கனிச்சாறு 1
பாவலரேறு
பெருஞ்சித்திரனார்
பாடல்கள்
(கனிச்சாறு)
படையல்
❀ எதிர்காலத் தமிழின மீட்பர்களுக்கும்
❀ தமிழீழ விடுதலைத் தலைவர்களுக்கும் மறவர்களுக்கும்
❀ அயல்நாடுகளில் வாழும் தமிழின மக்களின் முன்னேற்றத்திற்காக
ஆங்காங்கு பாடுபடும் தமிழினத் தலைவர்களுக்கும்
இந் நூற்றொகுதிகள் படையலாக்கப்படுகின்றன.
–முதல் தொகுதி
முழுமையான முதற்பதிப்பு |
: | தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) |
நூல் தலைப்பு | : | பாவலரேறு |
பெருஞ்சித்திரனார் பாடல்கள் | ||
(கனிச்சாறு - முதல் தொகுதி) | ||
ஆசிரியர் | : | பாவலரேறு பெருஞ்சித்திரனார் |
வெளியீடு | : | தென்மொழி பதிப்பகம் |
செந்தமிழ் அடுக்ககம் | ||
(சி.கே. அடுக்ககம்) | ||
மேடவாக்கம் கூட்டுச்சாலை, | ||
மேடவாக்கம், சென்னை - 600 100 | ||
94444 40449 | ||
அச்சாக்கம் | : | தென்மொழி அச்சகம், |
சென்னை - 600 100 | ||
உரிமை | : | தாமரை பெருஞ்சித்திரனார் |
பக்கங்கள் | : | 28+114 |
தாள் | : | படத்தாள் (மேப் லித்தோ 18.6) |
அளவு | : | தெம்மி (1/8) |
படிகள் | : | 1000 |
விலை | : | உரு. 100.00 |
முன்னுரை
இயற்கை ஓர் ஒழுங்குடையது. நிலம் நெறியான ஓர் இயல்போட்டத்தை உடையது. கதிரவனும் விண்மீனும் ஓர் ஒழுங்கான அசைவை உடையன. புடவியும் பேரண்டமும் அவற்றுள் இயங்கும் பல்லாயிரங்கோடி இயற்கைக் கோளங்களும் சுடர்த் தொகுதிகளும் சிறிதே ஒழுங்கின்றி இயங்கத் தொடங்கினும் உடனே பேரழிவு நேரும்.
இவ்வியற்கை நிலையினைப்போல், இயற்கையுட்பட்ட அனைத்து நிலைகளிலும் அதனதற்குப் பொருந்திய ஓர் ஒழுங்கு கடைப்பிடிக்கப் பெறுதல் வேண்டும். இயற்கை அறிவிக்கும் இவ்வொழுங்கு சிதைவுறின், அச் சிதைவுக்கேற்ப, படிப்படியான அழிவுநிலைகளே நேரும் என்பதில் துளியும் ஐயமின்று.
உயிர்கள் அனைத்தினும் மேம்பட்டு விளங்கும் மாந்த இயக்கமும் அதன் பரும, நுண்ம நிலைகளுக்கு ஏற்ப, ஒழுங்குற இயங்குதல் வேண்டும் என்பதே இயற்கையின் உட்கோளாதல் வேண்டும். ஒழுங்கற்ற பரும இயக்கத்தால் உடல் சிதைவுறுதல்போல் ஒழுங்கற்ற உணர்வியக்கத்தால் உள்ளமும் சிதைவுறும். உள்ளச் சிதைவு மாந்தப் பேரழிவையே தோற்றுவிக்கும்.
உணர்வியக்கத்தின் தலைமைக்கூறு மொழி. மொழியின் படிநிலையுற்ற ஒழுங்கியக்கம் இலக்கணம். எனவே, இலக்கணச் சிதைவு மொழியைச் சிதைப்பதும், மொழிச் சிதைவு கருத்தைச் சிதைப்பதும், கருத்துச் சிதைவு உணர்வைச் சிதைப்பதும், உணர்வுச் சிதைவு உளத்தைச் சிதைப்பதும், உளச்சிதைவு உலகியலைச் சிதைப்பதும் ஒன்றினின்று ஒன்றெழும் தொடர் விளைவுகளாகும்.
மொழியின் மலர்ச்சியே பாட்டு. பாட்டுணர்வால்தான் மாந்தன் மீமிசை உயிருணர்வை எட்டுகின்றான். மற்ற உணர்வுகள் மாந்த உணர்வுகளிலேயே அவனைத் தேக்கி வைத்திருக்கையில், பாடல் உணர்வே புறவுணர்வுத் தளைகளைக் கட்டறுத்து, உலகியல் கூறுகளினின்றும் விடுவித்து, அவனை மீமிசை மாந்த நிலைக்கு உயர்த்துகிறது. பாட்டுணர்வு தாழ்ச்சியுறுதலால் அவன் உணர்வுயர்ச்சிக்குச் சறுக்கல் ஏற்படுகின்றது: உயிர்மைக்கு அயர்வு ஏற்படுகின்றது. இதனால் இயற்கைத் துய்ப்பு கெடுகிறது. உயிர்மை குன்றுகிறது; உலகியல் உணர்விருள் அவனைப் பற்றி அலைக்கழிக்கின்றது. இவ்வியற்கைப் பொது நிலைகளையொட்டி, ஒவ்வொருவரும் சில இன்றியமையாக் கலை, இலக்கியக் கூறுகளை உணர்ந்திருத்தல் வேண்டும். இவற்றுள் கலை புறமும் இலக்கியம் அகமும் ஆகும். இலக்கியத்தின் கொடுமுடி பாடல்! பிற அவற்றினின்று விரிந்து படரும் கொடிகளையும் கிளைகளையும் போன்றவை.
ஒழுங்கற்ற ஓசையைவிட ஒழுங்கான ஒலி உயிர்க்கவர்ச்சி உடையது. ஒலியொழுங்கோடு உணர்வும் சேருமாயின் உயிர்க் கவர்ச்சியுடன் உளக்கவர்ச்சியையும் அஃது உண்டாக்கி, அறிவுணர்வு உயர்ச்சியுடைய மாந்தனை அது தன்வயப்படுகிறது. இனி, உணர்வு சேர்ந்த ஒலியொழுங்குடன் ஏற்ற இறக்க அலைவொலிகள் அளவொத்து இணைதலும், பின் அவற்றுடன் ஏதாமொரு மொழி சேர்தலும், அவற்றைப் பண் என்றும் பாவென்றும் உயர்நிலைப்படுத்துவிக்கும். இப்பண்ணொடு தாளம் சேர்ந்து இசையென்றும், பாவொடு கருத்துச் சேர்ந்து பாடல் என்றும் தமிழில் வழங்கும். இனி, பண்ணும் பாடலும் சேர்ந்து நடக்கும் இசைத்தமிழ் என்னும் ஒரு மொழியியல் மரபையே பண்டைத் தமிழ்மொழி முனைவோர் உலகோர் உணர்ந்துய்ய உண்டாக்கித் தந்துள்ளனர். வேற்றுமொழிகளில் இம் மொழியியல் கூறு தோன்றியிருப்பினும் தமிழ்மொழியில் உள்ளதுபோல், அஃது அத்துணையளவு தனித்தோ, சிறந்தோ இயங்கவில்லை யென்பதை அறிவினார் உணர்வர்.
இனி, பாடல் என்பது பா தழுவிய கருத்துமொழி என்று பொதுவில் பொருள்தரினும், அதற்கெனப் பல தனிக்கூறுகள் உண்டு. பாடல் இயற்கையாக வெளிப்படுதல் வேண்டும். மனமும் அறிவும் வயப்பட, உணர்வும் எழுச்சியும் மேம்பட்டுப் புறநிலையழுத்தத்தால் பீறிக்கொண்டு வெளியேறும் பாடலிலேயே இயற்கைச் சாயல் படிந்திருக்கும் மொத்தத்தில் அஃது ஒரு வெளிப்பாடாக இருத்தல் வேண்டுமேயன்றி, வெளிப்படுத்துதலாக இருத்தல் கூடாது. அவ்வாறு உள்ள நிலையில் அது சிறவாது; நிலைத்து நிற்காது; அதுவன்றிக் காலத்தில் கரைந்து போகும் தன்மையுடையதாக அஃது இருக்கும்.
ஓர் உணர்வு சான்ற இயற்கைப்பாடல் உணர்வுள்ள உள்ளங்களை மட்டுமேயல்லாது, உணர்வற்ற உள்ளங்களையும் அவையளவில் தொடுதல் வேண்டும். அப்பொழுதுதான் அஃதால் உயிர்க்கூறு படிப்படியாக மலர்ச்சி எய்துதல் முடியும். பிற உள்ளங்களை ஆட்கொள்ளும் நிலையில் அஃது ஒரு மண்வெட்டியைப்போல் பயன்படுதல் வேண்டும். மண்வெட்டி பள்ளம் மேடுகள் நிறைந்த நிலத்திற்கே மிகுதியும் பயன்படுவதாகும். சமமான தரையில் அதன் பயன்பாடு மிகவும் குறைவே. வெறும் சுவைக்காக மட்டுமே வெளிப்படும் பாடல்கள் மாந்த உள்ளுணர்வுகளை வளர்த்து வாழ்விக்காமல் அவற்றை மழுங்கடித்துவிடும்.
பாட்டுணர்வு இயற்கையேயாயினும், அதன் புறக்கூறுகள் உலகியல் சான்றனவே. அப் புறக்கூறுகள் அசை படிந்த சொற்களாலும், சொற்களமைந்த சீர்களாலும், சீர்கள் இணைந்தியங்கும் யாப்பாலும், யாப்புடன் கூடிய அணியாலும், அணிபெற்றியங்கும் கருத்தாலும் விளங்கித் தோன்றுனவாகும். அவையே பாடலுக்குரிய தகுதிகளும் ஆகும். அவை பதினான்கு இன்றியமையாக் கூறுகளைக் கொண்டவை. அவை இவை:
அ. சொற்கள்
1. கருத்தாழம் நிரம்பிய தேர்ந்த சொற்கள்.
2. சுற்றி வளைக்காத சொல்லாட்சி.
3. வளங்கொழுவிய பொருத்தமான சொற்கள்.
4. குறைவான இடைச் சொற்கள்.
ஆ. சீர் அமைப்பு:
1. ஒலிநயத்தால் இணைகின்ற சீர் அமைப்பு.
2. கருத்தின் உணர்வுக்கேற்ற சீர் நீளம்.
3. வகையுளி அல்லது சொற்பிரிப்பால் பாட்டின் ஓட்டத்தையும் அழகையும் குறைக்காமல், முழுச் சொல்லால் அல்லது சொற்களால் அமைந்த சீர்கள்.
இ. யாப்பு
1. பிழையற்ற யாப்பு.
2. கூறப்போகும் கருத்தின் உணர்வை மழுங்கடிக்காத யாப்பு வகை.
3. உணர்வுயர்ச்சிக்கும் கருத்தகலத்திற்கும் ஏற்பத் தெரிந்தெடுக்கப் பெற்ற யாப்பு.
ஈ. அணிகள்
1. எளிதே விளங்கிப் பாடற் கருத்துடன் உடனே பொருந்துமாறு இருக்கும் உவமைகளும் உருவகங்களும்.
2. பாட்டின் பெருமையைக் குறைக்கும் பிற ஆரவார அணிகள் பெரிதும் தவிர்க்கப் பெறுதல்.
உ. கருத்து
1. மயக்கம் தராது உடனே புலப்படும் தெளிவு நிறைந்த கருத்து.
2. பொது மனத்திற்குப் புலப்படாத உயர்ந்த கருத்து.
இனி, முன்னைக் காலத்து, இயற்கை உணர்வின் ஒலியொழுங்குக் கொத்த மரபு தழுவிய பாடல்கள், தாய்மையுணர்வு நிரம்பிய ஓரிளம் பெண் பெற்றெடுக்கும், நல்ல அழகிய அறிவறிந்த நிறைமாதக் குழந்தைகள் போன்றவை. சோம்பலாலும் அறிவுக் குறுக்கத்தாலும் மன இழிவாலும் பிதுக்கப்பெறும் இக்காலத்து மரபு நழுவிய பாடல்கள், தாய்மையுணர்வு நிரம்பாத பெண்ணுரு சான்ற ஒருத்தி, அரைகுறை முதிர்ச்சியோடு பெற்றெடுக்கும், உறுப்புகள் குறைவுற்று அழகும் அறிவும் குறைந்த, குறைமாதக் குழந்தைகள் போன்றவை. நன்கு வளர்ச்சியுறாத உறுப்பு நிலைகளும், உணர்வு நிலைகளும், அக்குழந்தைகளைக் கவர்ச்சியற்றனவாகவும் நீடிய காலத் தங்குதலற்றனவாகவும் ஆக்கிவிடுகின்றன.
ஒழுங்கற்ற ஓசை இசையாகாததுபோல், ஒழுங்கான கட்டுக் கோப்பற்ற கருத்து வெளிப்பாடும் பாடலாகாது.
பாடல் உள்ளத்தின் மலர்; உணர்வின் மணம்; உயிரின் ஒலியொழுங்கு.
பாடல் மலரிலிருந்தே உரைநடையென்னும் காய் தோன்றிக் கதையாகக் கனிகிறது.
பாடல் உணர்வு சிதைவுறுமானால் உரைநடையாக அது தத்துகிறது. உரைநடையில் பாடல் உண்டு. பாடலில் உரைநடை இல்லை. பாடல் உரைநடையாவது, மலர் தன் மென்மையையும் மணத்தையும் இழந்து பருமையும் வெறுமையும் உறுவது போன்றதே. அத்தகைய பாடற்போலிகள் தேங்காய் மட்டையின் ஊறலின்று அடித்தெடுக்கும் நார் போன்றவை.
இனி, உண்மையான பாடலை வெளிப்படுத்துபவனே உயர்ந்த பாவலன். பாவலன் பிறக்கிறான்; பாடல் தோன்றுகிறது. பாவலன் படைப்பாளன். அவன் உண்டாக்கித் தரும் உணர்வுருவாய கற்பனை மாந்தர்களையே இயற்கை பருவுருவாக உலகுக்குப் படைத்துத் தருகிறது. எனவே உலகின் இயற்கைப் படைப்புக்கே அவன் உணர்வுக் கருவைத் தருபவனாகிறான்.
உயர்ந்த உண்மைப் பாவலனுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் பத்து. அவை, நுண்ணோக்கு, இயற்கையீடுபாடு, சொல்வன்மை, பாத்திறன், யாப்பறிவு, மொழியறிவு, கற்பனையாற்றல், மனவியல், நடுவுநிலைமை, துணிவு என்பனவாகும். இவை ஒன்றின் ஒன்று சிறந்து விளங்கிப் பாவலன் ஆற்றலைப் படிப்படியாக மிகுவிக்கின்றன. இத்தகுதிகளின் பொருத்தத்திற்கேற்பவே ஒவ்வொருவனின் பாடலும் ஒளிர்ந்து சுடரும்; காலத்தை வெல்லும்; மக்கள் கருத்தினை ஆட்கொள்ளும்; அறிஞர் மதிப்பினைப் பெறும்.
கனிச்சாறு என்னும் இப்பாடல் தொகுதி பல நூறு கற்பனைத் தோற்றங்களை உங்கட்குக் காட்டுவதாகும். பல வாழ்வியல் கூறுகள் இதில் சொல்லப் பெறுகின்றன. அறிவுநிலை விளக்கங்கள், உரிமை உணர்வுகள், மாந்தநிலை உயிரெழுச்சிக் கூறுகள், உள்ளுணர்வெழுப்பும் மெய்யறிவு நிலைகள், மொழியியல், இனவியல், நாட்டியல் புரட்சிக்கு வித்தூன்றும் அடிப்படை வரலாறுகள் முதலியன இப்பிழிவில் கலந்திருப்பதை நீங்கள் சுவைத்து உணரலாம்.
கனியைப் பிழிந்திட்ட சாறு - எம்
கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு!
என்றும்,
கனிச்சாறு போல் பல நூலெல்லாம் கண்டு
காத்ததும் அளித்ததும் தமிழ்செய்த தொண்டு!
என்றும், பாவேந்தர் பாரதிதாசன் தமிழையும் தமிழ்ப் பனுவலின் இனிமையையும் உணர்த்தக் கனிச்சாற்றை உவமை பேசுவார்.
எனவே தமிழும் தமிழுணர்வும் செறிந்து விளங்கும் இப்பாடல் தொகுதிக்குக் கனிச்சாறு என்று பெயர் தரப்பெற்றது. மிக அரும்பாடுபட்டு இத்தொகுதித் தொடர்கள் வெளியிடப்பெறுகின்றன.
தமிழினம் தன் நிலைப்பாட்டு மேன்மைக்கு இத்தொகுதிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாக.
சென்னை - 5
அன்பன்
பெருஞ்சித்திரன்
14-4-1979
முதல் பதிப்பு - பதிப்புரை
உலக வரலாற்றிலேயே தலைசிறந்தது மாந்த வரலாறாகும். அதனுள்ளும், நம் முதுபழங் குமரித் தமிழிய வரலாறோ, மூல முதன்மையும், உயர் மாந்தத் தனிச்சிறப்பும் வாய்ந்ததாகும்.
அத்தென்குமரித் தலைக்கழக(சங்க)க் காலத்து முத்தமிழ் மீமிசை மாந்த வாழ்வியலின் ஏந்திய பண்பு நலன்கள் யாவும், அடுத்து வந்த இடைக்கழகக் காலந்தொட்டே, (பிற்காலக் கீழை) வேத ஆரியத்தின் நுழைவால் தாக்குண்டு சீர்குலையத் தொடங்கின. அதுமுதலே, ஆரிய எதிர்ப்பியக்கங்களும், தொடர்ந்து, பரவல் சிதறலாகத் தமிழகத்தில் தோன்றி வரவே செய்தன. ஆனால், அவை எவற்றுக்கும் ஆரியத்தை அடிதுமித்துச் சாய்த்துத் தமிழ் மீட்பினை நிலைநாட்டித் தரும் மொய்ம்புரம் வாய்க்கவில்லை.
இறுதியாக, சென்ற நூற்றாண்டில், மேலைநாட்டு நல்லறிஞரால் விழிப்புறுத்தப் பெற்றும், மறைமலையடிகளாரின் தனித்தமிழ்த் தொண்டினாலும், பெரியாரின் இனமானத் தொண்டினாலும் இந் நூற்றாண்டில் புத்துரமூட்டப் பெற்றும், பல மறுமலர்ச்சி இயக்கங்கள் தமிழகத்தில் தோன்றலாயின. அவற்றின் ஒட்டுமொத்த முயற்சிகளின் மெய்வருத்தக் கூலியாக, இன்று மொழிஞாயிறு பாவாணர் அவர்களின் மொழிமுதற் புலத்தில், பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் உரன்வல அறிவாண்மைப் படை கொண்டு முனைந்துழுது 'தென்மொழி' என்னும் இதழ்வாயிலாக, தேடரிய தெளிவியக்கம் ஒன்று புரட்சிக்கால் ஊன்றி, ஆள்வினையும் ஏற்றுள்ளது.
அத் 'தென்மொழி இயக்க'த்தின், வினை வேளாண்மைக்கென மொழி - இன - நாடு தழுவிய பல்வேறு துறைகளிலும், பாவலரேறு அவர்கள், முப்பது ஆண்டுகட்கும் மேலாக, பன்னூற்றுக் கணக்கில் பாடிக் குவித்துள்ள அரும்பாடற் கனிகளையே இங்ஙனம் தொகுத்து, 'கனிச்சாறு' ஆகப் படைத்துள்ளோம். அவ்வமிழ்தச் சாற்றினை ஆரப் பருகும் எவரும், தமிழியக் குடிசெயலுக்கு வேண்டிய 'வீறெய்தி மாண்ட' வினைத் திட்பம் பெற்று, தொண்டாற்ற முன்வர வேண்டுதலே எமது பெருநோக்கம் ஆகும்.
இப்பாடற் களஞ்சிய வெளியீட்டுத் திட்டம், கோவை மாவட்டத் தமிழன்பர்களின் அருமுயற்சியால் இயல்வதாகி, தி.பி. 2006இல் அறிவிக்கப் பெற்று, தி.பி. 2008 முதல் செயலாக்கங்கொண்டு, இக்கால் முழுமையாக்கப் பெற்றுள்ளது. இத்திட்டத்தை வினைப் படுத்திய தென்மொழி ந. முத்துக்குமரனார், அவர் துணைவர் தென்மொழி மறை. நித்தலின்பனார், ஊக்கப்படுத்திய திரு.க. ஆகுன்றன், கொடை நல்கி வலந்தந்த புரவலன்மார் ஆகிய அனைவரும் தமிழின மீட்பு வரலாற்றில் என்றும் நீங்கா இடம்பெறும் சிறப்புடையர். வெல்க எம் தமிழம்! மலர்க நல்லுலகம்!
பணிவுடன்,
14.4.1979 ‘கனிச்சாறு வெளியீட்டுக் குழு’
வெளியீட்டுரை
கனிச்சாறு (பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்) தொகுதி முதற்பதிப்பு 1979இல் வெளிவந்த பின், 1995 இல் பாவலரேறு மறைவுவரை வெளிவந்த அனைத்துப் பாடல்களும் தொகுக்கப்பெற்று முழுமைபெற்ற முதற்பதிப்பாக இப்போது வெளிவருகிறது.
முதற்பதிப்பின் முத்தொகுதிகளும் தென்மொழியில் சுவடி : 14; ஓலை : 12 வரையிலும் மற்றுத் தமிழ்ச்சிட்டில் குரல் : 9; இசை: 12 வரையிலும் வெளிவந்த பாடல்கள் அளவிலேயே அமைந்தன. அதன்பின் தொடர்ந்து வந்த இதழ்களின் பாடல்கள் அனைத்தும் துறைவாரியாகப் பிரிக்கப்பெற்று எண்தொகுதிகளாக இப்பதிப்பு நிறைவு செய்யப்பெற்றுள்ளது. மேலும், ஐயா அவர்கள் தம் இளமைக் காலத்தில் எழுதியனவும் இதுகாறும் அச்சுக்கு வராதனவுமான பாடல்கள் சில, பழைய குறிப்புச் சுவடிகளினின்றும் எடுத்துச் சேர்க்கப்பட்டுள்ளன; அன்றியும் ஐயா அவர்கள் அன்பர்கள் பலருக்குப் பல்வேறு நிகழ்வுகளையொட்டி எழுதியனுப்பிய பாடல்கள் பல, அவ் அன்பர்களிடமிருந்து பெறப்பட்டும், சில ஐயா அவர்களின் சுவடிகளிலிருந்து எடுத்தும் இணைக்கப்பட்டுள்ளன. (பழைய பாடல்களில் ஒரோவழி பெற்றிருந்த அயன்மொழிச்சொற்கள் வரிவடிவில் வேறுபடுத்திக் காட்டப் பெற்றுள்ளன.)
மொத்தத்தில், ஐயா அவர்களின் தனி இலக்கியங்களான கொய்யாக்கனி, ஐயை, பாவியக்கொத்து, எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி, நூறாசிரியம், உலகியல் நூறு, கழுதை அழுத கதை, அறுபருவத் திருக்கூத்து ஆகியன அல்லாத பிற பாடல்கள் அனைத்தும் தொகுக்கப்பெற்றுப் ‘பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் தனிப்பாடல்கள் – அடங்கல்’ என்னுமாறு இப்பதிப்பு முழுமையான பதிப்பாக வெளிவருகிறது. அவ்வகையில் இதுவே முதற் பதிப்பு எனலாம்.
பாடல்கள் அனைத்திற்கும் முன்னைப் பதிப்பின் போக்கிலேயே தொடர்ந்து பாடல்கள் விளக்கக் குறிப்புகள் எழுதிச் சேர்க்கப் பெற்றுள்ளன.
இயற்றப்பெற்ற அல்லது வெளிவந்த காலத்தையொட்டி ஆண்டு, மாத முறைப்படி பாடல்கள் வரிசைப்படுத்தப்பட்டிருப்பது இப்பதிப்பின் தனிச்சிறப்பாகும்.
பழைய பாடல்கள் சில எழுதப்பெற்ற காலம் தெளிவாகத் தெரியாமையால், அப்பாடற்குரிய ஆண்டையொட்டி வினாக்குறியிடப்பட்டுள்ளது.
இக் கனிச்சாறு தொகுதிகளில், தமிழ், இந்தி யெதிர்ப்புப் பற்றிய பாடல்கள் முதல் தொகுதியாகவும், இன எழுச்சிப் பாடல்கள் இரண்டாந் தொகுதியாகவும் அமைந்துள்ளன; நாட்டுரிமை பற்றிய மூன்றாந் தொகுதியில் நாட்டுரிமை, தமிழீழம் என்னும் பிரிவுகளிலான பாடல்கள் இடம்பெற்றுள்ளன; இளைய தலைமுறை, பொதுமை, இயக்கம் ஆகியன பற்றிய பாடல்கள் நான்காந் தொகுதியாகவும், குஞ்சுகளுக்கு, பறவைகளுக்கு, மணிமொழி மாலை என்னுந் தலைப்புகளில் அமைந்த பாடல்கள் ஐந்தாந் தொகுதியாகவும் கொள்ளப்பெற்றுள்ளன; ஆறாந் தொகுதியாவது காதல், இயற்கை, இறைமை என்னும் பிரிவுகளைக் கொண்ட பாடல்கள்; தன்னிலை விளக்கம், பெருமக்கள் சிறப்பு, திருநாள் வாழ்த்து, திருமண வாழ்த்து, மதிப்புரைகள் முதலியனவாகிய பாடல்கள் ஏழாந் தொகுதியில் வைக்கப் பெற்றுள்ளன. பாட்டரங்கப் பாடல்கள் எட்டாந் தொகுதி.
2009இல் தமிழக அரசு, பாவலரேறு அவர்களின் படைப்புகளை நாட்டுடைமையாக்கிப் பெருமை கொண்டது. அதனால் அவர்தம் படைப்புகளைப் பலரும் வெளியிட வாய்ப்பு ஏற்பட்டது. எனினும் வெளிவராத பாடல்கள் பலவற்றையும் நாம் வெளியிட்டால் மட்டுமே மற்றவர்கள் வெளியிட வாய்ப்பு ஏற்படும் என்பதால் நாம் முழுமையாக வெளியிட வேண்டிய தேவை ஏற்பட்டது.
எட்டுத் தொகுதிகளையும் ஒரே நேரத்தில் வெளியிடுவதற்குப் பெரும் பொருள் தேவைப்பட்டதால், முன்வெளியீட்டுத் திட்டம் 'தென்மொழி' யில் அறிவிக்கப் பெற்றது.
தென்மொழி அன்பர்கள் பலரும் முனைந்து தொகை அனுப்பி வைத்திருந்தனராயினும், அத்தொகை, தேவையான எல்லைக்கு மிகவும் குறைவான அளவையே நிறைவு செய்தது. நாமும் அந்தக் காலக்கட்டத்திற்குள் வெளியிட இயலாமல் சற்று காத்திருக்கநேர்ந்தது.
அவ்வாறு காத்திருக்கும் காலத்திற்குள்ளும் எதிர்மம், அச்சுக்கூலி, தாள் இவற்றின் விலையேற்றம் அளவு கடந்து உயர்வும் பெற்றன. அவற்றையும் நெருக்கியே வெளியிட வேண்டியதாயிற்று.
இனி, தமிழ்மக்கள் தம் மொழிநலத்தையும் வாழ்வியற் சிறப்புகள் சீரழிவுகள் ஆகியவற்றையும் உணர்ந்து, அறிவிலும் ஆற்றலிலும் உயர்ந்து, எழுச்சிபெற்று, இனநலம் பேணி, நாட்டுரிமை பெற்று வாழ்வாங்கு வாழ வகைசெய்யும் கருத்துத் தெளிவும் உணர்வுச் செழுமையும் வாய்ந்த பாடல் திரட்டான இக் கனிச்சாறு தொகுதிகளைத் தமிழ்கூறும் நல்லுலகம் வரவேற்றுப் பயன்கொண்டு சிறக்கும் என்று நம்புகின்றோம்.
-தென்மொழி பதிப்பகத்தினர்
கனிச்சாறு முதல் தொகுதி
(தமிழ், இந்தி எதிர்ப்பு)
பொருளடக்கம்
பாடல் எண் பாடல் தலைப்பு பக்க எண்.
1. | 3 |
2. | 4 |
3. | 6 |
4. | 15 |
5. | 16 |
6. | 18 |
7. | 21 |
8. | 24 |
9. | 27 |
10. | 29 |
11. | 29 |
12. | 30 |
13. | 30 |
14. | 31 |
15. | 31 |
16. | 32 |
17. | 33 |
18. | 34 |
19. | 35 |
20. | 35 |
21. | 36 |
22. | 36 |
23. | 37 |
24. | 37 |
25. | 38 |
26. | 46 |
27. | 50 |
28. | 50 |
பாடல் எண் பாடல் தலைப்பு
பக்க எண்.
29. | 51 |
30. | 53 |
31. | 53 |
32. | 54 |
33. | 56 |
34. | 57 |
35. | 58 |
36. | 60 |
37. | 61 |
38. | 62 |
39. | 63 |
40. | 64 |
41. | 65 |
42. | 66 |
43. | 68 |
44. | 69 |
45. | 70 |
46. | 71 |
47. | 72 |
48. | 73 |
49. | 74 |
50. | 75 |
51. | 76 |
52. | 77 |
53. | 78 |
54. | 79 |
55. | 80 |
56. | 81 |
57. | 82 |
58. | 83 |
59. | 84 |
60. | 85 |
பாடல் எண் பாடல் தலைப்பு
பக்க எண்.
61. | 86 |
62. | 88 |
63. | 91 |
64. | 92 |
65. | 93 |
66. | 94 |
67. | 94 |
68. | 94 |
69. | 95 |
70. | 95 |
71. | 96 |
72. | 96 |
73. | 97 |
74. | 99 |
75. | 107 |
76. | 108 |
77. | 108 |
78. | 109 |
79. | 109 |
80. | 110 |
81. | 111 |
82. | 112 |
83. | 113 |
84. | 114 |