கம்பன் சுயசரிதம்/001-012

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

1. கம்பன் சுயசரிதம்

ஞ்சையில் ஸரஸ்வதி மஹால் என்ற ஒரு நிலையம். மராத்திய மன்னன் சரபோஜியால் உருவாக்கப்பட்டது. மன்னன், அவன் காலத்தில் வெளிவந்த ஆங்கிலப் புத்தகங்கள் அத்தனையையும் வாங்கியிருக்கிறான். தமிழ், தெலுங்கு, மராத்தி முதலிய மொழிகளில், எத்தனை ஏடுகள் கிடைக்குமோ அத்தனையையும் சேகரித்திருக்கிறான். காவியம் ஓவியம், சித்திரம் சிற்பம், சங்கீதம், நடனம், வைத்தியம், சோதிடம், தாவரம், மிருகம், யந்திரம், தந்திரம் இன்னும் என்ன என்ன விஷயங்களைப் பற்றி வேண்டுமானாலும், அங்கே அற்புதம் அற்புதமான ஏட்டுச் சுவடிகளைப் படிக்கலாம். இந்த ஏட்டுச் சுவடிகளைத் தேடி நானாகவே போவதுண்டு சில சமயம். சில சமயம் வெளியூரிலிருந்து வரும் அன்பர்களுக்காக அவர்களுக்கு வேண்டும் சுவடியைத் தேட அவர்களுடனும் செல்வதுண்டு. அந்த மஹாலின் அத்யக்ஷகர் ஸ்ரீ K. வாசுதேவ சாஸ்திரியார், வருபவர்களுக்குச் சுவடி பார்ப்பதற்கு வேண்டிய வசதிகள் எல்லாம் செய்து கொடுப்பார்.

ஒருநாள் சாவதானமாக நான் சரஸ்வதி மஹாலில் நுழைந்தபோது, நண்பர் சாஸ்திரியார் “சார்! கேட்டீர்களா? இங்கு ஓர் அற்புதமான ஏடு ஒன்றிருக்கிறதே தெரியுமா?” என்று கேட்டார். “சரஸ்வதி மஹாலிலே எல்லாம் அற்புதம்தானே சார்! புதிதாக என்ன அற்புதத்தைக் கண்டீர்கள்” என்றேன் நான். “சார், இங்கே ஒரு ஏடு, கம்பன் எழுதிய சுய சரிதம் என்று இருக்கிறது” என்றார். உடனே ஒரு துள்ளு துள்ளி, “என்ன? கம்பன் எழுதிய சுயசரிதமா! ஆட்டோபயாகிராபியா? என்ன சார் சரடு விடுகிறீர்கள். அப்படி ஒன்றிருந்தால் இதுவரை உங்களுக்குக் கூடத் தெரியாமலா இருந்திருக்கும். அப்படி ஒன்றிருந்தால் - எத்தனை விவாதங்கள், விவகாரங்கள் எல்லாம் என்றோ முடிந்திருக்குமே. இன்றைய ஆராய்ச்சியாளர் பலரின் தலைவலியும் எப்போதோ தீர்ந்திருக்கும். சரி சார், அந்த ஏட்டை எடுங்கள். என்ன வேலை இருந்தாலும் அதை முதலில் படித்துவிட்டுத்தான் மற்ற வேலை. எடுங்கள் சார் - எடுங்கள்” என்று அவசரப்பட்டேன். சாஸ்திரியாரோ போய் அலமாரியைத் திறந்து பல ஏடுகளைப் புரட்டி, கடைசியில் நான்கு ஐந்து ஏடுகளை எடுத்து வந்து என்னிடம் கொடுத்தார். ஏடுகளைப் பெற்ற நான் சௌகரியமாக ஒரு மேஜை முன்பு உட்கார்ந்து ஏடுகளைப் புரட்ட ஆரம்பித்தேன். அந்த ஏடுகளில் ஒன்றிலாவது முகப்பு ஏடு இருக்கவில்லை. ஓரிடத்திலாவது சுயசரிதம் என்ற தலைப்பும் இல்லை. உடனே பக்கத்திலிருந்த சாஸ்திரியாரிடம், “என்ன சார் சுயசரிதம், சரித்திரம் என்றெல்லாம் பிரமாதமாகச் சொன்னீர்கள். ஒன்றையும் காணோமே” என்றேன். “சார், எனக்குத் தெரியும். நீங்கள் அவசரக் குடுக்கை என்று. கொஞ்சம் சாவதானமாக ஏட்டைப் புரட்டுங்கள். இருந்து படியுங்கள். படித்துப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். ஏட்டில் முதல் ஏடு முகப்பு ஏடு, இல்லை என்பதனால், ஏட்டைத் திருப்புவதையே விட்டுவிடாதீர்கள். உங்களுக்குத்தான் தெரியுமே, எங்கள் சரஸ்வதி மஹாலில் எத்தனையோ ஏடுகளுக்கு முகப்பு ஏடு இல்லை என்று. வாலும் இல்லாமல் தலையும் இல்லாமல் இருக்கும் ஏடுகள்தான் எத்தனை எத்தனை. அத்தனை ஏடுகளிலும் உள்ளே விஷயத்தைப் படித்துத்தானே இது எந்த ஏடு என்று கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. ஆதலால் ஆர அமர இருந்து ஏட்டைத் திருப்புங்கள். அப்போது தெரியும் சார் இது கம்பனின் சுயசரிதம்தான் என்று”. இப்படி சாஸ்திரியார் சொல்லிவிட்டு அவர் இடத்திற்குப் போய்விட்டார்.

அன்று முழுவதும், கிட்டத்தட்ட நான்கு ஐந்து மணி நேரம் உட்கார்ந்து ஏட்டைப் புரட்டினேன். ஏடு ஏடாகப் படித்தேன். அற்புதமான பாக்களிலே அந்த நூல் முழுவதும் எழுதப்பட்டிருந்தது. பாக்களைப் படிக்கப் படிக்க, அவைகளை முன்னமேயே படித்திருப்பது போல ஒரு உணர்ச்சி உண்டாகிக் கொண்டே இருந்தது. முதலடியைப் படித்த உடனேயே பல பாக்கள் எனக்கு முன்னமேயே தெரிந்த பாட்டுக்களாகத் தோன்றிற்று. இன்னும் சில பாட்டுக்கள் எத்தனையோ வருஷகாலமாக எங்கள் தலைவர் - அமரர் ரஸிகமணி அவர்கள் நாவில் நின்று நடம் ஆடி, அவர்களுடன் சேர்ந்து மற்றவர்களையும் ஆடச் செய்து ஓர் இன்ப லாகிரியை உண்டாக்கி இருக்கிறதே என்று தோன்றிற்று. ஒருவேளை இதெல்லாம் என்னுடைய பிரமையோ என்று நினைத்தேன். திரும்பவும் கண்ணைக் கசக்கிக் கொண்டு, கண்ணாடி அணிந்து கொண்டு, புரட்டினேன், புரட்டினேன். கிட்டத்தட்ட ஐயாயிரம், ஆறாயிரம் பாடல்களுக்கு மேல் படித்துப் பார்த்துவிட்டேன். ஒன்றும் தெரியவில்லை, அது கம்பனின் சுய சரித்திரம் என்று சொல்வதற்கு.

சாஸ்திரியார் பேரிலோ கோபம் கோபமாக வந்தது எனக்கு. அவரிடம் போனாலோ, சும்மா அமைதியாகயிருந்து படியுங்கள் தம்பி! அவசரப்படாதீர்கள் என்கிறார். அவர் இருந்த இருப்போ, படித்து முடித்தாலொழிய என்னை வெளியே போக விடமாட்டார் போல் இருந்தது. திரும்பவும் ஏடு கிடந்த இடம் சென்று உட்கார்ந்து மறுபடியும் புரட்டினேன் ஏடுகளை.

அப்படிப் புரட்டிக் கொண்டிருந்தபோது, ஒரு பெரியவர், வயது அறுபதுக்கு மேலிருக்கும் கம்பீரமான நடைபோட்டுக் கொண்டு வந்தார். ஏதோ சரஸ்வதி மஹால் பண்டிதர்களில் ஒருவர் என நினைத்துக்கொண்டேன். ஆனால் அவரோ நான் இருக்கும் நாற்காலி பக்கமே வந்தார். எதிரே இருந்த நாற்காலி ஒன்றை இழுத்துப் போட்டு ஜம் என்று உட்கார்ந்து கொண்டார். இது என்னடா பூஜை வேளையில் கரடி என நினைத்தேன். ஆனால் வந்தவரோ, நல்ல கவர்ச்சியான உருவம் உடையவராயிருந்தார். கட்டுமஸ்தான உடல். ஆஜானு பாகுவான தோற்றம், அகன்று பரந்த நெற்றி, அடர்ந்து செறிந்த புருவம், அலட்சியமாக வாரிவிடப்படாத ஆக்ஸ்போர்ட்கிராப், செழித்து வளர்ந்த மீசை, கூர்ந்து நோக்கும் கண்கள், ரொம்பச் சொல்வானேன். அசப்பில் பார்த்தால் அமரர் டிகேசியே அங்கு ஒரு நடை வந்ததுபோல் இருந்தது. ஆனால் அவர் அணியும் துல்லிய கதராடை இல்லை. மடித்துத் தோளில் லாவகமாகப் போட்டிருக்கும் அங்கவஸ்திரமும் இல்லை. வந்தவர் அழகான ஒரு பொன்னாடையால் தன் உடலைப் போர்த்தியிருந்தார். காதுகளில் மகர குண்டலம். கழுத்திலோ நவரத்தின கண்டி, கைகளிலே வைர மோதிரங்கள் பளிச்சிட்டன. ஆளைப் பார்த்தாலே ருபாய் ஐம்பதினாயிரத்துக்கு ஜாமீன் கொடுக்கலாம்போல் இருந்தது. விழித்த கண் விழித்தபடியே அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன் சில நிமிஷ நேரம். அவரோ என்னைச் சும்மாவிடுபவராக இல்லை. பேச்சுக் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.

“என்ன ஐயா - சும்மா என்னையே பார்க்கிறே! என்ன படிக்கிறே! என்றார். இனி நடக்கிறது பேச்சு இருவருக்கும்

நான் - "இல்லை. சும்மாத்தான் பார்த்தேன். எங்கேயோ பார்த்த முகமாயிருக்கிறதே" என்று.

வந்தவர் எங்கே என்னைப் பார்த்தே?

நான் - அதுதானே ஞாபகம் வரமாட்டேன் என்கிறது.

வந்தவர் – கொஞ்சம் நினைத்துத்தான் பாரேன். கண்டது காவிரிக் கரையிலா அல்லது காரைக்குடியிலா?

நான் – ஆமா, ஆமா! காரைக்குடியில் கம்பன் திருவிழாவில் மேடைமீது கொலுவீற்றிருக்கும்...

வந்தவர் - என்னையா கண்டாய்?

நான் – இல்லை. தங்கள் திருவுருவப்படத்தைக் கண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

வந்தவர் – ரொம்ப சரி. நான் தான் அந்த ஆசாமி. சரி, அது கிடக்கட்டும். இப்போது உட்கார்ந்து என்னமோ புரட்டிக் கொண்டிருக்கிறாயே? என்ன ஏடு அது?

நான் – இதுவா? இது தங்கள் சுயசரிதம் என்று நண்பர் சாஸ்திரியார் கூறுகிறார்.

வந்தவர் – என்ன! சுயசரிதமா? அது இங்கே எப்படி வந்தது?

நான் – என்ன - என்ன? அப்படி ஒன்று எழுதியிருக்கிறீர்களா?

வந்தவர் – எழுதினேன். ஆனால் அதை இந்தத் தமிழர்கள் படிக்கமாட்டார்கள் என்று எண்ணி வெளியிடவில்லையே. ஆனால், அது எப்படியோ இந்த மராத்திய மன்னன் கையில் அகப்பட்டுக் கொண்டதுபோல் இருக்கு.

நான் – எனக்கென்னமோ தங்கள் வார்த்தையில் நம்பிக்கையில்லை. இந்த ஏடு முழுவதையும் திருப்பிவிட்டேன். இதில் தங்கள் சுயசரிதைக் குறிப்பு ஒன்றுமே இல்லை.

வந்தவர் – அப்படியா? அப்படியானால் இப்படிக் கொடு (என்று ஏட்டை வாங்கினார் . ஒரு புரட்டுப் புரட்டினார்)

தம்பீ! இது என் சுயசரிதம்தான். ஏடு என்னிடம் இருக்கட்டும். உனக்கு விளங்காததை எல்லாம் கேள். நான் சொல்கிறேன் பதில். ஒரே ஒரு நிபந்தனை. நாளையே கம்பருடன் பேட்டி . நமது நிருபர் தரும் தகவல் என்று கொட்டை எழுத்தில் நான் சொல்லியதை எல்லாம் பத்திரிகையில் பிரசுரித்துவிடாதே.

நான் – அதைப் பின்பு பார்த்துக் கொள்ளலாம் ஐயா. கேள்விகள் கேட்கலாமோ?

வந்தவர் – சரி கேளேன்.

நான் ஆமா, முதலிலே உங்களுடைய பேர்தான் என்ன?

கம்பன் – என்ன தம்பி முதல் முதலிலேயே அடி மடியில் கை போடுகிறாய். பேரில் என்ன இருக்கிறது. என் தாய் தந்தையர் இட்ட பேர் என்னவோ? எனக்கே தெரியாது. எப்படியோ கம்பன் என்ற பேர் நிலைத்துவிட்டது. கச்சி ஏகம்பன் எங்கள் முன்னோர்களின் வழிபடு தெய்வமாக இருந்திருக்கலாமோ என்னவோ? ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக்கூடாது என்பதை அறியாயா!

நான் – சரி, வகையாக மாட்டிக் கொண்டீர்களா, நீங்கள் பிறந்த ஊர் எது?

கம்பன் – உனக்குத்தான் தெரியுமே - நான் பிறந்த ஊர் தேர் அழுந்தூர் என்று வழங்கும் திருஅழுந்துர். கம்பன் பிறந்த ஊர் காவிரி தங்கும் ஊர் என்ற பாட்டெல்லாம் உனக்கு மனப்பாடம்தானே.

நான் இதை ஒத்துக்கொள்ளமாட்டேன். அது எல்லாம் வேறு ஆட்கள் பாடினது. தாங்களே சொல்லியிருக்கிறீர்களா தங்கள் சுயசரிதத்தில்?

கம்பன் – நான் என்ன இந்த திருநெல்வேலிக்காரர்களைப் போன்றவனா? சும்மா தன் ஊர்ப் பெருமையே பேச, ஒரே ஒரு இடத்தில்

அழிந்ததேர் அழுந்தா முன்னம்
அம்பொடு கிடந்து வெம்பி'

என்று மட்டும் குறித்திருக்கிறேன். அந்த ஊர் தான் தம்பி திருஅழுந்துர், ஆம், நான் அங்கு பிறப்பதற்கு முன்னமேயே, திருஅழுந்தியிருந்த ஊர் அது. திருஅழுந்திய ஊரில் தேரும் அழுந்திற்று அதைக் குறித்திருக்கிறேன்.

நான் – நல்ல ஆளையா தாங்கள் ஏதோ யுத்த களத்தில் தேர் அழுந்தியதைக் குறித்துவிட்டு, அடே! இதுதான் என் ஊரைப் பற்றிய குறிப்பு என்று கயிறு விடுகிறீர்களே!

கம்பன் – பின்னே என்ன!. இப்படிக் கேள்வி கேட்டால் இப்படித்தான் பதில் சொல்வேன். இன்றைய ஆராய்ச்சியாளர்களாகிய நீங்கள் எல்லாம் இப்படித்தானே ஆராய்கின்றீர்கள். ஆராய்ந்து முடிவு கட்டுகிறீர்கள்.

நான் – அப்போது என்ன கேள்விகள் எப்படித்தான் கேட்க வேண்டும் என்கிறீர்கள்?

கம்பன் – நான் பிறந்த நாடு, நான் வளர்ந்த காலம், நான் பாடிய காவியம், நான் வணங்கிய தெய்வம், நான் விரும்பிய பாத்திரம், நான் போற்றிய புலவன், நான் கண்ட கனவுகள் என்பதைப் பற்றியெல்லாம் கேள்விகள் கேட்டால் தக்க பதில் சொல்வேன்.

நான் – இனி நான் கேள்வி கேட்கமாட்டேன். தாங்களே சொல்லுங்கள் தங்கள் சரிதத்தை. நான் கேட்கிறேன். இடையிடையே சந்தேகம் எழுந்தால் மட்டும் கேட்டுத் தெரிந்து கொள்கிறேன். இந்த ஏற்பாடு சரிதானே. சொல்லுங்கள்.

(இனி அவர் சொன்னதை எல்லாம் கீழே தருகிறேன்)
நான் பிறந்த நாடு

நான் பிறந்த நாடு எது என்று சொல்லத் தேவையே இல்லை. நான் பிறந்தது தமிழ்நாடு. வற்றாது வளங்கொழிக்கும் காவிரி பாய்ந்து பெருகும் அந்தப் பொன்னி நாடே நான் பிறந்த நாடு. காவிரி நாடன்ன கழனி நாட்டைத்தானே நான் கண்டேன். கங்கை என்னும் கடவுள் திருநதியை வருணிக்க நேர்ந்தபொழுது கூட தெய்வப் பொன்னியே பொருவும் கங்கை என்று தானே பாடினேன்.

வரம்பெலாம் முத்தம் தத்தும்
மடையெலாம் பணிலம் மாநீர்க்
குரம்பெலாம் செம்பொன் மேதிக்
குழியெலாம் கழுநீர்க் கொள்ளை
பரம்பெலாம் பவளம் சாலிப்
பரப்பெலாம் அன்னம் பாங்கர்க்
கரம்பெலாம் செந்தேன் சந்தக்
காவெலாம் களிவண்டீட்டம்

என்பதெல்லாம் இந்தக் காவிரி பாயும் சோழநாட்டின் வளம்தானே.

கன்னி இளவாழை கனி ஈவ, கதிர்வாலின்
செந்நெல் உள, தேன் ஒழுகுபோதும் உள, தெய்வப்
பொன்னி எனலாய புனல் ஆறும்.

இன்னும் இருக்கிறதே. காவிரி நாட்டிற்கு அடுத்தபடியாக நான் மிகவும் மதித்த நாடு, அந்தப் பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை நாட்டைத்தான். பொருநை நாடு என்றால் அங்குள்ள பொதிகைமலை, அம்மலை வீழ் அருவிகள், அம்மலையிடை வாழ்ந்த அகத்தியர் எல்லாம் என்கண் முன்னாலே வருகிறார்கள். ஞாபகத்தில் வைத்துக்கொள். நான் பிறந்த நாட்டிலே மலையே கிடையாது. அப்படிப்பட்டவன்

ஓங்குமரன் ஓங்கி, மலை இங்கி, கழை ஓங்கி
பூங்குலை குலாவும் குளிர்சோலை புடைவிம்ம
தூங்குதிரை ஆறுதவழ்

சூழல்களையும் குன்றுகளையும் பாடி இருக்கிறேன் என்றால் உங்கள் நாட்டிற்கும் வந்திருக்கிறேன் என்று தெரிந்து கொள்வாய் அல்லவா! எங்கள் நாட்டில் நடந்து கிடந்த நதிகள் எல்லாம் அந்தப் பொதிகை மலையிலே அருவியாக நிமிர்ந்து நிற்பதைக் கண்டு அதிசயித்திருக்கிறேன். இம்மட்டோ, தமிழ் எனும் அளப்பரும் சலதி தந்தவனை தழற் புரைசுடர்க் கடவுள் தந்த தமிழ் தந்தவனை, என்றுமுள தென்தமிழ் இயம்பி இசை கொண்டவனை வாயாரப்பாடி மகிழ்ந்திருக்கிறேன். அவன் வளர்த்த அந்த சங்கத்தினை

“தென்தமிழ் நாட்டு அகன் பொதியில்
திருமுனிவன் தமிழ்ச்சங்கம் சேர்கிற்றிரேல்
என்றும் அவன் உறைவிடமாம்”

என்று மனமாரப் பாராட்டியிருக்கிறேன். அதன் மூலம் என் வணக்கத்தை அந்தத் தமிழ் முனிவனுக்குச் செலுத்தியிருக்கிறேன்.

நான் – (இடைமறித்து) சரிதான். நீங்கள் எதைத்தான் நன்றாகப் பாடவில்லை. கோதாவரியையும் தான் அழகாகப் பாடியிருக்கிறீர்கள்.

கம்பன் – தம்பி உள்ளதைச் சொல்கிறேன். நான் அங்கெல்லாம் போனதே இல்லை. போயிருந்தால் கோதாவரியை வர்ணிக்க சான்றோர் கவியை உவமானமாக நாடியிருப்பேனா. விந்தியமலை, விதர்ப்பநாடு, நர்மதை நதி, பம்பைப் பொய்கை எல்லாம் நான் கண்ணால் காணாதவைகள். சம்பிரதாயமாகச் சொன்னவைதான். (பின்னும் சொல்கிறார்) நான் பிறந்த நாட்டைச் சொன்னேனே. நான் வளர்ந்த ஊரைச் சொல்லவேண்டாமா? நான் வளர்ந்தது - வெண்ணெய்நல்லூர் அந்த ஊரிலே தான் என்னை வளர்த்த வள்ளல் சடையப்பர் இருந்தார். அவரையும் அவர் புகழையும் எத்தனையோ இடங்களில் என் காவியத்தில் பாடியிருக்கிறேன். பண்ணை வெண்ணெய்ச் சடையன் புகழ் எங்கும் பரவ வேண்டும் என்பது தான் காவியம் எழுதும்போதெல்லாம் என் உள்ளத்தெழுந்த ஆசை

நான் – (இடைமறித்து) சரி, அந்த வெண்ணெய்நல்லூர் எங்கிருக்கிறது ஐயா? இன்று கதிராமங்கலம் என்று அழைக்கப்படும் ஊர்தான் அந்த ஊர் என்கிறார்களே. அது சரிதானா?

கம்பன் – சரிதான் தம்பி! இன்று அதன் பெயர் கதிராமங்கலமா? அன்று மக்கள் அதற்குக் கொடுத்த பெயர் கதிர்வேய்மங்கலம். நான் இராம காதை பாடிக் கொண்டிருந்தபோது ஒருநாள் இரவு அகோர மழை பெய்ய, அந்த மழையில் நான் இருந்த வீடு ஒழுக, அதைக் கண்டு பொறாது சடையப்பர் பக்கத்திலிருந்த வயலில் முற்றி முதிர்ந்து கிடந்த கதிரை அறுத்து நானறியாமலேயே என் கூரையை வேய்ந்திருக்கிறார். இது தெரிந்தவர்கள் அதைக் கதிர்வேய்மங்கலம் என்றிருக்கிறார்கள். அங்குள்ள சடையன்திடல், கழுநீர்வயல் எல்லாம் அன்றைக்கு அவர் புகழுக்குச் சான்று பகர்ந்தன.

நான் – அன்றைக்கு என்ன? இன்றைக்கும் தான் அவை அதே பெயரில் நின்று நிலவுகின்றன. கழுநீர் வயல் என்றீர்களே அதைக்கூடத் தாங்கள்

முட்டில் அட்டில்
முழங்குற வாக்கிய
நெட்டுலை கழு நீர்
நெடு நீத்தந்தான்
பட்டு மென் கமுகு
ஓங்கு படப்பை போய்
நட்ட செந் நெலின்
நாறு வளர்க்கும்.

என்று பாடியிருக்கிறீர்களே. அது இந்தக் கழுநீர்வயலை நினைந்துதானே?

கம்பன் – சரி. அப்படித்தான் என்று வைத்துக் கொள்ளேன். இத்துடன் நான் பிறந்த ஊரில் ஒரு அதிசயம் தெரியுமா! நாட்டில் எல்லாம் சமயச் சண்டை மலிந்திருந்த காலத்து, எங்கள் ஊரிலே கோயில் கொண்டுள்ள சிவனும் விஷ்ணுவும் ஒருவரை ஒருவர் எதிர்நோக்கி நிற்கிறார்களே தெரியுமா? வேதபுரீஸ்வரரும் ஆமருவியப்பரும் அப்படி நிற்கும் கோலமே

அரன் அதிகன் உலகளந்த அரி அதிகன்
என்றுரைக்கும் அறிவிலார்க் கெல்லாம்

ஒரு சூடு இல்லையா? வேதபுரஸ்வரனை வணங்கியவர்கள் எல்லாம்

வேதங்கள் அறைகின்ற உலகெங்கும்
விரிந்தன உன்
பாதங்கள் இவை என்னில்
படிவங்கள் எப்படியோ!

என்றுதானே பாடினார்கள்.

தாய்தன்னை அறியாத கன்றில்லை
தன் கன்றை,
ஆயும் அறியும், உலகின்
தாயாகி ஐய!
நீயறிதி எப்பொருளும்
அவை உன்னை நிலையறியா

என்று பாடும்போது அந்த ஆமருவியப்பன் நம் கண் முன்னாலே வந்து போய்விடுவானே இப்படியெல்லாம் தான் நான் பிறந்த நாட்டையும் வளர்ந்த ஊரையும் பற்றிக் கூறியிருக்கிறேன் என் சுய சரிதத்தில்.

நான் – ஊரைப் பற்றி என்ன ஐயா? நல்ல காவிரிக் கரையிலே சின்னஞ்சிறிய ஊர். அங்கு கோயில் கொண்டிருக்கும் தேவாதி தேவனை, ஆமருவி நிரைமேய்க்கும் அமரர் கோமான் அழகையே பார்த்துக் கொண்டிருக்கலாமே. பக்கத்திலிருக்கிறார்கள் கருடாழ்வாரும், மார்க்கண்டேயருமே, இவர்களை எல்லாம் தூக்கியடிக்கிறாளே அந்த அழகு மங்கை காவேரித்தாய் - அடடா, அஞ்சலி ஹஸ்தத்தோடு அவள் இருக்கும் அழகு!

மெலியும் இடை தடிக்குமுலை
வேயிளந்தோள் சேயரிக்கண் வென்றிமாதர்

என்றெல்லாம் பாடினிரே அந்த வென்றிமாதரையும் வெற்றி காண்கிறாள் இந்தக் காவேரி - சிலை உருவில்.

கம்பன் – ஏது, திரு அழுந்தூர் புகழ்பாட ஆரம்பித்துவிட்டாய்? நான் பிறந்த ஊர் என்பதைவிட காவேரித்தாய் இருக்கிறாள் என்றே அந்த ஊரின் மதிப்பை உயர்த்திவிடுவாய் போலிருக்கிறதே. போகட்டும் எப்படியாவது அந்தச் சிற்றூரின் புகழ் பரவட்டும்.

நான் – ஆம். பரவத்தான் போகிறது. அங்கு கம்பன் கலைக்கோயில் ஒன்று கட்ட முனைந்திருக்கிறார்களே தமிழ் மக்கள்.

கம்பன் – அது கிடக்கட்டும்.
இனி நான் வளர்ந்த காலம்

பண்டைத் தமிழர் வாழ்வை எல்லாம் நீயறிவாய். சங்க இலக்கியங்கள் எல்லாம் நீ படித்தவன் தானே. அந்தக் காலத்தில் தமிழன் விரும்பியதெல்லாம் போரும் காதலும்தான். வீட்டில் இருந்தால் காதல் வாழ்விலே திளைப்பான் தமிழன். வெளியே இறங்கினால் போரிட முனைவான். நானிலம் அதனில் உண்டு போர் என நவிலின் தேனினும் களிப்புச் செய்யும் சிந்தையனாக அல்லவா வாழ்ந்திருக்கிறான் அன்றைய தமிழன். ஆண் மக்கள் தம் வீரம் காத்தலை வேண்டும் பெண்கள் தானே அன்று நிறைந்திருந்தார்கள். அப்போதுதான் சமணரும் பௌத்தரும் தமிழை விரும்பிக் கற்று நல்ல இலக்கியங்களை உருவாக்கியிருக்கிறார்கள். ஒழுக்கத்திற்கு ஓர் உயரிய ஸ்தானம் அளித்திருக்கிறார்கள். ஆனால், அதன்பின் நாட்டிலே ஏற்பட்ட குழப்பங்களால் வீரமும் காதலும் ஓதலும் ஒழுக்கமும் குன்றியிருக்கிறது. பல்லவர் காலத்தே வடமொழி தமிழ்நாட்டில் தலைதூக்கியிருக்கிறது. இந்த வடமொழிக் கலப்பால் தமிழ்வளம் பெற்றிருக்கிறது. கங்கையும் யமுனையும் கலந்து உறவாடியதுபோல இரண்டு கலாச்சாரமும் இணைந்திருக்கிறது. தென்சொற்கடந்தவன் வடசொற்கலைக்கு எல்லை தேர்ந்தவனாக ஆகியிருக்கிறான். கங்கையாளொடு கரியவள் கலைமகள் கலந்த சங்கமம் போற்றப்பட்டிருக்கிறது.

வீரத்தையும் காதலையுமே பொருளெனக் கண்ட தமிழர்,

‘உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விடையாட்டுடைய’

ஒரு தனிப் பரம்பொருளைக் காண முற்பட்டிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் சமணமும் பௌத்தமும் நாட்டைவிட்டு ஓட ஆரம்பித்திருக்கிறது. எங்கு பார்த்தாலும் வேத கோஷங்கள், தேவாரப் பண்கள், திவ்யப் பிரபந்தங்கள் ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன. வடநாட்டுத் தெய்வங்கள் எல்லாம் தமிழ்நாட்டில் புகுந்திருக்கின்றன. அரசர்களும் பாறைகளைக் குடைந்து குகைகள் உருவாக்க முனைந்திருக்கிறார்கள். மலைகளை வெட்டிச் செதுக்கி ரதங்களை அமைத்திருக்கிறார்கள். குகைகளில் எல்லாம் சித்திரங்கள். தூண்களில் எல்லாம் சித்திரங்கள். மாடங்களில் எல்லாம் மூர்த்தங்கள். மன்றங்களிலெல்லாம் நடனத் திருவுருவங்க்ள் தோன்ற ஆரம்பித்திருக்கின்றன. பல்லவர்களுக்குப் பின் வந்த சோழ மன்னர்கள் தமிழை வளர்ப்பதில் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள், கலைகளைப் போற்றியிருக்கிறார்கள். எண் தோள் ஈசற்கு எழில் மாடம் எழுது கட்ட முனைந்திருக்கிறார்கள். முழுக்க முழுக்கக் கல்லாலேயே கோயில்களும், அந்தக் கோயில்களில் மூர்த்திகள், தேவியர் என்றெல்லாம் பிரதிஷ்டை ஆரம்பித்திருக்கிறது. கறை மிடற்று இறை, திங்கள் மேவும் செஞ்சடைத் தேவன், அழல் நிறக்கடவுள், பாதி மதிசூடி, கற்றைவார் சடைமுடி கணிச்சி வானவன் என்று சிவபெருமான் பாராட்டப்பட்டிருக்கிறான். நாறுபூங்குழல் நங்கை, கற்றைப் பூங்குழலாள் கருந்தடங் கண்ணி, கரும்பையும் சுவை கைப்பிக்கும் செல்வி, தெய்வவாயகி என்றெல்லாம் பர்வதராஜன் மகளுக்குப் பெயரிட்டு இருக்கிறார்கள். இருவரையும் சேர்த்தே உமையொரு பாகத்து ஒருவன், மங்கை பங்கன், தையல் பாகன், பஞ்சில் மெல்லடியாள் பாகன் என்றெல்லாம் வணங்கியிருக்கிறார்கள். இப்படி நாடு முழுதும், தமிழும் பக்தியும் உருவெடுக்கின்ற காலத்தில் தான் நான் பிறந்தேன், வளர்ந்தேன்.

நான் – (இடையிட்டு) சரி சரி. அப்போது நீங்கள் சோழ சாம்ராஜ்யம் மகோன்னத நிலையில் இருந்தபோது தமிழ்நாட்டில் வளர்ந்தீர்கள் என்று சொல்லுங்கள்.

கம்பன் – என்ன அவ்வளவு எளிதாக முடிவுகட்டிவிட்டாய். என் காலத்தில் சோழ மன்னர்கள் தலை எடுக்க ஆரம்பித்து இருந்தார்களே ஒழிய மகோன்னத நிலையை அடைந்து விடவில்லை. அடைந்திருந்தால் அந்தச் சோழ மன்னர்களைப் பற்றியெல்லாம் விரிவாகக் கூறியிருக்கமாட்டேனா? என் காலத்தில் நான் அறிந்த சோழ மன்னர்கள் எல்லாம் விஜயாலயனும், ஆதித்தனும்தான். ஆதித்தன் குலமுதல்வன் மநுவினை யார் அறியாதார்? என்றுதானே ராமனது குலமுறையையே கிளத்தத் துவங்கியிருக்கிறேன். .

நான் – அப்போ ராஜராஜன் கட்டிய பெரிய கோயிலைத் தாங்கள் அறியீர்கள் அப்படித்தானே.

கம்பன் – ராஜராஜனா? அவன் யார்? ஓ! அந்தத் தஞ்சையில் நிமிர்ந்து நிற்கிறதே பெரிய கோயில் அதைச் சொல்கிறாயா? ஆம் தம்பி அது என் காலத்தில் கட்டப்படவில்லை. கட்டப்பட்டிருந்தால் அதைப்பற்றி ஒரு வார்த்தைக்கூடச் சொல்லாது செல்ல எனக்கு மனம் வந்திருக்குமா என்று நீயே சொல்லு,

நான் – மனம் வந்திருக்காது தான். என்றாலும் ஒரே ஒரு இடத்தில் அகல்வானம் தீண்ட நிமிர்ந்த பெரும் கோயில் என்று குறிப்பிடுகிறீர்களே அது எதைக் குறித்தோ?

கம்பன் – அதுவா? நான் வாழ்ந்த காலத்தில் கோயில்கள் தோன்றின என்றாலும் அவை எல்லாம் சின்னஞ்சிறு கோயில்களாகத்தான் இருந்தன. எல்லாம் வல்ல கோமகனுக்கு ஏற்ற இல்லங்களாக அவை இருக்கவில்லை. ஆதலால் நான் ஒரு லக்ஷியக் கனவு கண்டேன். நீண்டு நிமிர்ந்த பெரும் கோயில்கள், விமானங்கள், கோபுரங்கள் எல்லாம் உருவாக வேண்டும் என்று. என் கனவெல்லாம் நனவாகியிருக்கிறது பின்னால், அதனால்தான் இத்தனை கோயில்கள் இந்தத் தமிழ்நாட்டில்.

நான் இன்னும் ஒரே ஒரு சந்தேகம் சுவாமி சிவபிரானது மூர்த்தங்களில் உங்களுக்கு உகந்த மூர்த்தம் எதுவோ?

“பஞ்சில் மெல்லடியாள் பாகன்
பாதுகம் அல்லது
அஞ்சலித்து அறியாச் செங்கை”

உடையவன் அல்லவோ நான். நானிருந்த காலத்தில் கோயில்களின் கர்ப்பக் கிருஹத்தின் பின்புறத்தில் எல்லாம் அந்த மாதிருக்கும் பாதியினது சிலைதானே வைக்கப்பட்டிருக்கும்.

நான் – ஆமாம். இந்த இராஜராஜன் அதை எடுத்துவிட்டு லிங்கோத்பவரை நிறுத்தியிருக்கிறான். அப்போது நீங்கள் சொல்கிறது சரி. நீங்கள் ஆதியும் அந்தமுமிலா அரும்பெரும் சோதியைக் கூறவேயில்லை என நினைக்கிறேன். அப்போது நீங்கள் ராஜராஜனுக்குப் பின்னால் எப்படியிருந்திருக்க முடியும். இருந்திருந்தால் அதை எப்படிக் கூறாதிருக்க முடியும்.

கம்பன் – சரி, சரி, ரொம்ப ஆராய்ச்சியில் இறங்கிவிட்டாய்போல் இருக்கிறது.

நான் – இல்லை, இல்லை. இன்னும் ஒரே ஒரு கேள்வி மட்டும். நீங்கள் சென்னி நான் தெரியல் வீரன் தியாக விநோதனைக் குறிக்கிறீர்கள் - இந்தத் தியாகவிநோதன் என்ற பட்டம் மூன்றாம் குலோத்துங்கனின் சிறப்புப் பெயர். ஆதலால் தாங்கள் அவன் காலத்திலேயே வாழ்ந்தவர்தான் என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவு கட்டுகிறார்களே? அதற்கென்ன சொல்கிறீர்கள்?

கம்பன் – அதுவா? அதுதான் நான் முன்னமேயே சொன்னேனே. ஒரு சொற்றொடரை மட்டும் பிடித்துக்கொண்டு ஆடாதே என்று. நான் தியாக விநோதன் என்று கூறியது - நீ சொல்கிறாயே யாரோ மூன்றாம் குலோத்துங்கன் என்று அவனைப் பற்றியே அல்ல. அந்த ஆசாமி யார் என்றே எனக்குத் தெரியாது. பல்லவ அரசர்களில் நந்தியம் பெருமாள் தொண்டைமான் - ஆம் உன் குல முதல்வன் தான் - ஒருவன் இருந்திருக்கிறான். அவன் பேரில் கலம்பகம் பாடியிருக்கிறான் எங்கள் பரம்பரையில் ஒரு முன்னோன். அவன் கூறியிருக்கிறானே அவனைப் பற்றி தியாக விநோதன் என்ற பெயர் எங்களுக்கெல்லாம் விநோதமான பெயராகவே தெரியவில்லையே. இதை வைத்துக்கொண்டு நீ இத்தனைக் கூத்து அடிப்பானேன்.

நான் – சரி இனிமேல் உங்களை அதிகம் தொந்தரவு செய்யவில்லை. நீங்கள் எந்தக் காலத்தில் இருந்தால் என்ன? காலம் எப்படியிருந்தாலும் தங்களால் நாடும், ஊரும், காலமும் பொழுதும் உயர்ந்திருக்கிறது. தங்கள் காலம் கம்பர்காலம் தமிழ்நாட்டுச் சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய காலம். அது போதும் எங்களுக்கு

இனி நான் பாடிய காவியம்

கம்பன் – இன்று தமிழ்நாட்டிலே நடக்கும் கிளர்ச்சிகள் எல்லாம் எனக்குத் தெரியும். இந்தத் தமிழ்நாட்டுக் கம்பன், ஏன் அந்த வடநாட்டுக் கதையைக் காவியமாகப் பாடினான் என்று சிலர் கேட்கிறார்கள் என்பதும் தெரியும். நான் வாழ்ந்த காலத்தில் எப்படி வடநாடு தென்னாடு என்ற வேற்றுமை எல்லாம் இல்லாதிருந்தது என்பதைத்தான் முன்னமேயே சொன்னேனே. இந்த வேற்றுமை உணர்ச்சி இல்லாதது மட்டுமல்ல எனக்கு என்னமோ இந்த இராமகாதை நிரம்பவும் மனதுக்கு உகந்ததாயிருந்தது. காரணம். உள்ளங்கை அகலமே உள்ள சின்னஞ்சிறு ராஜ்யத்தை அன்று ஆண்டு வந்த அந்த சேர சோழ பாண்டியர்களுக்குள்தான் எத்தனை எத்தனை பூசல்? எத்தனை எத்தனை போர்.

யாரொடும் பகை கொள்ளலம் என்றபின்
போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது
என்பதை இவர்கள் உணர்ந்தார்கள் இல்லையே. அண்ணன் தம்பியாய் வாழவேண்டிய இவர்கள் இப்படி அடித்துக் கொள்கிறார்களே என்று பல தடவை நினைத்திருக்கிறேன். இப்படிப்பட்ட நாட்டிலே, சொன்ன வாக்கை நிறைவேற்ற அருமந்த மைந்தனையே காட்டிற்கு அனுப்புகிறான் ஒரு தந்தை. தாய் உரை செய, தந்தை ஏவ, ஒரு சாம்ராஜ்யத்தையே துறந்து காட்டிற்குப் புறப்படுகிறான் ஒரு மகன். தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னை தீவினை என்ன நீத்து, காடு சென்ற தமையன் நாடு திரும்பும் வரை தவக் கோலம் தாங்குகிறான் ஒரு தம்பி, இன்பத்திலும் துன்பத்திலும் இணைபிரியாதவனாக இருந்து அண்ணனும் அண்ணியும் தூங்கும் போதும் வில்லையூன்றிய கையொடும், வெய்துயிர்ப்பொடும் கண்கள் நீர் சொரியக் கங்குல் எல்லை காண்பளவும் இமையாது நின்று காக்கிறான் இன்னொரு தம்பி, இம்மட்டோ தான் சக்ரவர்த்தி திருமகன் என்பதையே மறந்து காட்டிலே ஒரு வேடனையும், ஒரு குரங்கினையும், ஒரு அரக்கனையுமே உடன் பிறந்தானாகச் சேர்த்துக் கொள்ளுகிறான் அந்த வர புருஷன், என்றெல்லாம் அறிந்தபோது அந்தக் கதை தமிழ் மக்களுக்குச் சொல்லப்பட வேண்டியது என்று நினைத்தேன். நான் நினைத்ததில் தவறில்லை தானே. மேலும் ஒத்த குலமும், ஒத்த கல்வியும், ஒத்தநலனும் உடைய ஆடவன் ஒருவனும் பெண்ணொருத்தியும் ஒன்றி வாழ்ந்த இந்த தமிழகத்திலே அரசன் ஒவ்வொருவனும் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரை மணந்து வாழ்ந்தது நமது தமிழகத்தின் பண்பிற்கே விரோதமாகப்பட்டது. அந்தச் சமயத்தில், ஒரு காதலன் ஏகும் நல்வழி அவ்வழி என்மனம் என்ற உறுதிப்பாட்டோடு இந்த இப்பிறவிக்கு இருமாதரைச் சிந்தையாலும் தொடேன் என்று கூறும் செவ்விய வரம்பில் நிற்கிறான் என்றால் அந்தத் தமிழனை நாயகனாக வைத்து ஒரு காவியம் எழுத வேண்டும் என்று நான் துணிந்ததில் வியப்பில்லை அல்லவா? இப்போது தெரிகிறதா தம்பி நான் ஏன் இந்தக் காவியம் எழுதினேன் என்று?

நான் – தெரிகிறது ஐயா! தெரிகிறது. ஆனால் காவியம் எழுதும்போது தமிழ்நாட்டுக்கு ஒவ்வாத நிகழ்ச்சிகளை காவியத்தில் சோத்திருக்கிறீர்களே, அதற்கென்ன சொல்கிறீர்கள்.

கம்பன் எதைச் சொல்கிறாய்? வில்லொடித்த வீரனே சீதையைப் பரிசாகப் பெறுகிறான் என்பதைத்தானே. ஆம் அந்த நிகழ்ச்சியை என்னால் மாற்ற முடியவில்லைதான். மாற்றினால் மூலக் கதைக்கே முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டியதுதான். வில்லொடித்த நிகழ்ச்சியை காவியத்திலிருந்து நீக்க விரும்பவில்லை. ஆனால், அதைத் தமிழ்ப் பண்புக்குப் பழுதுவராத வகையில், எப்படியெல்லாம் மாற்றியிருக்கிறேன் என்பதைத்தான் நீ அறிவாயே. என்னுடைய சீதை இருக்கிறாளே அவள் ஒன்றும் அறியாப் பேதை அல்ல. கன்னிமாடத்திலிருந்தே முனிவர் முன்செல, தம்பி பின்வரச் சென்ற ராமனைக் காண்கிறாள். அண்ணலும் நோக்குகிறான் அவளும் நோக்குகிறாள். இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்துகிறார்கள். பின்னால் வில்லொடித்த விவரம் கேட்கிறாள். என்றாலும் வில்லொடித்த காரணத்திற்காக மட்டும் அவனைத் தன் காதலனாக ஏற்றுக் கொள்கிறாள் இல்லை. தன் தோழி நீலமாலை சொல்லும்

கோமுனியுடன் வரும் கொண்டல்
என்ற பின்
தாமரைக் கண்ணினான்
என்ற தன்மையால்

ஆம், அவனே கொல் என்று ஐயம் நீங்குகிறாள். இது மட்டுமா?

சொல்லிய குறியின்
அத் தோன்றலே அவன்
அல்லனேல் இறப்பன் என்று

வேறே அகத்து உன்னுகிறாள். இப்படியெல்லாம் இடர்ப்பட்டு, இடர்ப்பட்டுக் கதையை உருவாக்கியிருக்கிறேன். என்னுடைய காவியத்தில் இந்தக் காதல் கட்டத்தில் இந்த வில் குறுக்கே கிடந்து எவ்வளவு வேதனை கொடுத்தது தெரியுமா? அந்த வேதனையைக் கூட

போதகம் அனையவன் பொலிவு நோக்கி இவ்
வேதனை தருகின்ற வில்லை நோக்கி

என்று குறிப்பாகச் சுட்டியிருக்கிறேனே கவனித்தாயா.

இந்த ஒரு வேதனைதானா காவியம் எழுதும்போது இல்லை. இந்தப் பொல்லாத தமிழர்கள் இருக்கிறார்களே, அவர்கள் கற்பனை பண்ணிய கற்பொழுக்கம் இருக்கிறதே அது ஒரு அசாத்தியமானதொன்று.

“மண்டினி ஞாலத்து மழைவளம் தரும்
பெண்டிராயிற் பிறர் நெஞ்சு புகார்”

என்று பிறர் நெஞ்சு புகுவதே கற்பொழுக்கத்திற்குத் தவறு என்றல்லவா கூறியிருக்கிறார்கள். அப்படியிருக்க, பிற நாட்டில், அயலான் மனையில், அவன் மயிர் பிடித்திழுத்து மடிமீது வைத்து எடுத்துச்சென்று சிறை வைக்கப்பட்ட சீதையின் கற்பொழுக்கத்திற்கு இந்தத் தமிழர்கள் குறை கூறாதிருப்பார்களா? ஆதலால் தான், சீதையை அவள் இருந்த பர்ணசாலையில் அந்தப் பர்ணசாலை கட்டியிருந்த இடத்தை எல்லாம் சேர்த்து “கீண்டான் நிலம் யோசனை கீழொடு மேல்” என்று மாற்றினேன் - இதைத் திரும்பவும் கீண்டுகொண்டெழுந்தேகினன் கீழ்மை யான்” என்றும் குறித்தேன். என்னை என்னதான் செய்யச் சொல்லுகிறாய். நல்ல பலாப்பழம், தேன் சொட்டும் சுளைகள் உள்ளே இருக்கின்றன. அதைச் சுற்றி சக்கையும் பிசினும், தோலும் முள்ளும், இருந்தால் அவற்றை அகற்றிவிட்டு, சுளையை மட்டும் எடுத்து தமிழர்களுக்கு விருந்தளிக்க நான் தயங்கலாமா? இப்படிப்பட்ட முயற்சியில் தான் நான் காவியம் உருவாக்கியிருக்கிறேன்.

நான் – ரொம்ப சரி. நீங்கள் காவியம் எழுதியது, அதை அற்புதமாக ஆக்கியதெல்லாம் சரி. நீங்கள் அந்த வான்மீக முனிவரது கவிதை உணர்ச்சியிலே அவ்வளவு அழகாக ஒன்றியிருக்கிறீர்கள். அவர் புகழைப் பரப்புவதற்கு தக்க கருவியாய் அமைந்திருக்கிறீர்கள். நல்ல கவிஞர் புகழைப் பரப்புவது மற்றொரு கவிஞரின் பணி தானே.

கம்பன் – என்ன தம்பி ஆழம் பார்க்கிறாய். நான் வான்மீகரது புகழைப் பரப்புவதற்காகவே காவியம் எழுதினேன் என்கிறாயா? அதிலும் உண்மை உண்டு. அந்தக் கவிஞரின் பேரில் அவன் இயற்றிய அந்தக் காசில் கொற்றத்து இராம கதையின் பேரில் ஒரு ஆசை பற்றி இழுக்கத்தான் செய்தது. அந்த வான்மீகிதான் என்ன சாமானியமானவனா? வாங்கரும் பாதம் நான்கும் வகுத்தவன் அல்லவோ? தீங்கவி செவிகள் ஆரத் தேவரும் பருகச் செய்தவன் அல்லவோ? ஆனால் இதற்கெல்லாம் மேலாக உன் உள்ளத்தின் அடித்தளத்தில் வேறொரு ஆசையும் இருக்கத்தான் செய்தது தம்பி! தமிழர்களெல்லாம் தலைதூக்கி நிற்கச் செய்த அன்பன், அறிஞன், கவிஞன் அந்த வள்ளுவன்தான். அவனைத் தானே அன்று முதலே பொய்யில் புலவன் என்று பாராட்டியிருக்கிறோம். அவன் வையத்தில் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய வழிகளை எல்லாம் திறம்பட வகுத்துவிட்டான். அவன் வகுத்த வழிகளை எல்லாம் ஒரு நல்ல கதை உருவத்தில் இந்த தமிழர்களுக்குக் கொடுத்தால் அந்த அறவுரைகளிலே ஒரு கவர்ச்சி தோன்றாதா என்ற ஆசையும் உண்டு எனக்கு. ஆதலால்தான் அவன் சொன்ன அறநெறிகளுக்கு விளக்கம் தரும் வகையிலே இந்தக் காவியம் எழுதினேன். இதைக் குறிப்பாகவும் முதலிலேயே உணர்த்தியும் இருக்கிறேன்.

“பொய்யில் கேள்விப் புலமையினோர். புகல்
தெய்வ மாக்கவி மாட்சி தெரிக்கவே”

என்று நான் – அடே! தெய்வமாக் கவி என்று தாங்கள் குறித்தது அந்த வள்ளுவரைத்தானா? நாங்கள் எல்லாம் வான்மீகரைத்தான் குறிக்கிறீர்கள் என்றல்லவா நினைத்திருந்தோம்.

கம்பன் – நீங்கள் ஏமாந்தால் அதற்கு நானா பழி? நான் போற்றிய புலவன் வள்ளுவனே. இன்னும் விளக்கமாகக் கூறவேண்டுமா என்ன?

நான் – காவியத்தை எழுதினர்களே. காவியத்தில் எத்தனையோ பாத்திரங்களை நடமாட விட்டிருக்கிறீர்களே, அதில் உங்களுக்கு உகந்த பாத்திரம் எது என்று சொல்லலாமோ?

கம்பன் – நீயும்தான் என் காவியத்தைப் பல வருஷங்களாய்ப் படித்திருக்கின்றாய். இதைக் கண்டுபிடிக்க முடியாமலா போயிற்று.

நான் – லக்ஷிய புருஷன் ராமன் தங்களுக்கு உகந்த பாத்திரம் என்பதை அறிவேன். அவனை விலக்கி விட்டு மற்றைய பாத்திரங்களில் தங்களுக்கு உகந்தவன், தங்கள் கொள்கைகளை எல்லாம் வெளியிடுவதற்குத் தகுந்தவனாகக் கருதுகின்ற பாத்திரம் யார் என்று அறியலாமா என்று பார்த்தேன். அவ்வளவுதான்.

கம்பன் – அதையும்தான் நீயே கண்டுபிடியேன்.

நான் – குணாதிசயத்தை மட்டும் எடுத்துக்கொண்டால் பரதன் தான் தங்களுக்கு உகந்தவன் என்று தெரிகிறது. அவனைத்தான் ஆயிரம் ராமருக்கும் மேலே என்றும் எண்ணில் கோடி ராமர்கள் அவன் அருளுக்கு ஒவ்வார் என்றும் உரைத்தீர்கள்.

கம்பன் – இவ்வளவுதானா உன்னுடைய படிப்பு? பரதன் உத்தமோத்தமன்தான். ஆனால் அவன் தன் முயற்சியால் தியாகத்தால் தானாகவே உயர்ந்தவன். உணர்ச்சி வயத்திலே உருவானவன். அவன் மூலம் என் எண்ணங்களை வெளியிட முடியுமா? என்னுடைய கருத்துக்களை ஏற்ற இடத்தில் எல்லாம் தக்க தக்கப் பாத்திரங்கள் மூலம் வெளியிட்டிருக்கிறேன். என்றாலும் என் உள்ளத்தெழுந்த அற்புதமான உண்மைகளையெல்லாம் வெளியிட ஒரு பாத்திரத்தை சிருஷ்டித்துக் கொண்டேன். அந்தப் பாத்திரம்தான் அனுமன். முதல் முதலிலேயே

இல்லாத உலகத்து எங்கும்
இங்கு இவன் இசைகள் கூறக்
கல்லாத கலையும் வேதக்
கடலுமே என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்றன்றே
யார் கொல் இச்சொல்லின் செல்வன்.

என்றுதானே அவனை அறிமுகப்படுத்துகிறேன். ஆற்றலும், நிறைவும், கல்வி, அமைதியும், அறிவும் என்னும் வேற்றுமை இவனோடு இல்லை என்பதை நன்கு உணர்ந்தவன் நான். நாட்படா மறைகளாலும், நவைபடா ஞானத்தாலும், கோட்படாப் பதமே அந்தக் குரங்கு உரு எடுத்திருக்கிறது, என்று நம்பினவன். ஆதலால்தான் அவனைப் பிடித்தேன் என் கருத்துக்களை வெளியிட

நான் வணங்கிய தெய்வம் என்ன என்பதைச் சொல்கிறேன் என்று முன்னமேயே சொன்னேன் அல்லவா. அதை இந்த அனுமன் மூலம் தான் சொல்கிறேன். விராதன் துதியிலும், சரபங்கன் ஆச்சிரமத்தில் இந்திரன் துதியிலும், எல்லாம் வல்ல இறைவனின் தன்மையை விளக்கமாகக் கூறத்தான் செய்கிறேன் என்றாலும், என் சிந்தையிலே வளர்ந்த தெய்வத் திருவுருவை அனுமன் மூலம்தான் வெளியிட விரும்பினேன்.

நான் சைவனாகப் பிறந்தேன். மங்கை பங்கனுக்கே ஆட்பட்டேன் என்றாலும், இராமகாதை எழுத எழுத முழுக்க முழுக்க அந்த ராமனுக்கே அடியவன் ஆகிவிட்டேன். அழகனாக என் கவிதையில் பிறக்கிற ராமன், பின்னால் வீரனாக வளர்கின்றான், லக்ஷிய புருஷனாக வாழ்கின்றான். முடிவில் தேவ தேவனாகத்தான் காட்சி கொடுக்கிறான். அவன் மனிதருள் தலையாய மனிதன், மனிதருள் மாணிக்கம் என்றெல்லாம் தான் எண்ணினேன். என்றாலும் கடைசியில் அவன் மனித உருத் தாங்கிய தெய்வம் என்றே நிச்சயித்தேன். அதனால்தான் ராமன் அவதரித்ததால் தெய்வப் பிறப்பையும் மனிதப் பிறவி வென்று விட்டது என்று முடிவு கட்டினேன். அதை

ஆறுகொள் சடிலத்தானும்
அயனும் என்று. இவர்களாதி
வேறுள குழுவை எல்லாம்
மானிடம் வென்றது.

என்று முதலில் சுக்ரீவன் கூற்றாகப் போட்டேன். ராமன் பின்னும் என் சிந்தையில் வளர்ந்து கொண்டே போனான். கடைசியில் அனுமன் வாயிலாக

மூலமும் நடுவும் ஈறும்
இல்லதோர் மும்மைத்தாய
காலமும் கணக்கும் நீத்த
காரணன், கைவில் ஏந்தி
சூலமும் திகிரி சங்கும்
கரகமும் துறந்து, தொல்லை
ஆலமும் மலரும் வெள்ளிப்
பொருப்பும் விட்டு அயோத்திவந்தான்
என்று சொன்னேன். பின்னும் சொன்னேன்.

அறந்தலை நிறுத்தி, வேதம்
அருள் சுரந்து அறைந்த நீதி
திறம் தெரிந்து, உலகம் பூணச்
செந்நெறி செலுத்தி, தியோர்
இறந்துக நூறி, தக்கோர்
இடர்துடைத்து ஏக, ஈண்டு
பிறந்தனன், தன் பொற்பாதம்
ஏத்துவார் பிறப்பறுப்பான்

என்று முத்தாய்ப்பு வைத்தேன். இதைவிட நான் வணங்கிய தெய்வத்தைப் பற்றி நான் எப்படித்தான் சொல்ல நான் விரும்பிய பாத்திரம் அனுமன். நான் வணங்கிய தெய்வம் ராமன் – போதுமா!

இனி நான் கண்ட கனவுகள்

கம்பன் – இதுவரை நான் சொல்லியதிலிருந்தே என்னுடைய லக்ஷியங்கள் என்ன என்ன என்பதை அறிந்திருப்பாய். மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறம் என்றானே அந்த அறம் வழுவாது மக்கள் வாழவேண்டும் என்று விரும்பினேன். அதனால்தான் நீதியும் தருமமும் நிறுவத் தோன்றியவனைப் பாராட்டினேன். சேணுயர் தருமத்தின் தேவை செம்மையின் ஆணி என்றேன்.

அறம் துணை ஆவதல்லால்
அருநரகம் அமைய நல்க
மறம் துணையாக மாளாப்
பழியொடும் வாழமாட்டேன்

என்று பாத்திரங்களைக் கூற வைத்தேன். இதையே திரும்பத் திரும்ப காவியம் முழுவதும் வலியுறுத்திக் கொண்டே போனேன். “அறங் கடந்தவர் செயல் இது” என உலகம் ஆர்க்கும் வகையில் இராவணன் வாழ்க்கையை உருவாக்கிக் காட்டினேன். எத்தனையோ நல்ல குணங்களும் பண்புகளும் வாய்த்தவனாக இருந்தும் – பிறர்மனை நோக்காத பேராண்மை இல்லாதவனாக அமைந்த ஒரே காரணத்தால், எவ்வளவு தவறிவிடுகிறான் என்பதைத்தான் விளக்கினேன் அவனுடைய வாழ்க்கையில்.

“ஈசனை இமையா முக்கண் இறைவனை இருமைக்கேற்ற
பூசனை முறையாய்ச் செய்தவனே.”

ஆனாலும் தருமத்தின் தனிமை தீர்ப்பவன் முன்னால் தலை எடுக்க முடியாது என்பதை அவன் வாழ்க்கையில் நினைவுபடுத்தினேன். அறம் வளர்க்கும் நாடாக நமது தமிழகம் உருவாக வேண்டும் என்பதே நான் கண்ட கனவு. அப்படிப்பட்ட நாட்டிலேதான் கல்வியும் செல்வமும் செழித்து வளரும். அங்கேதான் மக்கள் எல்லா நலமும் பெற்று வாழ்வார்கள். இன்று ஏதோ பொது உடைமையைப் பற்றிப் பலர் பேசுகிறார்களே – ஏதோ எத்தனையோ கடலுக்குள் அப்பாலுள்ள நாடுகளில் இருந்தெல்லாம் கொண்டு வந்து சான்று காட்டுகிறார்களே – இது எல்லாம் எனக்குத் தெரியாதா என்ன? இவர்கள் சொல்லும் முதலாளி தொழிலாளி, பணக்காரன் ஏழை, படித்தவன் படியாதவன் என்ற வேற்றுமையே நாட்டில் இருக்கக்கூடாதுதான். அதற்காக எல்லோரையுமே தொழிலாளிகளாக, ஏழைகளாக, படியாதவர்களாக ஆக்கிவிடக்கூடாது. எல்லோருமே முதலாளிகளாக, பணக்காரர்களாக, படித்தவர்களாக உருப்பெற்றுவிட வேண்டும்.

“கல்லாது நிற்பார் பிறர் இன்மையில்
கல்வி முற்ற
வல்லாரும் இல்லை அவை வல்லர்
அல்லாரும் இல்லை
எல்லாரும் எல்லாப் பெருஞ்
செல்வமும் எய்தலாலே
இல்லாரும் இல்லை, உடையார்களும்
இல்லை”

என்பதுதானே நான் கனவு கண்ட கோசலம். இத்தகைய நாட்டிலேதான் ராமராஜ்யம் நிலவும் என்று எண்ணினேன். அந்த ராஜ்யத்தில்

ஏகம் முதற் கல்வி முளைத்து
எழுந்து எண்ணில் கேள்வி
ஆகம் முதல் திண்பனை போக்கி
அருந் தவத்தின்
சாகம் தழைத்து அன்பு அரும்பித்
தருமம் மலர்ந்து
போகம் கனியொன்று பழுக்கும்.

என்று துணிந்து கூறினேன். இந்த ராஜ்யத்தின் அரசன் அல்லது ஆள்வோர் மன்னுயிரையெல்லாம் தன்னுயிர் ஒப்ப ஓம்பி அந்த உயிர் எலாம் உறையும் ஓர் உடம்புபோல் இருத்தல் வேண்டும் என்று அறுதியிட்டு உரைத்தேன். வையகம் முழுதும் வறிஞன் ஒம்பும் ஓர் செய் எனக்காத்து இனிது அரசு செய்தால் ராமராஜ்யம் நின்று நிலவும் என்று நம்பினேன்.

இப்படி ராமராஜ்யம் நடக்கும் நாட்டில்தான் மக்களுக்கு இறை உணர்ச்சி உண்டாகும். இறை உணர்ச்சி தெய்வ நம்பிக்கை எல்லாம் ஏற்பட, நாட்டில் கோயில்கள் பல தோன்றவேண்டும். அங்கெல்லாம் வழிபாடுகள் முறையாக நடக்க வேண்டும். புதுக் கோயில்கள் கட்ட முடியாவிட்டாலும் அந்தப் பழைய செட்டிநாட்டு அன்பர்களைப் போல் பழைய கோயில்களை எல்லாம் புதுக்கிப் பணிபுரிய வேண்டும் என்றெல்லாம் கூறினேன்.

“ஆலயம் புதுக்குக, அந்தணாளர்தம்
சாலையும் சதுக்கமும் சமைக்க, சந்தியும்
காலையும் மாலையும் கடவுளர்க்கு அணி
மாலையும் தீபமும் வழங்குக"

என்று தானே நான் தமிழர்களை எல்லாம் கூவியழைத்திருக்கிறேன். ஆனால் நான் கூவி அழைத்த குரல் இன்னும் எல்லோர் காதிலும் நன்றாகப்படவில்லைபோல இருக்கிறது. அது நன்றாக விழும்படி செய்வதே உன் போன்றவர்களின் சேவையாகயிருக்க வேண்டும். (இன்னும் இப்படியே என்ன என்ன எல்லாமோ சொல்லிக்கொண்டே போனார் மிக்க உணர்ச்சிப் பெருக்கோடு)

நான் - சரி ஐயா. தங்களை மிகவும் சிரமப்படுத்திவிட்டேன். ஒரேயொரு கேள்வி மட்டும் கேட்கிறேன். எவ்வளவோ விஷயங்களைச் சொன்னீர்களே. உங்கள் குடும்ப விவகாரங்களைக் கொஞ்சம் சொல்லலாமோ?

அந்த அருமந்த மகன்?

கம்பன் – தம்பி எதைப் பற்றிப் பேசககூடாதோ அந்தப் பேச்சை எடுத்துவிட்டாய். என் மனம் நோகச் செய்துவிட்டாய். என் சுய சரிதத்திலிருந்து என் வாழ்விலே தவிர்க்க முடியாத சோகம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது என்பதை உன்னால் ஊகிக்க முடியவில்லையா? வீரத்தையும் காதலையும் விளக்கமாக உரைத்த நான் சோகத்தைப் பற்றிப் பாடும் போதெல்லாம் என் இதயத்தையே பிழிந்து வைத்திருக்கிறேனே! ராமனைப் பிரிந்த தயரதன், மேகநாதனைப் பிரிந்த ராவணன் துயரத்தை எல்லாம் நான் உணர்ந்தவன். பாடியவன். இன்னும் ஒன்றே ஒன்று மட்டும் சொல்கிறேன்.

தேனடைந்த சோலைத்
திருநாடு கைவிட்டு
நான் அடைந்தேன் என்னத்
தரியாது காவல நீ
வானடைந்தாய் இன்னம்
இருந்தேன் நான் வாழ்வு உகந்தே

என்று ராமன் கதறும் கதறல் யாருடைய கதறல் என்று நினைக்கிறாய் தம்பி.

நான் – மன்னிக்கவேண்டும் ஐயா! மன்னிக்க வேண்டும். ஆறாத்துயரை ஆற்றும் ஆற்றல் இல்லாவிட்டாலும், அதைக் கிளராமலாவது இருந்திருக்கலாம். எல்லாம் என் அறியாமைதான்.

கம்பன் – பரவாயில்லை தம்பி! நான் விதியைப் பூரணமாக நம்புகிறவன் என்பதைத்தான் அறிவாயே. வெஞ்சின விதியினை வெல்வதற்கு ராமனாலேயே முடியவில்லை. நாமெல்லாம் எம்மாத்திரம், துதியறு பிறவியின் இன்பதுன்பந்தான் விதிவயம் என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தானே வேண்டும்.

நான் – ஆம் ஐயா!

கம்பன் – நீயும் வேண்டுமென்றா இந்தக் கேள்விகளைக் கேட்கிறாய். எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசையினால்தானே. அது கூட விதிதான்.

நான் – ஆம் ஐயா, நாங்கள் எல்லாம் கம்பன் கழகங்கள் நிறுவி ஏதோ உங்கள் புகழ் பரப்பும் பணியில் ஈடுபட்டிருக்கிறோமே! நாங்கள் செய்வதெல்லாம் சரியா? இன்னும் என்ன செய்ய வேண்டும்? எது எது செய்யக்கூடாது?

கம்பன் – இதற்கெல்லாம் நான் பதில் சொல்லமாட்டேன். அதையெல்லாம் கம்பன் கழகச் செயலாளர் சா. கணேசனிடம் கேட்டுக் கொள். ஒன்றே ஒன்று சொல்கிறேன். என் புகழ் பாட வேண்டாம். என்னைத் திட்டாமல் இருந்தால் சரி. வையம் என்னை இகழவும், மாசு எனக்கு எய்தவும் செய்யாதீர்கள்.

இதுதான் என் விருப்பம்.

சரி சுவாமி என்று சொல்லி நான் என் இருப்பிடத்திலிருந்து எழுந்து அவர் காலில் விழுந்து வணங்கி ஆசி பெறுவதற்காகத் தலை குனிந்தேன். அவர் அப்படியே என் தலையில் கையை வைத்துத் தலையை நிமிர்த்தினார். நிமிர்ந்து பார்த்தேன். கம்பனைக் காணவில்லை. என் கண்முன் நின்றவர் அமரர் டிகேசி, அவரைக் கட்டிப்பிடித்துக்கொள்ள விரைந்தேன். ஆனால் அவரோ, தம்பி உனக்கு எத்தனை தரம் சொல்லியிருக்கிறேன். கம்பன் காவியத்தை ஆராயாதே, ஆராயாதே, அனுபவித்துப் படி, பிறரும் அனுபவிக்கும்படியாக ஏதோ உன்னால் சொல்லக்கூடுமானால் சொல்லு என்று. இவ்வளவு சீக்கிரத்தில் என் உபதேசத்தை எல்லாம் மறந்துவிட்டு ஆராய்ச்சியில் இறங்கிவிட்டாயே என்று கண்டித்தார்.

நான் – இல்லை ஐயா! நான் செய்தது தவறுதான். இனி அப்படியெல்லாம் செய்யமாட்டேன். இதற்கெல்லாம் காரணம் முன்பு சின்னப்பட்டமாக இருந்து இன்று பெரிய பட்டம் வகித்திருக்கும் எங்கள் தலைவர் திரு. எ. சி. பால்நாடார் அவர்கள்தான். அவர்கள்தான் என்னை இப்படி ஆராயத் தூண்டிவிட்டவர்கள். இனி நான் இந்தத் தொழிலிலேயே இறங்கமாட்டேன். இறங்கவேமாட்டேன் என்று பன்னிப் பன்னிக் கூறினேன். என் முன் நின்ற அமரர் டிகேசியும் அந்தர்த்தியானம் ஆகிவிட்டார்கள். திரும்பவும் திரும்பவும் கண்ணைக் கசக்கினேன். என்முன் மேஜைமீது கம்பராமாயணச் சுவடிகளில் சில அவிழ்ந்து கிடப்பதைக் கண்டேன். சாஸ்திரியாரும் என்ன சார்! கம்பனின் சுயசரிதம் படித்தீர்களா? எப்படியிருக்கிறது? என்று கேட்டுக்கொண்டே வந்தார். எப்படி இருக்கிறது என்று நான் என்ன சொல்ல? சொல்ல வேண்டியவர்கள் நீங்கள் அல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=கம்பன்_சுயசரிதம்/001-012&oldid=1353041" இருந்து மீள்விக்கப்பட்டது