கலைக்களஞ்சியம்/அட்டிலா
அட்டிலா (406?-453) ஹூணர்களின் அரசன். அவன் செய்த போர்களும், வென்ற நாடுகளில் நடத்திய ஆட்சியும் மிகக் கொடுமையானவை. 433-ல் அவனும் அவன் சகோதரன் பிளிடாவும் சேர்ந்து மத்திய ஐரோப்பிய நாடுகளில் அக்காலத்தில் வாழ்ந்திருந்த பல பழங்குடிகளுக்குக் கூட்டு அரசர்களாயிருந்தனர். ஆயினும் பத்து ஆண்டுகள் கழித்து அவன் தன் சகோதரனைக் கொல்வித்தான். பிறகு கருங்கடலுக்கும் மத்தியதரைக் கடலுக்கும் இடையே உள்ள நாடுகள் முழுவதையும் சூறையாடினான். 451-ல் மத்திய ஐரோப்பா முழுவதும் அவன் வசமாயிற்று. மேற்கு ரோமானிய சாம்ராச்சியப் பேரரசனான III-ம் வேலன்ஷியனை வென்று டான்யூப் நதிக்குத் தெற்கேயுள்ள நாடுகளையும் கைப்பற்றினான். ஜெர்மனியும் பிரான்சும் அவனுக்கு அடிபணியும் நிலைமையும் வந்தது. கிறிஸ்தவ அரசர்கள் ஒன்றுகூடிக்கொண்டு சலோன் என்னுமிடத்தில் அவனைப் போரில் தோற்கடித்து அடக்கினர். 452-ல் அவன் இத்தாலிமேல் படையெடுத்து லம்பார்டி சமவெளியைக் கடந்து தெற்கு நோக்கி வந்தபோது ரோமிலிருந்த போப் I - ம் லியோவின் நன் முயற்சியால் ரோம் நகரம் தப்பிற்று. அட்டிலா ஹங்கேரிக்குத் திரும்பிச் சென்றான். ஹில்டா என்பவளுக்கும் அவனுக்கும் மணம் நடப்பதற்காக நிச்சயித்திருந்த நாளன்று இரவில் அவன் இறந்தான். அவன் இழைத்த கொடுமைகளைக் கருதி மக்கள் அவனைத் தெய்வ சாபம் என்றழைத்தனர்.