உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அச்சடித்தல்

விக்கிமூலம் இலிருந்து

அச்சடித்தல் (Printing): மேடு பள்ளங்கள் கொண்ட பரப்பொன்றின்மேல் மை தடவிக் காகித்த்தின்மேலோ, வேறொரு பரப்பின்மேலோ அழுத்தப் பரப்பிலுள்ள உருவத்தை அதில் தோற்றுவிப்பது அச்சடித்தல் எனப்படும். பல நூற்றாண்டுகளாகவே இம்முறை இந்தியாவிலும், சீனாவிலும் வழங்கி வந்துள்ளது. ஐரோப்பாவில் இது 15-ஆம் நூற்றாண்டில்தான் அறியப்பட்டது. சீனாவில் ஒரு பலகையில் எழுத்துக்களைச் செதுக்கிப் பக்கம் பக்கமாக அச்சடித்தார்கள். துணிகளில் அச்சடிக்க இம்முறை நம் நாட்டில் வழங்கியது. ஐரோப்பாவிலும் இதே அச்சடிப்பு முறை முதலில் ஏற்பட்டது. ஆனால் இது மிகத் தொல்லையானதாக இருந்த்தோடு இம்முறையில் ஒரு பக்கத்தை அச்சடிக்க பல நாள் பிடித்தது. ஆகையால் ஒவ்வொரு எழுத்திற்கும் ஒவ்வொரு அச்சாகச் செதுக்கிச் சொற்களுக்கேற்ற எழுத்துக்களைப் பயன்படுத்தினார்கள். உலோகத்தில் வார்க்கப்பட்ட எழுத்துக்கள் பின்னர் வழக்கத்திற்கு வந்தன.

தமிழ் நாட்டில் 16 ஆம் நூற்றாண்டில் மேனாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட மர எழுத்துக்களைக் கொண்டு சில கிருஸ்தவ நூல்கள் அச்சடிக்கப்பட்டன. தற்காலத்தில் உள்ளவைப்போன்ற அச்சு எழுத்துக்களை யுடைய அச்சகங்கள் பின்னர்த் தோன்றின. 1713-ல் தரங்கம்பாடியில் நிறுவப்பட்ட லூதரன் மிஷன் அச்சகமும், சென்னையில் தொடங்கிய எஸ்.பி.சி.கே. அச்சகமும் இந்தியாவிலேயே முதன் முதலில் இவ்வாறு அமைக்கப்பட்ட அச்கங்கள் எனலாம். இந்தியர் அச்சகங்களை நடத்தக்கூடாதென்ற சட்டம் 1835-ஆம் ஆண்டுவரை அமலில் இருந்ததால் நெடுநாள் வரையில் நம் நாட்டில் அச்சகங்கள் ஏற்படவில்லை.

அச்சுக்கோத்தல் (Composing): அச்செழுத்துக்களை கோக்க அவை பல அறைகள் கொண்ட தட்டுக்களில் வொவேறாக வைக்கப்பட்டிருக்கும். அச்சுக் கோப்பவர் அறைகளிலிருக்கும் எழுத்துக்களைத் தேவையானபோது எடுத்துக்கொண்டு தமது கையில் இருக்கும் சிறு கோப்புத் தட்டில் ( Composing stick) கோப்பார். பழக்கத்தினால் அவர் ஒவ்வொரு அறையிலும் எந்த எழுத்து உள்ளது என அறிந்து கைநிதானத்திலேயே அச்சுக்கோப்பார். கோப்புத்தட்டில் சிலவரிகள் சேர்ந்த்தும் அவற்றை அச்சுத்தட்டுக்கு ( Glley) மாற்றுவர்.

இவ்வாறு அச்சுத்தட்டுகளில் வரிகள் நிறைந்தவுடன் அவற்றிலுள்ள பிழைகளைத் திருத்துவதற்காக அவற்றை காகிதங்களில் அச்சடித்துப் பிழை திருத்துவதுவோர்க்கும் ஆசிரியருக்கும் அனுப்புவார்கள். இத்தாளுக்கு புரூப் (proof) என்று பெயர். அவர்கள் அவற்றைச் சரிபார்த்துப் பிழைகளையும் மற்ற மாறுதல்களையும் குறிப்பிட்டு அனுப்புவார்கள். அச்சுக் கோப்பவர் பிழைகளைச் சரிபடுத்தி இறுதி புரூப் (Final proof) எடுத்து அனுப்புவார்கள். இதன்பின்னர் அச்சுத்தட்டில் நிரம்பிய அச்சுக்கள் 8 அல்லது 16 பக்கங்களாகப் பிரிக்கப்பட்டுப் பெரிய தாள்களில் அச்சடிக்கப்படும், இப்படிப் பக்கங்ளாக்க் கோத்த அச்சுக்குப் பாரம் (Forme) என்று பெயர்.

அச்சுக்கோக்கும் எந்திரம் : கையினால் அ்ச்சுக் கோக்க அதிக நேரம் செலும். ஆகையால் இம்முறை பத்திகாலயங்களுக்கு ஏற்றதன்று. விரைவாக அச்சுக்கோக்கும் எந்திரங்கள் தோன்றின. இவற்றுள் லைனோ டைப் எந்திரம் (Monotype) என்பது தனித்தனியே அச்சுக்களை வார்த்துக் கோக்கிறது. இவை வேலைசெய்வது வியப்பைத் தரும்.

லைனோடைப் எந்திரம்
உதவி: ஹிந்து, சென்னை

லைனோ டைப் எந்திரத்தில் சாதாரண டைப்ரைட்டரில் இருப்பதுபோல் எழுத்துக்கள் குறிப்பிட்ட பொத்தன்கள் கொண்ட வரிசைகள் இருக்கும். ஏதாவதொரு பொத்தானை அழுத்தினால் அது சில கம்பிகளை இயக்கி அச்செழுத்துக்கள் கொண்ட பெட்டியிலிருந்து அப்பொத்தானுக்கேற்ற எழுத்தை வெளியே எடுத்து ஒரு கால்வாயின் வழியே ஓர் இடத்திற்குக் கொண்டுபோகும். பொத்தான்களை அழுத்திக்கொண்டேவந்தால் எழுத்துக்கள் வரிசையாக அவ்விடத்தை அடையும். ஒரு வரிக்கு வேண்டிய எழுத்துகள் சேர்ந்தவுடன் அது வார்படப் பெட்டி (Casting boox) என்ற கலத்திற்குள் எடுத்துச் செல்லப்படும். இதற்குள் உருகிய அச்சு ஈயம் இருக்கும். வார்க்கவேண்டிய வரி இதை அடைந்த்தும் உருகிய ஈயம் ஒரு குழாயின் வழியாக எழுத்துகளின் மேல் பாய்ந்து ஒரு வரி அச்சைத் தோற்றுவிக்கும். இது இறுகி விளிம்புகளில் சரியாகச் சீவப்பட்டு எந்திரத்திலிருக்கும் ஒரு அச்சுத் தட்டை அடையும். வரியை வார்த்தபின் எழுத்துக்கள் மீண்டும் த்த்தமக்குரிய அறைகளை அடைந்துவிடும். இந்த எந்திரத்தில் ஒவ்வொரு முறையும் புது அச்செழுத்துக்களைத் தயாரிப்பதால் அச்சுக்கள் தேயாமல் தெளிவாக இருக்கும். பல அளவுள்ள எழுத்துக்களையும் இம்முறையில் வார்த்துக் கொள்ளலாம். இது திறமையுள்ள ஐந்து தொழிலாளர்கள் செய்யும் வேலையைச் செய்ய வல்லது.

மானோடைப் முறையில் அச்சுக் கோப்பதும் எழுத்துக்களை வார்ப்பதும் ஒரே எந்திரத்தில் செய்யப்படுவதில்லை. இந்த எந்திரதில் எழுதுக்கள் குறித்த பொத்தான்களை அழுத்தினால் ஒரு நீண்ட காகிதச்சுருளில் ஒவ்வொரு எழுத்திற்கும் சரியாக ஒரு துவாரம் ஏற்படும். இவ்வாறு துவாரங்கள் கொண்ட சுருளை வார்ப்பட்ட எந்திரதில் மாட்டிவிட்டால் அது துவாரங்களுக்கேற்ற எழுத்துக்களைத் தனிதனியே வார்த்து வரிவரியாகத் தக்கபடி சேர்த்துக்கொண்டே வரும். இம்முறையிலும் பல அளவுள்ள எழுத்துக்களை வார்க்கலாம் . கால அட்டவணைகள், விலை உயர்ந்த புத்தகங்கள் முதலியவற்றை அச்சடிக்க இம்முறை முக்கியமாகப் பயன்படுகிறது. லைனோடைப் முறையில் ஒரு பிழை ஏற்பட்டாலும் அந்த வரிமுழுவதையும் திருப்பி வார்க்கவேண்டும். மானோடைப் முறையில் பிழையான எழுத்தை மட்டும் வார்த்தால் போதுமானது.

தொலை அச்சுக்கோப்பான்
உதவி : ஹிந்து சென்னை

லைனோடைப் முறையில் இன்னொரு சௌகரியமும் உண்டு. இதைத் தொலை அச்சுக்கோப்பான் (Tele Typesetter) என்ற கருவியோடு இணைத்துவிடலாம். இக்கருவி ஒரு டைப்ரைட்டர் போலிருக்கும். இதில் ஒரு காகித நாடா இருக்கும். அச்சடிக்க வேண்டிய செய்தியை இதில் டைப் அடித்தால் நாடாவில் ஒவ்வொரு எழுத்திற்கும் ஏற்ற துவாரங்கள் ஏற்படும். துவாரங்கள் கொண்ட நாடாவை லைனோடைப் எந்திரத்தில் மாட்டிவிட்டால் அது தானாகவே அச்சுக்களைக் கோத்துவிடும். தந்திக் காரியாலயத்துடன் இந்த எந்திரத்தை இணைத்துவிட்டால், தந்தியில் செய்திகள் வரும் போதே அது எந்திரத்தில் பதிவாகி உடனுக்குடன் அச்சாகவும் தயாராகிவிடும். இத்தகைய எந்திரம் நமது நாட்டில் முதன் முதல் சென்னையிலுள்ள ஹிந்து கார்யாலயத்தில் அமைக்கப்பட்டது. லைனோடைப் முறையைத் தமிழிலும் ஏற்படுத்த முயற்சி நடந்து வருகிறது. தற்போது சுதேசமித்திரன் காரியாலயத்தில் தமிழ் லைனோடைப் எந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வேறு சில நூதனமான எந்திரங்களும் தற்காலத்தில் வழக்கத்திற்கு வந்துள்ளன. இவற்றில் ஒளி அச்சுக்கோப்பான் (Photo Typester) என்பது முக்கியமானது. இது ஈயம் போன்ற உலோகத்தின் உதவியின்றி எழுத்துக்களைப் போட்டோப் பிடித்து அச்சுக்கோக்கிறது. இது லித்தோ அச்சு (Lithography) முறைக்கு (த.க) ஏற்றது.

அச்சிடும் முறைகள் : கோத்த அச்சுக்களைக் கொண்டு அச்சடிக்கப் பழங்காலத்தில் எளிய அமைப்புள்ள எந்திரங்களைப் பயன்படுதினர். அச்சுக்களை ஓர் இரும்புச் சட்டத்தில் முடுக்கி, ஒரு சமதளமான தட்டின் மேல் வைத்து அவற்றின்மேல் கையால் மையைத் தடவிக் காகிதத்தை வைத்து, எந்திரத்தை அழுத்தினால் காகிதத்தில் அச்சு விழும். இத்தகைய எந்திரங்கள் இன்றும் நம் நாட்டில் பயன்படுகின்றன. இவற்றைக் கொண்டு குறித்தகாலத்தில் மிகக் குறைவான பிரதிகளே அச்சிட முடியும்.

தற்காலத்தில் மூன்றுவகை அச்சு எந்திரங்கள் வழக்கதில் உள்ளன. இவை: 1. தட்டு (Platen) அல்லது மிதி (Treadle) எந்திரங்கள் 2. உருளை (Cylinder) எந்திரங்கள் 3.சுழல் (Rotary) எந்திரங்கள் எனப்படும். இவற்றுள் முதல்வகை எந்திரதில் பெரிய தாள்களில் அச்சடிக்க முடியாது. சிறு விளம்பரங்களும், புத்தகங்களும் மட்டுமே அச்சடிக்கலாம். இதில் கனமான இரண்டு இரும்புப் பலகைகள் இருக்கும். இவற்றுள் ஒன்று செங்குத்தாக எந்திரத்தில் பொருத்தப்பட்டிருக்கும். அச்சுக்கள் முடுக்கப்பட்ட இரும்புச் சட்டம் இதில் பொருத்தப்படும். இரண்டாவது இரும்புப் பலகை முன்னும் பின்னுமாக அசையுமாறு அமைந்திருக்கும் . இப்பலகை முன்னால் போகும்போது முதற்பலகையின் மேலுள்ள அச்சுக்களின்மீது அழுத்தும். பின்னால் வரும்போது திறந்துகொள்ளும். அப்போது அதன்மேல் காகிதத்தை வைத்துவிட்டால் முன்னே போகும்போது காகிதம் அச்சின்மேல் அழுத்தப்பட்டு அதில் அச்சு பதியும். பலகை மீண்டும் திறக்கும்போது அதை எடுதுத்துவிட்டு வேறோரு காகிதத்தை வைக்க வேண்டும். எந்திரத்திலுள்ள மை உருளைகள் மேலுங்கீழுமாக ஓடி அச்சுக்களின்மேல் மையைத் தடவும். தையல் எந்திரத்தைபோல் இதைக் காலால் மிதித்து இயக்கலாம்; அல்லது மின்சார மோட்டாரினால் இயக்கலாம். இதைக்கொண்டு மணிக்கு சுமார் 1000-1500 பிரதிகள் அச்சிடலாம்.

உருளை எந்திரம் தட்டு எந்திரத்தைவிடப் பெரியது. இதில் அச்சுக்கள் முடுக்கிய சட்டம் கிடையாகப் பொருத்தப்படும். இப்பலகை முன்னும் பின்னுமாக எந்திரத்தில் ஓடும். இது பின்புறம் செல்கையில் மையுருளை எழுத்துக்களின்மேல் மை தடவிவிடும். முன்புறம் வரும்போது இது ஒரு பெரிய இரும்பு உருளையினடியில் வரும். இந்த உருளை அச்சிடவேண்டிய தாளைப் பிடித்திருக்கும். இந்த உருளை சுழன்று தாளில் அச்சுப் பதியும். இதன் பின்னர் தாள் உருளையைவிட்டு வெளியேறும். இந்த எந்திரத்தில் ஒருவகையில் உருளைநின்று நின்று சுற்றும்; இன்னொன்றில் தொடர்ந்து சுற்றிகொண்டே இருக்கும். உருளை எந்திரத்தில் பெரியதாள்களில் அச்சடிக்கலாம்; 32 பக்கங்கள் கொண்ட பாரத்தை ஒரே முறையில் அச்சடிக்கலாம். இது பெரும்பாலும் மின்சார மோட்டாரினாலேயே இயங்கும். இது மணிக்குச் சுமார் 2000-3000 பிரதிகள் அச்சிடவல்லது.

சுழல் எந்திரம்
உதவி: ஹிந்து, சென்னை

சுழல் எந்திரங்கள் மணிக்குப் பதினாயிரக் கணக்கான பிரதிகள் அச்சிடவேண்டிய பத்திரிகாலயங்களில் அவசியமாகின்றன. இந்த எந்திரங்களில் அச்செழுத்துக்கள் உள்ள பாரம் சமதளமாக இல்லாமல் உருளை வடிவாக இருக்கும். இதன்மேல் இன்னொரு உருளை சுழன்று காகிதத்தை அச்சின்மேல் அழுத்தும். இந்த உறுளைகளிளிடையே காகிதம் செலுத்தப்படும். உருளைகள் வெகு வேகமாகச் சுழலும். இவ்வளவு வேகமாகக் காகிதத்தை எந்திரத்தில் அளிக்க ஏற்றாவாறு அது ஒரு பெரிய சுருளாக இருக்கும். இச்சுருளிலுள்ள காகிதம் 5 மைல் நீளமிருக்கும். அச்சு உருளைகள் காகிதத்தின் மேல் பக்கங்களை அச்சடிக்கும். எல்லாப் பக்கங்களும் அச்சடித்தானதும் எந்திரம் அவற்றை சரியாக ஒன்று சேர்த்து வெட்டி, மடித்துப் பிரதிகளை வெளியே தள்ளும். சுழல் எந்திரங்கள் மணிக்குச் சுமார் 40,000 பிரதிகள் வரை அச்சடிக்கும்.

அச்சுவேலைக் குறிப்புகள் : அச்சுவேலை சீராகவும், அழகாகவும் இருக்கவேண்டுமானால் பல விஷயங்களைக் கவனிக்கவேண்டும். அச்சுக் கோகும்போது வேலைக்கு ஏற்றவாறு அளவாக அச்சுக்களைக் கோக்க வேண்டும். தினசரிகளில் வரியின் நீளத்தைவிடப் புத்தகங்களில் வரியின் நீளம் அதிகமாக இருக்கும். சொற்களுக்கு இடையே எவ்வளவு இடம் விடவேண்டுமென்றும், வரிகளுக்கிடையே எவ்வளவு இடம் விடவேண்டுமென்றும் கவனித்து அச்சுக்களைக் கோத்து அமைக்க வேண்டும். நீண்ட வரிகளுக்குச் சிறிய எழுத்துக்களும், குறுகிய வரிகளுக்கு பெரிய எழுத்துகளும் ஏற்றவையல்ல. ஆகையால் வேலைக்கேற்ற எழுத்துக்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அச்சுக்கள் ஏற்த்தாழ இல்லாமல் ஒரே உயரமாக இருக்கும்படி சரிப்படுத்த வேண்டும். இவ்வாறு இல்லாமல் எழுத்துக்கள் ஓரிடத்தில் அழுந்தியும், வேறொரு இடத்தில் மேலெழுந்தும் இருந்தால் அச்சு வேலை பார்வைக்கு அழகாக இருக்காது. அச்செழுத்துக்கள் ச்ரியாக பதியா. அச்சுச் சிதறி இராமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். அச்சடிக்கும் மையின் தன்மையையும் கவனிக்க வேண்டியது அவசியம். சாதாரண மட்டரகக் காகிதத்திற்கு ஒரு மையும், மழமழப்பான காகிதத்திற்கு ஒரு மையும், எழுத்துக்களுக்கு மட்டும் ஒரு மையும், சித்திரங்களுக்கு ஒரு மையும் உண்டு. ஆகையால் வேலைக்குத்தகுந்த மையை உபயோகித்தல் முக்கியமானது. மையை அச்சுக்களின் மேல் சீராகப் பரவுமாறு செய்வதும் அவசியம்.

இங்கு விவரிக்கப்பட்ட முறை எழுத்தச்சு (Letter press) முறை எனப்படும். இதைத் தவிர, லித்தோ முறை, ஒளி செதுக்குமுறை (Photogravure) (த. க.) முறை என்பவைகளும் வழக்கத்தில் உள்ளன. எழுத்தச்சு முறையில் அச்சிடவேண்டிய பகுதி மேடாகவும் மற்றது பள்ளமாகவும் இருக்கும். ஒளி செதுக்குமுறையில் அச்சிடவேண்டிய பகுதி பள்ளமாகவும் மற்றது மேடாகவும் இருக்கும். லித்தோ அச்சு முறையில் எல்லாப் பகுதிகளும் ஏற்றத்தாழ்வின்றி ஒரே உயரமாக இருக்கும். பார்க்க; நிற அச்சிடுதல். டி. எஸ். த.