கடல்வீரன் கொலம்பஸ்/கரை தெரிந்தது

விக்கிமூலம் இலிருந்து

4




கரை தெரிந்தது

அட்லாண்டிக் மாகடலில் முன் போய் வந்த அனுபவம் கொலம்பசுக்குத் துணையாக இருந்தது. மேற்கு நோக்கிச் சென்றால் நேராகக் கிழக்கை யடையலாம் என்பது அவன் திட்டம் என்றாலும் கண்னை மூடிக் கொண்டு அவன் நேரே மேற்றிசை நோக்கித் தன் கப்பல்களைச் செலுத்திவிடவில்லை. ஏற்கனவே ஆப்பிரிக்க நாடுகளுக்குக் கப்பல் மாலுமிகளில் ஒருவனாகப் போய்வந்திருந்த அவன் அவ்வழிகளில் உள்ள கடலின் தன்மையை நன்கு புரிந்து வைத்திருந்தான். முதலில் தெற்கு நோக்கிச் சென்று அங்குள்ள கானரித் தீவுகளை அடைவதென்றும், கானரித் தீவுகளிலிருந்து வட மேற்காகத் திரும்பி மீண்டும் மேல் திசையில் செல்வ தென்றும் அவன் முடிவு செய்திருந்தான். கானரித் தீவுகளின் பக்கம் சென்று விட்டால் அங்கு எப்போதும் வீசிக் கொண்டிருக்கும் கீழ்க்காற்றுகள் அவன் மேல் திசை செல்வதற்கு உதவியாக இருக்கும்; அதுவுமல்லாமல் அந்தத் தீவுகளைச் சுற்றியுள்ள கடலின் நீர் ஆண்டில் பெரும்பகுதி கொந்தளிப்பின்றி குளத்து நீரைப் போல் அமைதியாக இருக்கும். அதுவுமல்லாமல் அந்த வழியில் இருப்பதாகக் கருதப்பட்ட அண்டிலியாத் தீவையும் போகும் வழியிலேயே கண்டு பிடிக்க எண்ணியிருந்தான் கொலம்பஸ்.

பாலோஸ் துறைமுகத்தில் கப்பல்கள் புறப்பட்டு ஒருவாரம் ஆவதற்கு முன்பாகவே கானரித் தீவுகளை நெருங்கிவிட்டன. பிண்டா என்ற கப்பல் சிறிது பழுது பார்க்க வேண்டியிருந்ததால் அதை லாஸ்பால்மாஸ் என்ற கப்பல் கட்டும் துறைமுகத்துக்கு அனுப்புவதென்று திட்டமிட்டான் கொலம்பஸ். அவ்வாறே அதை அங்கே அனுப்பி விட்டு, மற்ற இரண்டு கப்பல்களையும் கானரித் தீவுகளில் ஸ்பெயின் நாட்டார் ஆதிக்கமுள்ள கோமாராத் துறைமுகத்தில் கோண்டு போய் நிறுத்தினான். கோமாராத் துறைமுகத்தில் உணவுப் பொருள்களும், குடிதண்ணீரும் ஏற்றிக் கொள்ளும்படி கப்பல்களின் அதிகாரிகளுக்குக் கூறி ஏற்பாடு செய்துவிட்டு கொலம்பஸ் லாஸ்பால்மாஸ் நகரம் சென்று அங்கு நடைபெறும் பழுது வேலைகளை மேற்பார்வையிட்டான். பிறகு பிண்டா என்ற அந்தக் கப்பலிலேயே ஏறிக் கொண்டு கோமாரா வந்து சேர்ந்தான். அங்கிருந்து புறப்பட்ட கப்பல்கள் கானரித் தீவுகளில் உள்ள சான் செபஸ்டியன் என்ற மற்றொரு முக்கியமான துறைமுகத்தில் 1492-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ம் நாள் நங்கூரம் பாய்ச்சின. அங்கு நான்கு நாட்கள் தங்கி மேற்கொண்டு வேண்டிய உணவுப் பொருள்களையும் தண்ணீரையும் நிரப்பிக் கொண்டு செப்டம்பர் மாதம் 6-ம் நாளன்று பாய்களை விரித்துக் கொண்டு புறப்பட்டன.

தெரியாத உலகத்தை நோக்கி முன்பின் சென்று அறியாத பாதையில் செல்லத் தொடங்கிய அந்த மூன்று கப்பல்களும் தெரிந்த உலகத்தை விட்டுக் கடைசியாய் புறப்பட்ட நாள் அந்த 1492 செப்டம்பர் 6-ம் நாள் தான்!

முதல் பத்துப்பனிரெண்டு நாட்களும் ஒரே நிலையாக கீழ்க்காற்று வீசிக் கொண்டிருந்தது. கப்பல்கள் மூன்றும் எவ்விதமான தொந்தரவும் இல்லாமல் அன்னப்பட்சிகள் போல் யாரும் போயறியாத அந்த மாகடல் வழியாக அமைதியாகப் போய்க் கொண்டிருந்தன. அந்த பத்துப் பனிரெண்டு நாட்களும் இன்பமயமாக இருந்தன. பார்க்கு மிடமெங்கும் பத்துத்திசையிலும் ஒரே நீலநிறம். மேலே அமைதியான நீலவானம். இடையிடையே மெல்லத் தவழ்ந்து செல்லும் வெள்ளை மேகங்கள். கீழே அலை புரளும் நீலக்கடல். அதன் மத்தியிலே பாய்விரித்து அழகுற மிதந்து செல்லும் மூன்று கலங்கள்! பார்க்கப் பார்க்க இனிமையான அழகிய கண்காட்சி. காலைக்கதிரவன் உதயக்காட்சியும் மாலையில் நீரில் முழ்கும் மாட்சியும் எத்தனை இன்பம்! "வானம்பாடி பாடாத குறை ஒன்று தான்!" என்று கொலம்பஸ் தன் குறிப்புப் புத்தகத்தில் எழுதியிருந்தான். இந்தப் பத்துப் பனிரெண்டு நாட்களிலும் ஒரே சீராகக் சென்று கொண்டிருந்த கப்பல்கள் ஏறக்குறைய 1160 மைல்கள் கடந்துவிட்டன. ஆனால் அதன் பிறகு காற்று மாறியடிக்கத் தொடங்கிவிட்டது. நான்கைந்து நாட்களாக மழை வேறு பிடித்துக் கொண்டு விட்டது. இந்த ஐந்து நாட்களில் சுமார் 240 மைல் தான் நகர முடிந்தது.

கப்பலில் இருந்த சில மாலுமிகளுக்கு முதலில் ஒரு விதமான பயமிருந்தது. மேற்கு நோக்கியே இந்தக் காற்று ஓரே சீராக அடித்துக் கொண்டிருந்தால் அதை எதிர்த்து எப்படித் தாய்நாட்டுக்குத் திரும்பப் போகிறோம் என்று பயந்து கொண்டிருந்தார்கள். காற்றுத் திரும்பியடித்தது. சரி சரி திரும்பவும் வழியிருக்கிறது என்று திருப்தியடைந்தார்கள். செப்டம்பர் மாதம் 24, 25-ம் நாட்களில் அவர்கள் போய்க் கொண்டிருந்த இடத்தில் தான் அண்டிலியா என்ற தீவு இருக்க வேண்டும் என்று எதிர்பார்த் தான் கொலம்பஸ். ஆனால், அந்த இடத்தில் ஆழம் பார்த்தபோது 200 பாகங்களுக்கும் அதிகமான ஆழமிருந்தது. ஆகவே அருகில் கரையிருப்பதற்கு வழியில்லை என்று கொலம்பஸ் கண்டு கொண்டான். உண்மையில் அந்த இடம் 2000 பாகங்களுக்கும் அதிகமான ஆழமுடையது.

ஒருநாள் பிண்டா என்ற கப்பலில் இருந்த மாலுமி ஒருவன் "அதோ கரை! அதோ கரை!" என்று கூவினான். கதிரவன் மறையப்போகும் அந்தத் தருணத்தில் மேல் திசையில் ஒரு புறத்தில் ஒரு தீவு இருப்பது போல் தென்பட்டது. உடனே மூன்று கப்பல்களையும் அத் திசையில் செலுத்தினார்கள். ஆனால் சிறிது தூரம் சென்றவுடன் அந்தத் தீவு கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விட்டது. வேறு எந்தத் தீவும் புலப்படவில்லை. அடி வானத்தில் சூரியனின் செவ்வொளி பட்டுத் தெரிந்த ஒரு மேகத்தைத் தீவு என்று நினைத்துக்கொண்டு கூவியிருக்கிறான் அந்த மாலுமி. ஆனால், ஏதோ தீவு எங்கோ இருக்கிறது; நாம் திசைமாறி விட்டதால் தென்படவில்லை என்று சிலர் கருதினார்கள். அப்படிக் கருதியவர்களில் முக்கியமானவன் அலோன்சோபின்சோன். அவன் தான் பிண்டா கப்பலின் சொந்தக்காரனும் அதைத் தலைமை வகித்து நடத்தி வந்த கப்பல் தலைவனும் ஆவான். அவன் அந்தத் தீவைத் தேடிப் பார்க்க வேண்டும் என்று கருதினான். ஆனால் இந்திய நாடுகளை விரைவில் அடைய வேண்டியது தான் இலட்சியம் என்றும், இடையில் எதையாவது தேடிக் கொண்டிருப்பது வீண் வேலையென்றும் கூறிக் கொலம்பஸ் மறுத்துவிட்டான். அக்டோபர் முதல் தேதி வாக்கில் மேலும் 400 மைல் அளவில்தான் கடந்திருந்தார்கள்.

புறப்பட்டு ஒருமாதமாகிவிட்டது. கடந்த மூன்று வாரங்களாக சுற்றிலும் நிறைந்த உப்புத் தண்ணீரைத் தவிர வேறு ஒன்றையும், ஒரு திட்டு நிலத்தையும் காண முடியவில்லை. ஏறக்குறைய 2000 மைல் தூரம் தாய் நாட்டை விட்டு விலகி வந்தாயிற்று. போகப் போக நாடு விலகிக் கொண்டே போகிறது. போகுந்திசையில் என்ன இருக்கிறதோ? அடிவானம் தூரப் போகப்போக ஆழிதான் தென்படுகிறது. வேறு எதுவும் இருந்தாலல்லவாதென்படும்? எல்லோருக்கும் ஒருவிதமான பயம் ஏற்பட்டது. உயிருடன் நாடு திரும்ப முடியாதோ? கரையே காணாமல் கண்காணாத கடல் வெளியில் அனாதைப் பிணங்களாக அலைகளில் மிதக்க நேரிடுமோ?

ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஏற்பட்ட பயம் சதியாக உருவெடுத்தது. அங்கங்கே கப்பல் தட்டுகளில் நான்கைந்து பேராகக் கூடிப் பேசினார்கள். கடலுக்கு அக்கரையே இல்லையென்று சொல்லுவார்கள் பெரியோர்கள். அடிவானத்துக் கப்பால் கடலும் வானும் கலப்பதைத் தவிர வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அந்தப் பாவிப்பயல் ஜினோவாக்காரனுக்கு மட்டும் ஏதோ இருப்பதாகத் தெரிகிறது. வாருங்கள் எல்லோரும் போய் அவனைக் கப்பலைத் திருப்பச் சொல்லுவோம். ஒப்புக் கொள்ளாவிட்டால் அவனைக் கடலிலே தூக்கி எறிந்து விட்டு நாம் திருப்பிக் கொண்டு செல்லுவோம். இப்படியெல்லாம் மாலுமிகள் கூடிப் பேசித் தீர்மானித்தார்கள்.

ஆனால் அக்டோபர் முதல் தேதி காற்றின் வேகம் அதிகரித்தது. மேற்கொண்டு ஐந்தே நாட்களில் கப்பல் 700 மைல் கடந்துவிட்டது. ஏறக்குறைய 2500 மைல் கடந்தாகி விட்டது. எனவே ஜப்பானை நெருங்கி விட்டோம் என்று எண்ணினான் கொலம்பஸ். மறுநாளே கப்பல்களுக்கு மேலே சில பறவைகள் கூட்டங் கூட்டமாகப் பறந்து சென்றன. ஏதோ நிலமிருக்கும் திசை நோக்கித் தான் அவை போகின்றன என்று எண்ணி அவை பறந்து சென்ற திசையில் கப்பல்களை மாற்றி ஓட்டினான். ஆனால் நெடுந்தூரம் வரை சென்றும் நிலப்பகுதி எதுவும் தென்பட வில்லை. மாலுமிகள் மறுபடியும் கிளர்ச்சி செய்யலானார்கள்.

"தலைவரே, கப்பலைத் திருப்புங்கள்! இல்லா விட்டால்..." என்று மேற்கொண்டு சொல்லாமலே அச்சுறுத்தினார்கள்.

ஆனால், உறுதி மாறாத கொலம்பஸ் இதற்கெல்லாம் நடுங்கி விடவில்லை. அவன் அவர்களுக்கு உற்சாகமான மொழிகளைக் கூறினான். "அஞ்சாதீர்கள்! நம் இலட்சியம் ஈடேறும் வரை பயணம் நீடிக்கத்தான் வேண்டும். கீழ்த் திசையில் இருக்கும் இந்திய நாடுகளை அடைந்துவிட்டால் அடையப் போகும் இலாபத்தை எண்ணிப் பாருங்கள்" என்றெல்லாம் ஆசை வார்த்தைகளை அள்ளி விட்டான். எல்லாம் வல்ல இறைவன் நமக்குத் துணை புரிவார் என்று நம்பிக்கையை வளர்த்தான். மேலும் மூன்று நாட்களுக்குள் நிலப்பகுதி தட்டுப்படவில்லை என்றால், திரும்பிவிடுவதாக அவர்களுக்கு உறுதியும் கூறினான்.

அந்த மூன்று நாட்களும் கடந்தன. எல்லோருக்கும் அலுத்துப்போய் விட்டது. மூன்றாவதுநாள் அந்திச் சமயத்தில் அவர்கள் நிலப்பகுதி எதையும் கண்ணால் காணா விட்டாலும், இலையும் பூவுமாக ஒடிந்து விழுந்த மரக்கிளைகள் பல ஆங்காங்கே கடலில் மிதந்து சென்றதைக் கப்பல்களில் இருந்தவர்கள் காண நேரிட்டது. அந்த மரக் கிளைகளைக் கண்ணுக்கு நேரே கண்டவுடன் முணு முணுப்பும் சலசலப்பும் ஓய்ந்தன. மாலுமிகள் அனைவரும் உண்மையிலேயே நம்பிக்கையும் உற்சாகமும் கொண்டார்கள்.

கொலம்பஸ் அவர்கள் உற்சாகத்தை அதிகப்படுத்தினான். அந்தக் கப்பல்களில் புறப்பட்டுச் சென்ற மாலுமிகளுக்கு ஸ்பெயின் மாமன்னர்கள், அது ஒரு மாதத்தில் திரும்பி வந்தாலும் இரண்டு மாதத்தில் திரும்பி வந்தாலும் எத்தனை நாளில் திரும்பி வந்தாலும் ஓர் ஆண்டுச் சம்பளம் கொடுப்பதாக வாக்களித்திருந்தார்கள். அந்த ஓர் ஆண்டுச் சம்பளம் தவிர, அத்தனை நாட்கள் துயரப்பட்டு முதல் முதல் அடையும் நிலப்பகுதியைக் கண்டு பிடிப்பதற்காக மேற் கொண்டு விசேஷ வெகுமதிப் பணமும் அதிகமாக வாங்கித் தருவதாகவும், எச்சரிக்கையாக இருந்து நிலப்பகுதி நெருங்குவதைக் கவனித்து வரும்படியும் ஒவ்வொருவருக்கும் உறுதி கூறினான் கொலம்பஸ். மற்ற கப்பல் தலைவர்கள் பாய்களை அவிழ்த்து விட்டுக் கப்பல்களை மெதுவாக செலுத்திக் கொண்டு போக வேண்டுமென்று எண்ணினார்கள். ஆனால். கொலம்பஸ் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அடையக் கூடிய நிலப்பகுதி மேலும் அதி தொலைவில் இருந்தால், பாய்களை அவிழ்ப்பதால் தாமதப்பட்டு விடக்கூடும் என்று எண்ணினான் அவன்.

அன்று இரவு நிலாத்தோன்ற நெடுநேரமாகியது. ஆனால் அந்த நிலவு அதியழகாகக் காட்சியளித்தது. கடல் கொந்தளிப்பாக இருந்தாலும், நம்பிக்கை ஏற்பட்டுவிட்ட அந்த உள்ளங்களுக்கு அந்த இரவே அழகு நிறைந்ததாகத் தோன்றியது. கரையை எப்போது காணலாம் என்று அந்த மூன்று கப்பல்களிலும் உள்ள ஒவ்வொருவரும் ஆவலும் துடிப்பும் கொண்டிருந்தார்கள். பிண்டா என்ற கப்பல் முன்னால் சென்று கொண்டிருந்தது. பின்னால் சுமார் அரை மைல் தூரத்தில் இடது பக்கத்திலும் வலது பக்கத்திலுமாக சாண்டா மேரியாவும் நைனாவும் சென்று கொண்டிருந்தன. அடிக்கொரு தடவை ஒவ்வொரு மாலுமியும் கப்பலின் மேல் தட்டுக்கு வந்து மேற்றிசையிலே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். கரையை எவன் முதலில் கண்டு சொல்கிறானோ அவனுக்கு விசேஷ வெகுமதி ஏதாவது நிச்சயம் கிடைக்கும். 

அக்டோபர் மாதம் 11-ம் நாள் முடிந்து நள்ளிரவில் 12-ம் நாள் தொடங்கியது. ஒருமணி ஆயிற்று இரண்டு மணியும் ஆயிற்று. அப்போது பிண்டாக் கப்பல் அதிகாரி ஒருவன் வெளியே எட்டிப் பார்த்தான். நிலவொளியில் செங்குத்தாய் நின்ற ஒரு வெள்ளைப் பாறை அவன் கண்ணில் தட்டுப்பட்டது. “தரை! தரை!” என்று கூவினான். உடனே அந்தக் கப்பல் தலைவனான அலோன் சோபின்சோன் மேல் தட்டுக்கு ஓடி வந்தான். ஆம் சந்தேகமில்லாமல் அது ஒரு பாறைதான்!

உடனே ஒரு துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கிச் சுட்டான். பாய்களைத் தாழ்த்தும்படி மாலுமிகளுக்கு உத்தரவிட்டான். கப்பலின் வேகம் குறைந்தது. அதற்குள் மற்ற இரு கப்பல்களும் வெகு வேகமாக அதை நெருங்கின. கொலம்பஸ் வெளியில் எட்டிப் பார்த்தான். சாண்டாமேரியாவில் இருந்தவாறே ஆனந்தமாகக் கூவினான். “அலோன்சோ! நீ தான் முதலில் கரையைக் கண்டுபிடித்தாய்! ஐயாயிரம் காசுகள் உனக்கு வெகுமதி யளிக்கிறேன்”

கொலம்பசின் குரலில் வெற்றிப் பெருமிதம் இழையோடியது! கண்ட கனவெல்லாம் நிறைவேறிவிட்டது என்னும் களிப்பு நிறைந்து வெளிப்பட்டது!

கப்பல்களில் இருந்த எல்லோருமே ஆனந்தக்கடலில் மிதந்து கொண்டிருந்தார்கள்!