உள்ளடக்கத்துக்குச் செல்

கலிங்க ராணி/கலிங்க ராணி 28

விக்கிமூலம் இலிருந்து


28


"மாதாட, மனமாட, மன்னன்பரி வாரமாட, மதனனும் நின்றாட,
மகிழ்வாட, மலராட, மார்பினிலே..."

"பேஷ், பேஷ்! ரவிவீரரே! பதிகம் அருமையாக இருக்கிறதே. மகேஸ்வரனைத் துதித்துப் பாடும் பக்தரும் இவ்வளவு உருக்கமாகப் பாடினதில்லை."

பாடிய ரகுவீரனின் நிலை என்ன தெரியுமா? முன்னிரவு பாண்டியனின் கொலுமண்டபத்திலே நடனமாடிய சுந்தரியிடம் சொக்கியதால், அவளைக் குறித்து எண்ணி எண்ணி ஏங்கிப் பிறகு பண் இசைத்தான். பாடுகையில் தன்னை மறந்தான்! தன் நண்பனும் படையிலே தன்னைப் போலவே ஓர் தலைவனுமாகிய, கருங்கண்ணன் அங்கு வந்ததையும் அவன் கவனிக்கவில்லை. ரகுவீரனின் பாடலைக் கேட்டுக் கருங்கண்ணன் கேலி செய்யவே, ரகுவீரன், "கண்ணா! மகேஸ்வரனைக் கண்டவர் யார்? நான் கண் கண்ட கடவுளுக்கே கானம் இயற்றினேன்" என்றுரைத்தான். பிறகு இருவருக்கும் உரையாடல் நடக்கலாயிற்று. கருங்கண்ணன் துவக்கினான்.

"தேவனா? தேவியா?"

"தேவியே திவ்ய தரிசனம் தந்தாள்; நடன மேடையில் நின்றாள்; கண்களை எய்தாள்; என்னை வென்றாள்;"

"ரணகளச் சூரராகிய உம்மையா?"

"ஆமாம், கருங்கண்ணா! இரண்டு வேல்கள் என் இருதயத்திலே பாய்ந்தன. அவள் அன்று நடன மேடையிலே ஆடினாள் என்றே அரசரும் பிறரும் எண்ணினர்; அவள் என் இதயத்திலேயும் நின்று ஆடினாள்."

"மகிழ்ந்தேன் நண்பரே! கட்கமேந்த முடியாத காலம் வந்தால் நீர் எப்படிப் பிழைப்பீர்? மகனும் இல்லையே காப்பாற்ற என்று எண்ணி நான் உம்மைப் பற்றிக் கவலைப்பட்டதுண்டு. இனி அக்கவலை இல்லை! கட்க மெடுக்காமல் வாழ உனக்கு வழியிருக்கிறது. கவிபாடிப் பிழைக்கலாம்."

"விளையாடாதே!"

"ஆமாம்! மாற்றார் நமது மண்டலத்தின்மிது போர் தொடுக்கும் வேளை; மகா பயங்கரமான சூழ்நிலை பரவி மக்களைச் சூறையாடும் சமயம்; பஞ்சமும் பரவுகிறது. நண்பா! மதன லீலைக்கு இது சமயமல்ல."

"நீ இந்த வேதாந்தத்தைக் காமனிடம் கூறு. என்னிடம் காரியசித்திக்கு வழி சொல்லு."

"வீதியிலே மக்கள் வேதனையுடன் பேசும் மொழி கேட்டீரா?"

"வீணரின் பேச்சை விடு கண்ணா!"

"சாண் வயிற்றுக்காக அவர்கள்..."

"சாகட்டும். நான் பிழைக்க வழி சொல்லு"

"அவர்கள் செத்து, நீ பிழைப்பதா?"

"அரசநீதி பேசவல்ல, உம்மை அழைத்தது; கருங்கண்ணா! புண்னின் மீது பூ விழுந்தாலும் வேதனையே தரும் நண்பா! உன் குறும்பு என்னைக் குத்துகிறது."

"நாடகக்காரி என்று அவளை நினைத்து நீ நெருங்குகிறாய்! அவள் நெருப்பு!"

"மணிமுடி மங்கையோ?"

"அதற்கும் மேலே!"

"அடக்கும் உமது பேச்சை; அரண்மனைகள்கூட என் ஆவலைத் தடுத்ததில்லை."

"உண்மை. ஆனால் சில சமயம் பணிப்பெண்கள்கூடப் பணிய மறுப்பதுண்டு."

"நடன சுந்தரிக்கு நான் எதையும் தருவேன். அவள் வேண்டுவது நிம்மதியான வாழ்வுதான். என்னால் அதைத்தர முடியும்."

"உமது சரசம் அவளுக்குச் சஞ்சலத்தைத்தான் தரும்."

"சரி, உபதேசத்தை நிறுத்தும். நடனசுந்தரியை நான் எப்படியும் அடைந்தே தீரவேண்டும். இந்த நரை, ஊரார் நகைப்பு, பிறரின் பகை ஆகிய எதையும் நீ எனக்குத் தடையாக எடுத்துக் காட்டாதே. கண்ணா! நான் என் மனதை எடுத்துக் காட்ட முடியாது. ஆனால் இதோ, நெற்றியைத் தொட்டுப்பார். தணலாகிவிட்டது! தாங்க முடியாத தாபம்."

"ஐயோ, பாவம்!" வேதனையைச் சிரிப்போடு உதிர்த்தான்.

ரகுவீரன் பேச்சை நிறுத்திவிட்டான். கருங்கண்ணனின் தோளைப் பிடித்து உலுக்கினான். தாளைப் பிடிக்கத் தயாராக இருப்பதைக் காட்டினான். மொழி கூறவேண்டியதற்குமேல் அவன் விழி கூறிடவே, கண்ணன், வேறு முறையைக் கையாள்வோம் என்று கருதி, "அவள் என்ன அழகு? கன்னங்கரேலென்று கிடக்கிறாள். நடனமாடும் நேரம் தவிர மற்ற சமயத்திலே, அவள் முகம் சோக பிம்பமாக இருக்கிறது. பேசுவதில்லை; சிரிப்பதில்லை; ஊரில் நடமாடுவதில்லை. அப்படியிருக்க அவளிடம் நீ என்ன இன்பம் பெற முடியும்" என்று கூறிட, ரகுவீரன், "அவள் சிரித்தால், நானும் சிரித்துவிடுவேன்; பேசினால் நானும் பேசுவேன்! ஆனால் அவளுடைய மௌனம் என்னைக் கொள்கிறது. அவளுடைய சோகம் என்னைத் தாகத்திலாழ்த்துகிறது; அவளைப் பெற்று அணைத்துக்கொண்டு, "என் கண்ணே! முகத்தைச் சுளித்தபடி ஏன் இருக்கிறாய்?" என்று நான் கெஞ்சிக் கேட்பேன்.

அவள் பஞ்சணைக்குப் பக்கத்திலே சாய்ந்தபடி, "ஒன்றுமில்லை நாதா!" என்று கூறிப் புன்முறுவல் செய்வாள். அந்த மலர்ச்சி, என் வாழ்வையே மலர வைக்கும். "உப்பரிகை மீதுள்ள உல்லாசியை உற்று நோக்கும்போது, பலகணியைச் சாத்திவிடுவதுபோல, அவளை நான் பார்க்கத் தொடங்குகையில், அப்பாவை, பூவிழியை மூடி என் மனதைப் புண்ணாக்கி விடுகிறாள். சாகசக்காரிகளைக் கண்டுள்ளேன்; ஆனால் இவள்போல், சரசத்திற்கு ஏற்ற ஒரு சிங்காரியை நான் இதுவரை பார்த்ததில்லை. அவளுடைய சொகுசு அச்சோகத்தால் கெடவில்லை; அதுவும் ஒரு விதமான சொகுசாகவே எனக்கு இருக்கிறது. தங்கச் சிலைக்கு மேல் மஸ்லீன் மூடிபோட்டு வைத்திருப்பது போன்றிருக்கிறது" என்று கூறிக் கவலைப்பட்டான். அவன் பேசிக் கொண்டிருக்கையிலேயே, கருங்கண்ணன் ஓலை ஒன்று எழுதியபடி இருந்தான். அதைக் கண்ட ரகுவீரன் வெகுண்டு, ஓலையைப் பிடுங்கி எறியப்போகையில், "படித்துப்பார், பதைக்காமல்" என்று கண்ணன் கூற, ரகுவீரன் படித்தான். சந்தோஷத்தால் குதித்தபின், "சரியான யுத்தி! பேஷான யோசனை" என்று பூரித்தான்.

"நாளைக்குப் பௌர்ணமி. விருந்தொன்று நடத்த உத்தேசம். அதில் தாங்கள் கலந்து கொண்டு, தங்கள் நடனத்தால் விருந்தினரை மகிழ்விக்க வேண்டுகிறேன். மறுக்காமல் பதிலிறுக்க வேண்டுகிறேன்."
—ரகுவீரன்


இந்த ஓலையைக் கண்டே உளம் மகிழ்ந்தான் ரகுவீரன். ஒரு வினாடியில் மீண்டும் சோகத்திலாழ்ந்தான். "நண்பா! விருந்திலே, நமது பிரமுகர்கள் கலந்துகொண்டால் கருத்தை நிறைவேற்றச் சமயம் கிடைக்காதே" என்றான். "பிரமுகர்கள் வந்தால்தானே தடை! பிரமுகர்போல் வேடமணிந்து சிலரை வரவழைப்போம். மது அருந்தி அவர்கள் மயங்குவர். பிறகு நடனம்; நடனத்திலே நான் இலயிப்பேன். நீர் நடத்தும் பிறகு உமது நடனத்தை. மதுவை மங்கைக்கும் தந்துவிடவேண்டும். அது தரும் ஆனந்தத்திலே அவளுடைய சோகம் பறந்தே போகும்." என்று யோசனை கூறிவிட்டு, ஓலையைத் தந்தனுப்பச் செய்தான்.

"தேனிலே தோய்த்துச் சாப்பிட மா, பலா, வாழை! தினை மாவை தேவையான அளவு எடுத்துக்கொள். மான் இறைச்சி மிருதுவாக இருக்கும். சுவை அதிகம். மதுக்குடங்கள் இதோ உள்ளன. எமது மன்னன், உமக்கு ஒரு துளியும் மனக் குறைவு வராமல் பார்த்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார். உன்னைப்போல் அவரிடம் சிக்கிய சிலர் பட்டபாடு கொஞ்சமல்ல; ஆனால் நீ எப்படியோ அவரை மயக்கிவிட்டாய். உன்னை அவர் தன் குடும்பத்தினராகக் கருதிவிட்டார்" என்று உபசாரமொழி பேசி, வீரமணிக்கு வித விதமான உணவு வகைகளைத் தந்தனர், காட்டுக் கூட்டத்தினர்.

வீரமணி, வேதனையை எதிர்பார்த்தான். விருந்து கிடைக்கக் கண்டான். காட்டுக் காவலனின் இப்போக்கு, வீரமணிக்கு விளங்கவில்லை. உபசாரம் செய்து நின்ற ஏவலர்களும், "ஏதுமறியோம்! எமது மன்னனின் கட்டளை இது. உமக்கு ராஜோபசாரம் செய்யுமாறு உத்தரவு. அவருடைய எண்ணம் யாதோ எமக்குத் தெரியாது" என்று கூறினர். மதம் பிடித்தோடி வரும் காட்டானை, எதிர்ப்பட்டவரைக் காலால் மிதித்துக் கொல்லுமே யொழிய, கரும்பு பறித்துத் தருமா? சீறிடும் நாகம் பல்லைக் கொண்டு கடித்துக் கொல்லுமே தவிர, படமெடுத்தாடியும், பக்கத்தில் உலாவியும், உடலிலே உரசியும் சும்மா கிடக்குமோ! காட்டரசன் தன் தலையை வெட்டி வீசுவான் என்று நினைத்த வீரமணிக்கு, காட்டரசன் கோட்டையிலே விருந்தும், உபசாரமும், பலமாக நடக்கக்கண்டு, ஒன்றும் புரியாது திகைத்தான். சற்றே சாய்ந்தால், வேலையாட்கள் மயில் விசிறிகொண்டு வீசவருகிறார்கள்; இரண்டடி எடுத்து வைத்தால், 'என்ன தேவை?' என்று அடக்க ஒடுக்கமாக கேட்கின்றனர். தேன் குடத்தைத் திரும்பிப் பார்த்தால் ஒரு வேலையாள், வட்டிலிலே தேன் பெய்து, 'இப்படியே பருகுகிறீரா? தினை மாவு கலக்கட்டுமா?' என்று கேட்கிறான்!

வீரமணியால் ஆச்சரியத்தை அடக்க முடியவில்லை. இந்த மர்மம் என்னவெனத் தெரிந்து கொள்ள எண்ணிய வீரமணி, தூங்குவதுபோல் பாசாங்கு செய்தான்! அத்தச் சமயத்தில வேலையாட்கள் ஏதாகிலும் பேசுவர்; அதிலிருந்து விஷயத்தை ஒருவாறு தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தான். உண்மையாகவே வீரமணி உறங்கியதாகவே கருதிய காவல் புரிவோர், வீரமணி எதிர்பார்த்தபடியே பேசலாயினர். ஆனால், அவர்களின் பேச்சு, பயமூட்டடக் கூடியதாக இருந்ததேயொழிய, மர்மத்தை விளக்கக் கூடியதாக இல்லை.

அதே சமயம் ஏவலாட்களின் உரையாடல் வெளிப்படையாக ஆரம்பமானது. வீரமணி உற்றுக் கேட்கலானன்:

"ஏடா, வேங்கை! எனக்கு இந்தப் போக்கே புரியவில்லையே! எதற்காக நமது மன்னன் இந்த வழிப்போக்கனுக்கு இவ்வளவு உபசாரம் செய்கிறார். காரணமின்றி ஒரு காரியம் செய்ய மாட்டாரே! இதற்கென்ன காரணமென்று தெரிந்து கொள்ள முடியவில்லையே."

"போடா, கட்டாரி! இது தெரியவில்லையா? மலை மாதாவுக்கு மாடு வெட்டுவோமே, அதற்கு முன்பு! எருதுக்கு எவ்வளவு அலங்காரம் செய்வோம். கவனமிருக்கிறதா?"

"அதற்கும் இதற்கும் என்னடா சம்பந்தம்? மலை மாதாவுக்கு மனிதனைப் பலிகொடுக்கும் வழக்கம் கிடையாதேடா. டே, வேங்கை! எனக்குக் கொஞ்சம் பயமாகக் கூட இருக்குடா."

"கட்டாரி! நீ ஓங்கி வளர்ந்திருக்கிறாயே யொழிய, சுத்தக் கோழையாக இருக்கிறாயே! பயமாம் பயம்! இதிலென்னடா பயமிருக்கிறது?"

"ராஜா இவ்வளவு உபசாரம் செய்வதைப் பார்த்தால், இவன் ஒருவேளை பெரிய மந்திரவாதியாக இருப்பானோ என்று திகில் பிறக்கிறது."

"மந்திரமாவது தந்திரமாவது! மந்திரம் தெரிந்தவனாக இருந்தால் நம்மிடம் சிக்குவானா? சிக்கினாலும்கூட, நம்மை ஒரேயடியாகக் கொன்றுவிட்டிருக்கமாட்டானா? அப்படியொன்றுமில்லை. எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. ஆனால் வெளியே சொன்னால் தலைபோகும்."

"என்னடா அது? சொல்லு சீக்கிரம்."

"குழி வெட்டித் தழைபோட்டு மூடிவைத்து, யானையை அதிலே விழச்செய்வோமல்லவா, அதைப் போலத் தந்திரமாக இவனை நமது மன்னன் வீழ்த்தவே விருந்தூட்டுகிறான் போலிருக்கிறது."

"நமது வேலும் வாளும் இவனை வீழ்த்தாதோ? தந்திரத்தால்தான் இவனை வீழ்த்த முடியுமோ? அப்படிப்பட்ட ஆற்றல் என்ன இருக்கிறது இவனிடம்."

இப்படி, வேலையாட்கள் பேசிக்கொண்ட உரையாடலால் அவனுக்குள் வியப்பு ஏற்பட்டதே தவிர வேறு எதுவும் தோன்றவில்லை. அவன் எதிர்பார்த்த விளக்கம் அவர்கள் பேச்சில் கிடைக்காமல் குழப்பமடைந்தான்.

மறுதினம் விளக்கமும், விலாநோகச் சிரிப்பும் வீரமணிக்குக் கிடைத்தது. கையிலே பழத்தட்டும், நடையிலே நாட்டியமும் கொண்ட நரை மூதாட்டி யொருத்தி வீரமணியைத் தேடி வந்தாள். அவளைக் கண்டதும், காவலாளிகள் பயந்து ஒதுங்கினர். அவள் அவர்களைச் சட்டை செய்யாது, வீரமணியருகே வந்து அமர்ந்தாள். வீரமணி, "அம்மா! நீ யார்? இங்கு வரக் காரணம் என்ன?" என்று கேட்டான். நரைமூதாட்டி நகைத்தாள். நாலாறு பற்களிழந்திருந்ததால், அவளுடைய சிரிப்பு விகாரமாக இருந்தது. வீரமணியால் அந்தக் கோரத்தைக் கண்டு சகிக்க முடியவில்லை. சிரித்த பிறகு அக்கிழவி, "எத்தனை நாள் காத்துக் கிடந்தேன் உன்னை அடைய! ஏன் வெட்கப்படுகிறாய்? நான் உன்னை விழுங்கிவிடமாட்டேன்" என்று சரசமாடலானாள்.

"அட பாவி! ஈட்டியாலே குத்திக் கொன்றுவிட்டிருக்கலாமே, இந்த ஈளை கட்டிய கிழத்தை, இங்கே அனுப்பி இவ்விதம் என் மானத்தைப் பறிப்பதைவிட! என்று வீரமணி எண்ணி நொந்துகொண்டான். அவனுடைய மௌனத்தைக் கண்ட கிழவி "பல இரவுகள் கனவு கண்டேன். இன்று தான் என் கனவு பலித்தது. அழகா! என்னைக் காட்டான் ஏமாற்றிக் கொண்டே வருகிறான் என்று எண்ணிக் கோபித்துக் கொண்டேன். சலிப்புமடைந்தேன். இப்போதுதான் தெரிகிறது, அவனுடைய சாமர்த்தியம். என் மனதுக்கு இசைந்தவன் கிடைக்க வேண்டுமென்று அவன் எவ்வளவு அலைந்து திரிந்து இருக்கிறான் என்பது இப்போதுதான் எனக்குத் தெரிகிறது. என் மனங்குளிர வேண்டும் என்று வெகு பிரயாசை எடுத்துக் கொண்டிருக்கிறான். ஏன் கண்ணா! வாய்மூடிக் கொண்டிருக்கிறாய்? நீ ஊமையா?" என்று கிழவி கொஞ்சினாள். 'நஞ்சையேனும் பருகிவிடலாமே! இந்த நரைத்த மோசமான கிழவியின் மொழியைக் கேட்க முடியவில்லையே. இது என்ன கொடுமையான தண்டனை.' என்று வீரமணி வியாகூலமடைந்தான்.

"நான் காட்டானின் மாற்றாந்தாய். என்னை உனக்கு மணமுடிக்க காட்டான் எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டான். மலை மாதா கோயிலுக்கு அலங்காரம் செய்துவிட்டார்கள்; குடிபடைகளின் கூத்துக்காகக் குடங்குடமாக கள் இறக்கிவிட்டார்கள். நாளை இரவு, நமக்குத் திருமணம் நடக்கப் போகிறது. இன்றே நாம், ஆனந்தமாக இருக்கலாம். யோசியாதே; எழுந்திரு. நான் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள்; நீயோ ஓர் வழிப்போக்கன். இருந்தாலும் கவலையில்லை. உன்னை நான் அடைய, ஒரு தங்கச் சுரங்கத்தையே, காட்டானுக்குத் தந்தேன். அதன் இருப்பிடம் இதுவரை எனக்கு மட்டுமே தெரியும்! காட்டானின் தந்தைக்கு நான் இரண்டாந்தாரம். அவர் இறந்த பிறகு, வேறொருவனைக் கல்யாணம் செய்துகொண்டு தங்கச் சுரங்கத்தை அவனுக்கு அளித்து ஆனந்தமாக வாழலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், நெடுநாள் காத்திருந்தும், சரியான ஆள் கிடைக்கவில்லை. தங்கச் சுரங்கம் இருப்பது தெரிந்த காட்டான், "உனக்கு அழகும் இளமையுங் கொண்ட ஒருவனைக் கணவனாக்கி வைக்கிறேன்; நீ அந்தத் தங்கச் சுரங்கத்தின் இருப்பிடத்தை எனக்குக் காட்டு" என்று கேட்டான். நான் இசைந்தேன். அதனால் இன்று உன்னை அடைந்தேன்; அவனுக்குச் சுரங்கத்தைக் காட்டிவிட்டேன். ஆகவே இனி நம்மைத் தடுப்பார் இல்லை. இந்தக் கானகத்திலே காட்டானுக்கு, எவ்வளவு அதிகாரமுண்டோ அந்த அளவு எனக்கும் உண்டு. அதுமட்டுந்தானா? நமக்கு ஓர் ஆண் மகன் பிறந்தால், காட்டானை நீக்கிவிட்டு அவனை அரசனாகக் கொள்ள இந்த ஆரண்யவாசிகள் சம்மதிப்பர். ஏனெனில் நான் சாதாரணமானவளல்ல! என் தந்தை மாயாஜாலக்காரன்; எனவே என் சொல்லை மீற இந்த வன வாசிகளால் முடியாது" என்று கிழவி தன் பிரதாபத்தைக் கூறினாள். வீரமணி தனக்கு நடந்துவந்த உபசாரம் எதன் பொருட்டு என்பதை இப்போது தெளிவாகத் தெரிந்து கொண்டான். கிழவியின் காமச்சேட்டையைக் கண்டு, விலாநோகச சிரித்துவிட்டு, "அதிரூபவதியான உனக்கு நான் ஏற்றவனல்லவே!" என்று கூறினான்.

கிழவி, அவன் கேலி செய்கிறான் என்பதைத் தெரிந்து கொள்ளவில்லை. "என் கண்களுக்கு நீ சுந்தர புருஷனாகத் தோன்றுகிறாய். உன்னை நான் என்றுமே பிரியமாட்டேன்" என்று கூறினாள்.

"சீ, காட்டெருமையே! காமக் கூத்தாடும் கிழப்பிணமே! எழுந்து ஓடு, இவ்விடத்தைவிட்டு! இந்தக் கிழவயதிலே காதலாம்; திருமணமாம்! திமிரா அல்லது புத்திக் கோளாறா?" என்று வீரமணி சீற்றத்தோடு கூவிக் கொண்டே, அங்கு கிடந்த ஓர் கைத்தடியை எடுத்து, கிழவியின் முதுகிலே பலமாகவே அடித்தான். கிழவி கோவெனக் கதறிய வண்ணம் காட்டரசனைத் தேடிக் கொண்டு ஓடலானாள்.