கலித்தொகை/3.மருதக்கலி/66-70
பாடல் 66 (வீங்கு நீர் அவிழ் நீலம்)
[தொகு]வீங்கு நீர் அவிழ் நீலம் பகர்பவர் வயல் கொண்ட
ஞாங்கர் மலர் சூழ்தந்து, ஊர் புகுந்த வரி வண்டு,
ஓங்கு உயர் எழில் யானைக் கனை கடாம் கமழ் நாற்றம்
ஆங்கு அவை விருந்து ஆற்றப், பகல் அல்கிக், கங்குலான்,
வீங்கு இறை வடுக் கொள, வீழுநர்ப் புணர்ந்தவர்
தேம் கமழ் கதுப்பின் உள் அரும்பு அவிழ் நறு முல்லைப்
பாய்ந்து ஊதிப் படர் தீர்ந்து, பண்டு தாம் மரீஇய
பூம் பொய்கை மறந்து உள்ளாப் புனல் அணி நல் ஊர!
அணை மென் தோள் யாம் வாட, அமர் துணை புணர்ந்து நீ,
'மண மனையாய்!' என வந்த மல்லலின் மாண்பு அன்றோ -
பொதுக் கொண்ட கவ்வையுள் பூ அணிப் பொலிந்த நின்
வதுவை அம் கமழ் நாற்றம் வைகறைப் பெற்றதை;
கனலும் நோய்த் தலையும், 'நீ கனம் குழை அவரொடு
புனல் உளாய்' என வந்த பூசலின் பெரிது அன்றோ -
தார் கொண்டாள் தலைக் கோதை தடுமாறிப் பூண்ட நின்
ஈர் அணி சிதையாது, எம் இல் வந்து நின்றதை;
தணந்ததன் தலையும், 'நீ தளர் இயல் அவரொடு
துணங்கையாய்' என வந்த கவ்வையின் கடப்பு அன்றோ -
ஒளி பூத்த நுதலாரோடு ஓர் அணிப் பொலிந்த நின்
களி தட்ப வந்த இக் கவின் காண இயைந்ததை;
என ஆங்கு,
அளி பெற்றேம், எம்மை நீ அருளினை; விளியாது
வேட்டோர் திறத்து விரும்பிய நின் பாகனும்
'நீட்டித்தாய்' என்று, கடாஅம், கடும் திண் தேர்,
பூட்டு விடாஅ நிறுத்து.
பாடல் 67 (கார் முற்றி)
[தொகு]கார் முற்றி, இணர் ஊழ்த்த கமழ் தோட்ட மலர் வேய்ந்து,
சீர் முற்றிப், புலவர் வாய்ச் சிறப்பு எய்தி, இரு நிலம்
தார் முற்றியது போலத், தகை பூத்த வையை தன்
நீர் முற்றி, மதில் பொரூஉம் பகை அல்லால், நேராதார்
போர் முற்று ஒன்று அறியாத புரிசை சூழ் புனல் ஊரன் -
நலம் தகை, எழில் உண் கண் நல்லார் தம் கோதையால்
அலைத்த, புண், வடுக் காட்டி, அன்பு இன்றி வரின் - எல்லா! -
புலப்பேன் யான் என்பேன்மன்? அந்நிலையே, அவன் காணின்,
கலப்பேன் என்னும், இக் கையறு நெஞ்சே;
கோடு எழில் அகல் அல்குல் கொடி அன்னார் முலை மூழ்கப்
பாடு அழி சாந்தினன், பண்பு இன்றி வரின் - எல்லா! -
ஊடுவேன் என்பேன்மன்? அந்நிலையே அவன் காணின்
கூடுவேன் என்னும், இக் கொள்கை இல் நெஞ்சே;
இனிப் புணர்ந்த எழில் நல்லார் இலங்கு எயிறு உறாஅலின்,
நனிச் சிவந்த வடுக் காட்டி, நாண் இன்றி வரின்- எல்லா! -
துனிப்பேன் யான் என்பேன்மன்? அந்நிலையே, அவன் காணின்,
தனித்தே தாழும், இத் தனி இல் நெஞ்சே;
என ஆங்கு,
பிறை புரை ஏர் நுதால்! தாம் எண்ணியவை எல்லாம்
துறைபோதல் ஒல்லுமோ - தூ ஆகாது ஆங்கே
அறைபோகு நெஞ்சு உடையார்க்கு?
பாடல் 68(பொது மொழி பிறர்க்கு)
[தொகு]பொது மொழி பிறர்க்கு இன்றி முழுது ஆளும் செல்வர்க்கு
மதி மொழி இடல் மாலை வினைவர் போல், வல்லவர்
செது மொழி சீத்த செவி செறு ஆக,
முது மொழி நீராப், புலன் நா உழவர்
புது மொழி கூட்டுண்ணும், புரிசை சூழ், புனல் ஊர!
'ஊரன்மன் உரன் அல்லன், நமக்கு' என்ன, உடன் வாளாது,
ஓர் ஊர் தொக்கு இருந்த நின் பெண்டிருள் நேர் ஆகிக்,
களையா நின் குறி வந்து, எம் கதவம் சேர்ந்து அசைத்த கை
வளையின் வாய்விடல் மாலை மகளிரை நோவேமோ -
'கேள் அலன், நமக்கு அவன், குறுகன்மின்' என, மற்று எம்
தோளொடு பகைபட்டு நினை வாடு நெஞ்சத்தேம்?
'ஊடியார் நலம் தேம்ப, ஒடியெறிந்து, அவர் வயின்
மால் தீர்க்கும் அவன் மார்பு' என்று எழுந்த சொல் நோவேமோ -
முகை வாய்த்த முலை பாயக் குழைந்த நின் தார் எள்ள,
வகை வரிச் செப்பினுள் வைகிய கோதையேம்?
சேரியால் சென்று, நீ சேர்ந்த இல் வினாயினன்,
தேரொடு திரிதரும் பாகனைப் பழிப்பேமோ -
ஒலி கொண்ட சும்மையான் மண மனை குறித்து, எம் இல்
'பொலிக' எனப் புகுந்த நின் புலையனைக் கண்ட யாம்?
என ஆங்கு;
நனவினான் வேறு ஆகும் வேளா முயக்கம் -
மனை வரின், பெற்று உவந்து, மற்று எம் தோள் வாட,
'இனையர்' என உணர்ந்தார் என்று ஏக்கற்று, ஆங்குக்
கனவினான் எய்திய செல்வத்து அனையதே -
ஐய! எமக்கு நின் மார்பு.
பாடல் 69 (பொது அவிழ் பனி)
[தொகு]போது அவிழ் பனிப் பொய்கைப், புதுவது தளைவிட்ட
தாது சூழ் தாமரைத் தனி மலர் புறம் சேர்பு -
காதல் கொள் வதுவை நாள், கலிங்கத்துள் ஒடுங்கிய
மாதர் கொள் மான் நோக்கின் மடந்தை தன் துணை ஆக,
ஓது உடை அந்தணன் எரி வலம் செய்வான் போல்,
ஆய் தூவி அன்னம் தன் அணி நடைப் பெடையொடு -
மேதகத் திரிதரூஉம் மிகு புனல் நல் ஊர!
தெள் அரிச் சிலம்பு ஆர்ப்பத், தெருவின் கண் தாக்கி, நின்
உள்ளம் கொண்டு, ஒழித்தாளைக் குறை கூறிக் கொள நின்றாய்;
துணிந்தது பிறிது ஆகத், 'துணிவு இலள் இவள்' எனப்,
பணிந்தாய் போல் வந்து, ஈண்டுப், பயன் இல மொழிவாயோ?
பட்டுழி அறியாது, பாகனைத் தேரொடும்
விட்டு, அவள் வரல் நோக்கி, விருந்து ஏற்றுக்கொள நின்றாய்;
நெஞ்சத்த பிற ஆக, 'நிறை இலள் இவள்' என,
வஞ்சத்தான் வந்து ஈங்கு வலி அலைத்து ஈவாயோ?
இணர் ததை தண் காவின், இயன்ற நின் குறி வந்தாள்
புணர்வினில் புகன்று, ஆங்கே புனல் ஆடப் பண்ணியாய்;
தருக்கிய பிற ஆகத், 'தன் இலள் இவள்' எனச்
செருக்கினால் வந்து, ஈங்குச் சொல் உகுத்து ஈவாயோ?
என ஆங்கு,
தருக்கேம் பெரும! நின் நல்கல் விருப்புற்றுத்
தாழ்ந்தாய் போல் வந்து, தகவு இல செய்யாது,
சூழ்ந்தவை செய்து, மற்று எம்மையும் உள்ளுவாய் -
வீழ்ந்தார் விருப்பு அற்றக் கால்.
பாடல் 70(மணி நிற)
[தொகு]மணி நிற மலர்ப் பொய்கை, மகிழ்ந்து ஆடும் அன்னம் தன்
அணி மிகு சேவலை அகல் அடை மறைத்தெனக்
கதுமெனக், காணாது, கலங்கி, அம் மடப் பெடை
மதி நிழல் நீர் உள் கண்டு, அது என உவந்து ஓடித்,
துன்னத் தன் எதிர் வரூஉம் துணை கண்டு, மிக நாணிப்,
பல் மலர் இடை புகூஉம் பழனம் சேர் ஊ! கேள்;
நலம் நீப்பத் துறந்து, எம்மை நல்காய் நீ விடுதலின்,
பல நாளும் படாத கண், பாயல் கொண்டு, இயைபவால்;
துணை மலர்க் கோதையார் வைகலும் பாராட்ட,
மண மனைத் ததும்பும் நின் மண முழ வந்து எடுப்புமே!
அகல நீ துறத்தலின், அழுது ஓவா உண் கண், எம்
புதல்வனை மெய் தீண்டப், பொருந்துதல் இயைபவால்;
நினக்கு ஒத்த நல்லாரை நெடு நகர்த் தந்து, நின்
தமர் பாடும் துணங்கையுள் அரவம் வந்து எடுப்புமே!
வாராய் நீ துறத்தலின், வருந்திய எமக்கு, ஆங்கே
நீர் இதழ் புலராக் கண் இமை கூம்ப இயைபவால்;
நேர் இழை நல்லாரை நெடு நகர்த் தந்து, நின்
தேர் பூண்ட நெடு நல் மான் தெள் மணி வந்து எடுப்புமே!
என ஆங்கு,
மெல்லியான் செவி முதல், மேல்வந்தான் காலை போல்,
எல்லாம் துயிலோ எடுப்புக; நின் பெண்டிர்,
இல்லின் எழீஇய யாழ் தழீஇ கல்லா வாய்ப்
பாணன் புகுதராக் கால்!