கலிங்க ராணி/ஆய்வு முன்னுரை
ஆய்வு முன்னுரை
அமுதூறும் அழகு தமிழில் சுவையூறும் சொல்லுதிர்த்து அரசியல் உலகிலும் இலக்கிய உலகிலும் புகழ்க் கோபுரமாய் நிற்பவர் பேரறிஞர் அண்ணா. இந்நாட்டில் இருபதாம் நூற்றாண்டின் அரசியல் புரட்சி கண்ட அவர், இலக்கிய உலகிற்கும் படைத்தளித்த செல்வங்கள் பல உள. புதினம், சிறுகதை, நாடகம், மடல், கட்டுரை, இதழுரை என்ற வடிவங்களில் எண்ணிக்கையில் இரண்டாயிரத்தைத் தாண்டி நிற்கின்றன; எண்ணத்தால் எக்காலத்தையும் தாண்டி நிற்கின்றன அவரது படைப்புகள். அவற்றுள் ஒன்றே குலோத்துங்கச் சோழனின் கலிங்கப் போரினைப் பின்னணியாகக் கொண்டு புதின வடிவில் பிறந்த கலிங்கராணி.
பிறந்தோர் எல்லாம் பெயரோடு வாழ்வதில்லை; வாழ்ந்தாலும் மடிந்தபின் மற்றோர் நினைப்ப வாழ்ந்ததில்லை. இலக்கியங்களுக்கும் இந்நியதி பொருந்தும். புற்றீசலாய்ப் புதினங்கள் தோன்றிய நாளில், அண்ணாவின் புதினப் படைப்புகள் இருள் மண்டிக் கிடந்த தமிழகத்தில் ஒளிவீசிய இளஞ் ஞாயிற்றுக் கதிர்கள். அண்டம் உள்ளளவும் ஆதவன் உலவுவது போல, அவரது படைப்புகள் இளைய தலைமுறைகளின் ஒளிமயமான எதிர்காலத்தைப் பற்றியும், அவ்வெதிர் காலத்திற்கு இடையூராய் அமைகின்ற நிகழ்காலத்தைப் பற்றியும், இந்நிகழ்காலச் சீரழிவுக்கு அடிகோலிய இறந்த காலத்தைப் பற்றியும் இயம்பிய வண்ணம் இருப்பன. 'கலிங்கராணி' இலக்கிய வானில் மிளிரும் எழில்மிகு விண்மீனாகும். ஒரு புதினத்தின் இலக்கியச் சிறப்பை அதன் கலைக் கூறுகளாக அமையும் கதைக்கரு, கதைநிகழ்ச்சி, கதைமாந்தர் என்பனவற்றால் ஆய்ந்தறியலாம். கலிங்கராணி பெற்ற இக் கலைக் கூறுகள் அதன் இலக்கியச் சிறப்பிற்குச் சான்று பகரும் பாங்கின.
ஏட்டளவில் எத்தனையோ ஏற்றம் பெற்றிருந்த இந்நாட்டினர் அழிவைத் தரும் ஆரியமாயையில் புரண்டு தனித்தன்மை வாய்ந்த திராவிடப் பண்பாட்டை மறந்தனர்; துறந்தனர். ஆரியம் பண்பாட்டு அழிவை மட்டுமின்றி பகுத்தறிவு வளர்ச்சியையும் தடை செய்தது என்பதை எவறேனும் மறுக்க முடியுமோ? இருப்பினும் உள்ள உறுதியோடு எதிர்ப்புக் குரல் எழுப்பியது ஈரோட்டுப் பாசறையில் அன்றோ! பாசறையின் தளபதியாய்த் திகழ்ந்த பேரறிஞர் அண்ணா, தமிழகத்திற்கு ஆரியம் புதியதோர் ஆபத்தை உருவாக்கிய வரலாற்றை உணர வைக்கும் பொறுப்பை ஏற்றார். அழிவு தரும் ஆரியம் தமிழ் மக்களை இழிவு படுத்தும் இயல்பு புராண இதிகாசங்களுக்குக் கருவாய் அமைந்தன. இதனை எதிர்த்துப் புதியதோர் உலகிற்கு வழிகாட்டும் நெறிகளைத் தரும் இலக்கியம் படைப்பதில் முனைவு கொண்டார் அறிஞர் அண்ணா. அம்முனைப்பின் இலக்கிய வடிவமே கலிங்கராணி.
கதை நிகழ்ச்சிகள்:
கன்னடர், பல்லவர், கைதவர், காடவர், கோசலர், கங்கர், கராளர், கடம்பர், குறும்பர், வங்கர், மராடர், விராடர், கொங்கணர் முதலிய பல்வேறு வட்டார மன்னர்கள் பொன்னும் மணியும் வேழமும் புரவியும் ஆரமும் பிறவுமாகத் திறை செலுத்த இறையோச்சிய பெருமை குலோத்துங்க சோழனுக்கு உண்டு. அக் குலோத்துங்க சோழ மன்னன் காலத்திலே ஆரிய நச்சரவு வளர்க்கும் இராம கதையும் உலவிற்று. அன்றே ஆரியத்திற்கு ஓர் எதிர்ப்பு வலுத்திருந்தால் தமிழகத்தின் வரலாறே மாறியிருக்குமன்றோ! அன்றிருந்தோர் அதை எண்ணினரோ, இல்லையோ! இன்று நமக்கு அவ்வுணர்ச்சியைப் புகட்ட ஒரு கதையை அச்சூழலில் தந்தார் அண்ணா. புறப்பகைவர்களிடம் விழிப்பாய் இருந்த சோழ மன்னர்கள் அகப்பகைவர்களை அழிக்கும் வகை தெரியாதிருந்தனர். ஈழமும் கடாரமும் கொண்ட சோழ மண்டலத்தில் ஆரிய எதிர்ப்பும் இல்லாமலா இருந்திருக்கும்; ஆனால் மறைந்திருக்கும் அல்லது மறைக்கப்பட்டிருக்கும். மறைக்கப்பட்ட அவ்வரலாற்றைத் தம் கற்பனை மெருகேற்றிக் காட்டுகிறார் 'கலிங்க ராணி'யாக பேரறிஞர் அண்ணா.
கதை மாந்தர்கள் :
இப்புதினக் கதைமாந்தருள் குலோத்துங்கன் ஒருவனே நாம் கற்றறிந்த வரலாற்று மாந்தர்; ஏனையோரெல்லாம் கதைக் கருவுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் உயிரூட்டும் கற்பனை மாந்தர்கள்.
வீரத்தின் இருப்பிடமாய் எதிர்விளைவு முன்னோக்கி அறிவின் பொறுப்பிடமாய், கடமையின் நிலைக்களமாய்த் திகழ்பவன் கதைத் தலைவன் வீரமணி—கதைத் தலைவி கலிங்க ராணியின் காதலன்; வீரமுள்ள நெஞ்சினன்; மன ஈரமுள்ள பண்பாளன்.
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவர் நெறியை அறிவிக்கும் வகையினனாய், தமிழ்க் குலப் பெண்ணின் தகைமையெல்லாம் முழுமைசேரப் பெற்ற மதிமுக மடந்தை நடனராணி, கதையிறுதியில் கலிங்க ராணி.
ஆரியன் என்னும் கதை மாந்தர் கதையின் பெரும் பகுதியை விழுங்கி நிற்கும் கல்லுளி மங்கன். அவனைத் தனிமனிதனாக அல்ல, ஆரியத்தின் முழு உருவமாகப் படைக்கிறார் அண்ணா. குற்றமில்லாத கோவலனைக் கொடுந் தண்டனைக்கு உள்ளாக்கிய கொடுமையின் வடிவமாய் அமைந்த பொற்கொல்லனுக்குப் பெயர் சூட்டவும் கூசிய இளங்கோவடிகள் போன்று பேரறிஞர் அண்ணாவும் மதிகெடுக்கும் வழியமைத்த ஆரியத்தின் உருவமாய் அமைந்த ஆரியனுக்குப் பெயரிடவும் விரும்பவில்லை.'தந்திரம், நயவஞ்சகம், இரட்டை நாக்கு, பல்லிளித்து நிற்பது' போன்ற பண்புகளின் புகலிடம் ஆரியப் பெண் கங்காபாலா.
அறியாமையால் ஆரியப் படுகுழி வீழ்ந்து அல்லலுறும் மலர்புரி அரசி மருதவல்லி; அவள் அழியப்போகும் வேளை விழிப்பாய் வீரங்காட்டி ஆரியத்தை வீழ்த்திய உத்தமன்; இழிந்தோரின் ஏமாற்றால் திசைமாற்ற வாழ்வு பெற்றோருக்கு நல்வாழ்வளிக்க அரசுடமையும் துறந்த பாண்டியன் என ஒவ்வொரு கதைமாந்தரும் புதினப் பெட்டகத்தின் மணிகளாய்க் காட்சியளிக்கின்றனர்.
இப்புதினம் தோன்றிய காலக் கட்டத்தில் (1942—43) அறிவு இருள் சூழ்ந்த தமிழர் நெஞ்சில் மனப் புரட்சியை மலர வைக்கவும் ஆரியப் புரட்டுக்களை அம்பலப்படுத்தவும் பழந்தமிழ் இலக்கிய மறுமலர்ச்சியைத் தோற்றுவிக்கவும், விடுதலைக் கனலை மூட்டவும் வேறோர் இலக்கியம் தோன்றவில்லை. இவ்வுண்மை வரலாறு அறிந்தோர் நூலுள் புகுந்து காணலாம். இப்புதினம் இதய எழுச்சிக்கும் இன்பக் கலை உணர்வுக்கும் ஓரரிய விருந்தாகும்.
இந்த ஆய்வு முன்னுரையினை எழுத வாய்ப்பளித்து, கலிங்கராணியை இளைய தலைமுறையினருக்கு அறிமுகப் படுத்தும் அரும்பணியேற்ற பூம்புகார் பிரசுரத்தாருக்கு எமது இதயங் கலந்த நன்றி.
பி. இரத்தினசபாபதி