உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 1/035-089

விக்கிமூலம் இலிருந்து

32  'தமிழ்' எனும் கூட்டினுள் தமிழரே இணைக!

நெஞ்சிலும் நினைவிலும் தமிழனே நீதான்!
நெட்டுயிர்க் கின்றஎன் மூச்சிலும் நீதான்!
எஞ்சிய புகழினை எண்ணுதல் செய்வாய்.
எத்தனை நாட்டினை அடைக்கலம் கொண்டாய்.
கொஞ்சமும் நம்நிலை கருதுகி லாயே!
கூறு மொழிக்கிரு செவிகளும் தாராய்!
அஞ்சுதல் கண்டனை; அடங்குதல் செய்வாய்.
ஆயிர மாயிர மாண்டுகள் வீழ்ந்தாய்!

எண்ணிட எண்ணிடத் துணுக்குறும் நெஞ்சம்;
ஏங்கிட ஏங்கிடச் சாம்பிடும் மூச்சு!
பண்ணிலும் உரையிலும் பற்பல சொன்னோம்;
பாலிலும் நெய்யிலும் சொற்களைத் தோய்த்தோம்!
எண்ணறு மேடையில் விண்ணதிர்ந் தாட
ஏ!தமி ழா!விழி! விழி! - எனச் சொன்னோம்!
கண்ணிமை திறந்தனை திறந்தனை இல்லை;
காதுகள் தூர்ந்தனை தூர்ந்தனை! கண்டோம்!

'ஆரியன் என்றனைத் தாழ்த்தினன்' - என்றாய்;
'ஆயிர மாண்டுகள் வீழத்தினன்' - என்றாய்;
‘பாரியும் ஓரியும் கொடைமடம் கொண்டே
பல்லினத் தாரையும் வளர்த்தனர்' - என்றாய்;
‘வாரியும் கொண்டது பழஞ்சிறப்' பென்றாய்;
'வடவனும் புகுந்தனன்; ஒழித்தனன்' - என்றாய்;
'ஆரிதை நம்புவர்? உன்றனை நீயே
அடிமைசெய் தாய்; உனைத் தாழ்த்தியும் கொண்டாய்!

வித்தப் படாதெனத் தடுத்தவர் யாரே?
விளைக்கப் படாதென மறித்தவர் யாரே?
தொத்தப் படாதெனச் சொன்னவர் யாவர்?
தூங்கிடப் போவென உரைத்தவர் யாவர்?
கத்தப் படாதெனும் கட்டளை ஏது?
கனைக்கப் படாதென நெரித்தகை யார் கை?
முத்தப் படாதெனில் உரிமையென் னாகும்?
முனையப் படாதென யாருனைச் சொன்னார்!

விழிக்கப் படாதென வெருட்டிய தாரே?
வீழ்ந்திவண் கிடவென மருட்டிய தாரே?
அழிக்கப் படாததா பகை,எழுந் திட்டால்?
ஆர்க்கப் படாதன வா,முர சங்கள்?
செழிக்கப் படாததா தமிழரின் வாழ்வு?
செகுக்கப் படாததா வடவரின் சூழ்ச்சி?
ஒழிக்கப் படாதன வா, மிடி சோர்வு?
ஒற்றுமை யுற்றன ரெனில்வரும் வாழ்வு!

உன்னையே உன்னவன் தாழ்த்துதல் செய்வான்!
உன்னுரை உன்செயல் பொய்யெனச் சொல்வான்!
பின்னையே குழியினைத் தோண்டமுற் பட்டான்!
பித்தனென் றுன்னையிங் கிகழுதல் செய்தான்!
சின்னதாய் அறிவெனும் கனல்புகக் கண்டால்
சீர்த்தது பேரறி வெனப்புகழ் செய்வான்!
‘என்னை நீ எழுதுதல் பேசுதல்' - என்பான்
'எவர்க்கது தேவையாம்' - என்றிகழ் செய்வான்!

அன்புடைத் தமிழனே! ஒன்றுரைக் கின்றேன்;
ஆருடை மொழியிது நாள்வரை கேட்டாய்?
என்பினில், சதையினில், குருதியில் எல்லாம்
எண்ணிலா ஆண்டுகள் அடிமைமேற் கொண்டாய்!
தின்பதில், உடுப்பதில், துயில்வதில் எல்லாம்
திகழ்ந்தநல் அடிமைவாழ் வின்பமென் கின்றாய்!
மன்பதை திரிந்தது; திரிந்ததுன் உள்ளம்!
மற்றிவண் கூறுதற் கேதுகாண் உண்மை!

இன்னமும் கூறுவேன்; இறுதிவந் தில்லை!
இருள்மடிந் தொளிவரும்! ஒளிவரும்! அக்கால்
முன்னவை மீட்பதும் வாழ்வதும் உண்மை!
முழக்கிடு! வழக்கிடு! சோம்பியி ராதே!
சின்னவை! - இழிந்தவை நினைவுகள் தூர்ப்பாய்!
சேர்ந்துகொள் உன்னினம்! ஒற்றுமை காண்பாய்!
சொன்னவை நினைவுகொள்! இணைகநீ இன்றே!
சொந்தஉன் மொழியினை, நாட்டினை ஆள்வாய்!

-1970

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_1/035-089&oldid=1514522" இலிருந்து மீள்விக்கப்பட்டது