உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அகழி

விக்கிமூலம் இலிருந்து

அகழி என்பது அரசர்கள் தங்களைப் பகைவர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகக் கட்டிகொள்ளும் கோட்டையைச் சுற்றிச் சுவரை அடுத்து வெளிப்புறத்தே அகழப்படும் பள்ளமாகும். இதில் ஆழமாக நீர் நிறைந்திருக்கும்.

அரசர்கள் தங்கள் கோட்டையின் மதிற்சுவரை ஏணி வைத்து ஏற முடியாததாகவும் புறத்திருந்து அகழ முடியாததாகவும், அகதுள்ளோர் நின்று போர் புரிவதற்கு ஏற்ற அகலமுடையதாகவும், தொலை செய்ய முடியாததாகவும், பொறிகளால் அணுக முடியாததாகவும் அமைப்பது வழக்கம். பகைவர் பொறிகள் அணுக இயலாதிருக்கும் பொருட்டு நீரரன், நிலவரன், மலையரன், காட்டரன் என்று நான்கு அரண்களைத் தங்கள் கோட்டையைச் சுற்றி அமைத்துகொள்வர் என்று திருக்குறள் கூறுகின்றது. அதையே ஜல துர்க்கம், ஸ்தல துர்க்கம், பர்வத துர்க்கம், வன துர்க்கம் என்று மனு ஸ்மிர்தி கூறுகின்றது.

இந்த நான்கு துணை அரண்களுள் நீரரணே அகழியாகும். அதில் நீர் நிறைத்து முதலைகள் போன்ற கொடிய பிராணிகளையும் ஏராளமாக இட்டு வைப்பார்கள் என்று சீவக சிந்தாமணி கூறுகின்றது.

கி.மூ. நான்காம் நூற்றாண்டில் அரசாண்ட சந்திரகுப்த மன்னனுடைய தலைநகரமாகிய பாடலிபுத்திரத்தின் அகழி 600 அடி அகலமும் 42 அடி ஆழமும் உடையதாக இருந்ததென்று மெகாஸ்தனீஸ் கூறுகிறார். அத்துணை அகலமுடையதாக இருந்ததால் அக்காலத்து அகழிகள் கடல்போல் தோன்றும் என்று சீவக சிந்தாமணி கூறுகின்றது.

ஐரோப்பாக் கண்டதிலும் இத்தகைய அகழிகள் ரோமானியர் கால முதல் இருந்துவந்திருக்கின்றன. ஆயினும் படைமானியப் பிரபுக்கள் தோன்றிய காலத்திலேயே கோட்டைகளும் அகழிகளும் ஏராளமாகப் பெருகலாகின. முதலில் தங்கள் இருப்பிடத்தைச்சுற்றி மண்ணைத் தோண்டிப்போட்டுச் சுவரை எழுப்பினர். பின்னர் சுவரை இட்டிகையாலும் கருகல்லாலும் கட்டினர். அதன் பின்னர் இரண்டு சுவர்கள் எழுப்பி இடையில் மண்ணைப்போட்டு நிரப்பி மதிற்சுவர் அமைத்தனர். ஆயினும் வெடிமருந்து செய்ய ஆரம்பித்துப் பீரங்கி குண்டுகள் தயாரானதும் கோட்டை கொத்தளங்கள் பயனிலவாய்விட்டன. இப்போது போர் நிகழும் காலத்தில் பகைவர், சேனையை விரைவில் தாக்க வந்துவிடாமல் தடுக்கும்பொருட்டுத் தாற்காலிகமாகக் கோட்டைகள் கட்டுவதுண்டு, ஆனால் அகழி வெட்டுவது கிடையாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அகழி&oldid=1453438" இலிருந்து மீள்விக்கப்பட்டது