உள்ளடக்கத்துக்குச் செல்

கலிங்க ராணி/கலிங்க ராணி 1

விக்கிமூலம் இலிருந்து

கலிங்க ராணி


1


"வேங்கையைக் கண்டால் பயமிருக்காதோ?"

"வேலிருக்கும்போது!"

"சிறுத்தை சீறுமாமே?"

"ஆமாம்; சிரித்துக்கொண்டே அதைத் துரத்திப் பிடிப்பேன்!"

"கண்ணாளா! காட்டிலே நாட்டிலுள்ளோருக்கு என்ன வேலை? ஏன் இந்த வேட்டை? மன்னன் மனமகிழ மதுரகீதம் கேட்கலாம்; நடனம் காணலாம்; மிருக வேட்டையாடி ஆபத்தை அணைத்துக் கொள்வதிலே ஓர் ஆனந்தமா?"

"வீரருக்கு வேட்டை வெண்ணிலாச் சோறு! வெஞ்சமரே விருந்து! தோட்டத்துப் பூவைத் தொட்டுப் பறித்துக் கொண்டையில் செருகிக் கோதையர் களிப்பதுபோல, வேலால் வேங்கையைக் குத்திக் கொன்று, அதன் தோலையும் நகத்தையும் எடுத்து வரும்போது எமக்குக் களிப்பு."

"ஆபத்தான விளையாட்டு."

"அஞ்சாதே அஞ்சுகமே! வீரரின் ஆரம்பப்பள்ளி அது தான்."

"எனக்கென்னமோ, நீங்கள் எவ்வளவு சொன்ன போதிலும் நெஞ்சிலே துடிப்பு இருக்கிறது."

"சிற்றிடையே, சோதிக்காதே! சுந்தர முகத்தின் சோபிதம் சிதைகிறது. உன் புன்னகையை எனக்குத் தா; நான் புறப்பட வேண்டும்."

"புன்னகை போதுமா?"

"வள்ளல்கள், கேட்டதற்கு மேலும் தருவர். தேவி! நீ உன் பக்தனுக்கு வரந்தர மறுப்பாயா?"

"எவ்வளவு சமர்த்தான பேச்சு! சரசத்தில் நீரே முதல் பரிசு பெறுவீர்."

"உண்மை! உன்னைப் பெறும் என்னை, ஊரார் அங்ஙனமே கருதுகின்றனர்."

"பூங்காவில் இவ்விதம் பேசி மகிழ்வதை விட்டு, 'புறப்படுகிறேன் புலிவேட்டைக்கு' என்று கூறுகிறீரே? நெஞ்சிலிரக்க மற்றவரே! கொஞ்சுவதை விடும்."

"வஞ்சி! வதைக்காதே. நேரமாகிறது. நினைப்பிலே ஏதேதோ ஊறுகிறது."

"ஊறும், ஊறும். ஊகூம், அது முடியாது, நடவாது, கூடாது. என்ன துணிச்சல்! என்ன ஆசை! எவ்வளவு ஆனந்தம்!"

":அணுச் சஞ்சலமேனும் இல்லாத இடம்!"

"கீதமா?"

'யாழின் நரம்புகள் தடவப்பட்டபின், இசை எழாதோ'

"அரச அவையிலே புலவராக அமரலாம் நீர்!"

"வேண்டாமம்மா! புலவர்கள் தொழில் கெட்டே விட்டது. முன்பு நம் நாட்டுப் புலவர்கள், ஓடும் அருவி, பாடும் குயில், ஆடுகின்ற மயில், துள்ளும் மான், மலர்ச் சோலை, மாது உள்ளம் முதலியன பற்றிப் பாடி மகிழ்வித்தனர். இப்போதோ, மச்சாவதாரமாம், மாபலி காதையாம், ஏதேதோ கதைகளையன்றோ கூறி வாழ்கின்றனர்! அந்த வேலை எனக்கு ஏன்?"

"நாதா! நீர் என்ன, அவைகளை நம்பவில்லையா? நமது மன்னர்கள், அந்தக் கதைகளைக் கடவுள் அருள் பெறக் கேட்கின்றனரே! நாடு முழுவதும் நம்புகிறதே, உமக்கு அது பிடிக்கவில்லையோ?

"காதுக்கு இனிய கற்பனை! புரட்டரின் புண் மொழிகளுக்கு நம் நாடு இடந் தந்துவிட்டது. குயிலி! அதை எண்ணுகையில் நெஞ்சங் குமுறுகிறது. நாட்டவரின் நாட்டம் இப்போது மண்ணில் இல்லையே, விண்ணிலன்றோ சென்றுளது."

"உண்மை! அங்குதானே, தேவர் வாழ்கின்றனர்; மூவர் உறைகின்றனர்!"

"தேவரும், மூவரும் தேன்பூசிய நஞ்சு! விண், ஒரு வெளி! ஆங்கு உலகம் கற்பிப்பவன் ஓர் சூதுக்காரன். அதை நம்புகிறவன் ஏமாளி!"

"எது எப்படியோ கிடக்கட்டும்; என் துரையே! எனக்குத் தேவரும் மூவரும் நீரே!"

"வானமுதம் நீ!"

"பார்த்தீர்களா! நீரே இப்போது தேவாமிருதம் என்று சொல்லிவிட்டீர்களே—அந்தக் கதையை நம்பித் தானே கூறுகிறீர்?"

"நம்பிக்கையல்ல! என் நரம்பிலும் அந்த விஷம் மெள்ள மெள்ள பரவிவருகிறது. அதினின்றும் நம்மவரில் தப்பினோர் மிகச் சிலரே. இனி வருங்காலத்திலே இந்த நஞ்சு, நந்தமிழ்நாட்டை என்னபாடு படுத்துமோ அறியேன். அன்று நம்மவர் வாழ்ந்ததற்கும் இன்று நாம் இருப்பதற்கும் வித்தியாசம் அதிகமாகத்தான் இருக்கிறது. எங்கிருந்தோ இங்கு குடிபுகுந்து போரிடவோ, பாடுபடவோ இசையாது பொய்யுரையை மெய்யென்றுரைத்து வாழும் ஆரியருக்கு, அரச அவையிலே இடங் கிடைத்துவிட்டது. மன்னன் எவ்வழியோ அவ்வழியே மக்களும்!"

"பாவம்! ஆரியர்கள் என்ன செய்கிறார்கள்? ஏதோ வேள்வி என்றும் வேதமென்றும் கூறிக் கொண்டுள்ளனர். பசுபோல் இருக்கின்றனர். படை எனில் பயந்தோடுகின்றனர். நாம் இடும் பிச்சையை இச்சையுடன் ஏற்று, கொச்சைத் தமிழ் பேசி, ஊரிலே ஓர் புறத்தில் ஒதுங்கி வாழ்கின்றனர். எங்கோ உள்ள தமது தேவனைத் தொழுது உடல் இளைத்து உழல்கின்றனர். நம்மை என்ன செய்கின்றனர்?"

"நம்மை ஒன்றும் செய்ய முடியவில்லை! மனமிருக்கிறது; மார்க்கம் இன்னமும் கிடைக்கவில்லை. நாட்டிலே வீரருக்கே இன்னமும் இடமிருக்கிறது. நாட்கள் பல போயினபின், நம்மவர் நிலை யாதாகுமோ அறியேன். புலி எலி யாகுமோ? தமிழர் தாசராவரோ என்றும் நான் அஞ்சுகிறேன்."

"வீண் பீதி! ஆரியர் ஏதும் செய்யார். நாதா! காதலருக்குத் தூதுவராக இருந்து, இருதய கீதத்தை ஒலிக்கச் செய்கின்றனர். அவர்களின் மீது ஏனோ உமக்கு வீணான ஓர் வெறுப்பு!"

"கண்ணே! கவலைதரும் பேச்சை விடுவோம். காலம் கடுகிச் செல்கிறது. நான் போகுமுன் கனிரசம் பருகினால் என் களைப்பு தீராதோ! இப்படி துடியிடை துவளத் துள்ளாதே மானே! விடமாட்டேன்! இந்த மானைப் பிடிக்கா விட்டால், மதம் பிடித்த யானையையும், மடுவிலே மறையும் புலியையும் வேட்டையாட முடியுமோ? நில்! ஓடாதே"

"அதோ, காலடிச் சத்தம். ஆமாம்! அரசிளங்குமரி தான். சுந்தரிதேவியின் சதங்கை ஒலிதான் அது. போய் வாரும் கண்ணாளா! ஜாக்கிரதையாக வேட்டையாடும். மான்வேட்டையல்ல; மங்கையர் வேட்டையுமல்ல; புலி, கரடி, காட்டுப்பன்றி முதலிய துஷ்ட மிருகங்கள் உலவும் காடு."

"இளைய ராணியாரின் குரலா கேட்கிறது?"

"ஆமாம்! அரசிளங்குமரி அம்மங்கையின் குரல்தான்!

"பூங்காவிலே நம்மைக் கண்டுவிட்டால்?"

"நாம் இதுவரை அரசிளங்குமரியின் கண்களில் படவில்லை. ஆனால் காதுக்கு விஷயம் எட்டித்தான் இருக்கிறது!"

"யார் சொல்லிவிட்டார்கள்?"

"சொல்லுவானேன்? என் கண்களின் மொழியை அவள் அறியாது போகமுடியுமா? அம்மங்கையும், ஒரு பெண் தானே! அதோ கூப்பிடுகிறார்கள், என்னைத்தான். பூக்குடலை எங்கே? கொடுங்கள் இப்படி! இதோ வந்தேனம்மா! வந்துவிட்டேன்! போதும், இது இருபத்து ஏழாவது முத்தம்! போதும், காலடிச் சத்தம் கணமாகிவிட்டது; விடும்...புறப்படும்."

"மற்றதைப் பிறகு மறவாதே, நான் வருகிறேன். தஞ்சமடைந்தவனைத் தள்ளமாட்டாய் என்று என் நெஞ்சு உரைக்கிறது."

"சரி! சரி! வேட்டை முடிந்ததும் விரைந்து வாரீர்; மாலை தொடுத்து வைப்பேன்."

"மதியே, மறவாதே! நான் வருகிறேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=கலிங்க_ராணி/கலிங்க_ராணி_1&oldid=1724904" இலிருந்து மீள்விக்கப்பட்டது