ஆம் ஆண்டு மேமாதம் ஜினோவாவிலிருந்து வட ஐரோப்பாவிற்கு விலையுயர்ந்த சரக்குகளை ஏற்றிக் கொண்டு ஒரு கப்பற் படை புறப்பட்டது. இந்தப் போர்க் கப்பல்களில் ஒன்றின் பெயர் பெச்செல்லா. இந்தக் கப்டலில் ஒரு மாலுமியாக வேலை பார்த்துக்கொண்டிருந்தான் கிரிஸ்டாபர். ஆகஸ்டு மாதம் 13-ம் நாளன்று ஜிப்ரால்டர் நீர்க் கணவாயைக் கடந்து போர்ச்சுக்கலின் தென் கரை சென்றுகொண்டிருக்கும்போது, பிரஞ்சுக் கப்பற் படையொன்று எதிர்ப்பட்டுத் தாக்கியது. பகல் முழுவதும் ஓயாத சண்டை! இரவில் போர்த் தாக்குதலின் விளைவாக மூன்று ஜினோவாக் கப்பல்களும் நான்கு பிரெஞ்சுக் கப்பல்களும் உடைந்து கடலில் மூழ்கிப் போயின. இந்த அவகதிக்கு ஆளான கப்பல்களிலே பெச்சல்லாவும் ஒன்று. கிரிஸ்டாபர் அடிபட்டுக் காயமுற்றுக் கடலில் விழுந்து விட்டாலும் மிதந்துகொண்டிருந்த ஒரு பெரிய துடுப்புக் கட்டையைப் பிடித்துக்கொண்டான். அதன்மேல் சாய்ந்து கொண்டும், மாறி மாறி உதைத்துக் கொண்டும் ஆறுமைல் தூரம்வரை சென்று கரையில் ஒதுங்கினான். அவன் கரை ஒதுங்கிய இடத்தின் பெயர் லாகோஸ் என்பதாகும். அந்த ஊர் மக்கள் அவனிடம் அன்பு பாராட்டினார்கள். அவன் உடல் நலமடையும்வரை வைத்திருந்து, பின் அவன் தம்பி பார்த்தலோமியோ, லிஸ்பன் நகரில் இருக்கும் செய்தி யறிந்து அங்கு அனுப்பிவைத்தார்கள்.
ஜரோப்பாவிலேயே அந்தக் காலத்தில் போர்ச்சுக்கல் மிக முன்னேற்ற மடைந்திருந்தது. எழுச்சியும் உணர்ச்சியும் நிறைந்த போர்ச்சுகல் நாட்டின் தலைநகரான லிஸ்பன் எழிலும் தொழிலும் நிறைந்த பட்டினமாக விளங்கியது. ஆராய்ச்சிகளுக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் மூல மையமாக விளங்கிய லிஸ்பன் நகரம் வரலாற்றுப் பெருமைமிக்கது. அரை நூற்றாண்டுக்கு முன்னர் கடல் வீரன் ஹென்றி என்று அழைக்கப்படும் போர்ச்சுகல் இளவரசன் வின்சன்ட் முனையில் அமைத்திருந்த கடல்வழி ஆய்வுக் கழகம் மத்திய தரைக் கடல் மாலுமிகளின் கவனத்தை ஈர்த்தது, அட்லாண்டிக் கடலிலும், ஆப்பிரிக்காவின் மேலைக் கரையிலும் பயணங்கள் செய்து வருவதற்கு இளவரசர் ஹென்றி ஆக்கமும் ஊக்கமும் அளித்து வந்தார். அவருடைய கப்பல் தலைவர்கள் அமெரிக்கா செல்லும் வழியில் உள்ள அசோர்ஸ் தீவுகள் என்ற ஏழு தீவுகளைக் கண்டு பிடித்தார்கள். அவ்வப்போது புதுப்புது இடங்களைக் கண்டுபிடித்த அக் கப்பல் தலைவர்கள் கொலம்பஸ் லிஸ்பன் வந்து சேர்ந்த சமயம் கினியா வளைகுடாவைக் கடந்து விட்டார்கள். ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சிவப்புத் துணியையும், கண்ணுடிக் கற்களையும் குதிரைகளையும் ஏற்றிச் சென்ற கப்பல்களெல்லாம் திரும்பி வரும்போது, தந்தமும் தங்கப் பொடியும் மிளகும் அடிமைகளும் கொண்டுவந்து சேர்த்தன. ஜினோவாக் காரர்களின் வாணிகத்தை யெல்லாம், வேனிஸ்காரர்களும் துருக்கிக்காரர்களும் கைப்பற்றிக் கொண்ட சமயம், லிஸ்பன் நகரம் வாணிபத்துறையிலே மேலோங்கி வளர்ந்து கொண்டு வந்தது. ஆப்பிரிக்காக் கண்டத்தைச் சுற்றி இந்தியாவுக்குக் கடல் வழியைக் கண்டு பிடிப்பதற்குப் போர்ச்சுக்கீசிய அரசாங்கம் ஊக்கமளித்துக் கொண்டிருந்தது.
இப்படிப்பட்ட முன்னேற்றமான சூழ்நிலையில் இருந்த லிஸ்பன் மாநகருக்குக் கொலம்பஸ் வந்து சேர்ந்தது அவனுடைய பேறு என்றுதான் சொல்லவேண்டும். பல்வகையிலும் முற்போக்கடைந்திருந்த லிஸ்பன் நகருக்கு வந்த கொலம்பஸ் கல்வியில் ஆர்வம் கொண்டான். இலத்தீனும், புதியமொழிகளும் கற்றுக்கொண்டான். உலக அறிவை வளர்க்கும் உயர்தரமான புத்தகங்களையெல்லாம் வாங்கிப் படித்தான்.
தம்பி பார்த்தலோமியோ, நிலப்படம், தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேலைக்கமர்ந்திருந்தான். தன்னை நாடி வந்த அண்ணன் கிரிஸ்டாபரையும் அதே நிறுவனத்தில் வேலைக்குச் சேர்த்துவிட்டான். கொலம்பஸ் அங்கு போய்ச் சேர்ந்த சில நாட்களில் அண்ணனும் தம்பியும் சேர்ந்து சொந்தமாகவே நிலப்படம் தயாரிக்கும் தொழிலை மேற் கொண்டுவிட்டார்கள்.
நிலப்படம் தயாரிப்பதற்கு வேண்டிய சரியான கருவிகள் அந்தக் காலத்தில் கிடையாது. ஆகவே அவை முழுவதும் சரியாக அமைந்திருப்பதும் இல்லை. பெரும் பாலும் கப்பல் தலைவர்கள் கூறுகின்ற தகவல்களைக் கொண்டே அவை தயாரிக்கப்படும். கடல் வழியாக உலகின் வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்றுவந்த கப்பல் தலைவர்கள் கூறுகின்ற செய்திகளை ஆதாரமாகக் கொண்டு, நிலப்படங்கள் வரையப்படும். இந்தச் செய்திகளைச் சேர்ப்பதற்காக அவர்கள் கப்பல் தலைவர்களுடன் நெருங்கிப் பழகுவார்கள். கப்பல் தலைவர்களுக்கு விருந்து வைத்துப் பேச்சுக் கொடுத்துச் செய்திகளை யறிந்து கொள்ளுவார்கள். அந்தச் செய்திகளை யடிப்படையாகக் கொண்டு நிலப்படங்களைத் தயாரிப்பார்கள். இவற்றைப் புதிதாகப் பயணம் மேற்கொள்ளும் மாலுமிகளும், புதிய புதிய வழிகளில் தங்கள் கப்பல்களைச் செலுத்த முற்படும் கப்பல் தலைவர்களும் விலைகொடுத்து வாங்குவார்கள் கொலம்பஸ் சகோதரர்களின் பிழைப்பு இவ்வாறு நடந்து வந்தது.
லிஸ்பனுக்கு வந்த அதே ஆண்டில் கிரிஸ்டாபர் கொலம்பஸ் ஒரு போர்ச்சுக்கீசியக் கப்பலில் வேலைக்குச் சேர்ந்தான். அந்தக் கப்பல், கம்பளியும், கருவாடும் திராட்சை மதுவும் ஏற்றிக்கொண்டு, ஐசுலாந்து, அயர்லாந்து அசோர்சுத் தீவுகள் ஆகியவற்றிற்குச் சென்று திரும்பவும் ஆங்காங்கிருந்து சரக்குகள் ஏற்றிக் கொண்டு லிஸ்பனுக்குத் திரும்பும். அந்தப் பயணத்தின் போது, சால்வே என்ற துறைமுகத்தில் அந்தப் போர்ச்சுக்கீசியக் கப்பல் ஒதுங்கியவுடன், தானக மிதந்து சென்ற ஒரு தோணியில் இரண்டு பிணங்களைக் கண்டது, நெடுநாளைக்குப் பிறகும் கொலம்பசுக்கு நினைவிருந்தது. அந்தப் பிணங்களின் அசாதாரணமான தோற்றத்தைக் கண்ட ஐரிஷ்காரர்கள், அவை சீனக்காரரின் பிணங்கள் என்று கூறினார்கள். அந்தக் கப்பலின் தலைவன், 1477-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர்ச்சுக்கலுக்குத் திரும்புவதற்கு முன்னால், ஐசுலாந்தின் வடபகுதி நோக்கி நூறு காவதம் தாரம் வரை சென்று திரும்பினார். பெரும்பாலும் அந்தக் கப்பல் ஆர்ட்டிக் வட்டத்தைத் தொட்டுவிட்டு வந்த தென்றே சொல்லலாம்.
இவ்வாறு பலவித அனுபவங்களும் பெற்ற கொலம்பஸ் தானே ஒரு கப்பல் தலைவனாகும் தகுதியை யடைந்தது வியப்பிற்குரியதல்ல.
1478-ம் ஆண்டில் ஜினோவா வாணிப நிறுவனத்தார், மடெய்ராவில் போய் சீனி வாங்கிக்கொண்டு ஜினேவாவுக்கு வரும்படி அவனிடம் ஒரு கப்பலை ஒப்படைத்தார்கள். அவர்கள் அதற்குரிய பணம் அவனிடம் கொடுத் தனுப்பவில்லை. மடெய்ராவில் சீனி விற்பவர்கள் கடனுக்குக் கொடுக்க மறுத்துவிட்டார்கள். ஆகவே கொலம்பஸ் வெறுங் கப்பலைத் திருப்பிக்கொண்டு வர நேரிட்டது. அதனால் அவர்கள் அவன்மீது வழக்குத் தொடுத்தார்கள். அந்த வழக்கின் காரணமாக 1479-ம் ஆண்டில் கிரிஸ்டாபர் கொலம்பஸ் பேரிழப்படைய நேரிட்டது. அவன் ஜினோவாவுக்குப் போனதும் அதுவே கடைசித் தடவையாகும்.
ஜினோவாவிலிருந்து லிஸ்பன் திரும்பிய கொலம்பஸ் போர்ச்சுகவில் ஓர் உயர்தரக் குடும்பத்தினர் வழிவந்த டோனா பெலிப்பா என்ற மங்கையைத் திருமணம் புரிந்து கொண்டான். டோனா பெலிப்பாவின் தந்தை பெரிஸ் டிரில்லோ. போர்ட்டோ சாண்டோத் தீவின் தலைவன். அவளுடைய தாத்தா ஜில்மோனிஸ், ஹென்றி இளவரசரின் வீரத் தோழர். அவளுடைய சகோதரன், போர்ட்டோ சாண்டோத் தீவின் ஆட்சித் தலைவனாக இருந்தான்.
மணம் நடந்த சிறிது காலம் வரை கொலம்பஸ் தம்பதிகள் பெலிப்பாவின் தாயுடன் லிஸ்பனிலேயே தங்கியிருக்தார்கள். பெலிப்பாவின் தாய், தன் கணவருடைய கப்பல் குறிப்புப் புத்தகங்களையும், கடல் வழிகாட்டும் நிலப்படங்களையும் கட்டுக்கட்டி அவருடைய நினைவுப்பொருளாக வைத்திருந்தாள். தன் மாப்பிள்ளைக்காக அவள் அவற்றை அவிழ்த்து எடுத்துக் கொடுத்தது பெரிதும் போற்றக் கூடிய செயலாகும். சில நாட்களுக்குப் பிறகு, கிரிஸ்டாபர் தம்பதிகள் போர்ட்டோ சாண்டோவில் நிலையாகக் குடியிருக்கலானார்கள். போர்ட்டோ சாண்டோவில் தான் கொலம்பஸின் மகன் டோன் டீகோ கோலன் பிறந்தான். 1482-ல் கொலம்பஸ் தன் குடும்பத்தோடு பஞ்சல் தீவில் குடியேறினான். அங்கிருந்து கோல்டு கோஸ்டுக்கு இரு முறை கப்பல் பயணம் சென்றான். அதில் ஒருமுறை அவனே தலைவனாக இருந்து கப்பலைச் செலுத்திக்கொண்டு போனான் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது முப்பத்தொன்று முப்பத்திரண்டாவது வயதில் கொலம்பஸ் முற்றிலும் தகுதி பொருந்திய ஒரு கப்பல் தலைவனாக விளங்கினான். போர்ச்சுகீசிய வாணிபக் கப்பல்களில் பலமுறை கடற் பயணம் சென்று வந்த அனுபவம் அவனுக்குப் படிந்திருந்தது. வடக்கே ஆர்ட்டிக் வட்டத்திலிருந்து தெற்கே பூமத்தியரேகை வரைக்கும் கிழக்கே சஜியன் தீவிலிருந்து மேற்கே அசோர்சுத் தீவுகள் வரையிலும் உள்ள கடற்பகுதி முழுவதும் அவனுக்ருத் தெரிந்த இடங்களே ! கப்பல் தொழிலின் ஒவ்வொரு நுணுக்கமும் அவனுக்குச் கைவந்த சரக்கு துருவ நட்சத்திரத்தை வைத் துக் கொண்டு நிலப்படங்களையும் பூரேகைகளையும் வரையும் சிறந்த பயிற்சி அவனுக்கு இருந்தது. பூகோளமும் வானியலும் பற்றி அக்காலத்தில் வெளிவந்த சிறந்த நூல்கள் அனைத்தையும் அவன் படித்திருந்தான். எல்லாவற்றுக்கும் மேலாக அவன் தன் திருமணத்தின் மூலம் போர்ச்சுக்கல் நாட்டின் உயர் குடும்பங்கள் இரண்டுக்கு உறவினனாக இருந்தான். இத்தனை தகுதிகளையும் வைத்துக் கொண்டு அவன் சில ஆண்டுகளில் பெரிய பணக்காரனாக ஆகியிருக்க முடியும். ஆப்பிரிக்காவின் கரையில் உள்ள சில புதிய பகுதிகளைக் கண்டுபிடித்து அவன் பிரபுப்பட்டம் பெற்றிருக்க முடியும். ஆப்பிரிக்க வியாபாரத்தின் மூலம் அவன் பெருஞ்செல்வம் சேர்த்திருக்க முடியும்.
ஆனால், அவனுடைய ஆசைக்கனவுகள் இந்தச் செயல்களுக்கெல்லாம் மேம்பட்டதாக இருந்தது. பொன்னும் மணியும் கொழிக்கும் கீழ்த்திசை நாடுகளுக்குப் புதியதோர் கடற்பாதை கண்டுபிடிக்கவேண்டும்; மேற்குத் திசையிலே கலஞ் செலுத்திக்கொண்டு சென்று கீழ்த் திசையை யடைய வேண்டும்; இதுவரை எந்தக் கப்பல் தலைவனும் காணாத உயர்புகழையும், எந்த மனிதனும் அடையாத பெருஞ் செல்வத்தையும் அடைய வேண்டும்.
இந்தியா, சீனா, ஜப்பான் முதலிய செல்வங்கொழிக்கும் கீழை நாடுகளை அடைய எளிய கடல் வழி ஒன்றைக் கண்டு பிடிக்கவேண்டும் என்ற அடங்காத ஆவல் கொலம்பசின் உள்ளத்திலே கொழுந்துவிட்டெரிந்தது. இந்த எண்ணம் அவனுக்கு எப்போது ஏற்பட்டதோ தெரியவில்லை. ஆனால் இதுவே அவன் வாழ்வின் இலட்சியமாக இருந்தது என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது.