கலித்தொகை/3.மருதக்கலி/71-80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

பாடல் 71 (விரி கதிர் மண்டிலம்)[தொகு]

விரி கதிர் மண்டிலம் வியல் விசும்பு ஊர்தரப்
புரி தலை தளை அவிழ்ந்த பூ அங்கண் புணர்ந்து ஆடி,
வரி வண்டு வாய் சூழும் வளம் கெழு பொய்கையுள் -
துனி சிறந்து இழிதரும் கண்ணின் நீர் அறல் வார,
இனிது அமர் காதலன் இறைஞ்சி தன் அடி சேர்பு,
நனி விரைந்து அளித்தலின், நகுபவள் முகம் போலப் -
பனி ஒரு திறம் வாரப், பாசடைத் தாமரைத்
தனி மலர் தளை விடூஉம் தண் துறை நல் ஊர!

'ஒரு நீ, பிறர் இல்லை, அவன் பெண்டிர்' என உரைத்துத்,
தேரொடும் தேற்றிய பாகன் வந்தீயான் கொல் -
ஓர் இல் தான் கொணர்ந்து உய்த்தார் புலவியுள் பொறித்த புண்
பாரித்துப் புணர்ந்த நின் பரத்தைமை காணிய?

'மடுத்து அவன் புகு வழி மறையேன்' என்று, யாழொடும்
எடுத்துச் சூள் பல உற்ற பாணன் வந்தீயான் கொல் -
அடுத்துத் தன் பொய் உண்டார்ப் புணர்ந்த நின் எருத்தின் கண்
எடுத்துக் கொள்வது போலும் தொடி வடு காணிய?

'தணந்தனை' எனக் கேட்டுத், தவறு ஓராது, எமக்கு நின்
குணங்களைப் பாராட்டும் தோழன் வந்தீயான் கொல் -
கணம் குழை நல்லவர் கதுப்பு அறல் அணைத் துஞ்சி,
அணங்கு போல் கமழும் நின் அலர் மார்பு காணிய?

என்று நின்,
தீரா முயக்கம் பெறுநர்ப் புலப்பவர்
யார்? - நீ வரு நாள் போல் அமைகுவம் யாம்; புக்கீமோ! -
மாரிக்கு அவாவுற்றுப் பீள் வாடும் நெல்லிற்கு, ஆங்கு
ஆராத் துவலை அளித்தது போலும், நீ
ஓர் யாட்டு ஒரு கால் வரவு.

பாடல் 72(இணைபட நிவந்த)[தொகு]

இணைபட நிவந்த நீல மென் சேக்கையுள்,
துணை புணர் அன்னத்தின் தூவி மெல் அணை அசைஇச்,
சேடு இயல் வள்ளத்துப் பெய்த பால் சில காட்டி,
ஊடும் மெல் சிறு கிளி உணர்ப்பவள் முகம் போலப் ,
புது நீர புதல் ஒற்றப், புணர் திரைப் பிதிர் மல்க,
மதி நோக்கி அலர் வீத்த ஆம்பல் வால் மலர் நண்ணிக்,
கடி கயத் தாமரைக் கமழ் முகை, கரை மாவின்
வடி தீண்ட, வாய் விடூஉம் வயல் அணி நல் ஊர!

கண்ணி, நீ கடி கொண்டார்க் கனைதொறும், யாம் அழப்,
பண்ணினால் களிப்பிக்கும் பாணன் காட்டு என்றானோ -
'பேணான்' என்று உடன்றவர் உகிர் செய்த வடுவினான்,
மேல் நாள் நின் தோள் சேர்ந்தார் நகை சேர்ந்த இதழினை?

நாடி நின் தூது ஆடித், துறைச் செல்லாள், ஊரவர்
ஆடை கொண்டு, ஒலிக்கும், நின் புலைத்தி காட்டு என்றாளோ -
கூடியார் புனல் ஆடப் புணை ஆய மார்பினில்,
ஊடியார் எறிதர ஒளி விட்ட அரக்கினை?

வெறிது நின் புகழ்களை வேண்டார் இல் எடுத்து ஏத்தும்
அறிவு உடை அந்தணன் அவளைக் காட்டு என்றானோ -
களி பட்டார் கமழ் கோதை கயம்பட்ட உருவின் மேல்
குறி பெற்றார் குரல் கூந்தல் கோடு உளர்ந்த துகளினை?

என ஆங்கு,
செறிவுற்றேம்; எம்மை நீ செறிய, அறிவுற்று,
அழிந்து உகு நெஞ்சத்தேம், அல்லல் உழப்பக்
கழிந்தவை உள்ளாது, கண்ட இடத்தே,
அழிந்து நின் பேணிக் கொளலின் இழிந்ததோ -
இந் நோய் உழத்தல் எமக்கு?

பாடல் 73 (அகல் துறை அணிபெற)[தொகு]

அகல் துறை அணிபெறப், புதலொடு தாழ்ந்த
பகன்றைப் பூ உற நீண்ட பாசடைத் தாமரை,
கண் பொர ஒளி விட்ட வெள்ளிய வள்ளத்தால்
தண் கமழ் நறும் தேறல் உண்பவள் முகம் போல,
வண் பிணி தளை விடூஉம் வயல் அணி நல் ஊர!

'நோதக்காய்' என நின்னை நொந்தீவார் இல் வழித்,
'தீது இலேன் யான்' எனத் தேற்றிய வருதிமன் -
ஞெகிழ் தொடி இளையவர் இடை முலைத் தாது சோர்ந்து,
இதழ் வனப்பு இழந்த நின் கண்ணி வந்து உரையாக்கால்?

கனற்றி நீ செய்வது கடிந்தீவார் இல்வழி,
'மனத்தில் தீது இலன்' என மயக்கிய வருதிமன் -
அலமரல் உண் கண்ணார் ஆய் கோதை குழைத்த நின்
மலர் மார்பின் மறுப்பட்ட சாந்தம் வந்து உரையாக்கால்?

என்னை நீ செய்யினும், உரைத்தீவார் இல் வழி,
முன் அடிப் பணிந்து, எம்மை உணர்த்திய வருதிமன் -
நிரை தொடி நல்லவர் துணங்கையுள் தலைக் கொள்ளக்,
கரை இடைக் கிழிந்த நின் காழகம் வந்து உரையாக்கால்?

என ஆங்கு,
மண்டு நீர் ஆரா மலி கடல் போலும் நின்
தண்டாப் பரத்தை தலைக் கொள்ள, நாளும்
புலத் தகைப் பெண்டிரைத் தேற்ற; மற்று யாம் எனின்,
தோலாமோ நின் பொய் மருண்டு?

பாடல் 74 (பொய்கைப் பூ புதிது)[தொகு]

பொய்கைப் பூ புதிது உண்ட வரி வண்டு கழி பூத்த
நெய்தல் தாது அமர்ந்து ஆடிப், பாசடைச் சேப்பினுள்
செய்து இயற்றியது போல வயல் பூத்த தாமரை,
மை தபு, கிளர் கொட்டை மாண் பதி படர்தரூஉம்,
கொய்குழை அகை காஞ்சித் துறை அணி நல் ஊர!

'அன்பு இலன், அறன் இலன், எனப்படான்' என ஏத்தி,
நின் புகழ் பல பாடும் பாணனும் ஏமுற்றான்;
நஞ்சு உயிர் செகுத்தலும் அறிந்து உண்டாங்கு, அளி இன்மை
கண்டுநின் மொழி தேறும் பெண்டிரும் ஏமுற்றார்.

முன்பகல் தலைக்கூடி, நன்பகல் அவள் நீத்துப்,
பின்பகல் பிறர்த் தேரும் நெஞ்சமும் ஏமுற்றாய்;

என ஆங்கு;
'கிண்கிணி மணித் தாரொடு ஒலித்து ஆர்ப்ப, ஒண் தொடிப்
பேர் அமர்க் கண்ணார்க்கும் படு வலை இது' என,
ஊரவர் உடன் நகத் திரிதரும்
தேர் ஏமுற்றன்று, நின்னினும் பெரிதே!

பாடல் 75 (நீர் ஆர் செறுவில்)[தொகு]

நீர் ஆர் செறுவில் நெய்தலொடு நீடிய
நேர் இதழ் ஆம்பல் நிரை இதழ் கொண்மார்,
சீர் ஆர் சே இழை ஒலிப்ப, ஓடும்
ஓரை மகளிர் ஓதை வெரீஇ எழுந்து,
ஆரல் ஆர்கை அம் சிறைத் தொழுதி
உயர்ந்த பொங்கர் உயர் மரம் ஏறி,
அமர்க்கண் மகளிர் அலப்பிய அந் நோய் ,
தமர்க்கு உரைப்பன போல், பல் குரல் பயிற்றும்,
உயர்ந்த போரின் ஒலி நல் ஊரன்
புதுவோர் புணர்தல் வெய்யன் ஆயின்,
வதுவை நாளால் வைகலும், அ·து யான்
நோவேன், தோழி! நோவாய் நீ, என
என் பார்த்து உறுவோய்! கேள், இனித் தெற்றென;

'எல்லினை வருதி, எவன் குறித்தனை?' எனச்
சொல்லாதிருப்பேன் ஆயின், ஒல்லென,
விரி உளைக் கலி மான் தேரொடு வந்த
விருந்து எதிர்கோடலின், மறப்பல், என்றும்;

'வாடிய பூவொடு வாரல், எம்மனை' என
ஊடி இருப்பேன் ஆயின், நீடாது,
அச்சு ஆறு ஆக உணரிய வருபவன்
பொய்ச் சூள் அஞ்சிப் புலவேன் ஆகுவல்;

'பகல் ஆண்டு அல்கினை, பரத்த' என்று யான்
இகலியிருப்பேன் ஆயின், தான் தன்
முதல்வன் பெரும் பெயர் முறை உளிப் பெற்ற
புதல்வன் புல்லிப் பொய் துயில் துஞ்சும்;

ஆங்க ,
விருந்து எதிர் கொள்ளவும், பொய்ச் சூள் அஞ்சவும்,
அரும் பெறல் புதல்வனை முயங்கக் காணவும்,
ஆங்கு அவிந்து ஒழியும், என் புலவி தாங்காது,
அவ் அவ் இடத்தான் அவை அவை காணப் -
பூங் கண் மகளிர் புனை நலம் சிதைக்கும்
மாய மகிழ்நன் பரத்தைமை
நோவென், தோழி! கடன் நமக்கு எனவே.

பாடல் 76 (புனை இழை நோக்கியும்)[தொகு]

புனை இழை நோக்கியும், புனல் ஆடப் புறம் சூழ்ந்தும்,
அணி வரி தைஇயும், நம் இல் வந்து வணங்கியும்,
நினையுபு வருந்தும் இந் நெடுந்தகை திறத்து, இவ் ஊர்
'இனையள்' என்று எடுத்து ஓதற்கு அனையையோ, நீ? என
வினவுதி ஆயின், விளங்கு இழாய்! கேள், இனி;

'செவ் விரல் சிவப்பு ஊரச், சேண் சென்றாய்' என்று, அவன்
பௌவ நீர்ச் சாய்க் கொழுதிப் பாவை தந்தனைத்தற்கே -
'கௌவை நோய் உற்றவர், காணாது கடுத்த சொல்
ஒவ்வா' என்று உணராய், நீ ஒரு நிலையே உரைத்ததை?

ஒடுங்கி, யாம் புகல் ஒல்லேம் பெயர்தர, அவன் கண்டு,
நெடும் கய மலர் வாங்கி, நெறித்துத் தந்தனைத்தற்கோ -
விடுந்தவர் விரகு இன்றி எடுத்த சொல் பொய் ஆகக்
கடிந்ததும் இலையாய், நீ கழறிய வந்ததை?

'வரி தேற்றாய், நீ' என, வணங்கு இறை அவன் பற்றித்,
தெரி வேய்த் தோள் கரும்பு எழுதித் தொய்யில் செய்தனைத்தற்கோ -
புரிபு நம் ஆயத்தார் பொய் ஆக எடுத்த சொல்
உரிது என உணராய், நீ உலமந்தாய் போன்றதை?

என ஆங்கு,
அரிது இனி, ஆய் இழாய்! அது தேற்றல், புரிபு ஒருங்கு,
அன்று நம் வதுவையுள் நமர் செய்வது இன்று, ஈங்கே,
தான் நயந்து இருந்தது இவ் ஊர் ஆயின், எவன் கொலோ -
நாம் செயற்பாலது இனி?

பாடல் 77 (இணை இரண்டு இயைந்து)[தொகு]

இணை இரண்டு இயைந்து ஒத்த முகை நாப்பண், பிறிது யாதும்
துணை இன்றித் தளை விட்ட, தாமரை தனி மலர்,
திரு முகம் இறைஞ்சினள், வீழ்பவற்கு, இனைபவள்
அரி மதர் மழைக் கண் நீர் அலர் முலை மேல் தெறிப்ப போல்,
தகை மலர்ப் பழனத்த புள் ஒற்ற, ஒசிந்து ஒல்கி,
மிக நனி சேர்ந்த அம் முகை மிசை அம் மலர்
அக இதழ்த் தண் பனி உறைத்தரும் ஊர! கேள்:

தண் தளிர்த் தகை பூத்த தாது எழில் நலம் செலக்
கொண்டு, நீ மாறிய கவின் பெறல் வேண்டேன்மன் -
உண்டாதல் சாலா என் உயிர் சாதல் உணர்ந்து, 'நின்
பெண்டு' எனப் பிறர் கூறும் பழி மாறப் பெறுகற்பின்?

பொன் எனப் பசந்த, கண் போது எழில் நலம் செலத்,
தொல் நலம் இழந்த கண் துயில் பெறல் வேண்டேன்மன் -
நின் அணங்கு உற்றவர் நீ செய்யும் கொடுமைகள்
என் உழை வந்து, நொந்து உரையாமை பெறுகற்பின்?;

மாசு அற மண்ணுற்ற மணி ஏசும் இருங் கூந்தல்
வீ சேர்ந்து வண்டு ஆர்க்கும் கவின் பெறல் வேண்டேன்மன் -
நோய் சேர்ந்த திறம் பண்ணி, நின் பாணன், எம்மனை
நீ சேர்ந்த இல் வினாய் வாராமை பெறுகற்பின்?

ஆங்க,
'கடைஇய நின் மார்பு தோயலம்' என்னும்,
இடையும், நிறையும் எளிதோ - நின் காணின்
கடவுபு, கை தங்கா, நெஞ்சு என்னும் தம்மோடு
உடன் வாழ் பகை உடையார்க்கு?

பாடல் 78 (பல் மலர்ப் பழனத்த)[தொகு]

பல் மலர்ப் பழனத்த பாசடைத் தாமரை
இன் மலர் இமிர்பு ஊதும் துணை புணர் இரும் தும்ப,
உண் துறை உடைந்த பூப் புனல் சாய்ப்பப், புலந்து ஊடிப்
பண்பு உடை நல் நாட்டுப் பகை தலை வந்தென,
அது கைவிட்டு அகன்று ஒரீஇக், காக்கிற்பான் குடை நீழல்
பதி படர்ந்து, இறைகொள்ளும் குடி போலப் - பிறிதும் ஒரு
பொய்கை தேர்ந்து அலமரும் பொழுதினான், மொய் தப
இறை பகை தணிப்ப அக் குடி பதிப் பெயர்ந்தாங்கு,
நிறை புனல் நீங்க வந்து, அத்தும்பி அம் மலர்ப்
பறை தவிர்பு அசைவிடூஉம் பாய் புனல் நல் ஊர!

'நீக்கும்கால் நிறம் சாய்ந்து, புணரும்கால் புகழ் பூத்து
நாம் கொண்ட குறிப்பு, இவள் நலம்' என்னும் தகையோ தான் -
எரி இதழ் சோர்ந்து உக ஏதிலார்ப் புணர்ந்தமை
கரி கூறும் கண்ணியை, ஈங்கு எம் இல் வருவதை?

'சுடர் நோக்கி மலர்ந்து, ஆங்கே படின் கூம்பும் மலர் போல், என்
தொடர் நீப்பின், தொகும், இவள் நலம்' என்னும் தகையோ தான் -
அலர் நாணிக் கரந்த நோய் கைம்மிகப், பிறர் கூந்தல்
மலர் நாறும் மார்பினை, ஈங்கு எம் இல் வருவதை?

'பெயின் நந்தி, வறப்பின் சாம், புலத்திற்குப் பெயல் போல் யான்
செலின் நந்திச், செறின் சாம்பும், இவள்' என்னும் தகையோ தான்-
முடி உற்ற கோதை போல் யாம் வாட, ஏதிலார்
தொடி உற்ற வடுக் காட்டி, ஈங்கு எம் இல் வருவதை?

ஆங்க,
ஐய! அமைந்தன்று; அனைத்து ஆகப் புக்கீமோ,
வெய்யாரும் வீழ்வாரும் வேறு ஆகக், கையின்
முகை மலர்ந்தன்ன முயக்கில் தகை இன்றே,
தண் பனி வைகல் எமக்கு?

பாடல் 79 (புள் இமிழ் அகல்)[தொகு]

புள் இமிழ் அகல் வயல் ஒலி செந்நெல் இடைப் பூத்த
முள் அரைத் தாமரை முழு முதல் சாய்த்து, அதன்
வள் இதழ் உற நீடி, வயங்கிய ஒரு கதிர்,
அவை புகழ் அரங்கின் மேல் ஆடுவாள் அணி நுதல்
வகை பெற செரீஇய வயந்தகம் போல், தோன்றும்
தகைபெறு கழனி அம் தண் துறை ஊர! கேள்:

அணியொடு வந்து ஈங்கு எம் புதல்வனைக் கொள்ளாதி;
மணி புரை செவ் வாய் நின் மார்பு அகலம் நனைப்பதால்,
'தோய்ந்தாரை அறிகுவேன், யான்' எனக், கமழும் நின்
சாந்தினால் குறி கொண்டாள் சாய்குவள் அல்லளோ?

புல்லல் எம் புதல்வனைப்; புகல் அகல் நின் மார்பில்
பல் காழ் முத்து அணி ஆரம் பற்றினன் பரிவானால்,
மாண் இழை மட நல்லார் முயக்கத்தை நின் மார்பில்
பூணினால் குறி கொண்டாள் புலக்குவள் அல்லளோ?

கண்டே எம் புதல்வனைக் கொள்ளாதி; நின் சென்னி
வண்டு இமிர் வகை இணர் வாங்கினன் பரிவானால்,
'நண்ணியார்க் காட்டுவது இது' எனக் கமழும் நின்
கண்ணியால் குறி கொண்டாள் காய்குவள் அல்லளோ?

என ஆங்கு,
பூங் கண் புதல்வனைப் பொய் பல பாராட்டி,
நீங்காய் இகவாய் நெடும் கடை நில்லாதி;
ஆங்கே அவர் வயின் சென்றீ - அணி சிதைப்பான் -
ஈங்கு எம் புதல்வனைத் தந்து.

பாடல் 80 (நயம் தலை மாறுவார்)[தொகு]

நயம் தலை மாறுவார் மாறுக; மாறாக்,
கயம் தலை மின்னும் கதிர் விடு முக் காழ்ப்,
பயந்த எம் கண் ஆர யாம் காண நல்கித் -
திகழ் ஒளி முத்து அங்கு அரும்பு ஆகத் தைஇப்
பவழம் புனைந்த பருதி சுமப்பக்
கவழம் அறியா நின் கை புனை வேழம்
புரி புனை பூங் கயிற்றின் பைபய வாங்கி,
அரி புனை புட்டிலின் ஆங்கண் ஈர்த்து, ஈங்கே
வருக! - எம் பாக மகன்!

கிளர் மணி ஆர்ப்ப ஆர்ப்பச் சாஅய்ச் சாஅய்ச் செல்லும்
தளர் நடை காண்டல் இனிது; மற்று இன்னாதே,
'உளம்' என்னா நுந்தை மாட்டு எவ்வம் உழப்பார்
வளை நெகிழ்பு யாம் காணும் கால்;

ஐய! காமரு நோக்கினை, 'அத்தத்தா, என்னும் நின்
தே மொழி கேட்டல் இனிது; மற்று இன்னாதே,
உய்வு இன்றி நுந்தை நலன் உணச் சாஅய்ச் சாஅய்மார்
எவ்வ நோய் யாம் காணும் கால்;

ஐய! 'திங்கள் குழவி! வருக!' என, யான் நின்னை
அம்புலி காட்டல் இனிது; மற்று இன்னாதே,
நல்காது, நுந்தை புறம் மாறப்பட்டவர்
அல்குல் வரி யாம் காணும் கால்;

ஐய! எம் காதில் கனம் குழை வாங்கிப், பெயர்தொறும்,
போது இல் வறும் கூந்தல், கொள்வதை, நின்னை யாம் -
ஏதிலார் கண் சாய - நுந்தை வியல் மார்பில்
தாது தேர் வண்டின் கிளை பாடத், தைஇய
கோதை பரிபு ஆடக், காண்கும்.