கடல்வீரன் கொலம்பஸ்/புகழ் கிடைத்தது

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
5
புகழ் கிடைத்தது


கொலம்பஸ் தலைமையில் புறப்பட்ட அந்தக் கப்பல் தலைவர்கள், கடலனுபவம் நிறைந்த பெரும் வல்லுனர்கள். அவர்கள் கரையைக் கண்ட ஆனந்தத்தில் உடனே கரை நோக்கி வேகமாகப் பாய்ந்து சென்றுவிடவில்லை. அவ்வாறு கண்ணை மூடிக்கொண்டு சென்றிருப்பார்களேயானால், கடலுக்கடியிலே மறைந்திருந்த செங்குத்துப் பாறைகளிலே மோதிக் கப்பல் உடைந்து சுக்கு நூறாகி யிருக்கும். கொலம்பஸ் எல்லாக் கப்பல்களிலும் பாயைத் தாழ்த்தச் சொன்னான். அவ்வாறே பாய்கள் இறக்கிச் சுருட்டப்பட்டன. கப்பல்கள் மெல்லமெல்ல ஆடி அசைந்து கொண்டிருந்தன. பொழுது விடியும் நேரத்தை எதிர் பார்த்துக் காத்திருந்தனர். காலை மலர்ந்து எல்லாம் தெளிவாகத் தெரியத் தொடங்கியவுடன் மீண்டும் பாய்களை ஏற்றிக் கொண்டு கண்ணுக்குத் தென்பட்ட அந்தத் தென்முனையைக் கடந்து சென்றார்கள். மேல் கரையில் பாறைத் தொடர்ச்சிக்கிடையே ஏதாவது வழி தெரியுமா என்று ஆராய்ந்து கொண்டே சென்றார்கள். நண்பகலில் ஓர் ஆழமில்லாத வளைகுடாவைக் கண்டுபிடித்தார்கள் அதன் வழியாக உள்ளே நுழைந்து காற்று வேகமில்லாத, நிலப்பகுதி சூழ்ந்த ஓர் இடத்தில் நங்கூரம் பாய்ச்சினார்கள்.

வெண்பவளப் பாறைகள் ஒளிவீசும் இந்தக் கடற் கரையில் தான் கொலம்பஸ் புதிய உலகத்தில் முதன் முதல் காலடி எடுத்துவைத்தான். கடல் தளபதி கொலம்பஸ் தலைமைக்கப்பலின் படகு ஒன்றிலே இறங்கி, ஸ்பெயின் அரசின் கொடியுடன் கரையில் வந்தேறினான். மற்ற இரு கப்பல் தலைவர்களும், நாடு கண்டுபிடிக்கும் அடையாளக் கொடியுடன் தங்கள் படகுகளில் கரைக்கு வந்து சேர்ந்தார்கள். வெள்ளைத்துணியில் பச்சை நிறத்தில் சிலுவை பொறித்திருந்த அந்த அடையாளக் கொடி, கோட்டையும் சிங்கமும் பொறித்திருந்த நாட்டுக் கொடியைப் போலவே அழகுறக் காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்தது.

யாவரும் தரையில் மண்டியிட்டு இறைவனைத் தொழுது எல்லையற்ற கருணையாளனாகிய அவன் தங்கட்கோர் எல்லை காண்பித்ததற்காக நன்றி செலுத்தினார்கள். நெடுநாட்களுக்குப் பின் கண்ணாரக்கண்ட அந்தத் தரையை ஆனந்தக் கண்ணீர் விட்டு நனைத்துக்கொண்டே தழுவிக் கொண்டார்கள். கடல் தளபதி கொலம்பஸ் எழுந்து நின்று புனிதகாவலன் என்ற பொருள்படும் இறைவன் திருநாம மாகிய "சான் சால்வடார்" என்ற பெயரை அந்தத் தீவுக்குச் சூட்டினான்.

இந்த மூன்று கப்பல் தலைவர்களையும் கண்ட அந்தத் தீவுமக்கள் ஒரே ஓட்டமாக ஓடிக் காட்டுக்குள்ளே சென்று ஒளிந்து கொண்டார்கள். பிறகு, வந்தவர்கள் யார் என்று அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் பிடர்பிடித்துத் தள்ள, அவர்கள், சில பரிசுப் பொருள்களுடன் மெல்ல மெல்லத் திரும்பிவந்தார்கள். சட்டை மாட்டிய அந்த வெள்ளைக்காரர்களைக் கண்டு அவர்கள் வியப்பும் அச்சமும் கொண்டார்கள். எங்கோ வானிலிருந்து குதித்த தேவர்களோ என்று எண்ணினார்கள். ஆடையே யணியாத அந்தத் தீவு மக்களைக்கண்டு கப்பல் தலைவர்கள் பெரும் வியப்புக் கொண்டார்கள்.

கரையில் இறங்கியவுடன் கொலம்பஸ் தான் ஏதோ ஓர் இந்திய நாட்டுப் பகுதியில் இறங்கியிருப்பதாகவே எண்ணினான். ஆகவே, முதன் முதலில் அம்மணமாகத் தான் கண்ட அந்த மக்களுக்கு அவன் இந்தியர்கள் என்றே பெயர் சூட்டினான். அந்தப் பெயரே இன்றுவரை அம்மக்கள் கூட்டத்தின் பெயராக நிலைத்துவிட்டது. இன்று அவர்களை நம்மினின்று வேறுபடுத்துவதற்காகச் சிவப்பு இந்தியர் என்று அழைக்கிறார்கள். அமெரிக்காவின் கீழ்ப்புறத்தில் உள்ள பகாமாத்தீவுகளில் ஒரு சிறுதீவு அது. குவானகானி என்று பெயருள்ள அந்தத் தீவின் மக்களைக் கண்டவுடனே, அவர்களின் வெள்ளையுள்ளத்தை அறிந்த உடனேயே, தங்களுக்காக அவர்களை உழைக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கொலம்பஸ் முடிவு கட்டிவிட்டான். ஆடையின்றி நிற்கும் அந்த மக்களில் சிலருடைய மூக்குகளில் தொங்கிய தங்க வளையங்கள், கப்பல்காரர்களின் கருத்தைப் பெரிதும் கவர்ந்தன.

கொலம்பஸ் அந்தத் தீவை இரண்டு நாட்கள் முழுவதும் ஆராய்ந்தான். அது ஜப்பான் தீவுகளில் ஒன்றாயிருக்குமா. சீனாவைச் சேர்ந்ததாக இருக்குமா என்று கண்டு பிடிக்க முயன்றான். அந்தத் தீவுமக்களுடன் சைகை மொழியில் பேசியதிலிருந்து தெற்கிலும் மேற்கிலும் அதுபோல் பல தீவுகள் இருப்பதாக அறிந்து கொண்டான். தன் கையில் இருந்த நிலப்படத்தில் ஜப்பானுக்குத் தெற்கே இருப்பதாகக் காட்டப்பட்டிருக்கும் தீவுக்கூட்டம் தான் இது என்று எண்ணினான் அவன். அப்படியே அது ஜப்பானாக இல்லாவிட்டாலும் சீனாவைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும் என்று நினைத்தான்.

எனவே அவன் ஆறு சிவப்பு இந்தியர்களைத் துணைக்குக் கொண்டு மற்ற தீவுகளைக் கண்டுவரப் புறப்பட்டான். அக்டோபர் 14-ம் நாள் மற்றொரு தீவைக் கண்டு அதற்கு சாண்டா மாரியா என்று பெயரிட்டான். அந்தத் தீவு மக்களும் சான்சால்வடாரில் உள்ளவர்களைப் போலவே யிருந்தார்கள்.

கடல் தளபதி வெகுமதியாய்க் கொடுத்த சிவப்புக் குல்லாக்களும், பாசிகளும், வல்லூறு மணிகளும் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தன. சில இடங்களில் டாயினோ என்ற இனத்தவர்களாகிய இந்தச் சிவப்பு இந்தியர்கள், கொலம்பசின் கப்பலைச் சூழ்ந்து கொண்டு, "சக் சக் சக் சக்" என்று கூச்சலிட்டுக் கேட்டார்கள். "வல்லூறு மணி மேலும் வேண்டும்" என்பதற்குத் தான் இந்தக் கூச்சல்! வல்லூறு மணி என்பவை சின்னஞ்சிறிய மணிகளாகும். இவற்றில் ஒன்றை வளர்க்கும் பறவையின் கழுத்தில் அல்லது காலில் கட்டி விட்டுவிட்டால், அது வானில் பறக்கும் போது மணியடித்துக் கொண்டே போகும். மெல்லிய இந்த மணியோசை காதுக்கு மிக இனிமையாயிருக்கும். இந்த மணியையும், பாசியையும் குல்லாவையும் கொடுத்துத்தான், வெள்ளையர்கள் பிற நாடுகளிலிருந்து பல அரும் பொருள்களை அந்நாளில் கைப்பற்றிக் கொண்டு சென்றார்கள்.

தனக்கு வழி காட்டிய ஆறு டாயினோக்களையும் கொலம்பஸ் அடிக்கொரு தடவை "தங்கம் எங்கேயிருக்கிறது?" என்று கேட்டான். அவர்கள் தங்கள் நாடு முழுவதையும் கொலம்பசுக்குக் காட்டிவிட எண்ணினார்களோ, அல்லது அவனைத் திருப்திப்படுத்த எண்ணினார்களோ, ஒவ்வொருமுறை அவன் கேட்ட போதும் அடுத்த தீவில் நிறையக் கிடைக்கும்!" என்று தங்கள் சைகை மொழியின் மூலம் கூறிக் கொண்டு வந்தார்கள். தங்கத்தைக் காணும் ஆவலால் அவன் அங்கிருந்த கோணல் மாணல் தீவுகள் எல்லாவற்றையுமே சுற்றிப் பார்த்து விட்டான். ஆனால் தேடிப் போன தங்கம் தான் எங்கும் தட்டுப் படவேயில்லை. அவர்கள் மூக்குகளில் தொங்கிய தங்க வளையம் வேறு எங்கிருந்தோ கிடைத்தது. அதை அவர்களால் விளங்கச் சொல்லவும் முடியவில்லை. கொலம்பஸ் கூட்டத்தினரால் அதைப் புரிந்து கொள்ளவும் முடியவில்லை.

சில நாட்கள் பழகிய பிறகு, இரு சாராரும் ஓரளவு தெளிவாகப் புரிந்துகொள்ளத் தொடங்கினார்கள். கோல்பா என்ற பெரிய தீவு ஒன்று இருப்பதாக டாயினோக்கள் கூறினார்கள். அது தான் ஜப்பான் தீவாகவோ அல்லது சீனப் பேரரசின் ஒரு பாகமாகவோ இருக்க வேண்டும் என்று எண்ணினான் கொலம்பஸ், உடனே அதற்குப் போக வேண்டும் என்று துடித்தான். டாயினோக்கள் கொலம்பசைத் தாங்கள் வழக்கமாகச் செல்லும் ஓடப் பாதையில் அழைத்துச் சென்றார்கள். இரண்டு மூன்று தீவுகளைக் கடந்து கடைசியில் கோல்பாத் தீவில் உள்ள பாகியா பாரியே என்ற துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அந்தத் துறைமுகம் மிக அழகாக விளங்கியது. இயற்கைக் காட்சியின் எழில் அங்குதான் பூத்துக் குலுங்கியது. ஆனால் அதுதான் ஜப்பான் என்பதற்குரிய அடையாளம் எங்கே? தங்கக் கோபுரங்களோடு கூடிய கோவில்கள் எங்கே? பறக்கும் நாகப்பாம்பின் வாய் போன்ற பீரங்கிகள் எங்கே? தங்கச் சரிகை மின்னிப் பளபளக்கும் பட்டாடையணிந்த சீமான்களும் சீமாட்டிகளும் எங்கே? எவ்விதமான சான்றும் அவன் கண்ணில் தட்டுப்படவில்லை. அடுத்த நாள் அவர்கள் கியூபா என்று இன்று அழைக்கப்படும் அந்தக் கோல்பாத் தீவின் மேற்குக் கரைத் துறைமுகங்களின் வழியாக அழைத்துச் செல்லப்பட்டார்கள். அவர்களுடைய வியாபாரப் பொருள்கள் அங்கிருந்த மக்களுக்கு மிகப் பிடித்திருந்தன. அவர்களில் சிலர் வெள்ளையர்களைத் திருப்திப் படுத்துவதற்காக அந்தத் தீவின் உட்பகுதியில் உள்ள குபனாக்கன் என்ற ஊரில் தங்கம் கிடைக்கும் என்று கூறினார்கள். அந்தக் குபனாக்கன் என்ற ஊரில் தான் சீனப் பேரரசின் அரண்மனை இருக்க வேண்டும் என்று கொலம்பஸ் எண்ணினான். உடனே அந்த ஊருக்கு அவன் ஒரு தூதுக் குழுவை அனுப்ப ஏற்பாடு செய்தான். சீனப் பேரரசின் மாமன்னரான கான் பேரரசருக்கு என்று ஸ்பெயின் நாட்டு மாமன்னரும் பேரரசியும் கொடுத்த அறிமுகக் கடிதத்தை எடுத்தான். ஏற்கெனவே கினியா நாட்டில் ஒரு நீக்ரோ அரசரைப் பேட்டி கண்டு வந்த அனுபவமுடைய ரோட்ரிகோ என்பவனையும், அரபு மொழியில் சிறந்த பாண்டித்தியமுடைய லூயிஸ் டிடோரிஸ் என்பவனையும் தன் தூதர்களாக நியமித்து அவர்கள் கையில் மாமன்னரின் அறிமுகக் கடிதத்தைக் கொடுத்து அனுப்பினான் கொலம்பஸ்.

சிவப்பு இந்திய வழிகாட்டிகளின் துணையோடு அந்தத் தூதர்கள் குபனாக்கன் சென்றார்கள். அவர்கள் எதிர் பார்த்த மாடமாளிகைகளும் கூடகோபுரங்களும் அங்கேயில்லை. ஐம்பது கூரைக் குடிசைகள் தான் காட்சியளித்தன. சட்டை போட்டுக் கொண்டு வந்த அந்த இரண்டு வெள்ளைக்காரர்களையும் வானத்திலிருந்து குதித்துவந்த தேவர்களாக மதித்து அந்த ஊர் மக்கள் ஓடோடி வந்து கும்பிட்டார்கள். தங்கள் தங்கள் கையில் இருந்த பொருள்களைக் கொண்டு வந்து படைத்தார்கள். நல்ல முறையில் விருந்தளித்தார்கள். ஆண்களும் பெண்களுமாக வந்து அவர்கள் பாதங்களை முத்தமிட்டுச் சென்றார்கள். ரோட்ரிகோ என்ற மாலுமிக்கு இதெல்லாம் பெருமையாக இருந்தது. ஏனெனில் ஆப்பிரிக்க நீக்ரோக்கள் அவனை இவ்வளவு மரியாதையாக நடத்தவில்லை. இது சிறந்த அனுபவமாக இருந்தது. ஆனால் அரபு மொழிப் புலவனான லூயிஸ் டிடோர்சுக்கு இதெல்லாம் ஒன்றும் பிடிக்கவேயில்லை. அந்தக் காட்டு மிராண்டிகளில் ஒருவனுக்குக்கூட அரபு தெரியவில்லை. என்ன பயன்?

அந்தத் தூதர்கள் இருவரும் துறைமுகத்துக்குத் திரும்பும் வழியில் ஒரு புது விஷயத்தைக் கண்டுபிடித்தார்கள். அந்தச் சிவப்பு இந்தியர்களில் சிலர் கையில் கொள்ளிக்கட்டை மாதிரி ஏதோ ஒன்று வைத்திருந்தார்கள். அதை அடிக்கடி வாயில் வைத்து இழுத்துப் புகை விட்டார்கள். அது என்ன என்று கேட்டதற்கு டுபாக்கோ என்று கூறினார்கள். அவர்களைப் பார்த்து ஸ்பானியர்கள் சுருட்டுப் பிடிக்கும் பழக்கத்தை மேற் கொண்டார்கள். பின்னால் சென்ற சென்ற நாட்டிலெல்லாம் ஸ்பானியர்கள் இந்தப் பழக்கத்தைப் பரப்பி விட்டார்கள். இன்று அது உலகெங்கும் பரவி விட்டது.

அந்தத் தூதுக் குழுவினரை யனுப்பிவிட்டு கொலம்பஸ் தான் கண்டு பிடித்த நாடு இந்தியா தான் என்பதற்கு ஆதாரங்கள் சேர்க்கத் தொடங்கினான். கருவப்பட்டை போல் மணக்கும் ஒரு பூண்டைக் கருவப்பட்டை என்று நினைத்துக்கொண்டு சேகரித்தான், அதுபோல் பசைப் பொருள் ஒன்றைக் கண்டு அதுதான் ஆசியாவில் கிடைக்கும் குங்கிலியம் என்று எண்ணிக் கொண்டான். ஏதோ ஒரு கொட்டையைக் கண்டெடுத்து அதுதான் மார்க்கோபோலே என்பவன் விளக்கிக் கூறியுள்ள தேங்காய் என்று நினைத்துக் கொண்டான். ஏதோ ஒரு வேர்க் கிழங்கை அவனுடைய ஆட்கள் தோண்டி எடுத்தார்கள், அது சீன நாட்டுக் கிழங்கு வகையைச் சேர்ந்ததென்று நினைத்தார்கள். ஆனால் அது சாப்பிடக்கூடாத கிழங்காகத் தோன்றியது. ஆகவே அதை அவர்கள் சேகரித்துக் கொள்ளவில்லை.

எதையெதையோ கண்டெடுத்து அவன் இந்தியாவிலும் ஆசியாவிலும் கிடைக்கும் பொருள்கள் தாம் என்று மனச் சமாதானம் அடைய முடிந்தது. ஆனால் தங்கம் மட்டும் அவன் கண்ணில் அகப்படவேயில்லை. அந்த டாயினோக்கள் எப்போதும் வேறு ஓர் இடத்தையே தங்கம் கிடைக்கும் இடமாகச் சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தார்கள். ஒரு முறை பாபேக்கு என்ற தீவில் மெழுகுவர்த்தி வைத்துக் கொண்டு தங்கம் தேடி எடுப்பார்கள் என்றும் பிறகு அதைச் சுத்தியால் அடித்துக் கட்டியாக்குவார்கள் என்றும் சிவப்பு இந்தியர்கள் கூறினார்கள். இதை கேட்டு பிண்டா கப்பல் தலைவன் அலோன் சோபின்சோன் கொலம்பசிடம் அனுமதி வாங்காமலே அந்த பாபேக்குத் தீவைத் தேடிக்கொண்டு கப்பலைச் செலுத்திச் சென்று விட்டான். அங்கு போன பிறகுதான் மெழுகுவர்த்தி வைத்துக் கொண்டும் தங்கம் எடுக்கவில்லை; தீவட்டி வைத்துக் கொண்டும் எடுக்கவில்லை என்று தெரிந்தது.

கொலம்பஸ் ஒரு நாளும் சும்மா இருக்கவில்லை. சிவப்பு இந்தியர்களைத் துணைக்கு அழைத்துக்கொண்டு புதுப் புது இடங்களையெல்லாம் சுற்றிப் பார்த்தான். கடைசியாக சான் நிகோலஸ் துறைமுகத்தை யடைந்தான். அங்கு உண்மையிலேயே தங்கம் கிடைத்தது. அது இல்லாமல் அவன் ஸ்பெயினுக்குத் திரும்பியிருந்தால், அவன் எதையோ பார்த்துவிட்டு வந்து இந்தியா என்று சொல்லுகிறான் என்றல்லவா மக்கள் கேலி புரிவார்கள்!

அழகு பொருந்திய ஒரு தீவைக் கண்டு அதற்கு லா ஐலா எஸ்பனோலா என்று பெயரிட்டான் கொலம்பஸ். அந்தத் தீவில் நன்றாக மழை பிடித்துக் கொண்டதன் காரணமாக ஐந்தாறு நாட்கள் தங்கும்படி நேரிட்டது. அவனுடைய கப்பல் மாலுமிகளில் மூவர், ஓர் இளம் பெண்ணை யாருக்கும் தெரியாமல் பிடித்துக் கொண்டுவந்து விட்டார்கள். அவள் தங்க மூக்கு வளையத்தைத் தவிர வேறு எதுவுமே அணிந்திருக்கவில்லை. அவள் டாயினோ இனத் தலைவன் ஒருவன் மகள். கொலம்பஸ் தன் மாலுமிகளைக் கடிந்துகொண்டு, அந்தப் பெண்ணுக்கு நாகரிக உடையுடுத்தி விட்டுக் கைநிறையப் பொருள்களைக் கொடுத்து ஊருக்குள் அனுப்பி விட்டான். இந்த உத்தமச் செயலைக் கண்டு அந்த ஊர் மக்கள் கொலம்பசையும் ஸ்பானியர்களையும் மிக மதித்துப் போற்றினார்கள். மறுநாள் ஒன்பது மாலுமிகளை அழைத்துச் சென்று ஆயிரம் பேர் கூடிய கூட்டத்தில் அவர்களுக்கு விருந்து வைத்துச் சிறப்பித்தார்கள். தங்கள் கையில் இருந்த பொருள்களை யெல்லாம் அம்மக்கள் பரிசாகக் கொடுத்து மகிழ்ந்தார்கள்.

டிசம்பர் மாதம் 20-ஆம் நாள் அக்குல் வளைகுடாவை யடைந்தான் கொலம்பஸ். ஹைட்டி என்ற அந்தப் பிரதேசத்து மக்கள் மற்ற டாயினோக்களைவிட வெள்ளையுள்ளம் படைத்தவர்களாயிருந்தார்கள். ஆண்களும் பெண்களும் ஆடைகள் எதுவுமற்றுப் பிறந்த மேனியாய் இருந்ததோடு மட்டுமல்லாமல், அந்நியர்கள் எதிரில் நிற்க நாணங் கொள்ளவும் இல்லை. அந்த மக்களிடம் தங்கம் நிறைய இருப்பதாகத் தெரிந்தது. வெள்ளைக்காரர்களையும் அவர்களுடைய கப்பல்களையும் கண்டு அந்த மக்கள் அதி ஆச்சரியம் கொண்டார்கள். ஆயிரம் பேருக்கு மேல் ஓடங்களில் வந்து கப்பலைச் சூழ்ந்து கொண்டார்கள். கரையிலிருந்து மூன்று மைல் தூரத்தில் நங்கூரம் பாய்ச்சி நின்ற கப்பலுக்கு சுமார் ஐநூறு பேர் நீந்தியே வந்து சேர்ந்து விட்டார்கள்.

உடையணிந்த அதிசய மனிதர்கள் எங்கிருந்தோ வந்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்ட உடனே, ஹைட்டிக்கு வட மேற்கேயுள்ள பிரதேசத்தில் உள்ள குவாக்க நாகரி என்ற தலைவன் ஓர் ஆள் அனுப்பினான். அந்தத் தூதன் வெள்ளையர்களைத் தங்கள் தலைவன் வரவேற்க விரும்புவதாகத் தெரிவித்தான். குவாக்க நாகரி ஆளும் பகுதியில் நிறையத் தங்கம் கிடைக்கும் என்று வேறு சொன்னார்கள். கொலம்பஸ் தாமதிக்கவில்லை. டிசம்பர் 24-ஆம் நாள் பொழுது புலரு முன்பாகவே அக்குல் வளைகுடாவை விட்டு இரண்டு கப்பல்களும் புறப்பட்டன. குவாக்க நாகரியின் அரண்மனையில் கிறிஸ்துமஸ் விழாவை இன்பமாகக் கொண்டாடலாம் என்று மாலுமிகள் ஆனந்தங் கொண்டார்கள். தலைவன் குவாக்க நாகரியே ஜப்பானியச் சக்கரவர்த்தியாக இருக்கக்கூடும் என்று கூட எதிர்பார்த்தார்கள். ஆனால், அந்த ஆண்டு கிறிஸ்துமஸ் அவர்களுக்கு இன்பத் திருநாளாக இல்லை. துக்க தினமாகவே முடிந்தது. அக்குல் வளைகுடாவிலிருந்து சில மைல் தூரத்திலேயேயுள்ள காரகோல் வளைகுடாவை அடைவது மிகக் கஷ்டமாயிருந்தது. ஒருநாள் முழுதும் கலம் செலுத்தியும் துறைமுகத்தையடைய முடியவில்லை. முதல் நாள் இரவு ஹைட்டி மக்கள் கொடுத்த விருந்திலும் அவர்கள் ஆட்டபாட்டங்களைக் கண்டதிலும் எல்லோருக்கும் தூக்கம் கெட்டிருந்தது. ஆகவே மறுநாள் எல்லோரும் அசந்து போயிருந்தார்கள். ஆகவே அன்று இரவு 11 மணிக்குமேல் கடல் அமைதியடைந்து விட்டபடியாலும் வேகமான காற்று இல்லாதபடியாலும் சாண்டா மாரியா கப்பலில் எல்லோரும் தூக்கத்தில் ஆழ்ந்து விட்டார்கள். சுக்கான் பிடிக்கிறவனும் ஒரு பையன் கையில் சுக்கானைக் கொடுத்துவிட்டுத் தூங்கப் போய்விட்டான். பையனுக்கு என்ன தெரியும். பாவம். அவன் பாடு சுக்கானைப் பிடித்துக் கொண்டு நின்றான். கப்பல் எந்தப் பக்கம் திரும்பினாலும் சுக்கான் அவன் கையில் தான் இருந்தது! சரியாகப் பணிரெண்டு மணிக்கு சாண்டா மேரியாக் கப்பல் மெல்லச் சென்று நீருக்கடியில் இருந்த ஒரு பவளப் பாறையில் மோதியது. அதிர்ச்சியைக் கேட்டு கொலம்பஸ் மேல் தட்டுக்கு ஓடி வந்தான். அவன் பின்னாலேயே கப்பலோட்டி லாகோசா ஓடி வந்தான். வேறு சிலரும் வந்தனர். கப்பலின் முன்பகுதி மட்டுமே யுடைந்திருந்தது கண்ட கொலம்பஸ், கப்பலைப் பின்னுக்கு நகர்த்துவதன் மூலம் எளிதாகக் காப்பாற்றி விடலாம் என்று கண்டு கொண்டான். கப்பலோட்டி லாகோசாவையும் சில மாலுமிகளையும் பின்பகுதி சென்று நங்கூரம் பாய்ச்சும்படி கட்டளையிட்டான். உயிருக்குப் பயந்த அந்தக் கோழைகள் உத்தரவுக்குப் பணியாமல் ஒரு படகை இறக்கிக் கொண்டு நைனா கப்பலுக்குச் சென்றார்கள். ஆனால், நிலைமையையுணர்ந்த நைனா கப்பலின் தலைவன் வைசென்டி பிக்சோன் அந்தக் கோழைகளைத் தன் கப்பலில் ஏற்றிக் கொள்ள மறுத்துவிட்டான். தன் கப்பல் ஆட்களை ஒரு படகில் இறக்கி சாண்டா மாரியாவின் உதவிக்கு அனுப்பினான்.

அவர்கள் வந்து சேர சுமார் ஒரு மணி நேரம் பிடித்தது. அதற்குள் சாண்டா மாரியாவின் அடிப் பகுதியும் பாறைகளின் கூர் முனைகளால் துளைக்கப் பெற்று உடைந்து போய் விட்டது, கப்பலில் நீர் குபுகுபுவென்று புகுந்தது. அதன் பின் கப்பலை விட்டுத் தப்பிப் போகும்படி எல்லோருக்கும் கட்டளையிட்டான். காலையில் குவாக்க நாகரியின் குடிமக்கள் சாண்டா மேரியாவைக் காப்பாற்றத் தீவிரமாக ஒத்துழைத்தார்கள். ஆட்களனைவரும் இரவே கப்பலை விட்டுத் தப்பி மறுக்கப்பல்களுக்குப் போய்விட்டார்கள். சிவப்பு இந்தியர்களின் உதவியால் கப்பலில் இருந்த சரக்குகளும், உணவுப் பொருள்களும் ஆயுதங்களும் காப்பாற்றப்பட்டு விட்டன. ஆனால் சாண்டா மேரியாவைக் காப்பாற்ற முடியவில்லை. குவாக்க நாகரியின் குடி மக்களாகிய அந்த சிவப்பு இந்தியர்கள் கப்பலிலிருந்து காப்பாற்றிய பொருள்களை யெல்லாம் பத்திரமாகப் பாதுகாத்து கொலம்பசிடம் ஒப்படைத்தார்கள்.

தெய்வ நம்பிக்கையுடைய கொலம்பஸ், கப்பல் உடைந்ததன் காரணம் என்னவாயிருக்கும் என்று சிந்தித்தான். கப்பல் உடைந்ததை ஒரு சகுனமாகக் கொண்டால், அந்தச் சகுனத்தின் பொருள் என்ன என்று தீவிரமாகச் சிந்தித்தான். பக்தியோடு கூடிய அந்தச் சிந்தனையின் பலனாக அதன் பொருள் அவனுக்கு விளங்கி விட்டது. சாண்டா மேரியா கப்பலில் உள்ள மாலுமிகளைக் கொண்டு அந்தப் பகுதியை ஒரு குடியேற்ற நாடாகக் கொள்ளுமாறு இறைவன் கட்டளையிடுகிறார் என்பதே சகுனபலன் என்று அவன் கண்டறிந்தான். தலைவன் குவாக்க நாகரியும் அந்தக் கருத்தை வரவேற்றான். வெள்ளையர்களின் துப்பாக்கி பலம் இருந்தால் பகைவர்களுக்கு அஞ்சாமல் வாழலாம் என்று எண்ணினான். அந்தப் பழங்குடி மக்களின் தலைவன். அந்தப் பகுதியில் தங்கம் நிறையக் கிடைப்பதற்குரிய அடையாளங்கள் தென்பட்டதால் மாலுமிகளில் சிலர் அங்கேயே குடியேறி வாழ ஒப்புக் கொண்டனர். எனவே கொலம்பஸ் அந்தப் பகுதியில் ஒரு கோட்டை கட்ட உத்தர விட்டான். சாண்டா மேரியாவின் உடைந்த மரத் துண்டுகளையும், பிறவற்றையும் கொண்டு கோட்டை கட்டினார்கள். அந்த இடத்திற்கு கிறிஸ்துமஸ் நகர் என்ற பொருள்படும் நாவிடாட் எனும் பெயரைச் சூட்டினான் கொலம்பஸ். சாண்டா மேரியாவின் மாலுமிகளில் பெரும் பகுதியினரும், நைனா கப்பலைச் சேர்ந்த சிலரும் சேர்ந்து அங்கேயே தங்கினார்கள். கொலம்பஸ் அவர்களுக்காக, வாணிபப் பொருள்களில் பெரும் பகுதியும் உணவுப் பொருள்களில் பெரும் பகுதியும். சாண்டா மேரியாவில் பயன்பட்ட படகுகள் அனைத்தையும் கொடுத்தான். அந்தப் பகுதி முழுவதையும் ஆராய்ந்து தங்கம் கிடைக்கும் இடத்தைக் கண்டு பிடிக்கும்படியும் அந்தப் பழங் குடிமக்களிடம் அன்பாக நடந்து கொள்ளும்படியும் கொலம்பஸ் அவர்களுக்கு அறிவுரை கூறினான். இஸ்பானியோலா என்ற அந்தப் பகுதி ஜப்பானாக இல்லா விட்டாலும், இந்திய நாடுகளின் ஒரு பகுதிதான் என்று அப்போதும் கொலம்பஸ் திண்ணமாக நம்பினான். எப்படியோ பொன் வளம் நிறைந்த ஒரு புத்துலகைக் கண்டு பிடித்துவிட்டோம் என்ற மனநிறைவோடு அவன் 1493-ஆம் ஆண்டுப் பிறப்பன்று புறப்பட ஆயத்தமானான். அன்று குவாக்க நாகரி பிரிவுபசார விருந்து ஒன்று நடத்தினான். அன்புரைகள் பரிமாறிக் கொண்ட பின் நைனாக் கப்பலில் அவன் தாய் நாடு நோக்கிப் புறப்பட்டான். பிண்டாக் கப்பல் சென்ற வழி தெரியவில்லை. ஆகவே, மூன்று கப்பல்களுடன் வந்த அவன், ஒன்றை இழந்து, ஒன்றை வேறு எங்கோ விட்டு விட்டு, ஒன்றை மட்டும் கொண்டு திரும்ப நேர்ந்தது.

ஆனால் இரண்டு நாட்களுக்குப் பின் வழியில் பிண்டா கப்பல் வேறொரு திசையில் சென்று கொண்டிருப்பதைக் கண்டான். அதுவும் தாய் நாடு நோக்கித்தான் திரும்பிக் கொண்டிருந்தது. ஒன்றையொன்று நெருங்கியவுடன் கப்பல் தலைவன் அலோன் சோபின்சோன் நைனாவுக்கு வந்து சேர்ந்தான். அலோன்சோ கூறிய விபரங்களிலிருந்து அவனும் இஸ்பானியோலா பகுதியில் சியோ என்ற இடத்தில் தங்கம் நிறைய இருப்பதைக் கண்டு பிடித்ததாகத் தெரிந்தது. தலைமைக் கப்பல் உடைந்த செய்தியை சிவப்பு இந்தியர்களிடையே பரவிய வதந்தியின் மூலம் அறிந்ததாகக் கூறினான் அலோன்சோ. நடந்ததைப் பற்றி இனிக் கவலைப்பட்டுப் பயனில்லை என்று கருதினான் கொலம்பஸ்.

திரும்பும் வழியில் அவர்கள் இரண்டு கப்பல்களையும் இஸ்பானியோலா கரையோரமாகவே செலுத்திக் கொண்டு போனார்கள். அவ்வழியில் இன்றும் அம்பு முனை என்று அழைக்கப் படுகிற இடத்தை அடைந்தவுடன் அம்புகளை உபயோகப்படுத்தும் குடிமக்களை முதன் முதலாகக் கண்டார்கள். அந்தக் குடிமக்கள், வெள்ளையர்களை வெறுப்புக் கண்ணோடு நோக்கினார்கள். டாயினோக்களின் ஒரு பிரிவினரான சிகுவாயோ இனத்தைச் சேர்ந்த இக்குடி மக்கள் கரிபிய இனத்தினரிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள அம்புகளைப் பயன்படுத்தி வந்தார்கள். சிகுவாயோ ஒருவனைப் பிடித்து அவனை அன்புடன் நடத்திப் பரிசுகள் கொடுத்து அனுப்பிக் காட்டியதன் மூலம் அவர்கள் வெறுப்புணர்ச்சியைத் தணிக்க முடிந்தது. இருந்தாலும் மிகுந்த எச்சரிக்கையோடு அவர்களிடம் வியாபாரம் நடத்த வேண்டியிருந்தது. ஏற்கெனவே கப்பலில் ஸ்பெயினுக்குக் கொண்டு போக ஏற்றியிருந்த சிலரோடு, சேர்ந்து கொள்ளும்படி கேட்டதில் அங்கிருந்து ஒன்றிரண்டு பேர் கப்பலில் ஏறிக் கொண்டார்கள்.

மாட்டினினோ என்ற தீவில் கரிபியப் பெண்கள் மட்டுமே இருந்து வருவதாகவும் அங்கு ஆண்டுக்கொரு முறைதான் ஆண்கள் போகமுடியு மென்றும், குறிப்பிட்ட காலம் ஆனபின் அங்கு வந்த ஆண்கள் அனைவரையும் பெண்கள் விரட்டி விடுவார்களென்றும் கொலம்பஸ் கேள்விப்பட்டிருந்தான். ஆனால் உண்மை அப்படியில்லை. கரிபியப் பெண்கள் ஆண்களோடு சரிநிகர் சமானமாக நின்று பகைவருடன் போராடுவார்கள். ஆண்கள் துணையில்லாத போது தனித்து நின்று போராடவும் தயங்க மாட்டார்கள். கொலம்பஸ் அந்தத் தீவில் இறங்க எண்ணியிருந்தாலும், தாய் நாடு செல்லத் தோதாகக் காற்று அடிக்கத் தொடங்கியதால், விரிந்த ஆழ்கடலில் இரண்டு கலங்களையும் செலுத்திக் கொண்டு புறப்பட்டு விட்டான்

திரும்பி வரும் வழியில் பிப்ரவரி மாதம் 12ஆம் நாள் காற்றின் வேகம் அதிகரித்தது. நேரம் ஆக ஆக வேகம் கூடியது. கடல் கொந்தளித்தது 13-14-ஆம் நாட்களில் இரு கப்பல்களும் பார்வைக் கெட்டாத தூரத்தில் விலகி விட்டன. அதன் பின் நாடு போய்ச் சேரும் வரையில் இரு கப்பல்களும் சந்திக்கவேயில்லை. காற்றின் வேகம் பயங்கரமாக அதிகரித்தவுடன், மாலுமிகள் எல்லோரும் கன்னிமரியாளை வேண்டிக் கொண்டார்கள். "மேரி மாதா, எங்களை எந்த விதமான ஆபத்துமில்லாமல் கரையில் சேர்த்து விடு. முதலில் எந்த ஊரில் இறங்குகிறோமோ அந்த ஊரில் உள்ள உன் கோயிலுக்கு எல்லோரும் அணிந்துள்ள சட்டையோடு ஊர்வலமாக நடந்து வந்து தொழுகை செய்கிறோம்" என்று வேண்டிக் கொண்டார்கள். அதன் பிறகு காற்றின் வேகம் குறையத் தொடங்கியது. பிப்ரவரி 15-ஆம் நாள் காலையில் அசோர்சுத் தீவுகளில் ஒன்றான சாண்டா மரியாவின் துறைமுகத்தில் வந்து நங்கூரம் பாய்ச்சினார்கள். அஞ்சோஸ் என்ற கிராமத்தின் அருகில்தான் அவர்கள் கப்பலை நிறுத்தினார்கள். உடனே கரையில் இறங்கித் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற மாதா கோவிலுக்குச் சென்றார்கள்.

மாதா கோயிலிலே அவர்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோது அந்த ஊர் மக்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டு பிடித்துச் சிறையில் அடைத்து விட்டார்கள். அந்தத் தீவு போர்ச்சுகீசியர் ஆதிக்கத்தில் இருந்தது. அதன் தலைவன், யாரோ கள்ளத்தனமாக மேற்கு ஆப்பிரிக்கா போய் வருபவர்கள் என்று எண்ணித்தான் மாலுமிகளைச் சிறையில் அடைத்தான். கொலம்பசும், சில மாலுமிகளும் பிறகு கோயில் போகலாம் என்று கப்பலில் தங்கி யிருந்தார்கள். அவர்களைக் கைது செய்வதற்காக அந்தத் தீவின் தலைவன் சென்றான். கொலம்பஸ் அவனைக் கப்பலில் ஏற அனுமதி மறுத்ததோடு, தன் ஆட்களை விடுவிக்காவிட்டால், அந்த ஊரைச் சுட்டுத் தீர்ப்பதாகவும், பதிலுக்கு ஆட்களைப் பிடித்துக் கொண்டு போவதாகவும் பயமுறுத்தினான்.

சிறிது நேரத்தில் ஒரு புயல் காற்று வீசியது. அதில் கப்பலின் கம்பிகள் அறுந்து போயின. கப்பலும் சிறிது தூரம் தள்ளிக் கொண்டு போகப்பட்டது. புயல் நின்று அது திரும்பி வருவதற்குள் தீவின் தலைவனுக்கு நல்ல புத்தி வந்து விட்டது. பிடிப்பட்ட மாலுமிகளைத் துன்புறுத்தியதிலிருந்து அவன் உண்மையை அறிந்து கொண்டான். அவர்களை விடுவித்ததோடு கப்பலுக்கு வேண்டிய உணவுப் பொருள்களையும் வழங்கினான்.

பிப்ரவரி மாதம் 24-ஆம் நாள் அங்கிருந்து இரண்டு கப்பல்களும் புறப்பட்டன. எவ்விதமான இடையூறுமின்றி ஒழுங்காகச் சென்றிருந்தால் ஒரு வாரத்தில் ஐரோப்பாவை எட்டிப் பிடித்திருக்கலாம். ஆனால் 26-ஆம் நாள் ஆரம்பித்த புயலில் நைனாக் கப்பல் திசை மாறி விட்டது. மார்ச் 2-ஆம் நாள் சுழல் காற்று வேறு சூழ்ந்து கொண்டது. எப்படியோ புயலுக்குத் தப்பி போர்ச்சுக்கல் நாட்டை நெருங்கிக் கொண்டிருந்தது கப்பல். அப்போது கப்பலில் கிழியாமல் இருந்தது ஒரே ஒரு பாய் தான். லிஸ்பன் துறை முகத்தில் கப்பலை நிறுத்திப் பழுது பார்த்துக் கொண்டு பிறகு புறப்படலாம் என்று எண்ணினான் கொலம்பஸ். ஆனால் இரண்டாவது ஜான் அரசன் தன்னை எப்படி நடத்துவானோ என்று ஒரு விதமான திகிலும் அவனுக்கு இருந்தது. இருந்தாலும் லிஸ்பன் துறைமுகத்தில் நுழைந்து கப்பலை நங்கூரம் பாய்ச்சினான். சிறிது தூரத்தில் ஒரு பெரிய யுத்தக் கப்பல் நின்று கொண்டிருந்தது. அதன் தலைவன் பார்த்தலோமியோ டயஸ் என்பவன். நன்னம்பிக்கை முனையைக் கண்டு பிடித்த பெருமையுடையவன். அவன் ஆயுதப் படை பொருந்திய ஒரு படகில் வந்து கொலம்பசை யுத்தக் கப்பலுக்கு வரும்படி அழைத்தான். கொலம்பசும் அவனும் முன்பே அறிமுகமானவர்கள்தான். இருந்தாலும் அவன் தன்னிடம் வந்து விவரம் கூறவேண்டுமென்று அதிகார தோரணையில் ஆணையிட்டான் டயஸ். கொலம்பஸ் இப்போது சாதாரணக் கப்பல் தலைவன் அல்லன்; புதிய நாடுகளைக் கண்டு பிடித்ததன் மூலம் ஸ்பெயின் பேரரசரால் கடல் தளபதி என்ற பெரும்பதவியை எய்தியவன். தன்னிலும் குறைந்த பதவியிலுள்ள ஒருவனுடைய அதிகாரத்திற்குக் கட்டுப்படுவது தன் மதிப்புக்கு குறைவு என்று கருதி, டயஸ் ஆணைக்குக் கீழ்ப்படிய மறுத்தான். இருந்தாலும் தனக்குப் பதவி வழங்கிய பத்திரங் களை அவன் டயசுக்கு எடுத்துக் காட்டினான். டயசும் அதை ஒப்புக்கொண்டு நட்பு முறையில் நைனாக் கப்பலுக்கு வந்து கொலம்பசோடு அளவளாவினான். கொலம்பஸ் அனுமதி கேட்டு எழுதிய கடிதத்துக்கு ஜான் அரசரிடமிருந்து பதில் வந்தது. துறைமுகத்தில் கப்பல் தங்குவதற்கு அனுமதித்ததோடு உணவுப் பொருள்கள் ஏற்றிக் கொள்ளவும் அனுமதி கொடுத்திருந்தார். அத்தோடு தன்னை வந்து சந்திக்கும்படியும் அவனை வேண்டிக் கொண்டிருந்தார்.

கொலம்பஸ் மனத்திற்குள் ஒரு பெரும் போராட்டம் எழுந்தது. ஜான் அரசரைப் போய்ப் பார்க்காவிட்டால் அவருக்குக் கோபம் வரும். அவரைப் பார்த்து விட்டுப் புறப்பட்டால் முதலில் தன்னைப் பார்க்கவில்லை என்று அரசி இசபெல்லாவுக்குக் கோபம் வரும். யார் கோபத்தைத் தாங்குவது என்று அவனுக்குப் புரியவில்லை. வேண்டுகோளை மறுக்க முடியாமல் இரண்டு மூன்று மாலுமிகளையும், சில சிவப்பு இந்தியர்களையும் கூட்டிக் கொண்டு ஜான் அரசரைப் போய்ப் பேட்டி கண்டான். எல்லோரும் மட்டக் குதிரைகளில் ஏறிக் கொண்டு முப்பது மைல் தூரத்தில், ஜான் அரசர் தங்கியிருந்த ஒரு மடத்திற்குச் சென்றார்கள். ஏற்கனவே முன்பின் ஏறியறியாத கப்பலில் ஏறிக் கஷ்டப்பட்டுக் கொண்டு வந்த சிவப்பு இந்தியர்கள், இப்போது குதிரை முதுகில் ஏறி அதிக சிரமப்பட்டார்கள். அத்தோடு போர்ச்சுக்கல் வீதிகள் மிகவும் குறுகலானவை என்பதோடு சகதி நிறைந்தவை.

கொலம்பசுடன் பேசிய ஜான் அரசன் அன்பொழுகப் பேசினாலும், உள்ளத்திற்குள் ஆத்திரங் கொண்டிருந்தான். கொலம்பஸ் தான் கண்டு பிடித்த நாடுகளைப் பற்றிக் கதை கதையாகக் கூறியதைக் கேட்ட பிறகும் அவன் முன்பே போர்ச்சுக்கல் நாட்டவர் கண்டு பிடித்த இடங்களுக்கே சென்று வந்தானோ என்று சந்தேகப் பட்டான். ஆனால், அவன் கூடக் கொண்டு வந்திருந்த சிவப்பு இந்தியர்களைக் கண்டதும் அந்தச் சந்தேகம் நீங்கியது. அவர்களைப் போன்ற தோற்றமுடைய மக்களை அவன் அதற்கு முன் பார்த்ததில்லை.

போர்ச்சுக்கல் அரசரையும் அரசியையும் பார்த்து விட்டு கொலம்பஸ் திரும்பி வந்தபோது நைனா கப்பல் பழுது பார்க்கப்பட்டுப் புதுப் பாய் மரங்களுடன் புறப்படத் தயாராக அழகாக நின்றது. வேண்டிய உணவுப் பொருள்களும் ஏற்றப்பட்டிருந்தன.

கொலம்பஸ் ஏறிவந்த நைனா கப்பல் திசைமாறிய பின், அலோன் சோ பின்சோன் நடத்தி வந்த பிண்டா கப்பல் வேறொரு திசை வழியாக ஸ்பெயினுக்கு வந்து சேர்ந்தது. அக்கப்பல் புயலின் கொடுமைகளுக்குத் தப்பி விட்டது. லிஸ்பனிலிருந்து நைனா புறப்பட்டு ஸ்பெயினை நோக்கிச் சென்றது. செல்லும் வழியில் அதன் பின்னாலேயே கண்ணுக் கெட்டாத தூரத்தில் பிண்டாவும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. அலோன்சோ பின்சோன், முன்னதாகவே ஸ்பெயினின் வடக்குப் பகுதியில் உள்ள யயோனாத் துறைமுகத்தில் தன் கப்பலை நிறுத்தி, பார்செலோனா என்ற ஊரில் தங்கியிருந்த பேரரசர் பெர்டினாண்டுக்கும் பேரரசி இஸபெல்லாவுக்கும் செய்தியனுப்பினான். தான் நேரில் வந்து சந்திக்க அனுமதி கேட்டிருந்தான். ஆனால், அவர்கள் கொலம்பசே நேரில் வந்து கூறட்டும் என்று கூறி அனுமதி வழங்க மறுத்து விட்டார்கள். அங்கிருந்து புறப்பட்டவன்தான் விஸ்பனிலிருந்து வந்த நைனாவைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான்.

மார்ச் 15-ஆம் நாள் பாலோஸ் துறைமுகத்தில் நைனா கப்பல் நங்கூரம் பாய்ச்சியது. பின்னால் வந்து கொண்டிருந்த பிண்டாவும் அங்கு வந்து சேர்ந்தது. ஏற்கனவே அங்கு நின்று கொண்டிருந்த நைனாவைக் கண்டதும், தனக்கு ஒரு மாதம் முன்னதாகவே அது வந்து விட்டதுபோல் எண்ணிக் கொண்டான் பிண்டாக் கப்பலின் தலைவன். அரசரும் அரசியும் தன்னைக் காண மறுத்தது வேறு அவனுக்குத் தாங்க முடியாத அவமானமாக இருந்தது: கடுமையான கடற் பயணம் வேறு முதுமையான அவன் உடலைப் பாதித்திருந்தது. கப்பலைப் பாலோஸ் துறைமுகத்தில் நிறுத்திய அவன், கொலம்பசையோ வேறு யாரையுமோ பார்க்காமல் நேரே தன் வீட்டுக்குப் புறப்பட்டு விட்டான். உடலும் உள்ளமும் பாதிக்கப்பட்ட அவன் நோய் வாய்ப்பட்டு சுமார் ஒரு மாதத்தில் மனக் குறையுடனேயே இறந்து போய் விட்டான்.

கொலம்பஸ் லிஸ்பனில் இறங்கியபோது தன் பயணத்தின் விபரத்தைக் குறித்துக் கடிதம் எழுதி பேரரசியாருக்கும் பேரரசரக்கும் அனுப்பி விட்டான். பாலோஸ் துறை முகத்தில் இறங்கியவுடன் மீண்டும் அந்தக் கடிதத்தின் நகல் ஒன்றைப் பேரரசியார்க்கு அனுப்பினான். சோர் டோலா என்ற ஊரில் அவன் திருமணம் செய்து கொள்ளாமல் எடுத்து வைத்திருந்த மனைவி பீட்ரிஜுக்கும் செய்தி யனுப்பினான். அவள் மூலம் அவனுக்குப் பிறந்த பையன் ஒருவன் இருந்தான். அவனுக்கு அப்போது ஐந்து வயதிருக்கும். அவன் முதல் மனைவியின் மகனும் அப்போது அவளுடன் இருந்தான்.

ஏப்ரல் மாதம் 7-ஆம் நாள் அரசி இசபெல்லாவும் அரசர் பெர்டினாண்டும் கடிதம் எழுதியிருந்தார்கள். அதில் கொலம்பசின் பெயருக்கு முன்னால், அவனுடைய பட்டங்கள் குறிக்கப்பட்டிருந்தன.

தாம் கண்டு பிடித்த இந்தியத் தீவுகளின் ஆட்சித் தலைவரும் அரசப் பிரதிநிதியுமான பெரும் கடல் தளபதி டோன்கிரிஸ்டோபர் கோலோன் அவர்களுக்கு என்று அரசாங்க பாணியில் அவன் பெயர் குறிப்பிடப்பட்டு வந்த கடிதத்தின் மேலுறையைப் பார்த்தவுடனேயே அவனுக்கு ஆனந்தம் பொங்கி வழிந்தது. அந்தக் கடிதத்தில் மீண்டும் இரண்டாவது பயணம் ஒன்று சென்று வர ஆயத்தங்கள் செய்யும் படியும் குறிக்கப்பட்டிருந்தது.

தன் பயணத்தின் பலன் நிறைவெய்தியது என்ற களிப்புடன் அவன் அரசரையும் அரசியையும் காண ஆயத்தங்கள் செய்தான். அவர்களுக்குத் தன் எண்ணத்தை விளக்கி ஓர் அறிக்கையும் தயாரித்தான்.

இஸ்பானியோலா பகுதியில் ஸ்பெயின் மக்கள் குடியேறுவதற்கும். குடியேறித் தங்கித் தங்க வாணிபம் செய்வதற்கும் உள்ள வாய்ப்புக்களை எடுத்து விளக்கியிருந்தான். இரண்டாயிரம் பேர் வரை அங்குக் குடியேறலாம் என்றும், அவர்கள் அங்கு ஒரு பட்டணம் அமைத்துக் கொள்ளலாம் என்றும், அந்தப் பட்டணத்தில் இருந்து கொண்டு நாட்டுப் பகுதியில் சென்று வியாபாரம் செய்து கொண்டு வரலாம் என்றும், அவர்கள் கொண்டு வரும் தங்கத்தை நிறுத்துப் பார்த்து, அரசர்க்குரிய ஐந்து பங்கும், கடல் தளபதிக்குரிய பத்துப் பங்கும், தேவாலயத்துக்குரிய வரியும் குறைத்துக் கொண்டு மீதியை உரியவரிடம் வழங்கலாம் என்றும், அங்கு தங்குவோர் விவசாயத் தொழிலும் மேற்கொள்ள வேண்டும் என்றும், சிவப்பு இந்தியர்களை மதம் மாற்றப் பாதிரிகளை அனுப்பவேண்டும் என்றும், அவன் கண்டு பிடித்த நாடுகளில் அன்னியர்களையும், யூதர்களையும், மத விரோதிகளையும், புரட்சிக்காரர்களையும் அனுமதிக்கக் கூடாதென்றும் இன்னும் என்னென்னவோ குறிப்பிட்டிருந்தான்.

இந்த விவரமான அறிக்கையை அனுப்பி விட்டு அவன் தன் புதிய பட்டத்துக்குத் தகுந்தாற் போன்ற விலையுயர்ந்த ஆடைகளைத் தைத்துக் கொண்டான்.

தன் கப்பல் அதிகாரிகளில் சிலரையும் கூலிக்கு. அமர்த்திய ஆட்கள் சிலரையும், சிவப்பு இந்தியர்களில் அறுவரையும் சேர்த்து ஓர் ஊர்வலக் குழுவை உண்டாக்கினான். சிவப்பு இந்தியர்கள், அவர்கள் நாட்டு நாகரிகப்படி பறவைகளின் இறகுகளைத் தலையில் கட்டிக் கொண்டார்கள். மீன் எலும்பால் ஆகிய மாலைகளையும், தங்க ஆபரணங்களையும் அணிந்து கொண்டார்கள். கூடுகளில் அடைத்த பச்சைக் கிளிகளைத் தங்கள் கைகளில் தூக்கிக் கொண்டார்கள். போகும் வழியெல்லாம் அந்த விசித்திரச் சிவப்பு இந்தியர்களைக் காணக் கூட்டம் கூட்டமாக மக்கள் கூடினார்கள். சோர்டோலா நகர சபை கொலம்பசுக்கு ஒரு வரவேற்பளித்தது. அங்கு அவன் தன் மனைவியையும் தன் மக்களையும் கண்டு வாரியணைத்து முத்தமிட்டான். ஏப்ரல் கடைசி வாரத்தில் பார்செலோனா நகருக்கு வந்து சேர்ந்தான். அங்கு அரசாங்க அதிகாரிகளும், ஊர் மக்களும் ஒருமிக்கத் திரண்டு வந்து அவனை வரவேற்றார்கள்.

பேரரசர் பெர்டினாண்டும் பேரரசி இசபெல்லாவும் இருந்த சபா மண்டபத்திற்குள் கொலம்பஸ் சென்றான். அவர்கள் முன்னிலையில் மண்டியிட்டு அவர்களின் திருக்கைகளில் முத்தமிட்டான். சுமார் எட்டு மாதம் கண் காணாத கடலில் சுற்றித் திரிந்து, ஸ்பெயின் நாட்டுக்குப் பல புதிய தீவுகளை உரிமையாக்கிக் கொடுத்த அந்த மாவீரனை வாழ்த்தினார்கள் மாமன்னரும் பேரரசியும். அரசிக்கு வலது பக்கத்தில் அவனுக்கு இடமளிக்கப்பட்டது. அவன் தான் கொண்டு வந்திருந்த சிவப்பு இந்தியர்களையும், பச்சைக் கிளிகளையும் தங்க ஆபரணங்களையும், மருந்து மூலிகைகளையும் அவர்களுக்குக் காணிக்கையாக கொடுத்தான். அரசரும் அரசியும், அந்தப் புதிய நாடுகளைப் பற்றிப் பல கேள்விகளைக் கேட்டு அறிந்தார்கள். பிறகு எல்லோரும் அருகில் இருந்த தேவாலயத்துக்குச் சென்று இறைவன் முன் மண்டியிட்டு எல்லாம் நன்மையாக முடிய வேண்டுமென்று தொழுகை நடத்தினார்கள். அப்போது கொலம்பஸ் அடைந்த ஆனந்தத்தின் அளவை, அவன் கன்னங்களில் வழிந்த கண்ணீராலும் கணக்கிட்டுக் கூற முடியாது!

அந்த நேரத்தில் கொலம்பஸ் நினைத்திருந்தால், என்ன வேண்டுமானாலும் பெற்றிருக்கலாம். கோட்டை கொத்தளம், பட்டம் பதவி, செல்வம், எதைக் கேட்டாலும் அரசி கொடுத்திருப்பாள். ஆனால், இந்தச் சுகபோகங்களைக் காட்டிலும் மேலான இலட்சியம் ஒன்று அவனுக்கு இருந்தது.

தான் கண்டு பிடித்த நாடுகளில் குடியேற்றம் செய்ய வேண்டும்; தங்க வாணிபம் சீரான முறையில் அங்கு நடைபெற வழிவகுக்க வேண்டும்; அந்த நாட்டு மக்களைக் கிறிஸ்துவ மதத்தில் சேர்த்துவிட வேண்டும்; கான் பேரரசருடன் அல்லது குவாக்க நாகரியை விடப் பன் மடங்கு பெரிய அரசன் ஒருவனுடன் வாணிக ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். இப்படியெல்லாம் பல எண்ணங்களைக் கொண்டிருந்தான் கொலம்பஸ்.