கடல்வீரன் கொலம்பஸ்/ஒளி தோன்றியது
ஒளி தோன்றியது
மேற்கு நோக்கிப் புறப்பட்டுக் கடல் வழியாகக் கிழக்கை யடைய வேண்டும் என்ற எண்ணம் கொலம்பசுக்குத் திடுதிப்பென்று ஏற்பட்டு விடவில்லை. இந்த ஆவல் கொலம்பசுக்குத்தான் முதன் முதலில் ஏற்பட்டது என்று சொல்வதற்குமில்லை.
உலகம் உருண்டை என்ற உண்மை அப்போது மேல் நாடெங்கும் ஒப்புக் கொள்ளப்பட்ட தத்துவம் ஆகி விட்டது. ஆகவேதான் பல பூகோள வல்லுநர்கள், கிழக்கேயிருக்கும் ஜப்பானுக்கு, மேற்கே புறப்பட்டுப் போய்ச் சேரலாம் என்று எண்ணலானார்கள். ஆனால், கடல் வழியாக எவ்வளவு தூரம் பயணம் செய்வது? எவ்வளவு தூரத்தில் ஜப்பான் இருக்கிறது? என்பதெல்லாம் தெரியாத நிலையில் யாரும் துணிந்து புறப்படுவதற்கில்லை.
அக்காலத்தில் உலகெங்கிலும் புகழ் பெற்ற பல பூகோள வல்லுநர்களின் நூல்கள் கிடைத்தன. அந்த நூல்களெல்லாம், இப்போதைப் போல திட்டவட்டமான கருத்துக்களைத் தெரிவிக்கவில்லை. அப்போதிருந்த வசதி வாய்ப்பு ஆகியவற்றிற்குத் தகுந்தாற்போல் கண்டுபிடிக்கப் பட்ட செய்திகளை வைத்துக்கொண்டு, இப்படி யிருக்கலாம் அப்படி யிருக்கலாம் என்ற அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டே கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
கொலம்பஸ் அக்காலத்தில் கிடைத்த பூகோள நூல்கள் அனைத்தையும் வாங்கிப் படித்திருந்தான். தான் படித்த நூல்களைக் கொண்டு – அவை கூறும் கருத்துக்களைக் கொண்டு அவன் ஒரு தீர்மானத்துக்கு வந்தான். வட்ட வடிவமான இந்த உலகத்தில் நிலப்பகுதியைச் சுற்றிலும் கடற்பகுதி சூழ்ந்திருக்கிறது; கடலின் இடையிலே இந்த நிலப்பகுதி ஒரு பெரிய தீவுபோல அமைந்திருக்கிறது; இதில் நிலப்பகுதி ஏழு பாகமும் கடற்பகுதி ஒரு பாகமுமாக அமைந்துள்ளன என்று அவன் நம்பினான். எனவே கடல் வழியாக மேற்கு நோக்கிப் புறப்பட்டால் மிக எளிதாகக் கீழை நாடுகளையடைந்து விடலாம் என்று அவன் திண்ணமாக நம்பினான். உண்மையில் உலகின் மொத்தப் பரப்பில் ஏறக்குறைய முக்கால் பங்கு கடல் சூழ்ந்திருக்கிறது. இது கொலம்பசுக்கு அக்காலத்தில் தெரிந்திராதது அதிசயமில்லை.
கீழ்நாடுகளுக்குக் கடல் வழி கண்டுபிடிக்க வேண்டும் என்று மேல் நாட்டார் விரும்பக் காரணம் என்ன? எல்லாம் ஆசைதான்; பேராசைதான்!
கீழ் நாட்டுப் பொருள்களுக்கு மேல் நாடுகளிலே அதிக மதிப்பிருந்தது. தங்கமும் வெள்ளியும், முத்தும் இரத்தினமும், பட்டும் பருத்தியும், வாசனைப் பொருள்களும், மருந்து மூலிகைகளும் சிறுசிறு அளவில் மேல் நாடுகளுக்குப் போய்ச் சேர்ந்தன. இவை யாவும், ஒட்டகங்களின் மேல் ஏற்றிச் செல்லப்பட்டு கான்ஸ்டாண்டி நோபிள் போய்ச் சேரும், அங்கிருந்து மரக்கலங்களின் மூலமாக ஐரோப்பிய நாடுகளை யடையும். இவ்வாறு இந்தச் சரக்குகள் பல வணிகர்களின் கை மாறிப் பல மாதங்கள் கடந்து ஐரோப்பாவைப் போய்ச் சேரும். இதனால் அந்தப் பொருள்களின் விலை நூறு மடங்காக ஏறிவிடும். இவ்வாறு சுற்று வழியாக வந்து சேரும் சரக்குகளை நேரடியாக அவை விளையும் இடத்திலேயே போய் வாங்கினால் மிக மலிவாக வாங்கிவிடலாம் என்ற எண்ணமிருந்தது. தவிர, செல்வங்கொழிக்கும் இந்த நாடுகளில் சிலவற்றைத் தங்கள் ஆதிக்கத்திற்குட்படுத்திக் கொண்டால், வாணிபத்தை மேலும் இலாபத்தோடு செய்யலாம் என்ற எண்ணமும் மேல் நாட்டார் பலருக்கும் இருந்தது. போர்ச்சுக்கீசிய அரசர்கள் ஆப்பிரிக்காவைச் சுற்றி வந்து இந்தியாவை அடையும் வழியொன்றைக் கண்டுபிடிப்பதற்காகப் பலமுறை முயற்சி எடுத்துக்கொண்டார்கள். ஆனால் இந்த வழி சுற்றுவழி என்றும், நேராக மேற்கு நோக்கிச் சென்று குறுகிய வழியில் கீழ் நாடுகளை அடைவது தான் எளிய வழியென்றும் கொலம்பஸ் எண்ணினான். ஐரோப்பாவின் மேற்குக் கரையிலிருந்து புறப்பட்டால் ஜப்பானின் கிழக்குக் கரையிலே வந்து கப்பல் நிற்கும் என்றும், இடையிலே எவ்விதமான நிலப்பகுதியும் கிடையாதென்றும் தான் அக்காலத்தில் எல்லோரும் நம்பினார்கள். அமெரிக்காக் கண்டம் என்பதாக ஒன்று இருக்கும் செய்தி அக்காலத்தில் யாருக்குமே தெரியாது.
கொலம்பஸ் காலத்தில் பிளாரன்ஸ் நகரத்தில் ஒரு ஞானி யிருந்தார். அவர் பெயர் பாவோலோ டோஸ்கானெலி. அவர் மருத்துவத் துறையில் பெரிய வல்லுநர். அத்தோடு வான நூலும், கணித நூலும் அவருக்குத் தண்ணீர் பட்டபாடு. 1471-ம் ஆண்டில் அவர் தம் போர்ச்சுக்கீசிய நண்பர் ஒருவருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். போர்ச்சுக்கீசிய அரசரை மேற்கு நோக்கி ஜப்பானுக்குக் கப்பல் அனுப்ப ஊக்க வேண்டும் என்று அவர் அக்கடிதத்தில்
வற்புறுத்தியிருந்தார். கூடவே ஒரு கடல்வழி காட்டும் நிலப்படமும் அனுப்பியிருந்தார். இதைக் கேள்விப்பட்ட கொலம்பஸ் உடனே அந்தப் பிளாரென்ஸ் பட்டணத்து ஞானிக்கு ஒரு கடிதம் எழுதித் தனக்கு மேற்கொண்டு விபரங்கள் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டான். அவர் மகிழ்ச்சியோடு, அவனுடைய ஆவலை ஆதரித்து ஊக்கப் படுத்திக் கடிதம் எழுதியதோடு, அவனுக்கும் ஒரு கடல் வழி காட்டும் நிலப்படம் அனுப்பிவைத்தார். பிற்காலத்தில் இந்தியாவுக்குக் கடல்வழி கண்டுபிடிக்க அவன் பயணம் மேற்கொண்டபோது, அந்த நிலப்படத்தையும் கையோடு கொண்டு போயிருந்தான் என்பது குறிப்பிடத் தக்கது.
கொலம்பசுக்குத் தன் எண்ணத்தை வலியுறுத்தும் ஆதாரங்கள் எல்லாம் கிடைத்த பிறகு, அதைச் செயற் படுத்திப் பார்க்கவேண்டும் என்ற துடிப்பு ஏற்பட்டது. ஆனால், தனியொரு மனிதனாக நின்று செய்யக்கூடிய செயல் அல்ல இது. அரசாங்கத்தின் ஆதரவும், வழிச் செலவுக்குப் பணமும் நிறையத் தேவையாயிருந்தது. முன் பின் தெரியாத புதுவழியில், எத்தனை நாள் என்று சொல்ல முடியாத பயணத்தை மேற்கொள்வதென்றால் யாராவது ஓர் அரசரின் ஒத்தாசையில்லாமல் முடியாது.
1484-ஆம் ஆண்டில் போர்ச்சுக்கல் அரசர் இரண்டாவது ஜானிடம் அவன் தன் நோக்கத்தை வெளிப்படுத்தி உதவிபெற முயன்றான். புதிய கண்டுபிடிப்புக்களில் ஆர்வங்காட்டிய பழைய ஹென்றி இளவரசனின் மருமகன் ஜான். ஆகவே அவர் தன் முயற்சிக்கு ஆதரவளிப்பார் என்று கொலம்பஸ் எதிர்பார்த்தான்.
கொலம்பஸின் வேண்டுகோளை ஆராய்ந்து முடிவு கூறும்படி ஒரு குழுவை அமைத்தான் ஜான் அரசன் அந்தக் குழுவில் ஒரு முக்கியமான மதத் தலைவரும் இரண்டு யூத மருத்துவரும் இருந்தார்கள். அவர்கள் கப்பற் பயணங்களில் நல்ல அனுபவமும் திறமையும் பெற்றவர்கள். அவர்கள் கொலம்பசின் கூற்றை ஆராய்ந்து, அது நடை முறைக்கு ஒத்துவராதது என்று தள்ளிவிட்டார்கள்.
இந்த நிகழ்ச்சி பற்றிப் பலவிதமான கருத்துக்கள் கூறப்படுகின்றன. கொலம்பஸ் பெரிய தற்பெருமை மிகுந்தவனாகவும், அளவு கடந்த வாய்ப் பேச்சுக்காரனாகவும் இருந்ததாலும், சிப்பாங்கோ தீவு என்று அக்காலத்து அழைக்கப்பெற்ற ஜப்பானைப் பற்றி அவன் கூறிய செய்திகள் கற்பனையில் மிஞ்சிய வருணனைகளாக இருந்ததாலும், அரசர் அவனைச் சிறிதும் மதிக்கவேயில்லை என்று சிலர் கூறுகிறார்கள்.
கொலம்பஸ் தான் கண்டுபிடிக்கப் போகும் நாடுகளில் தனக்குப் பெரும் பங்கும், உரிமையையும், அதிகாரமும், பட்டமும் வேண்டும் என்று கேட்டான்; அவன் கேட்டது மிக அதிகமாக இருந்ததால் அரசர் ஜான் அவனுக்கு உதவியளிக்க மறுத்துவிட்டார் என்று சிலர் கருதுகிறார்கள். இந்தக் கருத்தே பெரும்பாலும் உண்மையாக இருக்கக் கூடும்.
ஏனெனில் அசோர்சுத் தீவுகளைப் போல் ஏதாவது ஒரு தீவுக் கூட்டத்தைக் கண்டுபிடிக்கக்கூடிய தன் கப்பல் தலைவனுக்கு ஒரு தீவை உரிமைப்படுத்திக் கொடுக்க அரசர் முன் வந்ததற்குச் சான்றுகள் இருக்கின்றன கொலம்பசுக்கு உதவி மறுத்த 1485-ஆம் ஆண்டிலேயே டூல்மோ, எஸ்டிரீட்டோ என்ற இரு போர்ச்சுகீசிய மாலுமிகளுக்கு அண்டிலாத் தீவைக் கண்டு பிடிக்க அனுமதியும் உதவியும் வழங்கியிருக்கிறார்.
எட்டாவது நூற்றாண்டில் மூர்ச் சண்டையில் தப்பிப் பிழைத்த அகதிகள் அண்டிலா என்ற தீவிலே போய்க் குடியேறி வாழ்ந்தார்கள் என்றும், அவர்கள் வமிச் வழியாக அங்கேயே வாழ்ந்து வருகிறார்கள் என்றும் ஒரு கர்ண பரம்பரைச் செய்தி நிலவி வந்தது. அந்த அண்டிலாத் தீவைக் கண்டு பிடித்தால் அந்த மாலுமிகள் அந்தத் தீவின் தலைமையைப் பரம்பரையாக அனுபவிக்கலாம் என்றும் அதற்குரிய சிறப்புக்களையும் பட்டங்களையும் அடையலாம் என்றும் அரசர் வாக்களித்திருந்தார். அந்த இரு மாலுமிகளும் மேற்கு நோக்கி நாற்பது நாட்கள் வரை பயணம் மேற்கொள்வதென்றும், அதற்கிடையிலே அந்தத் தீவைக் கண்டு பிடிக்காவிட்டால் திரும்பி விடுவதென்றும் ஏற்பாடாகியிருந்தது.
உண்மையில் அண்டிலா என்பதாக ஒரு தீவே கிடையாது. இல்லாத அந்தத் தீவைக் கண்டு பிடிக்க முயற்சி யெடுத்துக் கொண்ட அரசர், இருக்கின்ற கீழை நாடுகளுக்குப் புதுவழி கண்டு பிடிக்க முயன்ற கொலம்பசுக்கு ஆதரவளிக்காததற்குக் காரணம் அவனுடைய அதிகப்படியான ஆசை மிகுந்த வேண்டுகோள்களேயாகும் என்று நம்பலாம்.
போர்ச்சுகீசிய மன்னர் ஆதரவளிக்க மறுத்த அதே 1485-ம் ஆண்டில், அவன் மனைவி டோனாபெலிப்பாவும் லிஸ்பன் நகரில் இறந்துவிட்டாள். அத்தோடு போர்ச்சுக் கீசிய நாட்டில் அவனுக்கிருந்த உறவும் அறுபட்டது. தன் முயற்சியை மேற்கொள்வதற்கு அவனுக்கு எப்படியும் ஓர் அரசர் அல்லது அரசாங்கத்தின் உதவி தேவைப் பட்டது. இனிப் போர்ச்சுக்கீகிய மன்னரை நம்புதற்கிடமில்லை என்று ஏற்பட்ட பிறகு, அவன் ஸ்பெயினிலே போய் முயற்சி செய்து பார்க்கலாம் என்று எண்ணமிட்டான்.
ஸ்பெயின் நாட்டிலே, அவன் மனைவியின் சகோதரி ஒருத்தி ஒரு ஸ்பானியனைத் திருமணம் புரிந்து கொண்டு ஹசல்வா என்ற ஊரிலே யிருந்தாள். அவளைத் தவிர வேறுவாரையும் அங்கு அவனுக்குத் தெரியாது. இருந்தாலும் ஊக்கத்தைத் துணையாகக் கொண்டு தன் ஐந்து வயது மகன் உகோவை உடனழைத்துக் கொண்டு தன் கப்பலை ஸ்பெயின் நாடு நோக்கிச் செலுத்தினான் கொலம்பஸ்.
கப்பல் பாலோஸ் துறைமுகத்தை நெருங்கிக் கொண் டிருக்கும் போது, கரையோரத்தில் இருந்த பிரான்சிஸ்கன் மடாலயக் கட்டிடங்கள் கொலம்பசின் கண்களில் தென் பட்டன. உடனே அவன் தன் மகன் டீகோவை என்ன செய்வதென்று முடிவுகட்டி விட்டான்.
பிரான்சிஸ்கன் மடாலயத்தார், சிறுவர்களை மாணாக்கர்களாக ஏற்றுக் கொண்டு அவர்களுக்குக் கல்விகற்றுக் கொடுத்ததோடு உணவும் உடையும் உறையுளும் கூடத் தருமமாக வழங்கி வந்தார்கள். அந்த மடாலயத்தில் தன் மகனைச் சோத்து விடுவதென்ற முடிவுக்கு வந்த கொலம்பஸ். பாலோஸ் துறைமுகத்தில் தன் கப்பலுக்கு நங்கூரம் பாய்ச்சி விட்டுக் கரையில் இறங்கினான். தன்மகனை அழைத்துக் கொண்டு நான்கு மைல் தொலைவில் இருந்த அந்த மடாலயத்துக்கு நடந்தே சென்றான். மடாலயத்தை யடைந்ததும், கதவைத் தட்டினான். கதவைத் திறந்து கொண்டு வெளியில் வந்த வேலைக்காரனிடம் தனக்குத் தாகத்திற்குத் தண்ணீரும் பையனுக்குச் சிறிது ரொட்டியும் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டான். அப்பொழுது அவனுடைய அதிர்ஷ்டவசமாக அருள் நிறைந்த உள்ளமும் வான நூல் ஆராய்ச்சியில் நல்ல தேர்ச்சியும் பெற்றவரும், பிரான்சிஸ்கன் பெருந்துறவியருள் ஒருவருமான அண்டோனியோ டி மார்ச்சினா என்ற பெரியவர் வாசற் பக்கம் வந்தார். கொலம்பசுடன் பேசத் தொடங்கிய அவர் அன்புடன் உள்ளழைத்துச் சென்றார். அவன் வேண்டுகோளுக்கு இணங்கிச் சிறுவனைத் தன் மாணாக்கனாக ஏற்றுக்கொள்ள இசைந்தார். கொலம்பசின் கனவுகளையும் வேட்கைகளையும் கண்டறிந்த அவர், பல மரக்கலங்களுக்குச் சொந்தக்காரரும், ஸ்பெயின் தேசத்துப் பிரபுக்களிலே ஒருவருமான மெடினாசீலிச் சீமானுக்கு அவனை அறிமுகப்படுத்தி வைத்தார்.
சீமான் மெடினா சீலியிடம் கொலம்பஸ் கேட்டதெல் லாம் மூன்று அல்லது நான்கு வசதி பொருந்திய மரக் கலங்கள் தான். சீமான் மெடினா சீலி அதற்குச் சம்மதித் தாலும், கொலம்பஸ் தன் ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கும், ஸ்பெயின் நாட்டிலிருந்து கப்பல்கள் புறப்படுவதற்கும் அரசாங்கத்தின் அனுமதி பெறவேண்டியிருந்தது.
அப்போது ஸ்பெயின் தேசத்தை ஆண்டு வந்தவள் அரசி இசபெல்லா. இசபெல்லா கத்தோலிக்க சமயத்தில் தீவிர பற்றுதல் கொண்டவள். தெய்வப் பற்றும் சமயப் பற்றும் சிறந்த ஆட்சித்திறனும் கொண்டவள். ஐரோப்பிய அரசர்களிலேயே வலிவும் திறனும் புகழும் பெருமையும் கொண்டவளாக அக்காலத்தில் சிறந்து விளங்கினாள் அவள்.
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்
இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
என்ற திருக்குறட் பாக்களுக்கு இலக்கியமாய் ஒரு செயலை முடிக்கச் சரியான ஆளைத்தேர்ந்தெடுப்பதிலும், சரியான நேரத்தில் செய்வதிலும் அவள் வல்லவளாய் விளங்கினாள்.
அரசி இசபெல்லாவைப் பேட்டி காணக் கொலம்பஸ் ஒன்பது மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. காரணம், அவன் ஸ்பெயினுக்கு வந்து சேர்ந்த சமயம், அவள் அரசியல் வேலையாக ஒவ்வோர் ஊராகச் சென்று கொண்டிருந்தாள். அவளைத் தொடர்ந்து சென்று ஏதாவது ஊரில் சந்திக்கலாம் என்றால் கொலம்பஸ் கையில் பணம் கிடையாது. எனவே, அருகில் இருந்த கோர்டோவா என்ற ஊரிலே காத்திருந்து ஒன்பது மாதங்களுக்குப் பிறகு அவன் அரசி இசபெல்லாவைப் பேட்டி கண்டான்.
முதல் சந்திப்பிலேயே அரசி இசபெல்லாவுக்கு கொலம்பஸ் மீது ஒரு நல்லெண்ணமும் நம்பிக்கையும் ஏற்பட்டு விட்டது. இருந்தாலும் அவள் உடனடியாக அவனுக்கு அனுமதி வழங்கிவிடவில்லை. அவனுடைய திட்டத்தை ஆராய்வதற்காக அப்பொழுது அவள் ஒரு சிறப்புக்குழுவை நியமித்தாள். கொலம்பசின் பெரிய முயற்சித் திட்டத்திற்கு அனுமதி வழங்குவதா, அல்லது தள்ளிவடுவதா, அனுமதி வழங்கினால், சீமான் மெடினா சீலியின் ஆதரவில் முயற்சியை மேற்கொள்ளச் செய்வதா அல்லது அரசாங்கமே அவன் முயற்சிக்கு உதவுவதா என்றெல்லாம் ஆராய்ந்து முடிவு கூறும்படி அவள் அந்தக் குழுவை நியமித்தாள். இப்படிப்பட்ட முயற்சிகளைத் தனிப்பட்டவர்கள் மேற்கொள்ளுவதைவிட அரசாங்கமே மேற்கொள்ளுவதுதான் பொருத்தம் என்று அவள் நினைத்தாள். பலவிதமான தாமதங்களுக்குப் பிறகு கடைசியில் அரசியின் அனுமதி பெற்றுக் கொலம்பஸ் தன் பயணத்தை மேற்கொள்ளுவதற்கு ஆறு ஆண்டுகளாயின