உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 1/014-089

விக்கிமூலம் இலிருந்து

11  தாயுரை!

உன்னைப் பெற்ற தாயுனக் கிதனை
உரைக்கின் றேனடா, மகனே - இது
முன்னைக் கொடுத்த செல்வங் களிலும்
மூத்தது கேளடா, மகனே!

உண்ணக் கொடுத்த பாலிலுஞ் சோற்றிலும்
ஊட்டிக் கொடுத்த தமிழை - உளம்
எண்ணக் கடுத்த வகைபோல் - அதனின்
எழிலைக் கெடுத்தனர் அடடா!

மண்ணைப் படுத்தினர் அடிமை! தமிழின்
மாந்தரைத் தடுத்தனர் உயர்வில் - நம்
கண்ணைக் கெடுத்தனர் எனினும் உய்வோம்;
கருத்தைக் கெடுத்தனர் அடடா!

பண்ணைக் கொடுத்த யாழை இசைக்கையில்
பறையை எடுத்தனர் முழுக்க - தேன்
உண்ணக் கொடுத்த கையினால் நஞ்சை
ஊட்டத் துணிந்தனர் அடடா!

தூங்கப் படுத்தனர் தமிழர்! இனியவர்
துயில்நீங் கிடுதல் கடினம் - உயிர்
வாங்கப் புறப்படு; பகைமுன் உறையின்
வாளைக் கையினில் எடடா!

தாயைக் காத்திடு முன்னம், ஆன்றோர்
தமிழைக் காத்திடற் கெழுவாய் - ஒரு
பேயை அரியணை வைத்தார் அவர்தம்
பிழையைப் போற்றிடில் கெடுவாய்!

-1959

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_1/014-089&oldid=1514525" இலிருந்து மீள்விக்கப்பட்டது