கலைக்களஞ்சியம்/அக்கினி
Appearance
அக்கினி: இவன் வானில் ஞாயிறு ; இடைவெளியில் மின்னல்; பூமியில் நெருப்பு. வேதங் கூறும் தேவதைகளில் ஒருவன். அதில் மற்ற தேவதைகளைவிட இவனுக்கே மிகுந்த துதிகள் கூறப்பட்டுள. தென்கிழக்கு மூலைக்குத் தலைவன். நட்சத்திரமாகவும் இருப்பவன். காண்டவ வனத்தை எரித்தவன். தீச்சுடரை வாளாகவும், புகையைக் கொடியாகவும் உடையவன். ஏழு காற்றுச் சக்கரங்கொண்ட செங்குதிரைத் தேரில் செல்பவன். வேள்வித் தீ இந்தத் தெய்வத்தின் வடிவமே. தீ வணக்கம் வேறு பல நாடுகளிலும் மிகப் பழைய காலந்தொட்டு இருந்து வருகிறது.