கலைக்களஞ்சியம்/அடிப்படை உரிமைகள்
அடிப்படை உரிமைகள் (Fundamental rights) : இராச்சியங்களால் குறைக்கவோ மறுக்கவோ முடியாத அடிப்படையான சில உரிமைகள் குடிகளுக்குண்டு என்பதும் இவை எப்போதும் எம்மனிதனுக்கும் வழங்கப்படல் வேண்டும் என்பதும் நீண்டகாலமாக உலகில் வழங்கிவரும் கருத்துக்களாம். ஆயினும் இவை அண்மையில்தான் சில நாட்டு அரசியல் அமைப்புக்களில் தெளிவாகவும், தனியாகவும் குறிக்கப்பட்டுள்ளன. அதற்கு முன்பு எழுதித் தொகுக்கப்படாமல் கருத்தளவிலும் சில அரசாங்கங்களின் பழக்கத்திலும், சில மொழி இலக்கியங்களிலும் மட்டும் காணப்பட்டன. இவ்வாறு அடிப்படை உரிமைகளைச் சேர்த்துக் கூறியுள்ள அமைப்புக்களுள் இந்திய அரசியல் அமைப்பு முக்கியமானது. இம்மரபு அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டதாகும். 1950-ல் ஐக்கிய நாட்டு அரசியல் ஆதரவில் உலகப் பொதுவான மனித உரிமைகளைத் தொகுத்து வெளியிடப்பட்டமை இம்முயற்சியில் தற்கால மக்களுக்குள்ள ஊக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு.
பொதுவாக மக்களுக்கு அடிப்படையாக அமைந்துள்ள உரிமைகள் யாவை என்பது பற்றி அவர்கள் மனத்தில் எழும் குழப்பத்தாலும், அவை சரியானமுறையில் பாதுகாக்கப் படமாட்டா என்னும் அச்சத்தாலும் ஆட்சியாளருக்கு அனுகூலமாகவே நாட்டுச் சட்டங்கள் இயங்குவதாலும் அரசியல் புரட்சிகள் தோன்றுகின்றன. இவ்வாறு பலாத்காரமான மாறுதல்கள் அரசியல் நிலையில் ஏற்படாமல் இருப்பதற்காகச் சட்டங்களைப் பலரும் நன்கு அறியுமாறு தொகுத்து எழுதி வைத்துக்கொள்வது ஒரு பழைய மரபு. பண்டைய ரோமானியர்கள் பன்னிரு தொகுப்புச் சட்டங்கள் (Twelve Tables) செய்து வைத்துக் கொண்டது சட்ட அடிப்படையில் ஆட்சி நடைபெற வேண்டும் என்னும் கருத்தோடுதான். ரோமானிய சாம்ராச்சியம், அழிந்தபின் 'தோன்றிய குழப்பங்கள் மறைந்தவுடன் ஐரோப்பாவில் பல ஜெர்மானிய இராச்சியங்களில் கிறிஸ்தவக் குருக்களின் தூண்டுதலால் நாட்டுச் சட்டங்களை எழுதிவைப்பது முக்கியமான, அடிப்படையான வழக்கமாயிற்று.
இந்து தருமம் போன்ற பண்டைய மரபுகளில் அடிப்படை உரிமைகள் இடம் பெற்றுள்ளன. அம்மரபுகள் யாவராலும் மாற்றப்படக்கூடாதவை என்பதே அவற்றிற் காணும் அடிப்படை உரிமைகளுக்கு அடிப்படையான வலுவூட்டும் கருத்து. இவ்வாறு அன்றாட அரசாங்கம், சட்டசபை, ஆட்சிக்குழு முதலிய எவ்வகையினராலும் மாற்ற இயலாத, என்றும் நிலைக்கும் சில கோட்பாடுகளை நிருணயித்து வைப்பது அரசியல் துறையில் மிகப் பயன் தரும் ஒரு நீதி.
முற்காலத்தில் குடும்பம், சமயம், அரசியல், தேசியம் முதலிய பற்றுக்கள் மக்களுக்கு இருந்துவந்தன; ஆயினும் தொழிற் புரட்சியால் விளைந்துள்ள பலன்களைக் கண்டபின் மனிதர்களுக்குப் பொருளாதாரப் பிரச்சினைகளில் ஈடுபாடு மிகுந்து விட்டது; தற்காலத்தில் எந்தப் பிரச்சினையையும் பொருளாதார அடிப்படையில் ஆராய்வது மரபாகிவிட்டதால் அடிப்படை உரிமைகளையும் அம் முறையிலேயே வகுக்கத் தொடங்கியுள்ளனர்.
அடிப்படை உரிமைகள் என்னும் கோட்பாடு பெரும்பாலும் இங்கிலாந்தில் தோன்றிய ஒரு கோட்பாடாம். தனிமனிதனின் உயிர், உடல், பொருள் இவற்றைப் பாதுகாத்தல் என்னும் கொள்கையிலிருந்து சமூக நலன்கள் யாவற்றையும் காத்துத் தனிமனிதன் ஆயுள் முழுவதும் அவன் தேவைகளை அடையச் செய்வது அரசாங்கத்தின் கடமை என்றும், அப்பாதுகாப்பைப் பெறும் அடிப்படை உரிமை குடிகளுக்கு உண்டு என்றும் கருதும் நிலைக்கு இப்பொழுது வந்துள்ளோம். குடிகள் யாவரையும் ஏற்றத்தாழ்வின்றி ஒரேமுறையில் கருதும்சட்டங்கள் நாட்டில் நிலவவேண்டும் என்பதோடு மக்கள் எல்லோருக்கும் பொருளாதாரத் துறையில் சம வசதிகளையும் வாய்ப்புக்களையும் பெற உரிமை உண்டு என்ற கொள்கையும் இன்று உலகமெங்கும் பரவியுள்ளது. ரா. பா.