கனிச்சாறு 1/047-089
44 செந்தமிழ்ச் சிட்டே ! செந்தமிழ்ச் சிட்டே !
செந்தமிழ்ச் சிட்டே! செந்தமிழ்ச் சிட்டே!
எந்தமிழ் மக்களுக் கேற்றம் உரைத்திடு!
எந்தமிழ் மக்களுக் கேற்றம் உரைக்கையில்,
வெந்தழிந் தாலும் ‘வீழ்விலை' என்க:
பைந்தமிழ்ச் சிட்டே! பைந்தமிழ்ச் சிட்டே!
நைந்த தமிழரின் நலத்துக் குழைத்திடு!
நைந்த தமிழரின் நலத்துக் குழைக்கையில்,
தொய்ந்த துயரெலாம் ‘தூசுகள்' என்க!
தீந்தமிழ்ச் சிட்டே! தீந்தமிழ்ச் சிட்டே!
மாய்ந்த தமிழரின் மலர்ச்சிக் குதவிடு!
மாய்ந்த தமிழரின் மலர்ச்சிக் குதவையில்,
ஏய்ந்த துன்பமும் ‘இன்பமே' என்க!
தனித்தமிழ்ச் சிட்டே! தனித்தமிழ்ச் சிட்டே!
இனித்தமிழ் நலத்தையே எண்ணிப் பறந்திடு!
இனித்தமிழ் நலத்தையே எண்ணிப் பறக்கையில்,
பனித்தகண் ணீரையும் 'பனித்துளி' என்க!
பழந்தமிழ்ச் சிட்டே! பழந்தமிழ்ச் சிட்டே!
இழந்த தமிழ்நலம் ஈட்ட முனைந்திடு!
இழந்த தமிழ்நலம் ஈட்ட முனைகையில்,
உழந்த நெஞ்சிலும் ‘உவகையே' என்க!
தென்மொழிச் சிட்டே! தென்மொழிச் சிட்டே!
என்மொழி என்னினம் என் நிலம் வாழ்த்திடு!
என்மொழி என்னினம் என்நில வாழ்த்திலே,
புன்மொழி கேட்பினும் ‘பொன்மொழி' என்க!
-1975