உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 1/028-089

விக்கிமூலம் இலிருந்து

25  செந்தமிழ்ப் பாவை!

தாய்மைக் குலத்தீர் ! தமிழ்மொழிக்கே யாம்பாடும்
வாய்மைத் தமிழ்ப்பாவை வந்திங்குக் கேண்மினோ !
தூய்மையுறும் நெஞ்சம் ! சுடர்மணிப்பூண் தோள்கலிக்கும்
பேய்மை யகலும் ! பிறவி நலம் வந்தெய்தும்!
மாயப் புரைசால் மலிவினைகள் மாண்டொழியும்
சேயவிழ்வாய் நாறச் சிமிழ்மார்பு அமிழ்தூட்டி
ஏய அவர்செவியில் எந்தமிழ்ப்பால் ஊட்டுதற்கே
ஆய பொழுதும் அலர்ந்தேலோ ரெம்பாவாய்! 1

மன்னும் பிறவி மடுக்குந் திருக்குலத்தீர் !
முன்னம் பிறப்பறியோம் ! முந்துகடல் வாங்கியுண்ட
பன்னூல் சிறப்பறியோம் ! பாவையரீர் ! பாழ்பட்ட
இன்னூல் கணக்கிங் கெடுத்தறியோம்; எந்தமிழ்க்கே
தொன்னூல் இவையென்று தோற்றுவன யாம்கண்டோம்;
நன்னர் முடிவெடுத்தோம்; நாணாமே, நாணாமே,
என்னெமக்கே வந்துற்ற தென்றே இமைதிறவாது
இன்னும் துயில்வீர் ! எழுகேலோ ரெம்பாவாய்! 2

போதார் திருவைப் புரைவில்லாச் செந்தமிழைச்
தீதார் பிழைநாவின் வல்படையோர் சீரழிக்கப்
போதரு கின்றார்; புறப்பட்டார்; பொன்னொளிர்கல்
காதார் பிறைநுதலீர்; கண்பாடுங் கொண்டீர்காண் !
ஈதார் கடனோவென் றெண்ணாதீர் ! ஈண்டெழுந்த
பேதைப் பெருங்கூட்டம் பின்னிட் டடங்கிடவே
ஊதுமினோ வெண்சங்கம் ! வெற்றிப்பால் ஊட்டுமினோ !
மாதர் குலமே, மலையேலோ ரெம்பாவாய்! 3

காமம் மதர்க்கும் கருவிழிமேல் வில்லிமைக்கே
யாமத் திருளைக் குழைத்திட்டு, நீள்குழற்கே
பூமுன்னாள் மாலை முடித்தாய்; புலர்பொழுதில்
ஊமைச் செவிடா உறங்குதியே ! ஒண்டமிழ்க்குத்
தீமை புரிவார் திறங்கலங்க, பூண்பொடிய
மாமைப்பொற் றேமல் மலியும் மணிவயிற்றில்
ஏமம் புரிய இளையோரைப் பெற்றெடுக்குந்
தாமரைப் பூங்கண் திறவேலோ ரெம்பாவாய்! 4

கொந்தார் மலர்க்கொண்டைக் கோதையரீர்; பாடேமுக்
கிந்தா வெழுந்தேம்என் றென்னா தயர்வீர்போல்,
செந்தா மரைமுகத்தைப் பஞ்சணையிற் சேர்த்தீரால்!
வந்தர் தமிழழிக்க; வாயவிழ்ந்தார் வார்படைக்கே!
செந்தோள் மறவர் சிறுத்தாரென் றேயெழுந்து
முந்துவீர் அன்னை மொழிக்கென்றே ஆர்ப்பரிப்பீர்!
சிந்துவீர் செங்குருதி தாய்மைச் செருக்குலத்தீர்
இந்த நொடியே எழுகேலோ ரெம்பாவாய்! 5

எண்ணற் கினிக்கும்; எடுத்தியம்ப வாயினிக்கும்;
பண்ணு மொழிகேட்பார் செவியினிக்கும் பைந்தமிழை
உண்ணும் சுவடியிலே நஞ்சிட்டார் ஒண்டொடியீர்!
கண்ணென் எழுத்தும் கருத்தும் கலைப்பாரால்
பெண்ணென் பிறவியினைப் பெற்றேமென் றெண்ணாமே
விண்ணதிர ஆர்த்துப் பிடிக்கூட்டம் போலெழுந்து
மண்ணின் உரிமை மொழியுரிமை மீட்குதிரேல்
பெண்ணுரிமை நாட்டுகின்ற பெற்றியலோ ரெம்பாவாய்! 6

வல்லடிமை கொண்டார்; வரும்பொருளிற் பங்கெடுத்தார்;
மல்லடிமை சேற்றில் மனத்தைப் பதமிடுவார்;
சொல்லடிமை செய்வதற்கே தோதுபல சொல்லிடுவார்!
இல்லறத்தைத் தள்ளி இளம்பருவச் சீரொதுக்கி
வல்லமற நெஞ்சை வளையா இரும்பாக்கி
ஒல்லைப் பெரும்போர் உலைக்காமே ஏற்றியநாண்
வில்லடியின் மேற்புருவ வேல்விழியே! தூங்குதியே!
எல்லே இளையாய், எழுகேலோ ரெம்பாவாய்! 7

பெற்ற மகர்வாய் தமிழைப் பிலிற்றாமல்
வெற்று மொழியாமோர் வேம்பை - உயிர்கழிக்கும்
புற்றரவ நஞ்சைப் பிழியும் புலையோரைச்
செற்றுச் செருக்காமல் 'சீற்றச் செருவிழி, மூ
டுற்ற மயக்கத் துருண்டும் புரண்டும்நீ
மற்றிங் குறங்கல் அழகோ, மதிமுகமே?
கற்ற தமிழ்மேல் கடுஞ்சூள் உரைசாற்றி
இற்றே இளம்பிடியே நூறேலோ ரெம்பாவாய்! 8

ஆங்கப் பொழுதே மொழியலைத்தார்; ஆரியத்தால்
தேங்குந் தனிச்சீர்மை தீர எழில்குலைத்தார்;
ஓங்கப் பிறகுழைத்தார் உற்றுணர்ந்தார்; ஒண்டொடியே!
ஈங்கப் பிழைக்கே இடந்தரநாம் ஒப்புவமேல்
வாங்கப் படுங்காண்,நம் வாழ்வுரிமை! பின்வருவார்
ஏங்கித் தவிப்பதோ? இக்கால் எழாமலே
தூங்கிக் கிடப்பதோ? நெஞ்சம் துடிதுடித்தே
வேங்கைப் புலிப்பிணையே! வீறேலோ ரெம்பாவாய்! 9

களையாய்த் தமிழ்வயலுள் காலிடவேர் ஊன்றி
முளையாக் கிடக்கின்ற மூங்கை மொழியை
உளையாப் பெருமுயல்வால் ஊழ்த்துத் தமிழை
விளையாமற் போவோமேல் வீணானோம்; வீழ்ந்தோம்!
கிளைபரப்பி நின்ற கிளர்தமிழைக் கீழோர்
களையமுற் பட்டங்கே கள்ளியினை ஊன்ற
வளையாய்! இடந்தரலும் வாய்மையோ? வாட்கண்
இளையாய் உறங்கேல் எழுகேலோ ரெம்பாவாய்! 10

இந்நாளாப் பட்ட அடிமைக் கிறக்கத்தால்
செந்நா வடக்கிச் சினமடக்கி உள்ளுணர்வைக்
கொன்னே மடக்கி உறங்குதியோ? கொல்பிடியே!
மின்னே இடையாக வேற்கண்ணே வெல்படையா
இன்னே எழுந்தே எரிபுயலாச் சீறுதியே!
அந்நாள் அயர்ந்த அறியாமைக் குள்நாணி,
நன்னர் உரிமைப்போர் நாட்டுதியே, செய்யபசும்
பொன்னே! பொழுதும் புலர்ந்தேலோ ரெம்பாவாய்! 11

உள்ளம் மலையாத ஆடவரும் தாமலைந்தார்;
கள்ள விலைவாங்கி நல்லுரிமைக் கால்துணித்தார்!
பள்ளத் திறங்கிப் படுசேற்றில் தாம்புரள
உள்ளம் ஒருப்பட்டார்! உண்கண்ணாய்! நீயெழுந்தே
எள்ளல் தவிர்க்க இசையாயின் இம்மண்ணும்
கொள்ளல் தவிரார்! குலக்கொடியே ஈங்கின்னும்
பள்ளிக் கிடத்தியே! பாவைப் படைகூட்டி
வெள்ளம்மேல் பாய்வாய் விரைந்தேலோ ரெம்பாவாய்! 12

தண்டைப் பிடித்தவரோ தாவித் தமிழரின்
சிண்டைப் பிடித்தனர்காண்! செம்மாந்த எந்தமிழர்
அண்டை நிலத்தில் அடிமையுறத் தாழ்வதுவோ?
பண்டைப் பெருமையும் பாழ்பட்டுப் போவதுவோ?
உண்டிங் குறங்குவதே ஓங்குநிலை என்பதுவோ?
பெண்டிர் விழிப்புற்றால் பேருரிமை வாயாதோ?
தொண்டிற் பெருந்தொண்டு தோகையர்தம் தொண்டன்றோ?
கொண்டை விழியே! கிளர்கேலோ ரெம்பாவாய்! 13

கற்றவரோ செந்தமிழால் காசுபணம் சேர்க்கின்றார்!
மற்றவரைக் கேட்பானேன்! மான்விழியே! நாட்டுநலம்
உற்றசிலர் நின்றே உரிமைதரக் கேட்டாலோ
கொற்றவரும் அன்னார் குரலை நெரிக்கின்றார்!
குற்றமென்று கூறிக் கொடுஞ்சிறையுள் தள்ளுகின்றார்!
முற்றும் தமிழரினம் மூங்கையதாப் போகுமுனம்
பெற்ற குலத்தோரே பேருரிமை காக்கவல்லார்!
பொற்றொடியே துஞ்சல் புரையேலோ ரெம்பாவாய்! 14

திங்கள் முகங்கருகச் செவ்விதழும் தாம்வறளச்
செங்கண் குழிவீழச் சிற்றிடையும் சோர்ந்துவிழப்
பொங்கும் இளம்பருவப் பூரிப்பில் நுங்கணவர்
தங்கை அணைப்பில் இராமுழுதும் சேர்ந்திருந்தே
செங்கதிர்ப் போழ்தில் சிறுதுயிலும் கொள்ளுகின்ற
மங்கையரீர் நுந்தம் மணிவாய் கமழ்தமிழுக்
கெங்கும் இடர்வர வுற்றதுகாண்! இந்நொடியே
பொங்கி எழுவீர் புலர்ந்தேலோ ரெம்பாவாய்! 15

மானே! முன் மாலை மணிக்கதவந் தாழிட்டுத்
தேனும் பழமும் தெளிதமிழும் உண்டவனின்
வானென் வரிமார்பில் வண்டுவிழி மூடினையே!
கூனற் பிறை நுதலீ ! கொண்டதுயில் நீங்குதற்குள்
ஊனின் உயிரை - உளஞ்சான்ற வல்லுணர்வை -
மானம் இறவாது மங்கா தொளிர்தமிழை
ஏனென்று கேட்டே இடர்பலவும் செய்தனர்காண்!
கானப் புலியே! கனல்கேலோ ரெம்பாவாய்! 16

மாணவரை வேண்டினோம்; மற்றவரைக் கால்பிடித்தோம்!
நாணமிலா மக்களுக்கு நல்லமறம் பாடிநின்றோம்!
வீணவரே இந்நிலையில் பெண்டிர் வெகுண்டெழுந்தால்
தூணவரே ஆனாலும் நுண்துரும்பாய்ப் போவார்காண்!
பூணுதியே வெல்பெருமை! பூங்கண்ணே நீவிழிப்பாய்!
சேணுயர்ந்த குன்றின்மேல் செந்தமிழின் சீர்பொறிப்பாய்!
நாணம் ஒதுக்கிடுவாய்! அச்சம் நசுக்கிடுவாய்!
கோணா தெழுந்துகுறை போக்கேலோ ரெம்பாவாய்! 17

புத்தம் புதிய புலிக்குருளை பெற்றெடுத்தே
கத்துங் கனிவாய் கமழ அமிழ்தூட்டி
முத்தம் பயிலும் முறுவல் மலரிதழீ!
செத்தார் தமிழர்; சிறுசோற்றுக் கங்காந்தார்!
கொத்துகின்ற வல்லடிமைச் சேற்றில் குமைந்துழல்வார்!
எத்தும் வடக்கர்க் கிணங்கிப் பணிபுரிய
ஒத்தார் உளங்கொண்டார்; ஓவாப் பிணிபட்டார்!
முத்தென் நகையாய்! முனைந்தேலோ ரெம்பாவாய்! 18

மஞ்சள் மதிமுகமும் மல்லிகைசேர் வார்குழலும்
செஞ்சாந்துப் பொட்டும் சிரிக்கும் எழிலோடு
வஞ்சி இராமுழுதும் வாள்விழியும் மூடியளாய்த்
துஞ்சி யிருக்கின்றாய்! செம்பரிதி தோன்றிற்றால்!
நஞ்சைத் தமிழ்மேல் தெளிக்கின்றார் நாடாள்வார்.
அஞ்சிக் குலைந்தார் அருந்தமிழர் ஆரணங்கே!
விஞ்சும் விரகால் விறல்மறந்து போகுமுன்னே
பஞ்சென்றே ஊதாய், பகையேலோ ரெம்பாவாய்! 19

சேல்விழியே! முன்னைச் செழும்புலவோர் ஆக்கிவைத்த
நூல்வழியே செந்தமிழின் நுண்பெருமை கண்டாய்காண்!
கோல்வலியால் - ஆட்சிக் கொடுமையினால் நம்மவரை
வால்பிடிக்கச் செய்தே வடவர் கொடுமொழியை
மேல்நிலையில் வைத்து மணித்தமிழைத் தாழ்த்தினர்காண்!
நூலிடையும் வாட நுதலும் நனிவெயர்ப்பக்
கால்குடைந்த கட்டில்மேல் கண்ணயர்ந்து தூங்குகின்ற
வேல்விழியே! இக்கால் விழியேலோ ரெம்பாவாய்! 20

“செந்தமிழுக்குத் தீதோ? தெளிதேனில் வெங்கசப்போ?
எந்தமிழர் செந்நாவுக் கிந்தியோ? ஏலோம் யாம்!
கந்தை உடுப்போம்! கிழங்குண்போம் கான்செல்வோம்!
இந்தி படிக்க இசையோம் யாம்” என்பதனை
வெந்த உளத்தோடும் வெல்கின்ற வீறோடும்
இந்தத் தமிழ்நிலத்தின் ஏந்திழையார் கூறுவரேல்
வந்து புகுமோ? வடக்குமொழி? வார்குழலாய்!
முந்தி எழுந்தே முழங்கேலோ ரெம்பாவாய்! 21

தேக்கும் இளமை திரண்டெழுந்த நற்பாவாய்!
பூக்கும் மலரின் புதுப்பஞ் சணைமேலே
தூக்கம் வளருதியே! தொல்தமிழும் பல்வகையோ
ஆக்கம் தளர்ந்ததுகாண்! அற்றைச்சீர் மாய்ந்ததுகாண்!
ஊக்கம் குறைந்தார் உயர்வறியா நம்மிளைஞர்!
ஏக்கம் நிறைந்தார்! இடுசோற்றுக் கேங்கிநின்றார்!
நோக்கம் கருதியே நுண்ணிடையாய் நந்தமிழைக்
காக்க எழுவாய் கனன்றேலோ ரெம்பாவாய்! 22

மானை நிகர்த்த மருள் விழியே! மாமலைசேர்
தேனை நிகர்த்த தமிழ்மொழியைத் தேராமல்
ஊனை வளர்க்கும் உரிமையால் நின்றழிக்கும்
கூனல் அரசினரின் கொள்கை அறிந்திருந்தும்
ஏனோ உறக்கத் திருக்கின்றாய்? ஏந்திழையே!
கானின் விலங்கும் அடிமை கடிந்தொதுக்கும்;
வானப் பெருந்தமிழர் வல்லடிமை தாங்குவதோ?
யானைப் பிணவே! பிளிறேலோ ரெம்பாவாய்! 23

தேடிக் களைத்தோம் யாம் தீந்தமிழர் உள்ளுணர்வை!
ஓடிக் களைத்தோம்; உரவோர்க்குச் செந்தமிழைப்
பாடிக் களைத்தோம்; பணிபுரிவார் காண்கிலமே!
வாடிக் குலைந்தோம்! வளர்மயிலே! முன்மாலை
ஆடிக் களைத்தாய்போல் - ஆளனொடு நீளிரவாய்க்
கூடிக் களைத்தாய்போல் கொள்ளுதியே வல்லுறக்கம்!
வேடிக்கை யன்று! விறல்பெறநீ ஆர்த்தெழுவாய்!
ஏடி இளையாய்! எழுகேலோ ரெம்பாவாய்! 24

காலை முதலாக் கவின்மாலைப் போழ்துவரை
வேலை புரிந்த களைப்பால் விடியுமட்டும்
சேலென் விழிமூடித் தூங்குதியோ! செந்தமிழென்
பாலிற் கொடுநஞ்சைப் பாய்ச்சினர்காண்; கூர்மழுங்கா
வேலில் வடித்த விழியுடையாய்! வெம்பகைவர்
காலில் தலைதெறிக்க ஓடக் கனன்றிலையேல்!
ஆலைப் படுபஞ்சாய் ஆக்கப் படுவோங்காண்!
வாலைக் குமரி! விரையேலோ ரெம்பாவாய்! 25

மண்டும் இருள்போய் மனைச்சேவல் சீர்த்தெழுந்து
கொண்டை குலுங்கிடவே கொக்கரக்கோ கோவென்று
தொண்டை கிழியத் துயிலெழுப்பும்! தோட்டத்தே!
மண்டுங் கறவை மடிநிரம்பிக் கூவிநிற்கும்;
தொண்டு புரியும் பணியாளர் பேச்செழும்பும்!
பண்டைப் பெருமைநலம் பண்ண மறந்தவளாய்,
வண்டு விழிமுடி வார்குழலும் தூங்குதியே!
அண்டை நிலத்தார் அடிமைகொள வந்தனர்காண்!
உண்டு பணிகள்! உணர்கேலோ ரெம்பாவாய்! 26

காக்கை கரையும்! கருவானம் வெள்வாங்கும்!
மேற்கில் மதிகரையும்! கீழ்க்கதிரும் மேலெழும்பும்!
ஈர்க்குமா றோசை இரையும் தெருவெல்லாம்!
யாக்கை வளர்ப்பார் தவிரஎவர் இப்பொழுதில்
சேக்கை புரள்வார்? சிறுதுயிலுங் கொள்ளுதியே!
தீக்கை வடவர் திரிபுரையால் தீந்தமிழின்
ஆக்கந் தடுப்பார்; அவர்மொழிக்கே வித்திடுவார்!
போக்கைத் தடுக்கப் புறப்படுவாய் பொற்சிலம்பாய்!
தூக்கங் களைந்து துணிவேலோ ரெம்பாவாய்! 27

மாணிக்கச் செம்பரிதி வார்கடலை விட்டெழும்பும்;
தோணி வலைவீசித் தோய்துறைக்கு மீண்டுவரும்;
காணி உழுதார் கதிரெழுமுன் வேளாளர்!
நாணும் மடவார் இருளுடையில் நீர்குடைவார்!
கேணிக் கரையில் வளைக்குடங்கள் கிண்கிணிக்கும்!
பூணுதியே பேயுறக்கம்! பூவாய்! பொலிதமிழைப்
பேண வெழுந்தால் பிழைப்பாரார்? பெண்புலியே!
தூணுந் துரும்பாம்! துணிவேலோ ரெம்பாவாய்! 28

சிட்டென் இளையோர் சிறுவாயில் செந்தமிழின்
மட்டு தவிர்த்துயரா மால்மொழியை ஊட்டுவர்காண்!
மொட்டென் அவர்கை முதிரா மொழியெழுத
ஒட்டா தவர்நெஞ்சில் ஊமைமொழி பாய்ச்சுவர்காண்!
மொட்டென் விழியாய்! முழுநிலையும் கண்டறிந்தே
பட்டின் படுக்கை படுத்துக் கிடத்தியே!
சட்டென் றெழுவாய்! சளைக்காமல் நின்கருத்தை
வெட்டொன்று துண்டிரண்டாய் வீசேலோ ரெம்பாவாய்! 29

கூர்த்த மதியீர்! குறைகடியும் வல்விறலீர்!
ஆர்த்த பெரும்புகழ்மேல் ஆணையிட்டே ஆர்த்தெழுவீர்!
போர்த்த இருள்விலகப் பூவையர்நும் சீர்விளக்கச்
சீர்த்த பெரும்புயலா வல்பிடியாச் செற்றிடுவீர்!
தூர்த்த புகழெல்லாம் தொல்தமிழர் பாடெல்லாம்
ஏர்த்தடங்கண் பாவையரால் மீண்டும் எழுந்தவென்றே
வார்த்த நெடுங்கல் வழிவழிக்கே நின்றுரைக்கும்
சீர்த்தி பெறுகுவீர்! செற்றேலோ ரெம்பாவாய்! 30

-1965


(இந்தியெதிர்ப்பால் வேலூர்ச்சிறையுள்
பட்டிருந்த ஞான்று பாடியது.)

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_1/028-089&oldid=1514515" இலிருந்து மீள்விக்கப்பட்டது