கலைக்களஞ்சியம்/அக்பர்

விக்கிமூலம் இலிருந்து

அக்பர் (1542-1605): ஜலாலுதீன் முகம்மது அக்பர் என்பதே இவனுடைய முழுப்பெயர். அக்பர் என்னும் சொல் மிகவும் பெருமையுடையவன் என்று பொருள்படும். ஷெர்ஷாவால் இவன் தந்தை ஹுமாயூன் இராச்சியத்தைவிட்டு விரட்டப்பட்டு சிந்துக்கதிக் கரையில் உள்ள அமரக்கோட்டை என்னும் இடத்தில் தங்கி இருந்தபோது இவன்பிறந்தான். இவனுக்கு சிறுவயதில் படிப்பில் மனம் செல்லவில்லை; என்றைக்குமே எழுத்துக் கற்றுக் கொள்ளவில்லை. விளையாட்டுகளிலும் வேட்டையாடுவதிலும் ஆர்வம் கொண்டிருந்தான். இவன் மனோவலியும் உடல்வலியும் ஒருங்கே பெற்றான். வீரத்தில் இவனை மகா அலெக்சாந்தருக்கு ஒப்பிடலாம். 1556-ல் ஹுமாயூன் இறந்த பிறகு இவன் அமிர்தசரசுக்கு அருகிலுள்ள கலனார் என்னுமிடத்தில் முடிசூடிக் கொண்டான். இவன் இளமையில் தனக்கு துணையாயிருந்த பைரம்கானின் உதவியைக்கொண்டு சிகந்தர்ஷாவின் மந்திரியாயிருந்த ஹேமூ என்னும் இந்துவைத் தோர்கடித்து தன் அரசின் நிலையை வலுப்படுத்திக்கொண்டான். 1560-ல் பைரம்கானை மக்காவிற்குப்போக ஏற்பாடு செய்துவிட்டு பிறர் தலையீடு இன்றி ஆட்சியை மேற்கொண்டான். இவன் தனது பலத்தாலும் அருந்திறமையாலும் வட இந்தியாவின் பெரும்பகுதியை வென்று மொகலாய சாம்ராஜ்சியத்தை ஏற்படுத்தினான். இவன் 1562-ல் ஆம்பரைச் சேர்ந்த இந்து இளவரசி யொருத்தியை மணந்துகொண்டான். அவன் மகனான சலீம் பிறகு ஜகாங்கீராக ஆட்சி புரிந்தான். அக்பர் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் ஒற்றுமையுண்டாக்க முற்பட்டான். மான்சிங் முதலிய ராஜபுத்திர வீர்ர்களைத் தனது அரசில் அலுவலர்களாகச் சேர்த்துக்கொண்டான். இவன் தனது தலைநகரத்தை ஆக்ராவிலிருந்து தான் புதியதாக நிருமாணித்த பட்டேபூர் சிக்ரி என்னும் ஊருக்கு மாற்றிக்கொண்டான். இவனுக்குச் சிற்பம், இசை முதலிய அழகுக் கலைகளில் நல்ல பயிற்சி உண்டு. தான்சென் என்னும் சிறந்த இசைப் புலவன் இவன் அவையில் இருந்தான். அக்பர் ராஜா தோடர்மாலின் உதவியைக்கொண்டு அரசியல் நிருவாக முறையை முழுவதும் மாற்றியமைத்து செம்மைப்படுத்தினான். போர்க் காலத்திலும் அமைதிக் காலத்திலும் இவன் வெற்றி கண்டான். சமய ஆராய்ச்சி செய்வதற்காக ஒரு மண்டபம் கட்டினான். எம்மத்த்தையும் இவன் வெறுக்கவில்லை. பிற மத்த்தவர்களைத் துன்புருத்தும் கொள்கையை இவன் ஆதரிக்கவில்லை. தின் இலாகி என்னும் ஒரு சமயத்தை நிறுவி அதில் தன் நண்பர்களை சேர்த்தான். ராஜா பீர்பால், அபுல்பசல், அபுல்பெய்சி, குர் தாஸ், முதலிய இலக்கியப் புலவர்களை யாதரித்தான். இந்துக்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டு வந்த ஜசியா என்னும் வரியை நீக்கினான். போர்க் கைதிகளை அடிமைகளாக்குவதை யொழித்தான். சதி என்னும் இந்து வழக்கத்தை யொழிக்க முதன்முதலில் ஏற்பாடு செய்தான். இவனுக்கு சிற்சில சமயங்களில் வெகுளி மிகுந்து விடுவதுண்டு ஆயினும் பொதுவாகக் கருணையுள்ளம் படைத்தவன். இறுதிக் காலத்தில் சலீமின் நடத்தையால் இவனுக்குச் சிறிது மனவருத்தம் உண்டாயிற்று. ஆயினும், கடைசியில் அவனையே முடி சூட்டிக் கொள்ளுமாறு கூறிவிட்டுத் தன் 63-ஆம் வயதில், 1605-ல் இறந்தான். இந்திய வரலாறு கண்ட தலைசிறந்த மன்னர்களில் இவன் ஒருவன். தே. வெ. ம.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அக்பர்&oldid=1453472" இலிருந்து மீள்விக்கப்பட்டது