கனிச்சாறு 1/012-089
Appearance
9 முத்தமிழ்
ஈடறவே நெஞ்சில் இனித்த தமிழ்மொழியைக்
கேடறவே காத்துக் கெடுப்பார் தமைக்கெடுத்துப்
பூடறவே வெட்டப் புறப்பட்டே னென்றவர்முன்
பீடுறவே பைங்கிளியே பேசு!
பாட்டுக்குள் நச்சைப் பயிற்றி இசைத்தமிழைக்
கேட்டுக்குள் ளாக்கும் கெடுமனத்தைத் தான்புதைக்கக்
கூட்டுக்குள் ஆவி கொடுப்பேனன் றன்னவர்முன்
கோட்டுக் குயிலே, நீ கூவு!
பூத்த கலைகள் பொலிந்ததமிழ் நாட்டரங்கில்
கூத்துக் கலையாங் குரங்காட்டம் காட்டுவர்க்கே
ஏத்துந் தமிழ்க்கூத் திளமயிலே, எந்தமிழைக்
காத்த நடமாடிக் காட்டு!
-1959