கனிச்சாறு 1/046-089
Appearance
43 கிறுக்கர்தம் வாலை அறுக்க!
இலக்கியத்தைத் தவிர்த்திடுக! கதைகளினி
எழுதற்க! எழுதினாலும்
துலக்கமிலா எந்தமிழர் வாழ்வுபெற
உண்மையினைத் துணிந்து சொல்க!
புலக்கவினால், கலைத்திறனால் தமிழினத்தைக்
கட்டழிக்கும் புல்லர் எல்லாம்
கலக்கமுற்றுப் போகும்படி எழுத்தினிலே
சூடேற்றிக் கனலச் செய்க!
பாட்டெழுதிக் கொண்டிருக்கும் படுகோழைக்
'கவிஞ’ரெலாம் பதை பதைக்க
ஏட்டினிலே நெருப்பெழுத்தால் எந்தமிழ்ப்
பாவலர்கள் எழுதிக் காட்டி,
வாட்டமுறுந் தமிழினத்தைக் காத்திடுக!
வரலாற்றைப் புதுக்கச் செய்க!
ஆட்டமுறுங் கிறுக்கர்தம் வாலையெல்லாம்
ஒட்டறுத்தே அடங்கச் செய்க!
-1975