உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 1/006-089

விக்கிமூலம் இலிருந்து


3  தமிழ்த்தாய் அறுபது



1. அந்தமிழ் நாட்டில் தோன்றி ஆன்றோருக் கின்பங் காட்டிச்
செந்தமிழ்க் கழகம் ஊர்ந்து சிறப்பாய நூல்க ளாக்கி
வந்தனை யன்றோ உன்னை வாழ்த்தாத நாவென் நாவோ?
எந்துயர் கண்டாய்; வந்தெம் இடரினைக் களைவாய் நீயே.

2.ஆவதை யாக்கி னோருள் அனையுனைப் போற்றார் யாரோ?
காவதி நாட்டை யண்டிக் கனிதமிழ் கல்லார் யாரோ?
நாவதி ராற வுன்றன் நற்றமிழ் பாடார் யாரோ?
ஈவதி லுன்னை விட்டே யெங்கணிற் காண்பார் யாரே?

3.இத்தரை தமிழ்நா டென்றே எப்பொழு தார்ப்பேன் நீர்சூழ்
இத்தரை குறள்நா டென்றே யார்சொலக் கேட்பேன் இந்திப்
பித்தரின் வாயிலும்நற் றமிழாடும் நாளென் நாளோ?
குத்தல்சேர் வறுமை நீக்கிக் குறைபோக்கெந் தமிழின்தாயே!

4.ஈயார்நற் றமிழைக் கேட்டே ஈயுநா ளெந்த நாளோ?
தீயார்செந் தமிழால் உள்ளம் திருந்துநா ளெந்த நாளோ?
வாயாரத் தமிழால் மக்கள் வாழ்த்துநா ளெந்த நாளோ?
சேயானை அன்னாய் நீயே சிறப்பிக்கு நாளெந் நாளோ?

5.உன்றனைப் பாடா ரெல்லாம் ஊமைய ரன்றோ வாழ்வில்
செந்தமிழ் படியா ரெல்லாஞ் சீர்பெறா ரன்றோ மண்மே
லுன்றனைப் பேணார் எல்லாம் உளமிலார் அன்றோ உள்ளம்
வந்துனைப் போற்று கின்றேன் வகைசெய்வாய் தீமை போக்கி!

6.ஊமையர் தமிழைப் பாடி உருப்பெறல் வேண்டுந் தீய
காமியர் தமிழால் நெஞ்சங் கரைந்துய வேண்டும் வாழ்வின்
தீமையர் உன்னைப் போற்றித் திருந்திய ராகல் வேண்டும்
நேர்மையி லின்னல் வாழ்வை நீந்தும்நா ளெந்த நாளோ?

7.எவ்வினைத் தமிழைக் காக்க என்றறிந் திருப்பார் யாரும்
அவ்வினை யாக்க முன்றில் ஆர்த்திட வேண்டும் அம்மா!
செவ்வினை யாக்கி யென்றன் செந்தமிழ்த் தாயைப் போற்றி
இவ்வுல கெல்லாம் வாழ்ந்தே இன்புறும் நாளென் நாளோ?


8.
ஏற்றஞ்சேர் பாட்டு வேண்டும் ஏர்ப்பாட்டு தமிழில் வேண்டும்
ஆற்றினில் படகுய்ப் பார்க்கு மணிதமிழ் வேண்டுந் தென்றற்
காற்றெலாந் தமிழ்ம ணந்து களிதரல் வேண்டும்; பாடற்
சோற்றினைப் படையல் செய்தேன்; சோர்வற நீக்கு வாயே!
9.
ஐயத்தைப் போக்கி மக்கள் ஆர்வத்தை ஊக்கி வைக்கத்
தையலைப் போற்று கின்றேன் தனித்தமிழ்த் தாயுன் னோடு
மெய்யுற வாக நிற்கும் மென்றமிழ்ப் பித்தன் என்னைக்
கையற வேண்டாம் அம்மா காத்தெனை ஊக்கு வாயே!
10.
ஒருகையிற் குறளு மற்று மொருகையி லடியு மேந்தி
மருங்கினில் மணியுங் காலில் மருவறு சிலம்பும் பூண்டு
கருங்குழற் காட்டிற் ‘சங்க’க் கவின் பெரு நூலாய்க் காட்சி
தருந்தனித் தாயே! என்னைத் தளர்விலா தணைப்பாய் நீயே!
11.
ஓடுகைக் கொண்டோ ருன்னை வழுத்துவ ரென்னில் சங்க
ஏடுகைக் கொண்டோ ரெல்லா மேத்து வரன்றோ நல்ல
பாடுகைக் கொண்டார் வாழ்வர்; பைந்தமி ழன்னா யுன்னை
நாடுகைக் கொண்டோன் மட்டும் நலிவதோ? சொல்வா யம்மா!
12.
ஒளவியஞ் சொல்வார் வாழ்ந்தும், அறிவிலார், கல்லார்
(வாழ்ந்தும்
வௌவுதல் செய்வார் தீய வஞ்சகர் வாழ்ந்தும், வாழா
திவ்விடுக் கண்பட் டுள்ளோ னின்பத்தைக் காணா தெல்லாந்
தவ்வையின் கொடுமை யில்லை; தனித்தமிழ்க் கொடுமை
(யன்றோ!
13.
கவின்பெறு தமிழே! என்னைக் காக்கின்ற அருளே! இன்பம்
குவிந்தநற் பொருளே! எண்ணக் குன்றமே! இடுக்கண் கண்டால்
அவிழ்கின்ற உடுக்கைக் காற்றுங் கையென விரைநீ யென்று
நவில்மறை யுடையா யானால் நாவலர்ப் போற்றாய் வாழி!
14.
காமலர்க் கள்ளே! கண்ணின் கருமையே! கனியின் சாறே!
பாமலர் அளித்தோ னெண்ணப் பரவையே! தீயோர் வாழ
நாமலர்ந் துன்னைப் போற்றும் நல்லவற் பேணா ளாகிப்
பூமலர் வாயடைத்தாய்; புரைதுயர் நீக்காய் வாழி!

15.

கிளிவாய்வாழ் தமிழே! யாவின் கிளைவாழ்மைக் குயிலின்
(பாட்டில்
ஒளிவாய் நீ! தென்றல் வாயின் ஒலியே! பூ வண்டின் வாயில்
நெளிவாய் நீ! நீலந் தோய்ந்த நீளலைச் சுருளில் பேசி
ஒளிர்வாய் நீ! என்னைக் காணா தொளிவாயுள் ளொளியே
(வாழி!



16.

கீழ்மைகைக் கொண்டோர் போற்றிக் கிழமையு மறவா துள்ளும்
ஏர்மைகொள் புலவ னெம்மை இரங்கியே காணா தாளைத்
தாழ்விலும் உளம்தை யாமல் தனித்தமிழ்ப் பாடல் யாத்து
வாழ்விலா வகையாய்ப் பேணி வருகின்றேன் காணாய் வாழி!



17.

குழவியி னுள்ளத் துள்ளே குவிந்துநீ வாழ்வு பெற்று
மழலையில் வளர்ந்து தாயின் மார்பினிற் புரண்டு பள்ளி
நிழலிலே குந்தி யின்பம் நீட்டியே என்னைக் கண்டு
விழைந்தனை ஆனால் வாழ்வை விளைவிக்க விழையாய் வாழி!



18.

கூத்திசை யியலு மாகக் கோலஞ்செய் தமிழே, ஈண்டு
நீத்திசை யின்றிப் போன நிலையினைப் பாடிப் பல்வா
றேத்திசீர் பரப்பி யென்றன் ஏற்றத்தை நாட்டி உன்னை
நாத்திசை யிரண்டும் வாழ வைப்பன்; நீ வாழ்வா யம்மா!



19.

கெடுதியைச் செய்வார் கண்டால் கீழ்க்குனிந் திடுவேனுன்னை
யடுத்தவர் தீயராயின் அவர்நாண வைப்பேன்; வாழ்வில்
படுத்தவர் தமிழ ராயின் பணிந்துடன் சென்று காப்பேன்;
கடுத்தவள் நீயா யிற்பின் கழறுவ துண்டோ அம்மா?



20.

கேட்டலே இன்பம்; வாயால் கிளத்தலோ இன்பம் இன்பம்.
பாட்டிலே நெஞ்சு தோயப் படித்தலோ வாயுக் கின்பம்.
ஏட்டிலே கண்ணை வைத்தா லெடுப்பதோ ஈட்டிக் குத்து.
வாட்டினாய் உனைவாழ் விக்க வாடுவேன் காணாய் வாழி!



21.

கையடி செய்வார்க் கெல்லாம் களிசெய்வாய்; கூட்டத் தூர்ந்து
பையடி செய்வோர் பையைப் பணத்தினால் நிரப்பு கின்றாய்!
தையலே, உன்னைக் காணத் தலைநிலம் கவியு மென்பேன்.
நைந்துளேன் என்ப தெல்லாம் நாணய விளைவே யாகும்!

22.

கொல்லியில் வளர்ந்தா யென்று குறுகினே னின்பங் கண்டேன்.
நெல்லியின் கனியால் இன்பம் நேர்ந்ததே யென்று பாடுஞ்
செல்வியைக் காணுகின்றேன்; சேக்கிழார் பேசு கின்றார்
இல்லையென் றுள்ள வர்க்கே யெந்தமி ழில்லை யம்மா!


23.

கோவலன் கண்ட பெண்ணைக் குவலயம் போற்றப் பாடி
நாவலன் இளங்கோ தன்னை நற்புகழ் எய்தச் செய்த,
பாவலர் நெஞ்சில் வாழும் பத்தினி படிக்குங் காலை
ஆவலைத் துண்டு செய்வாள்; ஆனாலும் வாழ்த்து கின்றேன்!


24.

கவ்விருள் அன்றோ உன்னைக் கல்லாரின் அறிவெல்லாங் (கொல்
அவ்விருள் போக்கு தற்கே அருந்தமிழ் பேசல் வேண்டும்.
இவ்வகை எடுத்துச் சொல்லும் எம்மோரிவ் வுலகத்துள்ளே
எவ்வகை வாழல் வேண்டும் என்பதை அறியாய் வாழி!


25.

‘சங்க’த்தின் விளைவே! என்றன் செந்தமிழ் வீடே! ஒவ்வோர்
அங்கத்தின் உருவே! மூச்சிற் காகிய முதலே! ஆழ்ந்த
வங்கத்தைக் கிழக்கும் வாழும் அரபியை மேற்குந் தாங்கி
எங்களைக் காக்கத் தெற்கில் கடலோடும் மலையே வாழி!


26.

சாவாத எழிலே! வாழ்ந்து சலிக்காத தாயே! துன்பம்
மேவாத ஒலியே! எம்போல் மின்னாத தமிழர்க் கெல்லாம்
ஆவாத பொருளே! நீண்ட ஆழிசூழ் மண்ணில் என்னைக்
காவாத முதலே! பாவாற் கசிகின்றேன்; கனிவா யம்மா!


27.

சிவிகையிற் குந்தி ஏத்திச் ‘சிரமீ’து வைத்துப் பேணி
அவிகையில் லாமற் காத்த அரசரின் தமிழே, யின்று
‘புவி 'மிசை யஃகித் தேய்ந்து போயினை யன்றோ நெஞ்சு
குவியுதென் னுயிரோ நைந்து குலையுது காத்துத் தேர்வாய்!


28.

சீர்த்திசேர் வேந்தர் எல்லாம் செந்தமிழ்ப் புலவர் செய்த
நேர்த்திசேர் பாக்கட் கீந்து நேர்மிடி போக்கிப் போந்த
ஆர்த்திடு கழகம் ஆக்கி வைத்தனர் தமிழின் வேந்தே
பார்த்திடு வறுமை நீக்காப் பாவையே பாச்சு வைப்பாய்!

29.

சுவைத்தவா யூறிநிற்கும் செம்பொருளை விண்டு கண்டு
துவைத்திடு நெஞ்சுக் கேயோர் இன்பத்திற் கொப்புண்டோ,வேந்
தவைத்திடு வாழ்த்துப் பெற்றோய் அல்லலைப் பெற்றோன் கண்டும்
சுவைத்திடு வாழ்வைத் தாராய் சுரும்புநான் மலர்நீ யன்றோ!

30.

சூட்டினார் புலவர் பன்னூல் சூழ்ந்துள்ள வறுமை உந்தும்
வாட்டத்தைப் போக்கா தன்னார் வாணாளைத் தீநாள் ஆக்கி
மேட்டிமை பெற்றாய் தீய வஞ்சனை கண்டும் உன்னை
ஏட்டிலே தோய்ப்பேன் நீயோ வாழ்வினைத் தீயிற் றோய்ப்பாய்!

31.

செம்மொழித் திருவே! என்னைச் சேர்ந்த நற்கலையே!
(வாழ்வின்
மும்மொழிப் படையே! உள்ளம் மூழ்கின்ற அன்பே! ஞாலத்
தெம்மொழி ஒன்றே ஏற்றம் உண்டென உணர்த்தி மக்கள்
மம்மரை யறுப்பேன்; என்றன் மனையினிற் குடிசேர் வாயே!

32.

சேராது தனித்தி யங்கும் செந்தமிழ் நாட்டாட் சிக்கே
ஓராது தீங்கு செய்யும் உணரார்க்கே உணர்த்து மாற்றான்
ஆறாது கதறும் வாயை ஆற்றாமற் கேடு செய்யும்
வேறார்க்குத் துணையாய் நிற்பாய்! விரிமதி கொள்ளாய் வாழி!

33.

சொல்லொன்றை யெண்ண லின்பஞ் சுவடியி லெழுத லின்பஞ்
சொல்லொன்றைச் சொல்ல வாய்க்குச் சொல்லொணா
(வின்பஞ் சொன்ன
சொல்லொன்றைக் கூர்ந்து கேட்டசெவிக்கின்பம் செவியிற்பட்ட
சொல்லினால் உடற்கே இன்ப மைவகை யின்ப மம்மா!

34.

சோர்வுற்ற பொழுதிலேயோர் செந்தமிழ்ப் பாடல் உண்டால்
ஆர்வற்ற உள்ளத் திற்கோ ராயிர மின்பம்; வந்து
நேர்வுற்ற துயரால் உள்ளம் நைந்திடும் போழ்தில் காதிற்
சேர்வுற்ற தமிழ்ச்சொல் லம்மா சேர்ப்பது கோடி யின்பம்!

35.

ஞமலியொன் றிரவிற் றோயுங் திங்களைக் குரைப்ப தொப்பத்
தமநலம் மறந்தே இன்பத் தமிழினைப் பழிப்பார்க் கெல்லாம்
எமதுநா விளக்கஞ் சொல்லு மேற்றத்தை விளைக்கு மானா
லுமதுநா கலிநோய்க் காற்றா துட்டகும் பவள வாயே!

36.

ஞாலத்து முதலே! மக்கள் நன்னிலை வாழ்வுத் தாயே!
கோலத்து வரியே! உன்னைக் கொடுமொழிசொல்வார் கொண்ட
தாலத்துப் போகச் செய்யும் தனிமகன் வறுமை யேற்றுச்
சேலத்துள் வாழ்வான் கண்டு செம்மைசேர் சீலத் தாயே!

37.

ஞிமிறுநான் மலர்நீ ஊரும் எறும்புநான் கன்னல் நீயே
தமிழ்நெஞ்சக் கிழிஞல் நான்நீ தனிமுத்தா யதனுள் வாழ்வாய்
கமழ்நறு மாரம்நீ; என் ‘ கவி ’மன மாரக் கல்லே!
அமிழ்தெழு பரவைநீ நான் அதிலுறு மீனந் தாயே!

38.

ஞெமுக்கிடு மிடுக்கண்பட்ட ஏழையன் வறுமை யென்னும்
இமிழ்க்கிடு மாழி நீந்த வின்றமிழ்ப் படகை யாடா
தமுக்குவை; கரையே றிப்போய் ஆக்குந வாற்றிமீட்டே
உமக்கொளி மண்டு நீண்ட உயர்புகழ் சேர்ப்பன் காணாய்!

39.

ஞொள்கினைப் பெயரின்று! ஞாயிறு போந்து திங்கள்
நள்ளிர வோட்ட வாடும் வகையெனப் பண்டு சூழ்ந்த
தெள்புகழ் அஃகி ஈண்டுத் தண்ணொளி வந்த தெல்லாம்
வள்ளண்மை யில்லா வுன்றன் வகையென எண்ணிக் காப்பாய்!

40.

தனித்தகை மொழியே! இந்தத் தரையில்வாழ் மக்கட் கெல்லாம்
இனித்தநற் பொருளே! சொல்லின் எளிமைசேர் அழகே! இன்பக்
கனித்தமிழ் மொழிகூ ரன்னாய்! கடிதமிழ் கற்குங் கால்முன்
னினித்துப்பின் தீமை சேர்க்கும் முரண்பாடு கொண்டோய் வாழி!

41.

தாவில்மன் புகழைச் சேர்ப்பேன்; தனித்தமிழ் தமிழ்என் றார்ப்பேன்
பாவில்நன் கருத்தைச் சொல்லிப் பாரினுக் குதவி யன்பு
தூவிய நிலையில் வாழக் குறிக்கொண்டு வாழுங் காலை
மேவிலா தென்றன் போக்கில் மிடிசேர்த்தாய் தாயே வாழி!

42.

திரும்பிய திசைகள் தோறுந் தீந்தமிழ் பேசல் வேண்டும்
விரும்பிய கருத்தைக் கூறச் செந்தமிழ்ச் சொல்லே வேண்டும்
கரும்புதீஞ் சுவையே! வாழ்வின் கதிரொளி! இன்பம் யாண்டும்
அரும்பிய வாழ்வு வேண்டு மனத்தினை வாழ வைப்பாய்!


43.

தீஞ்சுளைக் கனியின் சாறே! தென்றலே! தென்ற லூரும்
பூஞ்சுனைப் புனலிற் றோயும் புதுமண மலரே உந்தும்
ஊஞ்சலின் அசைவால் உள்ளம் உணர்ந்திடு மின்ப மேவான்
றோய்ந்துவீ ழருவியெல்லாந் தோகையுன் தோற்ற மன்றோ?


44.

துருவுங்காலென்னின் மிக்க துன்பத்தைக்கொண்டாய்! கொண்ட
அரும்பெறு நூற்செல் வத்தை ஆழிக்குப் பறிகொ டுத்தே
பெருந்துன்பம் மேவுநீண்ட பிணிவாழ்க்கை யுடையாய் என்பால்
வருந்துன்பம் போக்க நீயும் வல்லையோ? மிடிகொண் டாளே!


45.

தூறலெந் துன்பமென்னின் தொலையாப் பேய் மழையுன் துன்பம்.
பீறலெந் துன்பெனில், நாண் பேணவுங் கூறை யில்லாய்!
ஏறலெந் துன்ப மென்னின் ஏறிய துன்பங் கொண்டாய்
ஆறலெந் துன்ப மென்னின் ஆற்றாத துயர்கொண் டாயே!


46.

தொங்குநீர்க் கோடைக் காகுந் திரண்டுள நூற்க ளெல்லா
மிங்குளோர் வெம்மை போக்கு மின்னிழ லாகும் நாறுஞ்
சங்குசாய் ஆழி யுண்ட நூற்கோடி யென்றால் வந்தே
தங்கினார் மேய்ந்த நூற்கள் கணக்கிலை; தமிழின் தாயே!


47.

தேடிய நூற்செல் வத்தைத் திரட்டியே அணிகள் செய்து
நீடிய வின்பந் துய்த்துப் போந்தனர் சான்றோர்; ஈண்டு
நாடிய கள்ளர் எல்லாம் நாட்குநாள் நினைச்சி தைத்து
வாடிய நெஞ்சாய் விட்டார் வாட்டம் வான் கொள்ளா தம்மா!


48.

தையலே எஞ்சிநின்ற செம்பொருள் நூற்செல் வங்கள்
கையள வேயா னாலுங் கணக்கிலா மதிப்புச் சூழும்.
உய்விலை யென்கின் றேனான் உயிரிலை என்கின் றாய்நீ
நையலி னின்று மீளும் நாளெந்நாள் அறியே னம்மா?


49.

தொன்மையை எண்ணுங் காலைத் துவள்கின்றேன் ஐயோ வந்தார்
புன்மையை உன்னுங் காலைப் புரள்கின்றேன் தீயோர் உன்றன்
நன்மையைக் காணார் அல்லால் நலவினை ஏற்றுவார் கொல்.
என்மை சூழ் இன்னல் உன்றன் இடரிலோர் துளியே அம்மா!

50.

தோளொடு தோள்நின் றாற்றத் துகள்வானில் மேவ வார்க்கும்
வாளொடு வாள்நின் றாற்ற வாங்குகை வீச் சொலிப்ப
ஆளொடு ஆள்நின் றாற்றும் அருந்தமிழ்க் கூட்ட மெங்கோ
தூளொடு தூளாய்ப் போன வகையாகித் துவண்டு போனாய்!


51.

நந்தமிழ்த் தாயைக் காக்க நாட்டினுள் மக்க ளெல்லாம்
வெந்தநெஞ் சோடுகண்ணில் வெம்மையோ டணுகி நின்று
வந்தவ ரோட்டி வாழ்வை வகை செய்தே ஆட்சி மாற்றி
அந்தமிழ் பேணித் துன்ப மகற்றுநா ளெந்த நாளோ?


52.

நானிலந் தமிழை யேற்று நந்தாத சீருண் டாக்கி
மாநில மக்கட் கெல்லாம் மணித்தமிழ்ப் பேசச் சொல்லி
ஈநில நூற்க ளெல்லாந் தனித்தமிழ் இயம்பல் தானே
நாநில மீதுகாணு நற்கனா தமிழ்த்தா யம்மா?


53.

பசிப்பிணி பஞ்சம் என்றே பாடுடை மக்கள் கூறப்
‘புசி’த்தினி யெஞ்சோ மென்றே ‘புவி’மிசைச் சிலரே வாழ
விசித்தழு குழவி தாங்கி வெம்பசி மடியிற் றாங்கி
விசித்திலா வேழைக் கெந்நாள் வாழ்வுசேர் நாளோ அம்மா!


54.

பாருக்கோ ரரசுசெய்து பணிமொழி யமைச்சுண் டாக்கி
நேருக்கோர் மொழியை வேண்டின் நந்தமிழ் அரசி லேற்றி
ஊருக்குந் தமிழ்ப்பேர் சூட்டி உழைப்பினால் சீர்மை செய்து
ஏருக்கித் தரையை ஈந்தே இன்னலஞ் சேர்ப்பா யம்மா!


55.

பிறங்கிய நன்னூ லாக்கீர் பீடுறு வினைகள் ஆற்றீர்
கறங்குசீ ரடிசேர் அன்புக் கன்னியர் போற்றீர்; தொல்சீ
ரிறங்கிய நாற்றாய்ப் பேணி ஏறுசீர் நாளுஞ் சேர்த்துத்
திறங்குவி நாட்டைக் காப்பீர் தீந்தமிழ்த் தாய்காப் பீரே!

(வேறு)


56.

புகவொடு புனைவிற் பொருளும், பொருள்தரு தொண்டும் புலனார்
மகவொடு மனையு மகலா மாண்பொடு பிறவும் மலியத்
தகவொடு வாழ்வுந் தகராத் தகைசேர் தமிழும் சூழ
அகமொடு புறமு மாநல் லறவாழ் வாழ்த்துக தாயே!

(வேறு)

56.

பூக்கக் காப் புன்னைக் கோட்டின் மாக்குயிற் பேடுதன்னோ
டூக்கக்கூக் குக்கூக் குக்கூ வெனக் குரலெற்றுப் பாடத்
தேக்கக்கோ டொன்றிற் கிள்ளைக் கூட்டந்தீந் தமிழைப் பேச
மாக் ‘கவி’ நாட்டற் கேயான் மயலுற வேண்டுந் தாயே!

(வேறு)

58.

பெண்கட்குக் கல்வி வேண்டும் பேதைக்குந் தமிழைச் சொல்லிக்
கண்கட்கே வொளியுண்டாக்கிக் கவினுள்ள பொருளைக் காட்டிப்
பண்புடை யாராய்ச் செய்து பாரினில் யாவர் தாமும்
விண்ணொலி யெழுப்பி யுன்பேர் வாழ்த்துநா ளென்வாழ்நாளே!

(வேறு)

59.

மேகந் தூங்கும் வான்பொரு நின்று மென்றமிழ் நின்று காண்குதுபோல்
மாகந் தோங்கு செந்நூ லூடாய் மாநிலங் காணும் வகை யாலே
தாகந் தாங்கு மென்னுள வாசை தணியாய் நெஞ்சுள் வாழ்வாளே
பாகம் புனல்பாய் செந்தமிழ் நாட்டுப் பாவரசீ என் நாவரசீ!

(வேறு)

60.

வேட்டல் நெஞ்சின் வாழ்வே! ஒளியே! வேறெம் மொழிக்குந் தாயேவுன்
னோட்டம் எல்லாஞ் செந்தமிழ் நாட்டின் நோதீர்க் கன்றோ எம்போல
ஊட்டங் கொள்ளும் பாவலர் நெஞ்சில் உறைவோளே நாவுரையாளே
வாட்டங் கண்டாய் கதிராய் என்றன் வன்பனி போக்கெந் தமிழ்த்தாயே!

-1953

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_1/006-089&oldid=1514163" இலிருந்து மீள்விக்கப்பட்டது