கனிச்சாறு 1/038-089

விக்கிமூலம் இலிருந்து

35  பைந்தமிழில் படிப்பதுதானே முறை!


பழந்தமிழ் நாட்டில்
பைந்தமிழ் மொழியில்
படிப்பதுதானே முறை?
இழந்தநம் உரிமை
எய்திடத் தடுக்கும்
இழிஞரின் செவிபட, அறை!

கனித்தமிழ் நிலத்தில்
கண்ணெனுந் தமிழில்
கற்பது தானே சரி!
தனித்தமிழ் மொழியைத்
தாழ்த்திய பகையைத்
தணலிட் டே, உடன் எரி,

தமிழ்வழங் கிடத்தில்
தாய்மொழி வழியாய்த்
தமிழர் படிப்பதா பிழை?
அமிழ்ந்தவர் எழுந்தால்
அயலவர்க் கென்ன?
அயர்வதா? நீ,முனைந் துழை!

பிறந்தநம் மண்ணில்
பீடுறும் தமிழில்
பேசுதற் கோ, ஒரு தடை?
மறந்த, பண் பாட்டை
மறவர்கள் மீட்க
மறிப்பவர் எவர்?கொடி றுடை!

முத்தமிழ்த் தரையில்
முதுதமிழ் மொழியில்
முறைப்படப் பயில்வதா தீது?
எத்துறை அறிவையும்
ஏற்குநந் தமிழே!
இனியுங்கள் பருப்பு,வே காது!

அத்தனை, பாட்டனை
அடிமைசெய் ததுபோல்
ஆரையிங் கரற்றுவாய் இன்னும்?
எத்தனை ஆண்டுகள்
இழப்பதெம் உரிமை?
எழுந்திடின் கழுகுமைத் தின்னும்!

-1970

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_1/038-089&oldid=1514526" இலிருந்து மீள்விக்கப்பட்டது