உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 1/007-089

விக்கிமூலம் இலிருந்து


4  கூட்டுக் கிளி!


கூட்டுக் கிளியே! கூட்டுக் கிளியே!
பாட்டைக் கேளாய் கூட்டுக் கிளியே!
நாட்டு விடுதலை நாட்டுக வென்றே
நீட்டி முழக்கினும் நின்மொழி கேட்டுக்
கூட்டைத் திறக்குங் கனிவுடை யாளரிந்
நாட்டி லில்லை கூட்டுக் கிளியே!

நின்வாய்ச் செந்தமிழ் நேற்றே மடிந்த
புன்வாய் வடமொழி போட்ட பிள்ளையாம்!
இப்படி இயம்புதல் இழிந்தவ ரல்லர்!
நற்படி யாத்தமிழ் நலம்படித் துயர்ந்து
பட்டம் பெற்ற பன்மொழிப் புலவர்!
திட்டம் அறிவையோ யான்மொழி கின்றேன்!

காதிற் புகுவது கடுங்குரல் எனினும்,
ஓதி யுணர்ந்த துயர் நூ லெனினும்,
கண்ணாற் பார்ப்பதும் உண்மையே எனினும்
பன்மலர் நுகர்தல் மூக்கே எனினும்
வயிற்றைப் புடைப்பது வாய்புக வேண்டுமே!
சோற்றுப் பருக்கை சொன்னசொல்! தமிழ்ப்பயிர்
நாற்றின் நடுவில் நலிவுசெய் களைகளே!

-1955

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_1/007-089&oldid=1514171" இலிருந்து மீள்விக்கப்பட்டது