கலைக்களஞ்சியம்/அடிதொட்டி
அடிதொட்டி (Slaughter house) என்பது மக்கள் உணவுக்கான மிருகங்களைச் சுகாதார முறையில் கொன்று அவைகளின் மாமிசம் முதலியவைகளைப் பிரித்து எடுப்பதற்காக அமைக்கப்பட்ட கட்டடமாகும். பண்டைக்கால முதல் மிருகங்கள் உணவுக்காகக் கொல்லப்பட்டு வந்தாலும், அரசாங்கம் அதற்காக அடிதொட்டிகள் ஏற்படுத்தியது 19 ஆம் நூற்றாண்டிலேயேயாம். பிரான்ஸ் நாடுதான் இதை முதன் முதலில் 1818-ல் அமைத்தது. அது அமைத்தது போன்ற அடிதொட்டிகளையே மற்ற ஐரோப்பிய நாடுகளும் அமைத்து வந்தன. ஆயினும் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஜெர்மனியில் இறைச்சியில் ஏற்பட்ட நஞ்சினால் ஏராளமான மக்கள் இறக்கவே அந்நாடு புதுவிதமான அடிதொட்டிகளை அமைக்கத் தொடங்கிற்று. இப்போது இன்னும் பல சீர்திருத்தங்களுடன் அவை எல்லா நாடுகளிலும் கட்டப்பட்டு வருகின்றன.
அத்துடன் ஒவ்வொரு நாட்டிலும் அரசாங்கம் தனிப்பட்டவர் அடிதொட்டி அமைக்கவிரும்பினால் அதற்கான விதிகளை அமைத்துள்ளது. அந்த அடிதொட்டியிலும், அரசாங்க அல்லது ஸ்தல ஸ்தாபன அடிதொட்டிகளிலும் மிருகங்களைக் கொல்லும்பொழுது கையாளவேண்டிய முறைகளைப் பற்றிய விதிகளையும் இயற்றியுளர்.
சென்னை இராச்சியத்தில் அடிதொட்டி அமைக்க விரும்புவோர் 1919 ஆம் ஆண்டு சென்னை நகர முனிசிபல் நான்காவது சட்டத்தின்படி லைசென்ஸ் பெற்றுக் கொண்டு அமைத்தல் வேண்டும். அடிதொட்டியைக் குடியிருக்கும் வீடு அல்லது குடிநீர்நிலையிலிருந்து 100 கஜ தூரத்துக்குள் அமைக்கக்கூடாது. அது காரைக் கட்டடமா யிருக்கவேண்டும். உட்பாகம் வெளியிலிருப்பவர்க்குத் தெரியக்கூடாது. காற்றோட்டமும் வெளிச்சமும் உள்ளதாயும், போதுமான நல்ல நீர் உடையதாயும், சாக்கடை வசதியுள்ளதாயுமிருக்கவேண்டும். தளம் ஓதம் தட்டக்கூடியதாக இருக்கலாகாது. மிருகங்களைக் கொன்று மூன்று மணி நேரமாவதற்குள் இடத்தைத் சுத்தப்படுத்த வேண்டும். ஆண்டில் நான்கு முறை வெள்ளையடிக்க வேண்டும். அதற்குள் யாரும் குடியிருக்கக் கூடாது. அங்கு எச்சில் துப்பவும் வேறு அசுத்தம் செய்யவும் கூடாது. . நகராண்மைக் கழகத்தாருடைய அடிதொட்டியில் மிருகங்களைக் கொல்ல விரும்புவோர் முன்கூட்டி அனுமதி பெறவேண்டும். இங்கும், தனி நபர் அடிதொட்டியிலும் மிருகங்களைக் கொல்லும்போது கீழ்க்கண்ட விதிகளை அனுசரிக்க வேண்டும்: நகராண்மை உத்தியோகஸ்தர் பார்வையிட்டு நோயில்லை என்று குறிப்பிட்ட மிருகங்களைத்தான் கொல்லலாம். நோயுள்ள மிருகங்களையும், இறக்கும் தறுவாயிலுள்ள மிருகங்களையும் கொல்வது அனுமதிக்கப்படமாட்டாது. செத்த மிருகங்களையும் தொட்டிக்குக் கொண்டுவரலாகாது. மிருகங்களை அனாவசியமாகத் துன்புறுத்தாமலே ஓட்டிவரவும் கொல்லவும் வேண்டும். கொல்லப்பட்ட மிருகம் நோயுடையதா யிருந்தால் சுகாதார இலாகா உத்தியோகஸ்தர் அதன் இறைச்சியை விற்கவோ உண்ணவோ அனுமதிக்க மாட்டார். அடித்த பிராணிகளின் உடல்களின்மீது உத்தியோகஸ்தர் முத்திரையிடவேண்டும். முத்திரையிட்டவற்றை அவற்றிற்காக ஏற்பட்ட மூடுவண்டிகளிலேயே மார்க்கட்டுகளுக்குக் கொண்டுபோதல் வேண்டும். அவற்றைத் தூசியோ, ஈயோ அணுகாதபடி பாதுகாக்கவும் வேண்டும். கொன்று மூன்று மணி நேரம் ஆவதற்குள் தோல், குடல், கொம்பு, குளம்பு, மற்றும் கழிவு, மலஜலம் முதலியவற்றை அப்புறப்படுத்தித் தொட்டியைச் சுத்தம் செய்யவேண்டும். இந்த விதிகளை மீறுவோர் அபராதத்திற்கு உள்ளாவர்.