உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அசிரியா

விக்கிமூலம் இலிருந்து

அசிரியா : அஷுர் நகரைச் சுற்றி எழுந்த இராச்சியத்திற்கு அசிரியா என்பது பெயர். அஷுர் டைக்ரிஸ் நதிக்கரையில் நினிவேயிற்கு வடக்கே 60 மைல் தொலைவில் இருந்த ஒரு நகரம். யூப்ரடீஸ் நதியின் கீழ்ப்பகுதியில் பாபிலோனியா பேரரசு செலுத்தி வந்த காலத்தில் அசிரியாவில் பாபிலோனிய கவர்னர் ஒருவன் இருந்தான். ஹிட்டைட்டுகள் ஆண்ட காலத்தில் ஹிட்டைட்டு கவர்னர் இருந்தான். அசிரியா கி.மு.13 ஆம் நூற்றாண்டில் தன் முழு பலத்தையும் அடைந்தது. அப்போது அசிரியர்கள் பாபிலோனியாவை வென்று ஆண்டனர். மேற்கே மத்தியதரைக் கடற்கரைப் பக்கத்தில் இருந்த டமாஸ்கஸ், பாலஸ்தீனம் முதலிய இராச்சியங்களையும் வென்று அடிப்படுத்துவதற்கு அதற்கு மேலும் 5 நூற்றாண்டுகள் ஆயின. கி.மு.8 ஆம் நூற்றாண்டில் சிரியாவை அசிரியா முற்றிலும் வென்றது. 11-ம் சார்கோன் என்பவன் (கி.மு.8ஆம் நூற்றாண்டு) தொடங்கின வமிசம் மிகப் புகழ் பெற்றது. இதில் வந்த சனகேரிப், ஏசர்ஹாடன், ஆசூர் பானிபல் என்னும் அரசர்கள் ஒருவரையொருவர் விஞ்சிய புகழ் பெற்றவர்கள். கி.மு.7 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அசிரியப் பேரரசில் எகிப்து, மத்தியரைக்கீழ்கரை நாடுகள், கப்படோசியா, ஆர்மீனியா, ஈலம், பாபிலோனியா என்பவை அடங்கியிருந்தன. கி.மு.606-ல் நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோனிய அரசன் நினிவேயைக் கைப்பற்றியதும் அசிரியாவின் பலம் குறையத் தொடங்கிற்று. கி.மு.7ஆம் நூற்றாண்டிறுதியில் அசிரியாவின் பெருமை குன்றத் தொடங்கிற்று.

பாபிலோனிய நாகரிகம் அசிரிய நாகரிகத்திற்கு அடிப்படையாயிருப்பினும் அசிரியர்களுடைய தனித்தன்மை அவர்கள் பலவகை வளர்ச்சியில் தென்படுகிறது. அவர்களுடைய ஆட்சிமுறை மிகச்சிறப்பும் திறமையு முடையதாயிருந்தது. அசிரியர்களுடைய அரண்மனைகளிலுள்ள ஓவியங்கள் அவர்கள் கலைத்திறனுக்குச் சான்றாகும். அவர்களுக்கு நூல்களில் மிகுந்த விருப்பம் உண்டு. அவர்கள் வரலாற்றை எழுதிவைத்தவர்கள். நினிவேயில் அசூர்பானிபல் பெரிய நூல் நிலையம் ஒன்று வைத்திருந்தான். அவர்களுடைய மதம் பாபிலோனியர்களுடைய மதம் போன்றதே. அவர்கள் பல கடவுளர்களை வணங்கிவந்தனர். பண்டை நாகரிகங்களின் மிக உன்னத நிலைமையை அடைந்திருந்தது அசிரியா எனலாம். தே. வெ. ம.

அசிரிய நாகரிகம் பழங்கால நாகரிகங்களுள் மிகச் சிறந்தது எனக் கருதப்படுவது. பழைய நூல்களும், சிதைந்த நிலையிலுள்ள சின்னங்களும் இதன் மேம்பாட்டைத் தெளிவாக்குகின்றன. இதன் நாகரிகம் பெரும்பாலும் இதன் தெற்கேயிருந்த பண்டைய பாபிலோனியா நாட்டின் நாகரிகத்தை ஒத்ததாகும். இவர்கள் தமது நாட்டுக்குத் தெற்கேயிருந்த பாபிலோனியா மிகச் செழிப்புள்ளதாக இருந்தபடியால் அதன்மீது படையெடுத்து அதில் பெரும் பகுதியைப் பிடித்துக்கொண்டனர்.

ஆறாயிரம் ஆண்டுகட்கு முன்னர் பாபிலோனியா தோன்றுவதற்கு முன்பே புதுக் கற்காலத்தில் அசிரியா ஏற்பட்டதாகும். அதன்பின் செமிட்டிக் மக்களும், சுமேரிய மக்களும் இந்நாட்டில் குடியேறியபடியால் அசிரிய மக்கள் பல இனம் சேர்ந்த ஓர் இனமாவர். இவர்களுடைய மொழி செமிட்டிக் ஆதலால் செமிட்டிக்கர் என்றும் அழைக்கப்படுவதுண்டு.

இம்மக்களிடையே அரசினர், தொழிலாளர், பொது மக்கள், அடிமைகள் என நான்கு பிரிவினர் காணப்பட்டனர். அடிமைகள் என்போர் அயல் நாட்டிலிருந்து சிறைபிடித்துக் கொணரப்பட்டவர். கவர்னர்களும், புரோகிதர்களும், தளபதிகளும் அரசினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். குழந்தைகள் பொதுவாகப் பெற்றோர் தொழிலையே செய்தனர்.

பெண்கள் தாழ்வாகக் கருதப் பெற்றனர். அரசினர் வகுப்பார் எத்தனை மனைவியர் வேண்டுமானாலும் மணந்துகொள்ளலாம். மற்றவர்கள் ஒரு மனைவியை மட்டுமே மணக்கவேண்டும்.

இவர்கள் பேசிய மொழி செமிட்டிக். இவர்கள் கி.மு.3000க்கு முன்னரே எழுதக் கற்றுக்கொண்டிருந்தனர். இம்முறையைப் பாபிலோனியரிடமிருந்து பெற்றதாகக் கூறுவர். ஆயினும் இவர்கள் சிறப்பான இலக்கியத்தைத் தோற்றுவித்தனர். இவர்கள் களிமண் பலகை செய்து அதில் நூல்களை எழுதினர். இவர்களுடைய அரசன் ஆசூர் பானிபல் என்பவனுடைய நூல் நிலையம் 19ஆம் நூற்றாண்டில் நினிவேயில் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 20-30ஆயிரம் பலகைகள் இருந்தன. அவை மதம், இலக்கியம், மருந்து, வரலாறு முதலிய பல பொருள்களைப் பற்றியனவாகும். இவற்றை அசிரிய மக்கள் அகர வரிசைப்படுத்தி அலமாரிகளில் அடுக்கி வைத்தனர். இவை பிரிட்டிஷ் பொருட்காட்சிச் சாலையில் இருக்கின்றன.

அசிரியர்களுடைய சட்டத்தொகுப்பு நூல் கி.மு.1400-ல் எழுதப்பெற்றதாம். கி.மு.700-ல் இவர்கள் அரிச்சுவடி எழுத்து முறையில் அராபிக் மொழியில் எழுதலாயினர். பழங்கால ஆப்புவடிவ எழுத்துக்களும் இவைகளும் ஒருங்கே வழக்கத்தில் இருந்தன.

இவர்களுடைய மதம் சுமேரியர், பாபிலோனியர் ஆகியவர்களின் மதத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். ஆயினும் தலையாய வேறுபாடு ஆசிரியர் தங்கள் கடவுளை ஆசர் என்று அழைத்ததாகும். ஆசர் என்பதே அவர்களுடைய நாட்டுக்கும் தலைநகரத்துக்கும் பெயராகும். நாபு என்னும் அறிவுக் கடவுளும், இஷ்டார் என்னும் காதல் தேவதையும் பாபிலோனியர் மதத்திலிருந்து பெற்றவைகளாம். அசிரியர்கள் வழிபாடு செய்தும், பலிகொடுத்தும் கடவுள் அருளைப் பெற முயன்றனர்.

கலைத்துறையில் இவர்கள் பாபிலோனியக் கலைகளையும் மேற்கு மெசப்பொட்டேமிய, சிரியக் கலைகளையும் பின்பற்றினர். ஆயினும் கி.மு.2000-1000-ல் தனி அசிரியக் கலைமுறை ஒன்று எழுந்தது. இவர்கள் வெண்கல்லிலும் சுண்ணாம்புக் கல்லிலும் புடைப்புச் சித்திரம் (Relief) செதுக்கினார்கள். ஆனால் இவர்களுக்கு இயலுருத் தோற்றம் (Perspective) தெரியாது. ஆயினும் இவர்கள் செதுக்கியுள்ள சிங்கவேட்டைக் காட்சிகள் காயமடைந்த விலங்குகளை மிக அழகாகச் சித்திரிக்கின்றன. இவர்களுடைய சித்திரங்களுள் சிறந்தவை ஆசூர் பானிபல் காலத்தவை.

இவ்வரசர்கள் பெரிய நகரங்களை அமைத்தனர். அவற்றுள் சிறந்தவை ஆசர், காலா, நினிவே. அவர்களுடைய அரண்மனைகளுக்குக்கூட மாடி கிடையாது. ஆனால் சில அரண்மனைகள் முற்றங்கள் முதலியவற்றுடன் 20ஏக்கருக்குக் குறையாத பரப்புடையன. இவர்கள் கட்டடச் சிற்பக்கலையை எகிப்தியரிடமிருந்தும் ஹிட்டைட்டுகளிடமிருந்தும் கற்றுக்கொண்டனர். அரண்மனையைச் சுற்றி அகழிகள் வெட்டப்பட்டன. அசிரிய மக்கள் தச்சுவேலை, மண்வேலை, சித்திரத் தையல், நெசவு, உலோகவேலை ஆகியவற்றிலும் திறமையுடையவர்களாயிருந்தார்கள். இத்தொழில்களில் பாபிலோனியரைப் பின்பற்றினர்.

அசிரியா ராணுவ சாம்ராச்சியமாயிருந்தது. சக்கரவர்த்தியின் கீழ்க் கவர்னர்கள் இருந்தார்கள். பெரும் படை இருந்தது. போரிடாமல் பணியும் நாடுகள் கப்பம் கட்டினால் போதும். போரிடும் நாடுகள் அழிக்கப்பட்டன. அந்நாட்டு மக்கள் குரூரமாகக் கொல்லப்பட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அசிரியா&oldid=1495502" இலிருந்து மீள்விக்கப்பட்டது