உள்ளடக்கத்துக்குச் செல்

கலிங்க ராணி/கலிங்க ராணி 40

விக்கிமூலம் இலிருந்து


40


"பாண்டிய மண்டலத்தைத் துறந்தவர், பல்வேறு நாடுகள் சென்று, கலிங்கத்திலே தங்கினார். அக்காலத்திலேதான், மலர்புரியை மயக்கிய ஆரிய முனிவனின் தந்திரத்தால், மலர்புரி ராணியின் மனோஹரனாக இருந்தார்; நடனா பிறந்தாள்! முதற் காதலைப் போலவே, மலர்புரி காதலும் சரிந்தது. பிறகு கலிங்கப்போரிலே மாண்டார். காதலுக்காக பட்டத்தைத் துறந்த உன் தந்தையால், மலர்புரி ராணியே, சோழ மண்டல ஆடலழகியாக, நீ இருந்தபோது, வனபோஜன விழாவிலே கண்டு, நீலமணியை எடுத்துக்கொண்டு வந்தாள். உன்னைக் காண்பதற்குப் பதிலாக நீலமணியையாகிலும் அன்றாடம் காண்போமே என்ற எண்ணம் போலும்! இவ்விதமாகத்தான் விஷயம் இருந்திருக்க வேண்டும் என்று யூகிக்கிறேன். ஆனால் ஒரு விஷயம் மட்டும் புலனாகவில்லை. அவரிடமிருந்த நீலமணி, உன்னிடம் எப்படி வந்தது என்பது தான் தெரியவில்லை. இந் நீலமணியை உனக்குத் தந்தது யார்?" என்று பாண்டிய மன்னன் நடனாவைக் கேட்டார்.

"இது என் வளர்ப்புத்தாய் தந்தது. அவள் அரண்மனைப் பாங்கி" என்று நடனா கூறினாள். பாண்டிய மன்னர் சிரித்துக்கொண்டே, தவமணியை இழந்து, மலர்புரி அரசியைப் பெறுமுன், இடையே, அந்தப் பாங்கிக்கு காதலனாக இருந்திருப்பார்! சரி, எப்படியோ ஒன்று, நீலமணி உனக்குத்தானே சொந்தம்! தந்தையின் சொத்து, மகளுக்குத் தானே!" என்று கூறினார் மன்னர். அப்போது அங்கே பூஞ்சிரிப்பு உதிர்ந்தது!

சின்னாட்களிலே மன்னர், மாறுவேடத்திலே, மலர்புரி சென்று, நடனராணியின் வரலாற்றினை அரசிக்கு எடுத்துரைத்தார். "என் வாழ்க்கை முழுவதும் விசாரமே குடிகொண்டிருந்தது. இந்தச் செய்தி எனக்கு, இனிப் புத்துயிர் தரும். அன்று சோழருடைய வனபோஜன விழாவுக்கு நான் மாறுவேடத்தில் சென்றபோது, நடனா வெளியிலிருந்து வரவழைக்கப்பட்டாள் என்றும், சோழ மண்டலத்திலே நிரந்தரமாகத் தங்குபவள் அல்லளென்றும் அப்போது ஆரியன் கூறினான். அதனாலேயே நான், நடனாவை மீண்டும் காண முடியாமற்போய்விட்டது.

நடனாவின் காதலனை நான் கொடுமைக்கு ஆளாக்கினேன். என் செய்வது? ஆரியத்திடம் சிக்கிய நான் அறிவிழந்தேன். மன்னரே! மாறுவேடத்துடன் இங்கு வந்து, என் வாழ்வு துலங்கும் வாசகம் உரைத்தீர். இனி ஒரு காரியம் உம்மால் ஆக வேண்டும். எப்படியும், நடனாவும் வீரமணியும் மலர்புரியை ஆள வழி செய்ய வேண்டும். ஆனால் நடனா, என் விபசாரத்தில் பூத்தமலர் என்பது மட்டும் தெரியக்கூடாது. உலகம் என்னை நிந்தனை செய்யுமே என்பதல்ல, என் கவலை; நடனாவுக்குப் பழிச்சொல் பிறக்குமே என்றே நான் கவலை கொள்கிறேன்! அவளை—என் மகளை—அருகே அழைத்து, அணைத்து, முத்தமிட்டு வாழ, என் மனம் தூண்டுகிறது; ஆனால் மானம் குறுக்கே நின்று தடுக்கிறது.

"மலர்புரி மக்களே! இதோ முழுமதிபோல் முகமும். பூங்கொடிபோல் உடலும், பொன்குணமும் கொண்ட என் மகளைக் காணீர்! அவளுடைய கணவனைப் பாரீர்! எதிரியைக் கதிகலங்கச் செய்யும் தோள் வலியுடையான், என் மகனின் மனக் கோயிலின் தேவன். என் மருமகன், வீரமணியைப் பாரீர்! இனி இவர்களே உங்களின் அரசன்—அரசி" என்று மக்களிடய கூறிக் குதூகலிக்க என் உள்ளம் ஆர்வத்தால் துடிக்கிறது; ஆனால் நடனா என் விதவைக் கோலத்து விருந்தின் விளைவு என்பது வெளிப்படுமே என்ற வேதனை பயமுறுத்துகிறது. நான் என் செய்வேன்? புதையலின் மீது புலி படுத்துக் கிடக்கிறது; வீணையின் நரம்பைச் சுற்றிக் கொண்டு விஷப்பாம்பு இருக்கிறது. இதற்கென்ன செய்வேன்? பேதமையினால் கெட்ட எனக்கு, என் சொந்த மகளிடம் ஊரறியப் பேசவும் முடியவில்லையே! என் கரத்தினால் மணிமுடியை அவளுக்குச் சூட்டி மகிழக் கருத்து எழுகிறதே; கரம் அதற்குப் பயன்பட முடியாத நிலையிலன்றோ இருக்கிறது! 'மலர்புரி ராணி விபசாரியாக இருந்தாளாம் என்ற சொல் மட்டுமா?' மலர்புரி ராணியின் நடனா, விபசாரியின் மகள்' என்று வீணர்கள் உரைப்பரே! வேற்று நாட்டவர் இழித்துப் பழித்துப் பேசுவரே! அவளுக்கு உரிமையுள்ள இந்த மண்டலத்தை அவள் அடைய முடியாதபடி, என் நிலைமையன்றோ குறுக்கிடுகின்றது" என்று மலர்புரி அரசி சோகத்திலாழ்ந்தாள்.

"தந்தையின் நிலையேதான் போலும் மகளுக்கும்! அவர் ஆளவேண்டிய பாண்டியநாடு, அப்பேறு பெற முடியாது போயிற்றல்லவா?" என்று மன்னர் பெருமூச்செறிந்தார். மலர்புரி அரசி, "நான் மறந்தே விட்டேன். அவர் பாண்டிய குமாரர் என்பதைத் தாங்கள் கூறினீர்களே! என் மகளின் நினைப்பே அந்த அதிசயத்தைச் சாதாரணமானதாக்கிவிட்டது. அவர் ஒரு மறத் தமிழர் என்றுதான் நான் எண்ணியிருந்தேன். இப்போது உமது மொழியே எனக்கு அவர் அரசகுடும்பத்தில் உதித்தவர் என்பதை உணர்த்திற்று" என்றாள்.

"அதுசரி! தாங்கள்தான், அவரை "தேவன்" என்று கருதினீரே, மனிதராகவே எண்ணவில்லையே!" என்றார் மன்னர், வேடிக்கையாக. "உண்மைதான்! எனக்கு அவர் தேவன். அதில் சந்தேகமில்லை." என்று அரசியார் கூறிவிட்டு, "முக்கியமான விஷயத்திற்கு என்ன பதில் கூறுகிறீர்? நடனா, மலர்புரியை ஆள வேண்டும்; அவள் என் மகள் என்பதும் தெரியக் கூடாது! இந்தச் சிக்கலைத் தீர்த்து வைக்க வேண்டுமே!" என்று கேட்டிட, மன்னன் சிரித்துக் கொண்டே, "தாங்கள் கூறிக் கொண்டிருக்கும்போதே நான் ஒரு வழி கண்டு பிடித்துவிட்டேன்" என்று சொன்னான். "மார்க்கமிருக்கிறதா, மன்னரே!" என்று மலர்புரி அரசி ஆவலுடன் கேட்டாள்.

"விதவைக் கோலத்திலே பெற்ற காதல் விருந்தின் விளைவான நடனா நாடாள, வழி இருக்கிறது; அதே சமயத்தில், ஊர் நிபந்தனை வராதபடி தடுக்கவும் வழி இருக்கிறது" என்று பாண்டிய மன்னர் கூறிடக் கேட்ட மலர்புரி அரசி மகிழ்ந்து, "என்ன வழி? எனக்குக் கூறுங்கள் விரைவாக" என்று ஆர்வத்துடன் அவசரப் படுத்தினாள்.