கலைக்களஞ்சியம்/அசிட்டிக அமிலம்
அசிட்டிக அமிலம் (Acetic Acid) : [குறியீடு CH3COOH ] காடி என்ற பெயருடன் இது பழங்காலத்திலிருந்தே அறியப்பட்டுள்ளது. தாவரங்களில் இது தனி நிலையிலும், எஸ்டர்களாகவும் காணக்கிடைக்கிறது. வியர்வை நீரில் இது உள்ளது. ஒருவகை நுண்ணுயிர்களால் விளையும் நொதித்தலால் காடி தோன்றுகிறது. மதுவகைகள் நொதித்து அசிட்டிக அமிலம் தோன்றலாம்.
தயாரிப்பு: ஆல்கஹாலிலிருந்து : நீர்த்த ஆல்கஹாலைக் காற்றுப்பட வைத்திருந்தால் அதிலுள்ள சில பாக்டீரியா அதை மெல்ல அசிட்டிக அமிலமாக மாற்றுகின்றன. மதுக்களைத் தயாரிக்கையில் கிடைக்கும் கழிவுத் திரவத்தைக் கொண்டு இம்முறையில் அசிட்டிக அமிலத்தைத் தயாரிக்கலாம். மரச் சக்கைகளின்மேல் பாக்டீரியாவைக் கொண்ட திரவத்தைப் பூசி அவற்றின் மேல் ஆல்கஹால் உள்ள திரவத்தை மெதுவாகக் கசியுமாறு செய்து காடியாக்கலாம்.
மரத்திலிருந்து : மரத்தை வறட்சியில் வாலைவடித்தால் பைரோலிக்னிய அமிலம் என்ற திரவம் கிடைக்கும். இதிலுள்ள அசிட்டிக அமிலத்தை சோடியம் அசிட்டேட்டாகவோ கால்ஷிய அசிட்டேட்டாகவோ பெறலாம். வாலை வடித்துப் பகுத்தாவது, கரைப்பானாற் பிரித்தாவது இதை நேரே பிரித்தெடுக்கும் முறைகளும் தற்காலத்தில் வழங்குகின்றன.
இயல்புகள் : காரமான மணமுள்ள இது வழுவழுப்பான திரவம். இது தோலைப் புண்ணாக்கும். இதன் கொதிநிலை 1180; 150-ல் இதன் ஒப்படர்த்தி 1.055. இது நீருடனும் ஆல்கஹாலுடனும் எல்லா விகிதங்களிலும் கலக்கும்.
அசிட்டேட்டுகள் : அசிட்டிக அமிலத்தின் உப்புக்கள் அசிட்டேட்டுகள் எனப்படும். இதன் சாதாரண உப்புக்கள் நீரிற் கறையும். பல அசிட்டேட்டுகள் வாசனைத் திரவியங்களையும், பிளாஸ்டிக்குகளையும் தயாரிக்கப் பயன்படுகின்றன. அயச அசிட்டேட்டு இரும்புத் திரவம் என்ற பெயருடன் சாயத் தொழிலில் நிறம் நிறுத்தியாகப் பயனாகிறது. அயக அசிட்டேட்டு சாயத் தொழிலிலும், மருத்துவத்திலும் பயன்படுகிறது. அலுமினிய அசிட்டேட்டும், குரோமிய அசிட்டேட்டும் நிறம் நிறுத்தியாகப் பயனாகின்றன. ஈயச்சர்க்கரை என்ற பெயருள்ள சாதாரண காரீய அசிட்டேட்டு இன்சுவைள்ள நஞ்சு. இது வர்ணம் தயாரிக்கப் பயனாகிறது. வெர்டிகிரிஸ் என்னும் பெயருள்ள மூலச் செம்பு அசிட்டேட்டு பச்சை வர்ணமாகப் பயனாகி வந்தது. எஸ். எஸ். க.
அசிட்டிக அமிலத்தையும், அசிட்டேட்டுகளையும் எதில் ஆல்கஹாலுடனும், கந்தகாமிலத்துடனும் சேர்த்துச் சூடேற்றினால் நறுமணமுள்ள எதில் அசிட்டேட்டு வெளிப்படும். இதன் சிறப்பான மணத்தினின்று இப்பொருளைக் கண்டறியலாம்.
சேர்க்கைமுறைத் தயாரிப்பு : அசிட்டிலீன் வாயுவைச் சேர்க்கை முறைகளாற் பெறலாம். அசிட்டிலீனை அசிட்டால்டிஹைடாக ஆக்சிகரணிக்கலாம். மாங்கனீஸ் அசிட்டேட்டை ஊக்கியாகப் பயனாக்கி அசிட்டால்டிஹைடை ஆக்சிகரணித்தால் அசிட்டிக அமிலம் கிடைக்கும். அசிட்டிக அமிலத்தைத் தயாரிக்க இப்போது இம்முறையே அதிகமாக வழங்குகிறது.