கலைக்களஞ்சியம்/அட்லான்டிக் உடன்படிக்கை
Appearance
அட்லான்டிக் உடன்படிக்கை : மேற்கு ஐரோப்பாவிலுள்ள சில நாடுகளுக்கும் வட அமெரிக்காவுக்கும் இடையே 1949-ல் ஒரு ராணுவ உடன்படிக்கை ஏற்பட்டது. ரஷ்ய கம்யூனிஸ்டு நாடுகள் ஒன்று சேர்ந்து இயங்குவதற்கு எதிரிடையாக ஜனநாயக நாடுகள் ஐக்கியப்பட்டு நிற்கவேண்டும் என்னும் எண்ணத்தோடு இவ்வுடன்படிக்கை ஏற்பட்டது. இந்த ஐக்கியத்தை ஒரு கூட்டாட்சி என்றோ நாட்டுக்கூட்டம் என்றோ கூறமுடியாது. இது ராணுவ நிலைமைகளைச் சமாளிப்பதற்கு ஏற்பட்ட ஓர் உடன்படிக்கையேயாம். இவ்வுடன்படிக்கையில் கையெழுத்திட்ட எந்த அதன் உறுப்புநாடும் பகைவர்களால் தாக்கப்பட்டால் மற்ற உறுப்பு நாடுகள் உதவி கோரப்படாமலே உதவிக்குச் செல்லவேண்டும் என்பது இதன் கருத்து.