உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 1/054-089

விக்கிமூலம் இலிருந்து

51  அருள்க செந்தமிழே!

எங்கு, எந் தமிழர் இருக்கின் றார்களோ,
எங்கு, அவர் துயரால் இழிகின் றார்களோ,
எங்கு, அவர் உரிமை இழக்கின் றார்களோ,
இனம் விளங் காமல், மொழிதெரி யாமல்,
எங்கு, அவர் பல்வே றினத்திற் கடிமையாய்
எம்முன் னேற்றமும் இன்றி உள் ளார்களோ -
அங்கு, என் அறிவும், உள்ளமும், உயிரும்
அளாவி யிருக்க அருள்க, செந் தமிழே!

மானந் துறந்து, தமிழ்தோய் மண்ணின்
மண்டிய பழம்பெரும் மாண்பை இழந்து,
கூனல் விழுந்து, குரலும் மழுங்கிக்
கூப்பிய கையும் காலுமாய், எங்கு, செந்
தேனெனும் மொழியைப் படைத்த எந் தமிழர்
திறங்கித் தேய்ந்து திகைக்கின் றார்களோ -
ஆனநற் பெருமை அனைத்தும் சான்றே, என்
அன்னைத் தமிழே, ஆங்கெனைச் சேர்த்துக!

ஒற்றைத் தமிழராய் உலக உருண்டைமேல்
ஓடிக் களைத்துக் கைகால் சோர்ந்தும்,
அற்றைப் பெருமை முழுமையும் மறந்தும்,
அன்றைச் சோற்றுக்கே அடிமுடி பதித்தும்,
எற்றைக் கெம்நிலை ஏற்றம் உறும் - என
ஏங்கிக் கிடக்கும் எந் தமிழரின் பாங்கில்,
சுற்றமாய் உறவாய்த் தொண்டனாய் நின்று, தோள்
சுமக்கும் பெருமையை அருள்க, தாய்த் தமிழே!

வாடிய பயிர்க்கே வந்தநல் மழையென -
வறுபிணி யாளர்க்கு வாழ்க்கை மருந்தென -
தேடிய குழவியைத் தேற்றிடுந் தாயெனத் -
தெறல்நெடும் பாலையில் திகழ்ந்திடும் பொழிலெனப் -
பேடியர் சூழ்ச்சியால் பிரிந்தஎன் தாயினம்
பீடுற் றுய்ந்திடும் நினைவினால் உயிர்க்கும் என்
ஓடிய மூச்சையும் உணர்வுதோய் நெஞ்சையும்
உகுத்திட விழைகிறேன்; உதவுக அன்னையே!

-1978

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_1/054-089&oldid=1514543" இலிருந்து மீள்விக்கப்பட்டது