கனிச்சாறு 1/058-089

விக்கிமூலம் இலிருந்து

55  புலமையைக் கீழ்மை செய்வீர்!

இன்றுள புலவர் யார்க்கும்
இலக்கண இலக்கி யங்கள்
ஒன்றினும் தேர்ச்சி யில்லை;
உள்ளுரன் சிறிது மில்லை;
தொன்றுதீந் தமிழில் நல்ல
தோய்வில்லை; புலமை யில்லை;
நன்றெனும் கொள்கை ஒன்றில்
நம்பிக்கை துளியும் இல்லை!

ஒழுங்கிலை; நேர்மை யில்லை;
உண்மைநல் லுணர்வு மில்லை;
மழுங்கிலா ஊக்க மில்லை;
மானமும் மாண்பும் இல்லை;
செழுங்கிளை புரத்தல் இல்லை;
பெரியோரைச் சேர்தல் இல்லை;
அழுங்கிடும் இனத்தைக் காக்கும்
ஆர்வமும் உழைப்பும் இல்லை!

பொய்மையும் கரவுங் கொண்டு
புலமையைக் கீழ்மை செய்வார்!
மெய்மையைக் கைநெ கிழ்ப்பார்!
மேலேறக் கால்பி டிப்பார்!
நொய்மைசேர் உரைகள் கூறி
நொடிந்திடு வினைகள் மேய்ந்து
தொய்மைகூர் வாழ்க்கை செய்வார்!
தோல்வியை வெற்றி யென்பார்!

அற்றைநாள் புலவர் போல
அளப்பரும் புலமை மிக்கார்
இற்றைநாள் ஒருவ ரேனும்
இல்லெனல் இழிவே ஆகும்!
வெற்றுரை அன்றாம், ஈது!
வியன்தமிழ்ப் புலவீர்! நீவிர்
கற்றுரை தமிழை என்றும்
கயமைக்கு விற்றல் நன்றோ?

மண்டுபே ரறிவால் மல்கு
மறைமலை யடிக ளைப்போல்
பண்டித மணிபோல், சோம
சுந்தரப் பாவ லர்போல்
விண்டுசெந் தமிழ்வ ளர்த்த
விறல்மிகு திறமை மிக்கார்
உண்டெனில் அன்றோ நந்தம்
ஒண்டமிழ் வளரும் கண்டீர்!

-1979

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_1/058-089&oldid=1514547" இலிருந்து மீள்விக்கப்பட்டது