உள்ளடக்கத்துக்குச் செல்

கடல்வீரன் கொலம்பஸ்/எண்ணம் பலித்தது

விக்கிமூலம் இலிருந்து
3

எண்ணம் பலித்தது


ஸ்பெயின் நாட்டு அரசி இசபெல்லா கொலம்பஸ் முயற்சிக்கு ஆதரவளிப்பது பற்றியோ, அனுமதி கொடுப்பது பற்றியோ ஒரு முடிவுக்கு வர ஆறு ஆண்டு காலம் பிடித்தது. அந்த ஆறு ஆண்டுகளும் கொலம்பசுக்கு வாழ்க்கையே ஒரு நரகம் போல் தோன்றியது. கொலம்பஸ் தன் முயற்சி வெற்றி பெறுவது உறுதியென்று திடமான நம்பிக்கை கொண்டிருந்தான். அந்த வெற்றிதான் தன் வாழ்வில் ஒளி சேர்க்கும் என்று அவன் கனவு கண்டு கொண்டிருந்தான். ஆனால், சுற்றிலும் உள்ளவர்களில் பெரும்பாலோர் அவன் திட்டத்தைக் கேட்டு எள்ளி நகையாடினார்கள். காற்று வாங்கப் போகும் போது மட்டும் கடலைப் பார்த்திருந்த அரச சபையைச் சேர்ந்த பலர் அவனை நையாண்டி செய்தார்கள். பெரும்பாலானவர்கள் அவனை ஒரு பிச்சைக்காரனிலும் கேவலமாக நடத்தினார்கள். உண்மையில் அவன் நிலைமையும் அவ்வாறுதான் இருந்தது. கைச்செலவிற்குப் பணமில்லாமல், அவன் அந்தச் சமயத்தில் வறுமைக்காளாகி வாதைப்பட்டுக் கொண்டிருந்தான். வார்ப்புரு:Bop 

அரசி இசபெல்லா அமைத்த சிறப்புக் குழுவினர் 1486-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் சமயத்தில் சாலமங்கா என்ற ஊரில் கூடினார்கள். கொலம்பஸ் திட்டத்தைப் பற்றி அவர்கள் ஆராய்ந்தார்கள். ஆனால் அவர்களுடைய விவாதங்கள் ஒரு தீர்மானத்துக்கு வராமலே கலைந்து விட்டார்கள். மீண்டும் ஒரு முறை கூடி விவாதிக்கலாம் என்ற முடிவுடன் அவர்கள் குழுக்கூட்டத்தை முடித்து விட்டார்கள். ஆனால், கொலம்பஸ் வாழ்க்கை நிலையை நன்கு அறிந்த டீகோ டி டீசா என்ற குழு உறுப்பினரின் செல்வாக்குக் காரணமாகவும், குழுத்தலைவரான டாலவெராவின் நல்லெண்ணம் காரணமாகவும், கொலம் பசுக்கு ஆண்டுக்கு 12,000 செப்புக் காசுகள் வாழ்க்கைச் செலவிற்காகச் கொடுப்பதென அந்தக் குழுவில் முடிவாயிற்று.

தொகைதான் 12,000. ஆனால் வெறும் செப்புக் காசுகள் தான் இருந்தாலும், தெய்வ சிந்தனையும் ஆடம்பர மற்ற எளிய வாழ்வும் மேற்கொண்டிருந்த கொலம்பஸ் போன்ற மனிதனுக்கு அந்தக் காலத்துப் பொருளாதார நிலைமையை நோக்கும் போது இந்தத் தொகை வாழ்க்கைச் செலவுக்குப் போதுமானதுதான். ஆனால், கொலம்பசின் துரதிருஷ்டம் அந்தத் தொகை கூட அவனுடைய தேவைக்கு ஒழுங்காகக் கிடைத்து வரவில்லை.

நாட்கள் நகர்ந்தன; மாதங்கள் மறைந்தன, ஓராண்டும் உருண்டது; அடுத்த கிறிஸ்துமஸ் கூட வந்துவிட்டது. டாலவெராவின் தலைமையில் அமைந்த அந்தக் குழுவினர் மீண்டும் கூடவேயில்லை.

எண்ணம் நிறைவேறும் நாளை எதிர்பார்த்துக் காத் திருந்த கொலம்பசுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் யுகமாகத் தோன்றியது. அவர்களோ இதைப் பற்றிய, கருத்தே யில்லாமல் சும்மாயிருந்தார்கள். பொறுமையிழந்த கொலம்பஸ் மீண்டும் போர்ச்சுக்கல் அரசரை நாடிப் பார்க்கலாமா என்று எண்ணினான். போர்ச்சுக்கலில் முன்பு அவன் இருந்தபோது பலரிடம் கடன் வாங்கியிருந்தான். கடன்காரர்கள் அவன் திரும்ப வந்தால் கைது செய்து சிறையில் தள்ளத் தயாராக இருந்தார்கள்.

தன் வேண்டுகோளை மீண்டும் செவி சாய்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு போர்ச்சுக்கல் அரசர் இரண்டாம் ஜானுக்குக் கொலம்பஸ் ஒரு கடிதம் எழுதினான். அவ்வாறு தன்னை அழைக்கும் போது தன் கடன்களுக்காகக் கைது செய்யாமல் இருக்க வேண்டும் என்றும் அதே கடிதத்தில் குறிப்பிட்டு வேண்டிக் கொண்டான்.

அவன் வேண்டுகோளை அப்படியே ஏற்றுக் கொண்டு ஜான் அரசர் உடனே வரும்படியாகப் பதில் எழுதினார். போர்ச்சுக்கல் அரசரிடம் ஏற்பட்ட விசேஷ மாறுதலுக்குக் காரணம் இல்லாமல் இல்லை. அண்டீலியாத் தீவைக் கண்டுபிடிக்க அவர் அனுப்பிய கப்பல் தலைவர்கள் பயனில் லாமல் திரும்பி வந்து விட்டார்கள். ஆப்பிரிக்காவைச் சுற்றிக் கொண்டு இந்தியாவை யடைய வேண்டும் என்று போர்ச்சுகீசியர்கள் முன் பத்தொன்பது தடவை செய்த முயற்சிகளும் பலிக்கவில்லை. இருபதாவது முறையாகப் புறப்பட்டுச் சென்ற பார்த்தலோமியா டயஸ் என்ற கப்பல் தலைவனிடமிருந்து ஏழு மாதங்களாகியும் எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை.

ஜான் அரசருடைய அழைப்புக் கிடைத்தவுடன், கொலம்பஸ் புறப்பட்டுப் போக முடியவில்லை. காரணம் வழிச்செலவிற்குப் பணம் இல்லாமையே. பணம் தயாரித்துக்கொண்டு கொலம்பசும் அவன் தம்பியும் போர்ச்சுக்கல் போய்ச் சேர்ந்த சமயம், பார்த்தலோமியோ டயஸ் தன் மூன்று கப்பல்களுடன் வெற்றிப் பெருமிதத் துடன் திரும்பிவந்து சேர்ந்தான். அவன் ஆப்பிரிக்காவின் தென் முனையைச் சுற்றிக் கொண்டு கீழ்க்கரைப் பகுதியை அடைந்து விட்டதாகவும். அங்கிருந்து இந்தியா போவது எளிதென்றும், ஆனால் நெடுநாளாகி விட்டதால் தன் ஆட்கள் கட்டாயத்துக் கிணங்கத் தான் தாய் நாடு திரும்பி விட்டதாகவும் அரசருக்குச் செய்தி சொன்னான் அந்தக் கப்பல் தலைவன்.

இந்தியாவை அடைவதற்கு நிச்சயமான ஒருவழி கண்டு பிடித்த பிறகு ஏன் சந்தேகத்திற்கிடமான கொலம்பஸ் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்று கருதத் தொடங்கினார் ஜான் அரசர். ஐயத்திற்கிடமான விஷயத்தில் பணம் செலவழிப்பது வீண் என்ற கருத்து அவருக்கு ஏற்பட்ட பின் கொலம்பஸ் அங்குச் சென்றதே வீணாகிவிட்டது.

கிறிஸ்டாபர் கொலம்பசும் அவன் தம்பியும் கூடி யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார்கள். டால்வெரா குழுவினர் உடனடியாக முடிவு கூறாவிட்டாலும் எப்படியும் நல்ல முடிவுக்கு தன் கனவுகள் பலிக்கும் படியான முடிவுக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை, அடியோடு மாண்டு போய் விடவில்லை. எனவே கொலம்பஸ் ஸ்பெயின் திரும்பினான். அவன் தம்பி பார்த்தலோமியோ கொலம்பஸ், அண்ணனுடைய திட்டத்துக்கு ஆதரவு தேட பிற ஐரோப்பிய நாடுகளில் முயற்சி செய்வதென்று புறப்பட்டான்.

முதலில் அவன் இங்கிலாந்து சென்றான். அப்போது இங்கிலாந்தை ஆண்டவர் ஏழாம் ஹென்றி. பார்த்த லோமியோ கொலம்பஸ் என்ன விளக்கிச் சொல்லியும் அவர் எதையும் சரியாக மனத்தில் வாங்கிக் கொள்ளவில்லை. அவர் கருத்தைக் கவர முடியாமல் அவன் திரும்பி விட்டான். அங்கிருந்து அவர் பிரான்சு தேசம் சென்றான். பிரெஞ்சு அரசர் எட்டாவது சார்லஸின் சகோதரர் அன்விடி பீஜோவின் அன்பைப் பெற்றான் பார்த்தலோமியோ கொலம்பஸ். அவன் சில நிலப் படங்கள் எழுதித் தரும் வேலையை அவனிடம் ஒப்படைத்தார். அவர் மூலமாகப் பிரெஞ்சு அரசரின் நட்பைப் பெற்றான். ஆனால், திட்டம்தான் அவரிடமும் பலிக்கவில்லை. விஷயத்தை விளக்கிக் கடிதம் போட்டுவிட்டு பார்த்தலோமியோ கொலம்பஸ் பிரான்சிலேயே தங்கி விட்டான்.

முயற்சிகள் எதுவும் பலிக்காமல் மனம் நொந்து போன கொலம்பஸ் எப்படித்தான் காலம் கழித்தானோ? எவ்வளவு நொந்து போன உள்ளத்துடன் வாழ்ந்தானோ? அவன் ஸ்பெயினுக்குத் திரும்பிவந்த செய்தியறிந்த இசபெல்லா தன்னை சந்திக்கும்படி கட்டளையிட்டாள். அப்போது ஸ்பெயின் அரசாங்கம் மூர் இனத்தாருடன் போரிட்டுக் கொண்டிருந்தது. மூர்கள் நகரான பாஜாவுக்கு வெளிப்புறத்தில் கூடாரமடித்துத் தங்கியிருந்தாள் அரசி இசபெல்லா. கொலம்பஸ் அங்கு வந்து சேருவதற்கு வழியில் எல்லா வசதிகளும் செய்து கொடுக்கும்படி அதிகாரிகளுக்கு ஒரு பொது உத்தரவுக் கடிதம் எழுதி அதைக் கொலம்பசுக்கு அனுப்பியிருந்தாள். அங்கு வந்து சேர்ந்த கொலம்பஸ், சண்டையில் ஒரு சிப்பாயாக சேவகம் செய்யத் தவறவில்லை.

1490-ம் ஆண்டு டாலவெராக் குழுவினர் கூடி விவாதித்து, கொலம்பஸ், திட்டம் பயனற்றது என்று முடிவு கட்டினார்கள். மேற்கு நோக்கிச் சென்று கிழக்கையடைலாம் என்ற கொள்கையே நடைமுறைக் கொவ்வாததென்று 

அவர்கள் அரசிக்குக் கூறினார்கள். மேற்குப்புறமாகத் சென்று ஆசியாவை அடைய நெடுந்தூரம் கடல்வழி செல்ல வேண்டுமென்றும் அவ்வளவு தூரத்தைக் கடந்து செல்ல சுமார் மூன்று ஆண்டுகளாவது பிடிக்கும் என்றும். ஆகவே கொலம்பஸ் திட்டம் பயனற்றது என்றும் அவர்கள் அரசிக்குக் கூறினார்கள்.

இந்த முடிவு கொலம்பசின் தலையில் இடி விழுந்தது போலிருந்தது. எத்தனைபேர் மறுத்துச் சொன்னாலும் கொலம்பசுக்குத் தன் திட்டத்திலே அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. தன் திட்டத்துக்கு ஆதரவு கிடைக்கும் என்னும் நம்பிக்கையைத்தான் அவன் இழக்க வேண்டியிருந்தது. குழுவினர் தீர்மானமாக முடிவு சொல்லி விட்டாலும் இசபெல்லா கொலம்பசின் நம்பிக்கையை அடியோடு வெட்டிவிடவில்லை. மூர் இனத்தாரோடு நடைபெறும் சண்டை முடிந்தபின் மீண்டும் அவன் விண்ணப்பித்துக் கொண்டால் தான் மறுபடி இவ்விஷயத்தை ஆலோசனைக்கு எடுத்துக்கொள்வதாகச் சொல்லி அவனுக்கு ஆறுதல் கூறினாள். மீண்டும் ஓராண்டு ஸ்பெயினில் இருந்து பார்த்தான். மூர்ச்சண்டை முடிவதாகத் தெரியவில்லை. தன் மகனை அழைத்துக் கொண்டு பிரான்ஸ் சென்று தன் தம்பியுடன் சேர்ந்து கொள்ள எண்ணினான். தன் மகனை மடத்திலிருந்து அழைத்துக் கொள்வதற்காக அவன் சென்ற பொழுது அங்கு, அந்த மடத்தின் தலைவர் ஜீவான் பெரிஜ் பாதிரியார் மீண்டும் ஒருமுறை அரசி இசபெல்லாவுக்குக் கடிதம் எழுதிப் பார்க்கும்படி வற்புறுத்தினார். அவ்வாறே எழுதினான்.

கருணை பொருந்திய அரசி இசபெல்லா, கொலம்பசைத் தன்னை வந்து பார்க்கும்படி பதில் எழுதியதோடு , வழிச் செலவுக்கும், புதிய உடை வாங்குவதற்கும் ஒரு குதிரை வாங்கிக் கொள்வதற்கும் அவன் கேட்டெழுதியிருந்தபடி பணமும் அனுப்பி வைத்தாள். 1491-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் சமயத்தில் கொலம்பஸ் சாண்டாபீ என்ற ஊர் முகாமில் கூடிய அரசசபைக்கு வந்து சேர்ந்தான். உடனே அவனுடைய திட்டத்தை ஆராய ஒரு புதுக் குழுவை நியமித்தாள் இசபெல்லா. அந்தப் புதுக் குழுவினர் கொலம்பஸ் திட்டத்தை முயன்று பார்க்கலாம் என்றும் ஆனால் அந்தத் திட்டம் வெற்றி பெற்றால் தனக்கு வேண்டும் என்று அவன் கேட்கும் சலுகைகள் அதிகம் என்றும் கூறினார்கள்.

1485-ம் ஆண்டில் சீமான் மெடினா சீலியின் ஆதரவில் பயணம் மேற்கொள்ள இருந்தபோது செலவுக்கு மட்டும் கொடுத்தால் போதும் என்ற கொலம்பஸ்தான் 1491-ல் தான் கண்டு பிடிக்கும் நாடுகளுக்கு அதிகமான விலை கேட்டான். தான் கண்டு பிடிக்கும் புதுநாடுகளுக்குத் தன்னையே ஆட்சித் தலைவனாக நியமிக்க வேண்டும் என்றும், தன்னை அரசப் பிரதிநிதியாக நியமிக்க வேண்டும் என்றும் இந்த இருபதவிகளும் தன் பின் சந்ததியினருக்கும் பரம்பரை யுரிமையாகக் கொடுக்கப்பட வேண்டும் என்றும், அந்த நாடுகளில் செய்யும் வாணிக லாபத்தில் பத்தில் ஒரு பங்கு தனக்கும் தன் வாரிசுகளுக்கும் சேர வேண்டும் என்றும் அவன் கேட்டான். ஸ்பெயினில் அவன் இருந்த காலத்தில் அனுபவித்ததெல்லாம் துன்பமும் துயரமுமே! ஆளான தெல்லாம் பழிக்கும் கேலிக்குமே! ஆகவே, தனக்குரிய சரியான கூலி கிடைக்காமல் ஸ்பெயின் நாட்டை மேம்படுத்த முடியாது என்று அவன் உறுதியான பிடிவாதம் கொண்டிருந்தான். "என்னுடைய கட்டுத் திட்டங்களை ஒப்புக் கொண்டால் அப்படியே ஒப்புக் கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் விட்டுவிடுங்கள். பேரம் வேண்டிய தில்லை!" என்று தீர்மானமாகச் சொல்லி விட்டான் கிரிஸ்டாபர் கொலம்பஸ்.

1492-ம் ஆண்டில் அரசி இசபெல்லாவும், அரசர் பெர்டினாண்டும் சேர்ந்து கொடுத்த பேட்டியில் கொலம்பசின் நிபந்தனைகளை ஏற்க முடியாது; ஆகவே அவனுக்கு அனுமதியோ உதவியோ கிடைக்காது என்று முடிந்த முடிவாகக் கூறி விட்டார்கள். வெறித்த பார்வையும் விடுபட்ட நம்பிக்கையுமாக கொலம்பஸ் தன் குதிரையின் முதுகில் தன் பொருள்களையும், நிலப்படங்களையும் கட்டிக் கொண்டு சாண்டாபீயை விட்டுப் புறப்பட்டு விட்டான். பாலோஸ் அருகில் இருந்த மடாலயம் போய் பையனை அழைத்துக் கொண்டு பிரான்சுக்குப் புறப்பட்டுச் செல்வதென்றும், மீண்டும் எட்டாவது சார்லஸ் அரசரிடம் உதவி கேட்பதென்றும் மனத்திற்குள் முடிவு செய்து கொண்டு அவன் புறப்பட்டு விட்டான்.

தொங்கிய முகமும் துவண்ட உள்ளமுமாக மட்டக் குதிரையின் மேலேறிச் சென்று கொண்டிருந்த கொலம்பசை நான்கு மைல் தூரத்தில் இருந்த ஒரு கிராமத்தில் அரசாங்கத் தூதன் ஒருவன் வந்து சந்தித்தான். அரசி இசபெல்லா மீண்டும் அவனை அழைத்துவரச் சொன்னதாகக் கூறினான். புதிய நம்பிக்கை யோடு கொலம்பஸ் திரும்பி வந்தான். கொலம்பஸ் கேட்ட நிபந்தனைகளை யெல்லாம் அப்படியே ஒப்புக்கொள்வதாகவும், அவன் மேலைத் திசையில் தன் பயணத்தைத் துவக்கலாம் என்றும் அரசி இசபெல்லா கூறிய போது தான் அவன் உள்ளம் நிறைந்தது. அத்தனை நாளும் தான் பட்ட துன்பங்களுக்கெல்லாம் முடிவு வந்து விட்டது போல் களித்தான்.

அரசி இசபெல்லாவின் மனம் எப்படி மாறியது? அரசர் பெரிடினான்டின் அந்தரங்கச் செயலாளன் ஒருவன் அரசியிடம் வந்து, கொலம்பஸ் திட்டத்தையும் நிபந்தனையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். லூயிஸ் டி சாண்டாஞ்சல் என்ற அந்த அந்தரங்கச் செயலாளன் கூறிய விளக்கம் பொருத்த மாயிருந்தது. கொலம்பஸ் வழிச் செலவுக்காகக் கேட்கும் மொத்தக் கூட்டுத் தொகையும் ஓர் அரசரின் ஒருவார ஆடம்பரச் செலவு தொகை அளவு கூட வராது. அவன் பட்டங்களும் பதவிகளும் உரிமைகளும் கணக்குப் போட்டுப் பார்த்தால், அவன் கண்டுபிடித்துக் கொடுக்கும் நாடுகளுக்குரிய முழுவிலையுமாகாது; ஒரு சிறு பங்கேயாகும்; புத்தம் புதிய நாடுகளை அரசுக்குச் சேர்த்துக் கொடுக்கும் ஒரு திறமையாளனுக்கு அந்த அளவு கூடக் கொடுக்காமல் இருப்பது என்ன நியாயத்தைச் சேர்ந்தது? இவை யெல்லாம், நாடுகளைக் கண்டு பிடித்தால் தனக்குக் கொடுக்க வேண்டும் என்றுதான் அவன் உறுதி மொழி கேட்கிறான். கண்டு பிடிக்காவிட்டால் கொடுக்க வேண்டியவை அல்ல. கண்டு பிடித்தால் அவனுக்கு கொடுப்பதிலே அரசுக்கு எவ்விதமான நஷ்டமுமில்லை. வரும்படியைச் சேர்த்துத் தருகிறவனுக்குக் கொடுக்கிற ஒரு சிறு கூலியே யாகும்.

அந்தரங்கச் செயலாளன் எடுத்துக் கூறிய விளக்கங்கள் அரசி இசபெல்லாவின் உள்ளத்தைத் தொட்டன. அவள் உடனே ஆளனுப்பிக் கொலம்பசை வழிமறித்துக் கூட்டி வரச் செய்தாள். அந்தச் செயலாளனைப்போல் முன்னரே யாராவது எடுத்துச் சொல்லியிருந்தால் கொலம்பஸ் அத்தனை யாண்டுகள் வீணாகக் கழித்திருக்க நேர்ந்திராது.

1492-ம் ஆண்டிலேயே ஏப்ரல் மாதத்தில் கிரிஸ்டாபர் கொலம்பசுக்கும் ஸ்பெயின் நாட்டு மாமன்னர் - பேரரசிக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி முத்திரையிடப் பட்டது. கொலம்பஸ் கூறிய நிபந்தனைகள் எல்லாம் அதில் கண்டெழுதப் பெற்றன. கொலம்பஸ் கண்டு பிடிக்கும் நிலப்பகுதிகட்கும். ஆட்சிக் குட்படுத்திக் கொடுக்கும் நாடுகளுக்கும் அவனும் அவன் பரம்பரையினரும் ஆட்சித் தலைவர்களாகவும் அரசப் பிரிதிநிதி களாகவும் இருக்க மாமன்னரும் பேரரசியும் சம்மதித்தனர். அவ்வாறு அவன் கடல் வழியில் நிலப்பகுதிகளைக் கண்டு பிடித்து ஆட்சியில் சேர்த்தால், அவனுக்கு பெருங்கடல் தளபதி (Admiral of the Ocean Sea) என்ற பட்டங் கொடுக்க மாமன்னரும் பேரரசியும் உறுதி கூறினர். மேற்படி நாடுகளிலிருந்து கிடைக்கும் தங்கம். இரத்தினம் வாணிபப் பொருள்களில் பத்தில் ஒரு பங்கு கொலம்பசைச் சேரும். அப்பொருள்களுக்கு அவனுக்கு வரி விலக்களிக் கப்படும். அப்பகுதிகளுக்குச் செல்லும் கப்பல்களில் எட்டில் ஒரு பங்கு அவன் மூலதனம் போடவும் உரிமையளிக்கப் படும். இந்த உரிமைகளும் சலுகைகளும் அவனுக்குப் பின் அவன் சந்ததியினரைச் சேரும். இந்த நிபந்தனைகள் அனைத்தையும் மாமன்னரும் பேரரசியும் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டனர்.

மன்னரும் அரசியும் புதிய கடல் வழிகளில் செல்வதற்காக அவனுக்கோர் அடையாளச் சீட்டும் வழங்கினர். சீன நாடுகளை அக்காலத்தில் ஆண்டு வந்ததாகக் கருதப்பட்ட கான் பேரரசருக்கு ஓர் அறிமுகக் கடிதமும் மற்றும் தற்செயலாக அவன் போய்ச் சேரக் கூடிய பிற நாடுகளின் அரசர்களுக்கு அவர்கள் பெயர்களும் பட்டங்களும் தெரியாததால் பெயர் போடாததும் பின்னால் நிரப்பிக் கொள்ளக் கூடியதுமான இரண்டு அறிமுகக் கடிதங்களும் மாமன்னரும் பேரரசியும் கையெழுத்திட்டுக் கொடுத்தனர்.

ஒப்பந்தம் முடிந்தபின் கொலம்பஸ் தன் பயணத்துக்குக் கப்பல்களும் ஆட்களும் சேர்க்கத் தொடங்கினான். கப்பல் தொழிலில் ஈடுபட்ட மூன்று குடும்பத்தினரிடமிருந்த சிறந்த கப்பல்களைப் பெற்றான். அந்த மூன்று கப்பல்களுக்கும் உரியவர்களே அவற்றில் அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்டனர். சாண்டாமேரியா, நைனா. பிண்டா என்ற பெயருடைய மூன்று பாய்மரக்கப்பல்களில் அதிகாரிகளும் வேலையாட்களுமாக மொத்தம் 90 ஆட்கள் கொலம்பசுடன் புறப்பட்டார்கள். இவர்களில் பெரும்பாலோர் ஸ்பானியர்கள். கொலம்பசுடன் இன்னொரு ஜினோவாக் காரனும் வேனிஸ்காரன் ஒருவனும் போர்ச்சுகீசியன் ஒருவனும் பிற நாட்டவர்கள். ஆயுள் தண்டனை யடைந்த கைதிகள் மூவர் . அவ்விளைஞர்கள். கொலம்பசுடன் செல்லுவதற்காக விடுதலை செய்யப் பெற்றனர்.

1492 -ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 2-ம் நாளன்று எல்லாம் ஆயத்த மாகிவிட்டது. மூன்று கப்பல்களின் குறுக்கிலும் நெடுக்கிலும் பலவண்ணக் கொடிகள் பறந்து இன்பக்காட்சி யளித்தன. இசபெல்லா அரசியின் ஆட்சிச் சின்னங்களான கோட்டையும் சிங்கமும் பொறித்த பெரிய கொடிகள் ஒவ்வொரு கப்பலின் கொடிமரத்திலும் பட்டொளி வீசிப் பறந்தன. அன்று இரவு அந்தக் கப்பலில் புறப்பட இருந்த ஒவ்வொருவனும், பாலோஸ் தேவாலயத்தில் சென்று தன் பாவங்களைக் கூறிக் குறையிரந்து ஆண்டவன் துணையை வேண்டித் தொழுகை நடத்தி விட்டு வந்தான். ஆகஸ்ட் 3-ம் நாள் வெள்ளிக் கிழமை அதிகாலையில் கொலம்பஸ் கப்பலில் ஏறினான். பகலவன் தோன்று முன்பாகவே மூன்று கப்பல்களும் நங்கூரங்களைத் தூக்கிவிட்டன, இளங் காற்று வீசும் அந்தப் புலர் காலைப்பொழுதில் வண்ணக் கொடிகள் அழகுற அசைந்தாட, பாய்கள் தொங்கி விரிந்து காற்றடைந்து செல்ல கப்பல்கள் மெல்லப் புறப்பட்டன. கொலம்பஸ் மகன் இருக்கும் மடாலயத்தின் பக்கமாக செல்லும் போது அந்த மடாலயத்துத் துறவிகள் "என்றென்றும் மேன்மேலும் உன்னருளைப் பொழிய வேண்டும் இறைவா" என்று வேண்டும் மந்திர ஒலிகள் காற்றுவாக்கில் கப்பலில் இருந்தவர்களின் செவிகளில் வந்து மோதின