கலைக்களஞ்சியம்/அண்டிரன்

விக்கிமூலம் இலிருந்து

அண்டிரன்: இவனுக்கு ஆய் எனவும் ஆய் அண்டிரன் எனவும் பெயர் வழங்கும். வேளாளன். ஊர் பொதிகைக்கு அருகிலுள்ள ஆய்குடி. கடையெழு வள்ளல்களுள் ஒருவன். பாம்பு நல்கிய நீல ஆடையை ஆலின்கீழிருந்த சிவபெருமானுக்குச் சாத்தியவன் (சிறுபா: 96-99). யானைகளைப் பரிசில்களாகக் கொடுத்தவன். கொங்குநாட்டாரை மேற்கடற் பக்கத்தே ஓட்டியவன். இவனைப் பாடிய புலவர் உறையூர் ஏணிச் சேரி முடமோசியார், துறையூர் ஓடைகிழார், குட்டுவன் கீரனார் என்போர். இவருள் முடமோசியாரே இவ்வள்ளலின் பெருமைகளை மிகுதியாகப் பாடியுள்ளார். (புறம். 127-136, 240-41, 374-75, நற். 167).