உள்ளடக்கத்துக்குச் செல்

கலிங்க ராணி/கலிங்க ராணி 29

விக்கிமூலம் இலிருந்து


29


டனராணி காமச்சேட்டையைக் கண்டு கதிகலங்கி ஓடும் கட்டம், பாண்டிய நாட்டிலே நடந்து கொண்டிருந்தது. காட்டரசன் கோட்டையிலே காமப்பித்தங் கொண்ட கிழவியை வீரமணி விரட்டினான். பாண்டிய நாட்டிலோ, நடனராணி காமப் பித்தர்களின் பிடியிலே சிக்காது ஓடினாள்.

மலர்புரிக் காட்டை விட்டேகிய நடனா, வணிகக் கூட்டத்துடன் சேர்ந்து பல இடங்கள் சுற்றியும், வீரமணி கிடைக்காததால் வெந்துயரடைந்து, 'தற்கொலை செய்து கொண்டாரோ? காட்டிலே ஏதேனும் மிருகத்திடம் சிக்கி மாண்டாரோ?' என்று எண்ணி மனங்குழம்பினாள். வணிகர் கூட்டம் பாண்டிய நாடு சென்றபோது, நடனாவும் உடன் சென்றாள். இனி வாழ்க்கை எதற்கென்று சலித்து ஒரு நாள், நடனா ஆண் உடையை அகற்றிவிட்டுத் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று தீர்மானித்து, மதுரை நகரின் மருங்கேயுள்ள சாலையிலே, நடுநிசியிலே, மரக்கிளையிலே, தூக்கிட்டுக் கொள்ளச் சென்றாள். அதுசமயம் மதுரையிலிருந்த ஒரு மூதாட்டி, தன் மகளை இழந்த வருத்தத்தால் மனமுடைந்து, தளர்ந்த வயதிலே தன்னைக் காப்பாற்றுவார் இல்லையே என்று ஏங்கித் தூக்கிட்டுச் சாவதே மேல் எனத் துணிந்து, அதே நேரத்திலே அதே சாலையிலே வந்திருந்தாள். மூதாட்டியைப் பார்த்த நடனா, 'கிழவி போகட்டும்; பிறகு நமது வேலையை முடித்து விடுவோம்' என்று எண்ணினாள்.

"இவள் யாரோ, தன் காதலனுக்காக இங்குக் காத்துக் கிடக்கிறாள் போலிருக்கிறது; அவன் வந்ததும் தொலைந்து போவாள்; பிறகு நாம் உயிரைப் போக்கிக் கொள்ளலாம் என்று கிழவி எண்ணிக் கொண்டாள். ஒருவரை, ஒருவர் தமது நினைப்பால் ஏய்க்கப் பார்த்தனர்.

கிழவி அசைவதாக நடனாவுக்குத் தெரியவில்லை. அதுபோல் நடனா அங்கிருந்து போவதாகக் கிழவிக்குப் படவில்லை. ஆகவே அவள் அருகில் சென்று தன் மனத்தில் பட்டதைச் சொல்ல ஆரம்பித்தாள்.

"வாலிபப் பருவத்தே இருக்கிறாயே! நடுநிசியிலே இங்கு என்ன வேலை? வீடுபோய்ப் படு. குழந்தாய்! நீ யாருக்காகக் காத்துக் கொண்டிருக்கிறாயோ, பாவம்-அவன் இந்த வேளையிலே உன்னை வஞ்சித்துவிட்டு எவளுடனோ கொஞ்சிக் கிடக்கிறான் போலிருக்கிறது. காலையிலே வருவான்; கடுகடுப்பாக இரு. காலைப் பிடிப்பான்; கன்னத்தைத் தடவுவான்; 'கண்ணே, மணியே' என்று கொஞ்சுவான். அப்போது அவனுடைய கள்ளத்தனத்தை மெள்ள மெள்ளக் கேட்டுத் தெரிந்துகொள். நேரமாகிறது; போய் வீடு சேர்" என்று கிழவி நடனாவுக்குப் புத்தி கூறினாள். உடனே அவள் பேசினாள்:

"தாயே! தள்ளாத வயதிலே, தாங்கள் ஏன் இங்கே உலவுகிறீர்கள்? இங்கு வீசும் காற்று உமது உடலுக்கு ஆகாதே. காலையில் அல்லது மாலையில் உலவலாம். நடுநிசியிலே நடமாடுவது ஆபத்தாயிற்றே, எனக்குத் தூக்கம் வரவில்லை; அதற்காகச் சற்று நேரம் இங்கு உலவிப்போக வந்தேன். என் வீடு அருகாமையிலே இருக்கிறது" என்று நடனா கூறி, கிழவியைப் போய்விடச் செய்ய முயன்றாள்.

"உன் வீடு அருகாமையில்தானே இருக்கிறதென்றாய். சரி, புறப்படு குழந்தாய்! நான் துணைக்கு வருகிறேன். நீயும் வீட்டிலே படுத்துறங்கலாம். இந்தப் பொழுது மட்டும் எனக்குப் படுத்துக் கொள்ள இடம் கொடு; வா, போவோம்" என்று கிழவி நடனாவை அழைத்தாள். நடனாவுக்கு வீடு ஏது? கிழவி அப்படியே நம்பிவிட்டாளே, என்றெண்ணிய நடனா பரிதாபத்தோடு நகைத்தாள்.

"நட போகலாம்" என்று கிழவி நடனாவைத் தூண்டினாள்.

"தாயே! உன்னிடம் நான் பொய் பேசிவிட்டேன். என்னைப் பொறுத்துக் கொள்ளுங்கள். என் வீடு அருகாமையில் இல்லை. இந்த மதுரையே எனக்குப் புதிய ஊர். நான் ஓர் அபலை. என் வாழ்க்கை வேதனை நிரம்பியது. அப்படிப்பட்ட துயர வாழ்வை முடித்துக் கொள்ளவே இங்கு வந்தேன்." என்று நடனா உண்மையை உரைத்திடவே கிழவி வருந்தி, "பச்சைக் கிளியே! இந்த வயதிலே உனக்கேன் இந்த விபரீத யோசனை? நீ யார்? எந்த ஊர்? யாருடைய மகள்? மனமுடைந்து பேசக் காரணமென்ன?" என்று கேட்டு, நடனாவின் கரங்களைப் பற்றிக்கொண்டாள். துக்கத்தை அடக்கிக் கொண்டு நடனா, "என் கதை மிகமிகப் பெரிது. நான் சோழ மண்டலத்தைச் சேர்ந்தவள்; என் காதலனை இழந்தேன், இதுவரை அவரை மீண்டும் பெறலாம் என்று எண்ணி எங்கெங்கோ தேடி அலைந்தேன். காணவில்லை. எனவே இறந்துவிட முடிவு செய்து இங்கு வந்தேன்" என்று கூறினாள்.

"என்ன பேச்சடி பேசுகிறாய்? சொர்ண பிம்பமே! நீ தற்கொலை செய்து கொள்வதா? உன்னை வரவேற்க எத்தனை அரண்மனைகள் உள்ளன? மாளிகைகளிலே மணிவிளக்காயிருக்க வேண்டிய நீ, மரக்கிளையிலே தொங்குவதா? என்ன பேதைமை! உன் தாய் தந்தையர் கேட்டால் எப்படியெல்லாம் வேதனைப்படுவர்" என்று கூறிக் கொண்டே, நடனாவைத் தழுவி, முகத்தைத் துடைத்து, அன்புடன், "அன்னமே, என்னைப் பார்! நான் வாழ்க்கையின் கடைசிப் படிக்கட்டிலே நிற்கிறேன். அதுவும் கண்ணீருடன். சில தினங்களுக்கு முன்பு, என் ஆசை மகள் இறந்தாள். நான் நடைப்பிணமானேன். அவள் உலவிய வீடு சுடுகாடுபோலாகிவிட்டது. உன்னைப்போலவே நானும் இங்கு தற்கொலை செய்து கொள்ளவே வந்தேன். நீயோ, வாழ்க்கையின் வாயற்படியிலும் நுழையவில்லை. இதற்குள் மனம் உடைந்து இறப்பதா? வேண்டாமடி தங்கம்! உன் வேதனை முழுதும் என்னிடம் கூறு. நான் உதவி செய்கிறேன். மகளே! என்னை உன் தாயாக ஏற்றுக்கொள். நான் பாண்டிய மன்னனிடம் பணியாற்றுபவள்! என் மகள் அற்புதமாக நடனமாடுபவள். இப்போது என்னைத் தவிக்கச் செய்துவிட்டு அவள் இறந்துவிட்டாள். எனக்காகவாவது நீ வாழவேண்டும். என்னுடன் வா! உன் வரலாற்றைக் கூறு. அதைக் கூற இஷ்டமில்லையானால் சொல்லவுந் தேவையில்லை. இறந்த என் மகள் பிழைத்தெழுந்து வந்துவிட்டாள் என்று எண்ணி மகிழ்வேன். நீ இதற்கு இசையாவிட்டால், இப்போதே நான் தூக்கிட்டுக் கொண்டு இருப்பேன்; நீ மரக்கிளையிலே தொங்குவதை நான் கண்டு சகிக்க முடியாது. என்னைச் சாக வொட்டாது தடுக்க வேண்டுமானால், நீ உயிரோடு இருக்க இசைய வேண்டும்.

நடுநிசியிலே, நாசத்தை நாடி நாமிருவரும் இங்கு வந்தோம். நாம் நேசமாகிவிட்டதால் இருவரும் வாழலாம். ஒருவருக்கொருவர் துணையாக இருந்தால் உன் காதலன் கிடைக்காமற் போகமாட்டான். என்னை நம்பு கண்ணே" என்று கிழவி கெஞ்சினாள்.

சில நொடிகள் சிந்தித்த நடனா பிறகு சொன்னாள்:

"தாயே! நான் அவருக்காகவே இதுவரை உயிரோடு இருந்தேன். இனி உன் பொருட்டு வாழ இசைகிறேன். அவர் கிடைக்காததால், இனி யாருக்காக வாழ வேண்டும் என்று சலித்தே சாகத் துணிந்தேன். இப்போது நான் வாழ்வதால் உனது வயோதிகப் பருவம் வேதனை நீங்கப் பெற்றிருக்குமெனத் தெரிகிறது. எனவே நான் வாழ்வதனால் பலன் இருக்குமென்று ஏற்படுகிறது. நான் உன் மகளாக இருக்கச் சம்மதிக்கிறேன். ஆனால் ஒரே ஒரு கடுமையான நிபந்தனை" என்று சொன்னாள்.

"நிபந்தனை நூறு வேண்டுமானாலும் கூறு; எதற்கும் நான் கட்டுப்படுவேன்" என்று கிழவி கூறினாள்.

"நான் கன்னியாகவே காலந்தள்ளுவதை நீ தடுக்கக் கூடாது" என்றாள் நடனா. கிழவி, "உன் இஷ்டம்போல் நான் நடக்கிறேன்" என்று வாக்களித்தாள். நடனா, புதிய வாழ்க்கையைத் தொடங்கினாள். "என் தங்கை மகள் என்னோடு இருக்கிறாள்" என்று கிழவி கூறினதால், மன்னன் ஒருநாள் அரண்மனைக்கு அழைத்துவரச் சொன்னார். நடனாவின் அரிய நடனத்தை கண்டு பாராட்டினார். அன்று முதல் நடனா அரண்மனைப் பிரதம நடன மாதுவாக நியமிக்கப்பட்டாள். தனது பழைய உருவம் தெரியாதிருக்க, நடனா முகத்தைக் கருநிறமாக்கிக் காட்டும், மூலிகைத் தைலத்தை உபயோகித்து வந்தாள். ஆனால் பாண்டிய மன்னனின் பிரதானியரில் ஒருவரான ரகுவீரனோ, நடனத்தைப் பெற்றே தீரவேண்டும் என்று பித்தம்கொண்டான். அவனுடைய நண்பன், நடனத்தை ரகுவீரன் தோட்டத்து நடனத்துக்காக வரவழைத்தான்.

கள்ளங்கபடம் ஏதுமில்லாத நடனா தோட்டத்துக்கு வந்தாள். அவளைக் கண்ட ரகுவீரன் ஓடிச்சென்று கட்டி அணைக்க முயன்றபோது, அவள் அவன் கன்னத்தில் வழங்கிய பெண்மைப் பரிசு இருக்கிறதே, சில நிமிடம் வரையிலும் அவனைத் தலைதூக்கச் செய்யவில்லை; அந்த நிமிஷமே நடனா ஓடி மறைந்தாள்.

"கண்ணுக்குக் காட்சிதான்; ஆனால் கருத்துக்கு மிரட்சியாகவன்றோ அமைந்தது. அடே! வலிய அணைத்துச் சுகம்பெறத் தெரியாத இந்த வாலிபப் பயலை உடனே விரட்டு; இவனது முரட்டுத்தனத்தை என்னால் சகிக்க முடியாது. நான் இனி வேறு வழி கண்டுபிடிக்கப் போகிறேன். என் தாய் வீடு போய், அங்கு நமது குலத்திலே ஒருவனை மணம் புரிவேன். எவனுமின்றிக் கிடப்போம் என்றாலோ, நான் சிறுமியாக இருந்தபோது மந்திரவாதி சொன்னானே, அது என்னை மிரட்டுகிறது. நான் இரண்டாவது கணவனைத் தேடிக் கொள்ளாவிட்டால் என் தலையிலே இடி விழுமாம். ஆகவே நான் எனக்கேற்றவனை மணப்பேன். இந்தப் பயலை விரட்டிவிடு. அவன் இங்கு இருந்தால் என் வேதனை வளரும்" என்று அக் கிழவி, காட்டரசனிடம், தன்னை வெறுத்து விரட்டிய வீரமணி விஷயமாகக் கூறினாள். அவள் விருப்பப்படி, வேறொருவன் அவளை மணஞ்செய்து கொண்டால், காடாளவேண்டும் என்று கிளம்புவான். அதனை அவன் அடையும் நிலை வந்துவிட்டால் ஆபத்தனக்கு வரும் என்று காட்டரசன் கருதினான். பொதுவாகவே, கிழவியை மணம் செய்து கொள்பவனுக்கு காட்டு மக்களிலே ஒரு கூட்டம் பக்கபலமாக சேரும்; போர் மூளும் என்பதே காட்டரசனின் அச்சம். ஆகவே அவன், "சில தினத்திலே அவனைச் சரிப்படுத்துகிறேன் — சினமுற வேண்டாம்" என்று கிழவியைத் தேற்றிவிட்டு, வீரமணியை இணங்கச் செய்யும் வழி யாது என்று யோசித்தான்.

அதேவிதமாகவே ரகுவீரன், நடனா தந்த அறையினால் திடுக்கிட்டுப்போய் தன் திட்டம் பலிக்காதது கண்டு திகைத்து வேறு என்னசெய்வது, நடனாவை எப்படிச் சரிப்படுத்துவது என்று யோசிக்கலானான்.

ரகுவீரன் பேசினான்:

"நமது திட்டம் சரியானதல்ல நண்பா! விருந்து வைபவத்திலே நடனமாட வரவேண்டும் என்று அவளை அழைத்திருக்கக் கூடாது. விஷயத்தை வெளிப்படையாகக் கூறியே அழைத்திருக்க வேண்டும். நடனமாட அழைத்து வந்து இங்கே சரசமாடவே, அவள் கோபித்து என்னை அடித்தாள்" என்று ரகுவீரன், தன் நண்பனிடம் கூடிறினான். "தவறு, திட்டத்திலே இல்லை. நீ பக்குவமாக நடந்து கொள்ளவில்லை" என்று நண்பன் குறை கூறினான்.