கலிங்க ராணி/கலிங்க ராணி 41
அரசியாரே! என் திட்டம் சுலபமானதுதான். ஆனால் அதற்குச் சோழனுடைய ஆதரவு வேண்டும்" என்று பாண்டியன் கூறிடக் கேட்ட மலர்புரி அரசி, "சோழ மன்னருக்கு உமது திட்டம் பிடிக்காமல் போனால் என் செய்வேன்" என்று கேட்டாள் ஏக்கத்துடன்.
"அரசியாரே, அஞ்சாதீர்! மலர்புரிக்கு மாறுவேடத்தில் வந்தது போலவே, சோழ மண்டலம் செல்கிறேன். வரலாறு முழுவதையும் மன்னருக்கு உரைப்பேன். வீரமணியின் மீது சோழ மன்னர் கொண்டுள்ள கொதிப்பை மாற்றுவேன். உண்மை தெரிந்த பிறகு அவரே வீரமணியை வரவேற்பார். தவறை வேண்டுமென்றே செய்யும் மன்னர்களும் தமிழ்த் தரணியில் உண்டா? என் திட்டத்தையும் அது எந்நோக்குடன் செய்யப்படுகிறது என்பதையும் சோழருக்குக் கூறுவேன். அவரும் இசைவர் என்றே நம்புகிறேன்" என்று பாண்டியன் கூறினார். அரசியார் ஒருவாறு மனந்தேறினாள். ஆனால் மறுகணமே, திகிலுடன், "அது சரி, பாண்டிய பூபதி! தங்கள் திட்டம் என்ன? அதைக் கூறவில்லையே" என்று கேட்டாள். பாண்டியன் புன்னகை பூத்த முகத்துடனே, "மலர்புரிமீது, வீரமணி படை எடுத்து வருவான். போர் மூளாமுன்னம் தூதுவிடுவான். மலர்புரி அரசி, முடிதுறக்க இசைவார்; மக்கள் வீரமணியை மன்னராக தேர்ந்தெடுப்பர். ஆரியத்துக்கு அடி பணிந்ததற்குக் கழுவாய்த் தேடிட, அரசி, தன் பதவியைத் துறந்தது முறையே என்று சோழனும், பாண்டியனும் கூறுவர். இதுதான் என் திட்டம்" என்றான்.
"போர் மூண்டுவிட்டால், வீணாகப் பலர் மடிய வேண்டுமே" என்று கவலைப்பட்ட அரசியாருக்குப் பாண்டியன் ஆறுதல் கூறினான்.
"அந்தப் பயமே வேண்டாம்" என்று கூறித் தேற்றினான். மலர்புரி அரசியிடம் விடை பெற்றுக் கொண்டு சோழநாடு சென்று பாண்டியன் திரும்புமுன்னம், மலர்புரி அரசி மந்திரிப் பிரதானியரிடமும், ஊர்ப் பெரியவர்களிடமும், "ஆரியத்துக்கு அடிமைப்பட்டுக் கிடந்த நான், இனியும் நாடாளுவது முறையாகாது. வேறு தகுதியானவரை மன்னராக்கிக் கொள்ளுங்கள்" என்று கூறி வைத்தாள். ஆனால் ஒருவராவது, மலர்புரி அரசியின் மீது மனத்தாங்கல் கொள்ளவில்லை. 'ஆரிய நச்சரவுதான் அழிந்தொழிந்ததே! இனியும் ஏன் அரசியார் அஞ்ச வேண்டும்' என்றே கூறினர்.
✽✽✽
பாண்டியன் சோழனிடம் மிகமிகச் சாதுர்யமாக வீரமணி நடனராணி வரலாற்றினைக் கூறினான். சோழன், தமிழ் வீரனாம் வீரமணி துரோகியல்ல; துயருற்ற ஒருவருக்கு துணை நின்றதன்றி வேறு தீங்கிழைக்கவில்லை என்பது தெரிந்து, வீணாக வீரமணியை நாடு கடத்திவிட்டோமே என்று வருந்தி, நெடுநாட்கள் பலவகையான துன்பங்களை வீரமணி அனுபவித்ததும், கொடியிடைக் கோமளம் நடனம், பல பாடு பட்டதும், தனது துலாக்கோல் சாய்ந்ததால்தான் என்பதை உணர்ந்து வருந்தி, வீரமணியிடம் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்ள விரும்பினார். அன்றே அரச சபையில், வீரமணி மீது முன்னர் படிக்கப்பட்ட குற்றப் பத்திரிகையை ரத்து செய்ததுடன், சோழன், பாண்டிய மன்னரும் மலர்புரி ராணியும் தயாரித்த திட்டத்தைத் தகர்க்கக் கூடியதான வேறோர் அறிக்கையும் விடுத்தார். மாறு வேடத்துடன் அரச சபையிலே இருந்த பாண்டியன் திடுக்கிட்டுப் போனார். ஆனால் முகமோ புன்னகை மேடையாயிற்று.
"தமிழர்களே! நாம் கலிங்கத்தின் மீது போர் தொடுத்து, அந்நாட்டரண்களைப் பிளந்தெறிந்து மன்னனை முறியடித்து, அந்த மண்டலத்தை நமது ஆட்சியின் மேற்பார்வைக்குட்படுத்தினோம். கலிங்க மன்னன், வாரிசு இன்றி இறந்து போனான். கலிங்கத்திலே நாம் பெற்ற வெற்றிக்கு முக்கியத் துணையாக இருந்த நமது மறத்தமிழன் வீரமணி—அதாவது, மாசிலாமணி என்பது விளங்கிவிட்டதால், இன்று நாம் நமது வளர்ப்புப் பெண் நடனராணியை வீரமணிக்குத் திருமணம் முடிக்கவும், நடனராணிக்கு நமது நன்கொடையாக கலிங்கத்தைத் தரவும் தீர்மானித்துள்ளோம். வீரமணியும் நடனராணியும் இப்போது பாண்டிய நாட்டிலே உள்ளனர். அவர்கள் ஒரு திங்களில் இங்கு வருவர். நமது தலைநகரிலே திருமணம் நடைபெறும். மறுகணம் நடனராணி, 'கலிங்கராணி' என்ற பிரகடனம் வெளியிடப்படும். அந்தச் சந்தோஷச் செய்தி கேட்டுத் தமிழகம் மகிழும் என்பதில் ஐயமில்லை. கலிங்கராணி வாழ்க!" என்று மன்னர் அறிக்கை படித்து முடித்தார்.
அப்போது எழுந்த கரகோஷமும் ஆனந்த ஆரவாரமும் அடங்கிய பிறகு, பாண்டியன் சோழ மன்னரை தனியே அழைத்து "மலர்புரி அரசியின் மனக்கோட்டையை இடித்து விட்டீரே" என்றான். "இடிக்கவில்லை; மலர்புரிக்குக் கலிங்கம் வெளி அரணாக இருக்கும். நடனாவும் வீரமணியும் கலிங்கத்தை ஆள்வர். சில காலமானதும், மலர்புரி பாதுகாப்புக்காகக் கலிங்கத்துடன் இணைக்கப்பட்டு, இரு நாடுகளும் நடனா—வீரக் கோட்டமாகத் திகழும். காலம் இதைச் செய்யட்டும். தாயையும் மகளையும் ஒன்று சேர்க்க, தலையுருட்டும் சண்டை வேண்டாமென்று எண்ணியே நான், உமது திட்டத்துக்குப் பதிலாக வேறு திட்டமிட்டேன். மேலும் பாண்டியரே! ஆரியன் ஆதிக்கம் பரவாது இருக்கவேண்டுமானால், நாம், தனித்தனி அரசுகளாக இருப்பதைவிட, ஓர் கூட்டாட்சி அமைப்பதே நலன் என்று நான் கருதுகிறேன். கலிங்கமும் மலர்புரியும் மட்டுமல்ல; சேர சோழ பாண்டிய நாடுகளும், எல்லைப்புறமாக உள்ள வடுகர் நாடும் விந்தியம் முதல் குமரிவரை, திராவிடம். இங்கு ஆரியன் புகாதபடி பாதுகாக்க, இங்குள்ளவர்கள், ஓர் கூட்டாட்சி அமைக்க வேண்டும். மறத்தமிழரின் தோல்வலி குன்றவில்லை. ஆனால் மனவலி குன்றுகிறது. அதைக் காண எனக்கும் கவலையாக இருக்கிறது. ஓர் பலமான கூட்டாட்சி அமைத்துவிட்டால், ஆரியத்தைத் தடுக்க வசதியாக இருக்கும். இதுபற்றிப் பிறகு யோசிப்போம். இனி பாண்டிய மண்டலத்திலே உள்ள, உனது அண்ணன் மகள், மலர்புரி அரசியின் குமாரி, என் வளர்ப்புப்பெண், நடனாவையும் அவளுடைய நாயகனையும் வரவழைப்போம்; மலர்புரிக்கும் இப்போதே ஓலை விடுவோம்" என்று புன்னகைத்தார்.
✽✽✽
மலர்புரி திரும்பிய பாண்டியன், சோழன் கூறிய மொழி கேட்ட அரசிக்கு ஒரு விதத்திலே சந்தோஷமும் மற்றோர் விதத்திலே சோகமும் இருந்தது. "என் செய்வது, என் செயல் அப்படி இருந்தது" என்று கூறினாள்.
மறுதிங்களிலே, தமிழக மன்னர்கள் முன்னிலையில், நடனா—வீரமணி திருமணம் விமரிசையாக நிறைவேறியது. நெடுநாட்களுக்குப் பிறகு சோழநாடு வந்த வீரமணிக்குச் சொல்லொணா சந்தோஷம்! நடனாவுக்கு அரண்மனையிலே அமோகமான வரவேற்பு. சோழனின் குமாரி, நடனாவைக் கண்டு பூரித்தாள்.
திருமணத்தைவிட அதிக விமரிசையாக நடனாவின் முடிசூட்டுவிழா வைபவம் இருந்தது. போரால் இளைத்துப் போன கலிங்கம், இனி வளம் பெறும் என்று பலரும் வாழ்த்தினர். முடிசூட்டு விழா முடிந்தது.இசை விருந்து நின்ற பிறகு இரவு நெடுநேரத்திற்குப் பிறகு, கலிங்கராணியும், கலிங்கத்தை வென்ற வீரமணியும், அரண்மனை நந்தவனத்திலே ஆடிப்பாடிக் கொண்டிருக்கையிலே,
"உனக்கென்னம்மா உல்லாசத்துக்குக் குறை! பாண்டிய நாடு தகப்பன் தரணி—மலர்புரி, தாய் நாடு—சோழ நாடு வளர்ப்புத் தந்தையூர்—கலிங்கமோ, உனக்கே சொந்தம்" என்று வீரமணி கேலி பேசினான்.
"போ, கண்ணாளா! வீரம் உம்முடையது; விருது எனக்குக் கிடைத்தது. ஆனால் அன்று, நான் முதன் முதலாக என் தாயை, மலர்புரி அரசியைச் சந்தித்தேனே, நமது திருமணத்திற்கு முன்தினம்! அன்று நாங்கள் இருவரும் அழுத கண்களின் சிவப்பு என்றுமே மாறாது. உலகுக்கு நாங்கள் வேறு வேறுதானே! இதுபோல எங்கு உண்டு? தாயை மகள் அறியாமல் எத்தனை காலம் தவித்தாள்; அறிந்த பிறகும் பிரிந்தே வாழ்ந்தாள் என்று உலகம் கூறாதோ? என்ன வாழ்வு இது! அன்று என் அன்னை என்னை அணைத்து உச்சிமோந்து முத்தமிட்டபோது, எனக்கு இரு கண்களிலும் நீரருவி கிளம்பிற்று. இன்றும் அதனை எண்ணினால் என்னால் துக்கத்தை அடக்க முடியவில்லை" என்று நடனா சோகத்துடன் கூறினாள்.
உடனே, வீரமணி கொஞ்சினான் :
"கலிங்கராணியாரே! சோகத்தைப் போக்க மருந்துண்டு தெரியுமோ" என்று வீரமணி வேடிக்கையாகக் கேட்டான். அப்படிக் கேட்டுவிட்டு, 'ஊம். . . . . .இப்போது கண்களை மூடிக்கொள்' என்று கெஞ்சினான். கலிங்கராணியின் கண்களும் மூடின. அப்போது துடித்துக்கொண்டிருந்த வீரமணியின் இதழ் நடனாவின் கனியிதழைக் கவ்வியது!
முற்றிற்று